திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நான் தற்போது கணிப்பொறித் துறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் சினிமாத் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்னும் கனவு உண்டு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். இதில் எனக்கு ஆன்மீகம் தொடர்பான அரைகுறைப் புரிதல் ஏற்கனவே உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் நான் நீங்கள் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரையையும், இரு வேறு கட்டுரைகளையும் ஒரே நாளில் வாசிக்க நேர்ந்தது.
இந்த மூன்றுமே என் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகளில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. எனவே ஆன்மிகம் பற்றி நான் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும், தெளிவான கருத்தியல் நிலைக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளை குறிப்பாக கீதையை வாசிக்கத் தொடங்கினேன். கீதையின் சாராம்சங்களை உட்கிரகிப்பதில் இருந்த சிக்கலால் இதைப் புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டி இருந்தால் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றிய போதுதான் என் விழி பிதுங்கிப் போனது. குருஜி என்ற பெயரில் இயங்கிக் கொண்டு இருக்கும் பலரில், சிலர் என்னை யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது தங்கள் குருஜீயை குருவாக ஏற்றுக் கொண்டு அவரைப் பின் தொடருங்கள் என்றோதான் வலியுறுத்துகிறார்கள். ஆனால் நான் தேடி வந்தது அது அல்லவே. எனவே அவர்களை நான் புறக்கணித்துவிட்டேன்.
என் மேலோட்டமான புரிதலின்படி, எல்லா ஆன்மீகம் சார்ந்த தரவுகளையும் கூர்ந்து கவனித்தால், அவை முன்மொழியும் விசயங்கள் ஏறக்குறைய கீழ்க்காணும் கருத்தையே வலியுறுத்துகின்றன.
“…இந்த வாழ்க்கையே ஒரு மாயை. இங்கு நாம் வாழ்கின்ற வாழ்க்கைகூட நாடகத்துக்கு ஒப்பானதுதான். இங்கு நாம் சந்தோசம் வந்தால் சிரிப்பதும், துன்பம் வந்தால் அழுவதும் கூட அற்பமான அர்த்தமற்ற செயல்கள் தான். நம் அனைவரையும் ஆட்டுவிப்பவன் இறைவன்தான். அவனுடைய சித்தத்தின் படியே நம்முடைய வாழ்க்கை என்னும் நதி ஓடுகிறது. இது ஏன் என் வாழ்க்கையில் நடந்தது என்று கேள்வி கேட்கும் உரிமைகூட உனக்கு இல்லை. ஏனென்றால் இங்கு “காரணம் இன்றி காரியம் இல்லை” உன்னை மீறிய விசயங்களும் இங்கு சாத்தியமே. ஆதலால் நல்லது நடந்தால் அகமகிழ்வதையும், கெட்டது நடந்தால் துவள்வதையும் ஒன்றாகப் பார்க்கப் பழகிக் கொள். உனக்கு என்ன கிடைத்ததோ, அதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்.. உனக்கு என்ன நேர்கிறதோ அதை எந்தவிதக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொள்” என்பதே அது.
இப்பொழுது என் பிரச்சனை இதுதான். நான் ஆன்மிகத்தின் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் இப்பொழுதே எனக்குள் ”வாழ்க்கையே ஒர் மாயைதானே.. இதில் கஷ்டப்பட்டு சாதித்து நாம் என்ன செய்யப் போகிறோம்.. அந்த சாதனைகூட ஒரு அர்த்தமற்ற செயல் தானே…!” என்பது போன்றும், “இந்த வாழ்க்கை இறைவன் சித்தத்தின் படிதானே செல்கிறது, அப்படியானால் என் வாழ்க்கை சார்ந்த இறைவனின் சித்தம் நான் கணிப்பொறித் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதானோ..? ஒரு வேளை நான் கலைத்துறையில்தான் ஈடுபட வேண்டும் என்பதும் அவர் சித்தமாக இருந்தால், அவரே அந்தப் பாதையை நோக்கி என்னை திசை திருப்புவாரே.. நான் ஏன் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு முந்திக் கொண்டு சினிமாத்துறைக்கு செல்ல வேண்டும்.. காத்திருப்போம்…” என்றும் எண்ணத் தோன்றுகிறது.
மேலும் நான் இன்னும் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கினால், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்னும் என் லட்சியத்தையே ஒரு மாயையாக கருதி கைவிட்டு விடுவேனோ என்றும் அச்சம் கொள்கிறேன். அப்படி ஒரு நிலைக்குத்தான் ஆன்மீகம் என்னைத் தள்ளும் என்றால் அந்த ஆன்மீகத் தேடலையே நிறுத்திவிடலாமா என்றும் சில சமயங்களில் தோன்றுகிறது.
ஏனென்றால் கணிப்பொறி துறையில் பணியாற்றுவதும் கூட என் மனதுக்கு உகந்ததாகவோ அல்லது திருப்தி தருவதாகவோ இல்லை. மேற்குறிப்பிட்டது போல், ”கிடைத்ததைக் கொண்டு வாழப் பழகிக் கொள்” என்பதை வாழ்வியலுக்கான தத்துவமாகக் கொண்டு நான் வாழத் தொடங்கினால், என் முயற்சிகளைக் கைவிட்டு நான் எதிர்காலத்திலும் கணினித் துறையிலேயே தான் இயங்க வேண்டும்.
அந்தக் கோணத்தில் பார்க்கையில் நம் வாழ்க்கையில் நமக்கென்று ஒரு லட்சியமோ, அதற்கான நம் பிரத்யேக முயற்சிகளோ கூட வீணானவை என்பதையே இந்தத் தத்துவங்கள் முன்மொழிகிறதோ என்றும் எனக்கு குழப்பமாக இருக்கிறது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே விதமாக பாவிப்பது என்பது மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துக்குத் தடையாக இருக்காதா…? என்னும் கேள்வியும் மேலெழுகிறது. இதை நான் எப்படிப் புரிந்து கொள்வது….?
அன்புடன்
ஜெயகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெயகிருஷ்ணன்,
மத-தத்துவ நூல்களுக்கு அவற்றுக்குரிய ஓரு முழுமை உண்டு. அமைப்பில், தரிசனத்தில். அவை சமன் செய்யப்பட்டவையாக, மையம்நோக்கிச் செல்லக் கூடியவையாக இருக்கும். அவற்றை உதிரிவரிகளாக அறிவதன் சிக்கலையே நான் உங்கள் கடிதத்தில் காண்கிறேன். இது எந்த ஒரு இந்துவுக்கும் இன்றிருக்கும் சிக்கல்தான். ஏனென்றால் இந்துமதத்தின் நூல்களை அவனுக்கு எவரும் கற்பிப்பதில்லை. அவற்றைப்பற்றி அவன் முழுமையாக அறிய எந்த ஒரு வாய்ப்பும் இன்றில்லை.
பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்கள் மூலமே அவன் அதை அறிகிறான். அல்லது உரைகளிலுள்ள மேற்கோள்கள் வழியாக. தத்துவநூல்கள் ஓரளவுக்கேனும் ஒரு வழிகாட்டி அல்லது ஆசிரியர் இல்லாமல் உள்வாங்கிக்கொள்ள முடியாதவை என்னும்போது இன்னும் நிலைமை சிக்கலாகிறது. கீதையைப் பற்றி அல்லது பிரம்மசூத்திரம் பற்றி அல்லது சிவஞானபோதம் பற்றி ஒரு குறைந்தபட்சப்புரிதல் கொண்ட இந்துக்கள் மிகமிக அபூர்வமாகவே இருக்கிறார்கள்.
இந்துஞானமரபின் முக்கியமான நூல்கள் பல. அவை அனைத்தும் ஒற்றைக்குரலில் நீங்கள் சொல்வனவற்றைச் சொல்லக்கூடியவை அல்ல. ஆகவே இந்துமதம் இப்படிச் சொல்கிறது என்று சொல்வது பிழை. இந்துமத சிந்தனைகள் பல தளங்களில் பரந்து விரிந்தவை.
பொதுவாக மதநூல்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளவேண்டும். ஓர் ஆரம்பகட்டப் புரிதலுக்காக. நெறிநூல்கள் தத்துவநூல்கள். கணிசமான மதநூல்கள் நெறிநூல்களே. அவை என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை சொல்பவை. வாழ்க்கையை எப்படி வாழவேண்டுமென வரையறை செய்பவை.
இந்துமதத்தின் மூலநூல்களுள் நெறிநூல்கள் இல்லை. மனுஸ்மிருதி முதல் ஆசாரக்கோவை வரை இந்துமதத்தில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நெறிநூல்கள் இருந்துள்ளன. அவை மாறிக்கொண்டே இருந்தன. ஏனென்றால் உலகியல் நெறிகள் மாறாத இறைவிதிகள் என்று இந்துமதம் சொல்லவில்லை.
இந்துமதம் தத்துவ-மெய்ஞானநூல்களை மட்டுமே மையநூல்தொகையாக முன்வைக்கிறது. அவை வாழ்க்கையின் அடிப்படையான முழுமையான இறுதியான அர்த்தங்களைப்பற்றிப் பேசக்கூடியவை.அவற்றை எளிய நெறிகளைச் சொல்லக்கூடியவை என்று புரிந்துகொள்ளக்கூடாது. அது பெரும்பிழை.
இந்துமத மைய நூல்களில் எளியது கீதை. அதன் முக்கியத்துவம் என்னவென்றால் அது உலகியலில் இருந்து ஆன்மீக உச்சநிலைகள் வரை அனைத்தையும் தொட்டுச்செல்கிறது என்பதுதான். ஆகவே அதை மட்டும் வைத்து நீங்கள் கேட்கும் கேள்விக்குப்பதில் சொல்கிறேன்
கீதை ஒரு தருணத்திலும் செயலாற்றாமலிருப்பதை முன்வைக்கவில்லை. மாறாக செயலாற்று செயலாற்று என்று மீண்டும் மீண்டும் அறைகூவுகிறது. மிகச்சிறந்த செயலை ஆற்றுவதெப்படி என்று மட்டுமே அது பேசுகிறது.
செயலாற்றுவது மனிதனின் அடிப்படை இயல்பு. எது தன்னுடைய இயல்புக்கு ஏற்றதோ, எதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளமுடியுமோ அதில் முழுமூச்சாகச் செயலாற்றுவதே ஒருவனின் கடமை. அவனுடைய நிறைவும் மகிழ்வும் அங்குமட்டுமே உள்ளது. அதையே கீதை தன்னறம் என்கிறது
அந்தத் தன்னறத்தை ஆற்றக்கூடியவன் முதல்கட்டத்தில் உலகியல்சார்ந்த நன்மைகளை அடைகிறான். இன்பம் புகழ் செல்வம் அனைத்தையும். அதை கீதை சாங்கிய யோகம் என்கிறது. அந்தச் செயலில் அவன் மூழ்கிச்சென்றான் என்றால் அச்செயல் அளிக்கும் நிறைவே அவனுக்குப்போதுமானதாக இருக்கிறது.அதை கீதை கர்மயோகம் என்கிறது. அச்செயல்வழியாகவே அவன் இப்பிரபஞ்சத்தை அறியமுடியும். அதுவே ஞானயோகம். அது அவனை முழுமையாகவே விடுவிக்கும். என கீதை விளக்கிச்செல்கிறது
சினிமாதான் உங்கள் தன்னறம் என்று வைத்துக்கொள்வோம். அதிலீடுபடுவது பணம் புகழ் எல்லாம் அளிக்கும். அது முதல்படி. அதன் அடுத்தபடி என்பது சினிமாவே எல்லா மகிழ்ச்சியையும் அளிக்கும், அதன் வழியாக எதையும் அடையவேண்டியதில்லை என்பது. அதன் அடுத்தபடி என்பது சினிமாவழியாகவே வாழ்க்கையை முழுமையாக அறிவதென்பது.
நடைமுறையிலேயே காணலாம். மோசமான சினிமாக்காரர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் சினிமா எடுப்பவர்கள். மேலான சினிமாக்காரர்கள் சினிமா மீதான ஈடுபாட்டினால் மட்டும் சினிமா எடுப்பவர்கள். தங்கள் இன்பம் ஞானம் அனைத்தையும் சினிமாவிலேயே கண்டுகொண்டவர்கள்
எவர் வெற்றிகரமான சினிமாக்காரர் ஆகிறார்கள்? எவர் ஒருவர் வெற்றிதோல்விகளை எண்ணிக் கலங்காமல் எது தன்னுடைய சினிமாவோ அதை முழுமையான அர்ப்பணிப்புடன் எடுப்பவர்தான். வெற்றிதோல்விகள் அவரது கையில் இல்லை. அதை எண்ணிக்கலங்குபவர் செயலாற்ற முடியாது. அதைத்தான் கீதை சொல்கிறது. அதைத்தான் ஒன்றுமே நம் கையில் இல்லை, ஆகவே வெற்றியடைய முயலாமல் சும்மா இருப்பதுதான் சரி என்று கீதை சொல்கிறதென நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்
சினிமா என்றல்ல எந்தத் துறையிலும் தோல்விகள் உண்டு. மேதைகளுக்கே கூட. வெற்றிதோல்விகளைச் சமமாக கருதித் தன் முழுமையைத் தன் செயல்மூலம் அடையமுயல்பவனே சாதனையாளன். அவனைத்தான் கர்மயோகி என்கிறது கீதை. இந்துமதம் சொல்வது அதைத்தான்
ஜெ