கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து உங்கள் வலைதளத்தை படித்து வருகிறேன். மனம் நிறைவடையும்போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் உங்களுக்கு எதுவும் எழுதாமல் இருந்துவிட்டேன்.
உங்கள் அமெரிக்க பயணம் எங்களுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கப்போவது எனக்கு மகிழ்ச்சி. நலமுடன் முடித்து வாருங்கள்.
கிளிசொன்ன கதையைப்பற்றி வந்த கடிதங்கள் அக்கதை சரியான முறையில் வாசகர்களை அடைந்திருப்பதை காட்டியுள்ளது. தமிழ் படிக்கும் இளம் வாசகர்கள் இருப்பதை காண்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இக்கதையில் கிளி அனந்தன் அல்லவா? சில வாசகர்கள் அம்மாவை கூண்டுக்கிளி என புரிந்துகொண்டுள்ளதைப்போல் தோன்றுகிறது.  மரத்தில் இருக்கும் கிளி மனிதர்களின் செயலைப்பார்க்கிறது. அவற்றை சொல்கிறது. அதற்கென்று விமர்சனம் எதுவும் அதனிடம் இல்லை. ஒருவேளை இருக்கலாம். ஆனால் அதை அது சொல்வதில்லை. அது துயரங்களை மகிழ்ச்சிகளை எல்லாம் சொல்கிறது. கேட்பவன் தான் கதை மாந்தர்களைப்பற்றி தன் கருத்தை தானே ஏற்படுத்திக்கொள்கிறான்.

அவ்வகையில்  கதைகேட்பவனே கதையின் பல வாக்கியங்களை  எழுதிக்கொள்கிறான்.  பெண்ணை கூண்டுக்கிளியாக சொல்லலாம் தான் அவர்களின் கூண்டை அவளை சுற்றி இருப்பவர்கள் அமைக்கிறார்கள்.  அதைப்போன்றே ஆணும் ஒரு கூண்டுக்கிளிதான் அவனுடைய கூண்டை அவனே சமூக நிலை, கடமைகள் மற்றும் மதிப்பீடுகள் காரணமாக அமைத்துக்கொள்கிறான். ஒரு பெண் ஆணின் கட்டுப்பாட்டில் இருப்பதைப்போல் ஒரு ஆண் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறான்.  பெண் தன் நிலைக்கு காரணமாய் ஒரு ஆணை காட்டிவிடுவாள்.  ஆனால் ஆணுக்கோ அவன் நிலைக்கு பொறுப்பை அவனே ஏற்றுக்கொள்ளவேண்டும்.  ஒரு ஆண் அழுவது குறைவு என்பதால் அவனுக்கு துன்பம் குறைவு  என்பதல்ல.
சீதையின் அளவு துயரம் இராமனுக்கும் உண்டு.

த.துரைவேல்

அன்புள்ள துரைவேல் அவர்களுக்கு

இப்போது கலிஃபோர்னியாவில் இருக்கிறேன். நீண்ட பயணம் முடிந்து சற்றுமுன்புதான் வந்து சேர்ந்தேன்.

கிளி சொன்ன கதைக்கு வரும் எதிர்வினைகள் எனக்கும் ஆச்சரியம் அளிக்கின்றன. இந்த தளத்தை இதற்குள் கொஞ்சம் கஷ்டப்படு படிக்க வேண்டிய ஒன்றாக, அதற்கு தயானவர்களுக்கு உரியதாக ஆக்கிவிட்டேன் போல் இருக்கிறது

இயல்பிலேயே நாம் உணரும் ஒன்று உன்டு– சக மனிதர்களின் துயரம். பூமியி துயரம். இரண்டும் கலந்த ஒன்று சீதையின் துயரம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
உங்களின் ‘கிளி சொன்ன கதையை மிகுந்த உணர்ச்சியுடன் படித்தேன்.  உங்களின் வட்டார மொழி உரையாடல்கள் கதைக்கு  உயிரூட்டின  பல் சொற்கள்  படிக்கப் படிக்கப் பழகிப்போயின. அனந்தனின் பார்வையில் விரிந்த காலம் சொன்ன செய்திகள் நம் சமுதாயத்தின் நடைமுறையை கண் முன் நிறுத்தின. இது மொழி, இனம், பிராந்தியம் கடந்த ஒரு ஆணாதிக்க மனோபாவத்தின் உண்மையான பிரதிபலிப்பு. அனந்தனின் வயதில் நான் பார்த்த என் தந்தையையும் , தாயையும் ;என் நினைவின் நதியில் பின்னோக்கிச் சென்று உணர முடிந்தது.  என்  தாயின்பால் என் தந்தை  ‘சாடிசம்’   என்ற எல்லையை  தொடக்கூடிய  அளவிற்கு காட்டிய வன்முறைகள் அவருடய்ய இதர பல நல்ல குணங்களை பின்னுக்குத்  தள்ளியது.  மிகுந்த படிப்பாளி: மிகுந்த கலாரசனை  உடையவர்: மிகச்சிறந்த  விமர்சகர்:  நாடகங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர்: அவரே மிகச்சிறந்த நடிகராக விளங்கியவர்   அவர் அந்தக்காலத்திலேயே  பொறியியல் படித்து நகராட்சி பொறியாளராகப் பணியாற்றியவர். தன துறையில் மிகுந்த திறமை படைத்தவர்  மிக மிக நேர்மையான அதிகாரியாகப்  பணியாற்றியவர்.  ஆனால் தன மனைவியிடம் மட்டும் ஏன் மிகக்கடுமையாக நடந்து கொண்டார்?   என் தாய்  அனந்தனின் தாய் போல பொறுமையின் மொத்த உருவமாகத்  திகழ்பவர்.  தன குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு செலுத்தியவர்
என் தந்தையை எந்த அளவிலும் விட்டுக்கொடுக்காதவர். இத்தனையும் தாண்டி  என் தந்தைக்கும், தாய்க்கும் இடையே ஒரு அந்தராத்மாவாக ஒரு அன்பின் இழை பின்னிப் பினைந்திருந்தை , இத்தனை வருடங்களுக்குப் பிறகும்   என்னால் உணரமுடிகிறது. என் அம்மா இல்லாமல் என் அப்பாவால் இருக்க முடியாது. அதேபோல் என் அம்மாவும் அப்பாவை பிரிந்து இருந்தது இல்லை. இது அந்தக்கால குடும்ப அமைப்பின்  பலமா , பலவீனமா  என்று என்னால் இன்றளவும் வகைப்படுத்த முடியவில்லை.
அன்புடன்
சங்கரநாராயணன்
சேலம்

அன்புள்ள சங்கர்

இந்த இணைய தளத்தில் சில முறை இதை பேசியிருக்கிறேன். விவாகரத்தான தோழிக்கு கடிதம் என்று நினைக்கிறேன். நம் ஆண்கள் ‘ஆண்மை’ என்ற ஒரு கருத்தை புகட்டி வலர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பிற நற்பண்புகள் அனைத்துக்கும் மேலாக இந்த ஆண்மை என்ற கருதுகோள் அவர்களை பெண்களை நசுக்கும் மூடர்களாக ஆக்கிவிடுகிறது. நம் அப்பா போன்ரவர்கள் அந்தக் கருதுகோளின் பலியாடுகள்

ஜெ

முந்தைய கட்டுரைவாசகர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉயிர்மையின் 10 நூல்கள்