இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப் பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப் பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதைக் குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களைக் கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார்
டெரன்ஸ் மாலிக் [Terrence Malick] எடுத்த வாழ்க்கைமரம் [The Tree of Life ] தொலைக்காட்சித்திரையில் ஓட ஆரம்பித்தது. சிலநிமிடங்களில் நான் அதுவரை கொண்டிருந்த திரைப்படரசனைப்பயிற்சி அதைப்பார்ப்பதற்கு போதுமானதல்ல என்ற உணர்வு உருவாகியது. திரைமொழியின் வழக்கமான இலக்கணம் எதுவும் செல்லுபடியாகாத ஒரு கதைசொல்லல். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சினிமா என்பது இன்றுவரை காட்சிகளின் [சீன்] தொடர்தான். இந்தப்படம் காட்சித்துளிகளின் [ஷாட்] தொடர்.
மேலும் சிலநிமிடங்களில் அந்தப்படத்தைப்பார்ப்பதற்கான பயிற்சியை அந்தப்படமே அளித்தது. என்னை ஆழ உள்ளிழுத்துக்கொண்டது. நான் பெரும்பாலும் எந்த சினிமாவையும் அணுகி ரசிப்பவனல்ல. சினிமா என்பது ஒரு கலைவடிவம் என்ற வகையிலேயே மகத்தானவற்றைச் சொல்ல சாத்தியமற்றது, முழுமையை அடைய முடியாதது என்ற எண்ணம் என்னிடம் இருபதாண்டுக்காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது கண்முன் காட்டியாகவேண்டுமென்ற கட்டாயமே அதன் எல்லைகளைத் தீர்மானித்துவிடுகிறது. மிகச்சில திரைப்படங்களே அந்த எண்ணத்தை ஊடுருவி என்னை வந்து தொட்டிருக்கின்றன. பர்க்மானின் ஏழாவது முத்திரை [Seventh seal], தர்கோவ்ஸ்கியின் பலி [sacrifice] போல. இது அந்த வரிசையில் அமைந்த படம். என் வரையில் அப்படங்களின் தொடர்ச்சியும்கூட.
http://www.dailymotion.com/video/xiw2xt_tree-of-life-film-clip_shortfilm
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் படம் என்னை வெளியே தள்ள ஆரம்பித்தது. ஆச்சரியமாக இருந்தது. என்னால் அந்த விலகலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. காட்சிகள் எனக்குப் பொருள்தரவில்லை. ஒருகட்டத்தில் நான் வெளியே வேறெங்கோ இருந்தேன். என் மகள் கண்கள் மின்ன அதில் மூழ்கியிருந்தாள். அஜிதன் பத்தாவது முறையாக அதற்குள் இருந்தான். நான் அசைந்து ‘நான் மேலே செல்கிறேன்’ என்றேன். அஜிதன் ஏமாற்றமடைந்தான். கண்களில் அடிபட்ட பாவனை
நான் ஒருமணி நேரம் கழித்துக் கீழே வந்தேன். ‘அஜி இவ்வளவுநேரம் உன்னைத் திட்டினான். நீ அவனுக்குப்பிடிச்ச படத்தை வேணும்னே நிராகரிக்கிறதா சொல்றான்’ என்றாள் அருண்மொழி. நான் அஜிதனிடம் ‘நான் நிராகரிக்கலை அஜி. படம் என்னை வெளியே தள்ளிச்சு. ஏன்னு தெரியலை….மேலே போனபிறகுதான் தெரிஞ்சுது. அது ஆழமா விசாலாட்சியம்மாவை ஞாபகப்படுத்துது….ஐம்பது வயசுக்கு மேலே, இவ்வளவுதான்னு தெரிஞ்ச வயசிலே இந்தப்படம் தர்ற உணர்ச்சிகளே வேற’ என்றேன். அவன் புரிந்துகொண்டான்.
பின்னர் நான் மலையாளப்பட வேலைகளுக்காக மும்பை சென்றேன். மும்பையில் இந்தப்படத்தைத் திரும்பப் பார்க்க நேர்ந்தது. அந்த நட்சத்திரவிடுதியில் பாதி அறைச்சுவரை நிறைக்கும் மிகப்பெரிய தொலைக்காட்சி. மிகச்சிறந்த ஓசையமைப்பு. நான் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் அந்தப்படத்தைப் போட்டேன். அப்போது யானை துதிக்கையால் அள்ளி இழுத்து எடுத்துக்கொள்வதைப்போல அந்தப்படம் என்னை ஆட்கொண்டது. பின்னிரவில் படத்தை முடித்தேன். பால்கனியில் நின்றுகொண்டு பால்வழிபோல ஒளிரும் மாநகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் வந்து அந்தப்படத்தை இன்னொரு முறை பார்த்தேன். ஆழ்ந்த பெருமூச்சுடன் விடியலில் சிவந்த வானத்தை வெளியே சென்று பார்த்தேன். ஆம், இதோ இங்கிருக்கிறேன். இங்கே. எதுவும் இல்லாமலாவதில்லை, இடம்மாறுகின்றன, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன்.
வாழ்க்கைமரம் ஒரு கதை அல்ல. அது ஒரு சில தன்னுணர்வுகளை ஊடுபாவாகப் பின்னி உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப்பரப்பு. அதை ஒரு கதையாகச் சுருக்கிச் சொல்வதோ , தருணங்களை விவரிப்பதோ அதை சிதைப்பதற்குச் சமம். அன்னை ஒருத்திக்கு மகனின் இறப்புச்செய்தி வருமிடத்தில் ஆரம்பிக்கிறது படம். மிக இயல்பான தொடக்கம். படம் எழுப்பும் எல்லா வினாக்களும் அப்படிப்பட்ட மரணத்தின் தருணங்களிலிருந்தே முளைக்க முடியும். அறுபதுகளில் நிகழ்கிறது அது. அந்நிகழ்ச்சியை இன்று நினைவுகூரும் மூத்தவனின் நினைவுகள் அல்லது தன்னுரைக்கோவை வழியாகப் படம் முன்னகர்கிறது.
பின்னிப்பின்னிச்செல்லும் இந்தப்படத்தின் சரடுகள் மூன்று. ஒன்று பிரபஞ்சவியல். இந்தப்பிரபஞ்சம் இதிலுள்ள விண்மீன்கள் கோள்கள் உயிர்கள் புழுப்பூச்சிகள் பிறந்திறந்து சாகும் முடிவிலா நிகழ்வின் பின்னணியில் அனைத்தும் முன்வைக்கப்படுகிறன. காலம் என்று நாம் உண்மையில் எதைச்சொல்கிறோம் என்ற துணுக்குறலை உருவாக்குகிறது டெரென்ஸ் மாலிக் அந்த நிகழ்வுப் பெருக்கெடுப்ப்பைக் காட்சிக்கோவைகளாகக் காட்டும் விதம். காலத்தின் மடியில் நிகழ்கின்றன அனைத்தும்.
இன்னொரு சரடு உயிர்த்தொடர்ச்சி. அன்னையும் தந்தையுமாக வேடமிட்டு நின்று இப்பிரபஞ்சம் கொள்ளும் லீலை. அதனூடாக உருவாக்கப்படும் மானுடவாழ்க்கையின் நாடகம். அன்னையைக் கருணை [grace)] என்றும் தந்தையை இயற்கை [Nature] என்றும் மூத்தமகன் உணர்கிறான். என் வரையில் நான் இன்னொரு உருவகத்தையே இளமையில் அடைந்திருக்கிறேன். இயற்கை என்பது அன்னை. இச்சை என்பது ஆண்மை. சக்தியும் சிவமும். இயற்கை கருணையுடன் உணவூட்டுவது. இச்சை அதன்மேல் படைப்பாகச் செயல்படுகிறது. இந்தத் திரைப்படைப்பின் தரிசனம் எனக்கு இன்னொரு திறப்பாகவே இருந்தது. இயற்கை மாற்றமில்லா விதிகள் கொண்ட கறாரான பேணும் சக்தி. அதன் மீது பரவியுள்ள கருணையே வாழ்க்கையை உருவாக்கும் விசை என்கிறது இப்படம்.
மூன்றாவது சரடு காமம். காமம் என்பது ஓர் உயிர் தன்னை இங்கே உணரும் விதம். தன்னை இங்கே நிறுத்திக்கொள்ளும் விழைவு. தன்னை எஞ்சச்செய்துவிட்டுப் போகும் முனைப்பு. அது தன்னுணர்வாக அகங்காரமாக தன்னைப் பெருக்கிக்கொள்கிறது. சொல்லிச்செல்லும் ஜாக் காமம் மூலம் உணரும் தன்னுணர்வும் அதை தன் தந்தைக்கும் தாய்க்குமிடையேயான ஊசலாட்டமாக அவன் அறியும் அலைக்கழிப்பும் இந்த படத்தின் முக்கியமான பகுதி.
காலத்தின் முடிவிலா வெளியில் உயிர்க்குலங்கள் இதை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இயற்கையும் கருணையும் ,. இருத்தலும் மரணமும் என ஒரு இருமையைக் கட்டமைத்து ஆடிமுடித்து மீண்டும் ஆட வெளியே சென்று காத்திருக்கின்றன. படத்தின் இறுதியில் ஜாக் அவனுடைய இளமையைப்பின் தொடர்ந்து செல்லும் பயணம். அங்கே அன் தம்பியையும் அன்னையையும் சந்திக்கும் புள்ளி. திரைப்படம் கனவுக்கு மட்டுமே உரிய மகத்தான தர்க்கத்தை அடையும் இடம் அது.
கடலில் ஒரு சிறு குமிழிக்கொப்பளிப்பாக எழும் வாழ்க்கை கடலாக மாறி முடியும் சித்திரத்தை அளிக்கும் அந்த முடிவு பெரும் கலைபப்டைப்புகள் உருவாக்கும் செயலின்மையை நம்முள் நிறைக்கக்கூடியது. பூமியை உண்ணுகிறது காலம். பிறப்பிறப்பின் பெருவெளி. அழிவதும் ஆவதும் ஒன்றேயாக நம் முன் விரியும் காட்சிகளின் கருஞ்சுழி.
‘நத்தை உண்ணும் இலைபோல
நெரிகிறது பிரபஞ்சம்.
மௌனத்தில் இருப்பேன்,
காலத்தைக் கேட்டவாறு’
என்ற வரி என் நினைவில் எழுந்தது. இருபத்தேழாண்டுகளுக்கு முன் நான் எழுதியது. என் அம்மாவின் தற்கொலையை நான் சுமந்தலைந்த நாட்களில். காலச்சுவடில் பல ஆண்டுகளுக்குப்பின் அது அச்சானது. அந்த வரியை நான் கண்முன் திரைப்படமாகக் கண்டுகொண்டிருந்தேன்.
வாழ்க்கை மரம் அனைவருக்குமான படம் அல்ல. படம் முழுக்கப் பின்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும் அது காட்சிகளைக் கோர்ப்பதில்லை. காட்சிகள் நாம் கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் ஒழுங்கால்தான் தொகுக்கப்பட்டாகவேண்டும். பெரும்பாலான திரைப்படங்கள் நம் முன் நிகழ்ந்துகொண்டிருக்கும், நாம் சாட்சிகளே ஒழிய பங்கேற்பாளர்கள் அல்ல. இது அப்படியல்ல. இது நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டிய படம். ஆகவே தமிழில் இப்படம் இன்றுவரை பேசப்படாததிலும் வியப்பில்லை. சினிமாவிலிருந்து சினிமாவால் தொடப்பட முடியாத ஒன்றை நோக்கிச் செல்லும் ஒரு பறந்தெழலுக்கான ஆற்றல் கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தான படம் இது.
படம் பார்த்து ஒரு வாரம் தாண்டியிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியை நான் நினைவுகூர்ந்தேன். ஒரு பெரிய கட்டிடம் தழல்விட்டு எரிந்து எழுகிறது. தீ அந்தக்கட்டிடத்தைத் தன் ஆயிரம் நாக்குகளால் நக்கி நசுக்கி உண்ணும் ஒலி மட்டும் நிறைந்திருக்கிறது. பின் துணுக்குறலுடன் அறிந்தேன், அது இந்தப்படத்தின் காட்சி அல்ல. தர்கோவ்ஸ்கியின் படத்திலுள்ள காட்சி. அது என் அகத்தில் எங்கே இணைந்துகொண்டது? அதன் மூலம் நான் இந்தப்படத்துக்கு அளிக்கும் அர்த்தம் என்ன?
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 18, 2013