தேச எல்லையும் மையமும்…

அன்புள்ள ஜே சார்

தங்கள் பதிலுக்கு நன்றி

கண்டிப்பாக சார், நானும் பெரும்பாலானவர்கள் போல் ஊடகங்களில் கிடைக்கும் அரைகுறை தகவல்களை வைத்து தான் இம்மாதிரி விஷயங்களில் கருத்துக்கொள்ள முயல்கிறேன்.

இஸ்ரேல் போல இந்தியாவிற்கும் சுற்றிலும் இருக்கும் நாடுகள் அனைத்தும் சுமுக உறவில்லாத நாடுகள்தான், இஸ்ரேல் போல அண்டை நாடுகள் அனைத்தையும் ராணுவ அச்சுறுத்தலால் தன் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவை வலிமையான தேசமாக காண விரும்பும் அனைவரின் எண்ணமும்.

தற்போதுள்ள நிலையில் நீங்கள் சொல்வதுபோல் திடமான ராணுவ நடவடிக்கை மற்றும் உறுதியான பேச்சுவார்த்தை தான் சரியென்று நானும் நினைக்கிறேன். தீவிர ஹிந்துத்துவர்கள் இது போன்ற விசயங்களில் தெளிவான ஒற்றைப்படையான முடிவை அடைகிறார்கள்.

ஆனால் நான் கேட்க நினைத்தது ஓயாமல் சண்டையிட்டு கிடந்த ஐரோப்பாவின் அனைத்து தேசிய இனங்களும் தற்போது ஒரு நிலையான தேசிய எல்லையை வகுத்துக்கொண்டும், அதே சமயம் அண்டை நாட்டினருடன் சுமுக உறவுடன் அமைதியாக வாழ முடிகிறது, எல்லையில் எப்போதும் துப்பாகியுடன் வீரர்கள் நின்று கொண்டிருப்பதில்லை, இதுபோன்ற நிலையை இந்திய எல்லையில் எப்போதாவது நாமும் அடைய முடியுமா? (கொஞ்சம் பேராசைதான்)

ஏன்னென்றால் இப்படி போருக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவே உச்சபட்ச அதிகாரமும் பொருள் குவிப்பும் கொண்ட மத்திய அரசு தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன், உள்நாட்டிலும் காந்தியின் வழிமுறைகளான மையமற்ற கிராம ராஜ்யம் உருவாக முடியாமல் போகிறது, தற்போது எந்த ஒரு விசயத்திலும் பொருள் குவிப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட அரசாங்கத்தின் பார்வை நகரத்தை மையமாக கொண்டே இருக்கிறது, நாமும் அவ்வாறே இருக்கிறோம். இப்படியே அனைவரும் நகரத்தை மையமாக்கிகொண்டே சென்றால், அது நம்மை வெறும் ப்ராண்ட் நுகர்வோர்களாக மாற்றிக்கொண்டே இருக்கிறது. நானும் அதே மந்தையில் சென்று கொண்டிருப்பவன்தான். நாம் இப்படி எந்த அறநோக்கங்களும் இல்லாமல் வெறித்தனமாக சம்பாதிப்பது அனைத்தும் மேற்கின் துப்பாக்கி & பீரங்கிகளுக்கும், மறுபுறம் சந்தையில் கிடைக்கும் சீன, அமெரிக்கப் பொருட்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதை ஒரு ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள வலைப்பின்னல் போல யூகிக்கிறேன்.

ஐரோப்பிய யூனியனை போல அண்டை நாட்டுடன் நட்புணர்வை பேணுவதால் நம் அரசாங்கம் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் சுயமாக இயங்க முடியும், பின் பல வழிகளில் நம்மை மேம்படுத்திகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு அமைதியை விரும்பும் காந்தி தேசம் என்ற பெயரை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவா?

எனவே வெளிநாட்டுப் பகை, அதற்கு நேரடி தொடர்பில்லாமல் வாழும் நம் வாழ்க்கையையும் மாற்றுகிறது என்று கருதுவதால், இதைவிட மேம்பட்ட நிலையை நம் தேசம் அடைய விரும்பியும், இதெல்லாம் தொடர்புபடுத்தும் உங்கள் பதிலை எதிர்பார்த்து தான் முந்தைய என் கேள்வியை கேட்க நினைத்தேன். அப்போது கேள்வி சரியாக அமையவில்லை. இப்போது சரியாக கேட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.

கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

ஒரு தேசத்தின் வெளிநாட்டுப்பகை என்பது அதன் கையில் இல்லை. இன்னும்கூட உலக அரசியல் வலிமையானது வாழும் என்ற விதியின்படி மட்டுமே அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பிறரை உண்டு வளர முயல்கின்றன. ஆகவே அதில் கடுமையான நேரடியான போட்டியே இன்று நிலவுகிறது.

நாம் வலிமையுடன் இருப்பது மட்டுமே ஒரே வழி. ஆனால் வலிமை என்பது வெறும் போர்வலிமை மட்டுமல்ல. வணிகவலிமையும் ராஜதந்திர வலிமையும்கூடத்தான். நமக்கு மூன்று தளத்திலும் வலிமை இல்லை.

நமக்கிருக்கும் ஒரே வலிமை நாம் பெரிய நாடு என்பதே. பிரம்மாண்டமான மக்கள் தொகையும் அதன் விளைவான பெரிய ராணுவமும் பெரும் நிதிவைப்பும் நமக்கிருப்பதனாலேயே நாம் பிறரால் அடித்துச்சுருட்டி உண்ணப்படாமல் இன்றும் எஞ்சுகிறோம்

இந்த உண்மைநிலையை உணர்ந்திருப்பதனால்தான் நம்மை உண்ண நினைக்கும் நாடுகள் என்றும் நம் தேசியக்கட்டுமானத்தை உடைக்க முயல்கின்றன. அதற்காக கோடிக்கணக்காக பணம் செலவிடுகின்றன. கூலி அறிவுஜீவிகளை உருவாக்கி நம்மில் நிறைக்கின்றன.

இந்தியா ஒரேதேசமாக நீடிப்பது இரு அடிப்படைகளினால். இந்திய நிலப்பகுதியில் வரலாற்றுக்காலகட்டம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்த மக்கள் குடிபெயர்தல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒதுங்கிய மலைப்பகுதிகளன்றி பிற பகுதிகள் அனைத்திலும் எல்லா இன,மொழி , மதத்தைச்சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள். வடக்கும் தெற்குமெல்லாம் இங்கே பத்தாயிரம் வருடம் முன்னரே கலந்துவிட்டன.

நவீன காலகட்டத்தில் அந்த இடப்பெயர்ச்சி இன்னும் பெருமளவில் நிகழ்ந்தது. அதன் விளைவாக இந்த நிலப்பரப்பு ஒரே தேசியமாக மட்டுமே நீடிக்கமுடியும் என்ற நடைமுறைத்தேவை இன்றுள்ளது.

வரலாற்றுக்காலகட்டம் முதலே இந்தியப்பெருநிலத்தை ஒற்றைப்பண்பாட்டு வெளியாகப் பார்க்கும் பார்வை இருந்துள்ளது. நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய பிரதியிலேயே இந்தியா என்ற பண்பாட்டுத்தேசியத்தின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறைசெய்யப்பட்டுக் கிடைக்கின்றன. ஆசேது ஹிமாச்சலம் என வேதம் சொல்கிறது.

தெற்கே வந்தால் நமக்குக் கிடைக்கும் ஆகப்பழைய தமிழ் எழுத்துக்கள் புறநாநூற்றின் முதல் பதினாறு பாடல்கள்தான். அவற்றின் மொழியமைப்பே புறநாநூற்றின் பிற பாடல்களைவிட மிகப்பழைமையானதாக உள்ளது. அவற்றில் இரு இடங்களில் இந்திய எல்லை வகுக்கப்பட்டுவிட்டது.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

[பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.]

தமிழகம் என்ற உருவகமும் அதன் எல்லைகளும் மேலும் குறைந்தது எழுநூறு வருடம் கழித்துதான் சிலப்பதிகாரத்தில் முன்வைக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைத்தேவையும் பண்பாட்டு ஒருமையும்தான் இந்திய தேசியத்தின் உள்ளிணைப்பை உருவாக்குகின்றன. இந்தியதேசியத்தின் ஒருங்கிணைவே அதன் உண்மையான ஆற்றல். ஆகவே அதை தகர்ப்பதற்கான தொடர்முயற்சிகள் அரசியல்தளத்திலும் அறிவுத்தளத்திலும் செய்யப்படுகின்றன.

அரசியல்தளத்தில் மாநிலக்கட்சிகள் மாற்றுமாநிலத்தவருக்கு, மொழிச்சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கும் காழ்ப்புகளைச் சுட்டிக்காட்டலாம். அந்த அமைப்புகள் எவற்றுக்கும் இங்கே பெரிய அளவில் மக்களாதரவில்லை. ஆனால் அவர்கள் எவருக்கும் நிதி நெருக்கடியே கிடையாது. அவர்களனைவருமே தொழிலதிபர்களின் வாழ்க்கை வாழமுடிகிறது.

அறிவுத்தளத்தில் இந்தியப்பண்பாட்டுத் தேசியம் என்ற அப்பட்டமான உண்மையை திரிபுகள் மூலம், பொய்கள் மூலம் நிராகரிக்கும் தொடர்முயற்சிகள் பிரம்மாண்டமான அளவில் நிகழ்கின்றன. இந்தியப் பண்பாட்டுத்தேசியம் என்பதை இந்துத்துவ அரசியலாக முதலில் சித்தரிக்கிறார்கள். அதன்பின் இந்துத்துவ அரசியல் மீதான எல்லா எதிர்ப்புகளையும் இந்தியதேசியம் மீது திருப்பிவிடுகிறார்கள். இது ஒரு நுணுக்கமான நடைமுறைத் தந்திரமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்த போக்கை படிப்படியாக விரித்தெடுத்து ஒரு கட்டத்தில் இந்திய தேசம் என்று சொல்பவனை ஃபாசிஸ்டு என்றும் மதவெறியன் என்றும் மனிதாபிமானத்திற்கே எதிரி என்றும் சித்தரிக்கிறார்கள். இந்தியா என்ற தேசமே ஒரு வன்முறையான அநீதியான அமைப்பு என்று சொல்கிறார்கள். முன்னுதாரணமான நூல் என்றால் எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தி இந்தியா என்ற நூலைச் சொல்லலாம். அப்பட்டமான அவதூறுகளாலும் காழ்ப்புகளாலும் மட்டுமே உருவாக்கப்பட்ட அடிப்படை நேர்மையற்ற நூல் அது

அதேசமயம் இவர்கள் மொழி இன அடிப்படையிலான வட்டாரதேசியங்களை முற்போக்கானது என்று வாதிடுவார்கள். அவர்கள் மொழி, இனச்சிறுபான்மையினருக்கெதிராக செய்யும் வன்முறையைக்கூட நியாயப்படுத்துவார்கள். இந்த மனநிலை இங்கே அரசியல்சரியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆகவே ‘அமெச்சூர்’ அறிவுஜீவிகளும் முதிராவயதினரும் இதை ஏற்றுக்கொண்டு பேசவேண்டியிருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த குமபலே ஒருவகையில் அல்லது இன்னொரு வகையில் கூலி பெற்று கூச்சலிடுபவர்கள்தான். அமெரிக்காவின் ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு கல்விநிலையத்துடன் ஏதாவது தொடர்புடையவர்களில் இந்தியதேசிய எதிர்ப்பைக் கக்காதவர்கள் அனேகமாக எவருமே இல்லை என்பதைக் காணலாம்.[அப்படி எவரேனுமிருந்தால் எனக்கு தகவல் தெரிவியுங்கள்]. இவர்களில் ஐரோப்பிய அமெரிக்க நிதியமைப்புகளின் உதவிபெறுபவர்கள் மிகமிக அதிகம். நேரடியாக அல்லது மறைமுகமாக.

இவர்களை இயக்குபவர்களின் நோக்கம் இந்திய தேசியத்தின் உள்வலிமையை அழிப்பது மட்டுமே. இந்தியாபோன்று உண்மையான அறிவுச்செயல்பாடு மிகமிகக் குறைவாக இருக்கும் தேசத்தில் அறிவுச்செயல்பாடாக நம் கண்ணுக்குத்தெரிபவர்கள் இவர்கள் மட்டுமே.

ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலுமுள்ள பெரும்பாலான தேசங்கள் இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்துவிட்டவை. விளைவாக அரசியல்ரீதியான கட்டுக்கோப்பை இழந்து அதன் வழியாக படிப்படியாக பொருளியல்தன்னுரிமையை இழந்து அடிமைப்பட்டவை. பலநாடுகளில் உள்நாட்டுப்போர்கள் வெடித்து மொத்தமாக அழியும் நிலையில் உள்ளன.

காங்கோ கென்யா முதலியவை அழிந்துவிட்டன. நைஜீரியாவை அழிக்கும் பெருமுயற்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. [சில வருடங்களுக்கு முன் அமெரிக்க, ஐரோப்பிய அறிவுலகில் பேசப்பட்டவற்றைக் கொண்டே நைஜீரியாவில் உள்நாட்டுப்போரை ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கவிருக்கின்றன என்று நான் ஊகித்து எழுதியிருந்தேன். அது இன்று உண்மையாகிவிட்டிருக்கிறது]

உண்மையில் எல்லையில் நிகழும் பூசல்கள் அல்ல இந்த வகையில் மையத்தில் நிகழும் தாக்குதல்களே இந்திய தேசியத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இவர்களிடம் மட்டுமே. இவர்கள் உருவாக்கும் அவநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் இன்னமும்கூட இங்குள்ள பெருவாரியான மக்களிடம் எடுபடவில்லை. ஆகவே நாம் அவற்றின் அழிவை அறியாமல் அவற்றையும் ஒருவகை கருத்துத்தரப்புகள் என்றே எண்ணி வருகிறோம்

ஆனால் உலக வரலாற்றைப்பார்த்தால் அவநம்பிக்கைகளையும் காழ்ப்புகளையும் உருவாக்குவது மிகமிக எளியது என்றே தெரிகிறது. மிகச்சிறிய ஒரு குழு சற்று வெளிநாட்டு ஆதரவிருந்தால் ஒரு பெரும் தேசத்தையே உள்நாட்டுப்போர்களில் இறக்கிவிடமுடியும்.ஆப்ரிக்க நாடுகளைப்பார்த்தால் அங்கே உள்நாட்டுப்போர்களும் இனக்குழுப்போர்களும் மிகச்சிலரால் உருவாக்கப்பட்டவை என்பதைக் காணமுடிகிறது. அவற்றுக்குப்பின்னால் பெரும்பாலும் விலைக்குவாங்கப்பட்ட அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்பதையும்.

வெளிநாடுகளுடன் நிகழும் போர்கள் உண்மையில் தேசங்களை அழிப்பதில்லை. பெரும் இழப்புகளை உருவாக்கினாலும் அவை தேசத்தின் உணர்வுக்கட்டுமானங்களை வலுப்படுத்தவே செய்கின்றன. அம்மக்கள் அந்த இழப்புகளில் இருந்து ஒருங்கிணைந்த உழைப்பு மூலம் மீளமுடியும். மேலும் வெளிநாட்டுப்போர்கள் மிக விரைவிலேயே சமரசம் நோக்கி வரும். அதிகாரச்சமநிலையை அடைவது வரை மட்டுமே போர் நிகழ முடியும்.

மாறாக உள்நாட்டுப்போர்கள் முடிவே அடையாது. அவை நெருப்பு போல முற்றாக எரிந்தழிந்தபின்னரே நிற்கும். உலப்போரே சில ஆண்டுகளில் முடிந்தது. ஆப்ரிக்க நாடுகளில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக, அந்த தேசமே பட்டினியால் அழியும்நிலை வந்தபின்னரும்கூட, உள்நாட்டுப்போர் நீள்கிறது.

நீங்கள் சொல்வதை நான் பலமுறை இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறேன். ஐரோப்பியநாடுகள் பல்வேறு இனங்களைக் கொண்டவை. பதினெட்டாம்நூற்றாண்டுவரை இனப்போர்கள் நிகழ்ந்த வரலாறு கொண்டவை. உபதேசியங்கள் சுதந்திரம் கோரி உள்நாட்டுப் போர் புரியாத ஒரு தேசம்கூட இன்று ஐரோப்பாவில் இல்லை. அவர்கள் அந்த முரண்பாடுகளை எல்லாம் சமரசம் செய்துகொண்டார்கள். தேசிய எல்லைகளைக்கூட சமரசம் மூலம் அழித்துக்கொண்டு ஒருங்கிணைந்து வலிமை பெறுகிறார்கள்

ஆனால் அவர்களின் பல்கலைகள் நமக்கு ஏற்றுமதி செய்யும் கொள்கைகள் இனப்போர்களையும் உபதேசியப்போராட்டங்களையும் ஆதரிக்கின்றன. சுதந்திரத்துக்கான புனிதப்போராட்டமாக அவற்றைச் சித்தரிக்கின்றன. அவர்கள் காசுகொடுத்து முத்திரை குத்தி இங்கே அனுப்பும் அறிவுஜீவிகள் ஊடகங்கள்தோறும் அவற்றை கூச்சலிட்டுப்பெருக்குகிறார்கள். விளைவாக உள்நாட்டுப்போர் ஆரம்பித்தால் இருதரப்புமே அந்த ஐரோப்பாவிடம் ஆயுதங்கள் வாங்கும். அந்தப்போர் மூலம் தேசப்பொருளியல் சரிந்தால் நாம் மூலப்பொருட்களை அவர்கள் சொல்லும் விலைக்கு அவர்களுக்கு விற்க ஆரம்பிப்போம்.

எல்லைகளில் நாம் வலிமையாக இருக்கவேண்டுமென்றால் உள்ளே நாம் உறுதியாக இருக்கவேண்டும். வலிமை என நான் சொல்வது அரசின் வலிமையை அல்ல. மக்கள் பிரிந்திருக்க அரசு வலிமையாக இருப்பதென்பது அடக்குமுறைக்கே வழிவகுக்கும். உள்நாட்டுப்போர்கள் நிகழும் நாடுகளில்தான் மக்கள்மீதான அடக்குமுறை மிக்க அரசுகள் உருவாகின்றன. சர்வாதிகாரிகள் உருவாகிறார்கள். அவர்கள் மக்களை ஒடுக்கி தேசத்தை அன்னியர்களுக்கு விற்கிறார்கள். ஆகவே இங்கே பிரிவினையும் காழ்ப்பும் பேசும் ஒவ்வொருவரும் உண்மையில் ஓர் அடக்குமுறை அரசை , மக்கள்துரோக அரசையே கொண்டுவர முயல்கிறார்கள்

நான் சொல்லும் வலிமை ஒருங்கிணைவின் மூலம் மக்கள் அடையும் வலிமை. அவர்கள் அரசுக்கு அளிக்கும் வலிமை. அதுவே மிகச்சிறந்த எல்லைக்காவல்

ஜெ

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 8
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 9