கடைசி அங்கத்தில்…

அன்புள்ள ஜெ,

நான் உங்களுடைய மனிதவாழ்க்கைபற்றிய அசலான சிந்தனையிலும் ஆய்விலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இன்றைய பெரும்பாலான தம்பதிகளிடமிருக்கும் கீழ்க்கண்ட பிரச்சினை பற்றி உங்கள் கருத்துக்களை அறிய ஆசைப்படுகிறேன்.

உங்களுக்குத்தெரியும் இன்று 95 சதவீதம் இந்தியத் தம்பதிகளும் மரபான முறையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் குழந்தைகளைப்பெறுகிறார்கள், வளர்க்கிறார்கள். அவர்களை சமூகத்தில் மதிக்கத்தக்க மக்களாக ஆக்குகிறார்கள்.

அவ்வாறு குழந்தைகள் குடும்பத்தைவிட்டுச் சென்றுவிட்டால் வயதான தம்பதிகள் தனித்துவிடப்படுகிறார்கள். அத்துடன் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கை அதிகபட்சம் பத்து சொற்றொடர்களைக்கூடப் பகிர்ந்துகொள்ளமுடியாததாக ஆகிவிடுகிறது.

அவர்கள் இரு தனித்தீவுகளில் வாழ்கிறார்கள். உறவினர்களும் அண்டைவீட்டாரும் அவர்களை வெற்றிகரமான நிறைவான குடும்பவாழ்க்கை வாழ்பவர்கள் என்று நினைத்தாலும் உண்மையில் அவர்கள் அன்பில்லாத போலிவாழ்க்கை வாழ்பவர்கள்.

நான் பல தம்பதிகளைப்பார்த்திருக்கிறேன். அவர்கள் பேச்சுவார்த்தைகூட வைத்துக்கொண்டிருப்பதில்லை. அவர்கள் பிள்ளைகளின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கக் கூடிய, மரணத்துக்காகக் காத்திருக்கக்கூடிய இரு ஆன்மாக்கள் மட்டுமே

உங்கள் அவதானிப்புகள் என்ன? இத்தகையஅன்பில்லாத அர்த்தமற்ற வாழ்க்கையைத் தவிர்க்க நீங்கள் என்ன சொல்வீர்கள்? புதிய ஆர்வங்களை உருவாக்கிக் கொள்ளமுடியாத காலம் பிந்திய வயதென்பதை நினைவுறுங்கள். வாழ்க்கையில் அதுவரை செய்யாத எதையும் அப்போது ஆரம்பிக்கமுடியாது. ஒரு நூலைக்கூட வாசிக்காத ஒருவர் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது

அன்புடன்

ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ் டயஸ் அவர்களுக்கு,

ஓஷோ ஓரிடத்தில் அவருக்கே உரிய அதிரடித்தன்மையுடன் சொல்கிறார், இந்தியாவில் தொழில்கல்வி எல்லாம் எவருக்கும் கொடுக்கத்தேவையில்லை, அதெல்லாம் சொந்தமாக தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளலாம், உண்மையில் கொடுக்கவேண்டிய கல்வி சந்தோஷமாக இருப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் என்கிறார். நெடுங்காலம் முன்னர் அதை வாசித்து சிரித்தபின் யோசித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

நீங்கள் சொன்னீர்கள், வாழ்நாள் முழுக்க செய்யாத ஒன்றை முதுமையில் ஆரம்பிக்க முடியாது என்று. வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்காத ஒருவரை முதுமையில் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்யமுடியுமா என்ன?

நம் குடும்பங்களில் வாழும் கோடிக்கணக்கான சாதாரணர்கள் எதற்காக வாழ்கிறார்கள்? எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென அவர்கள் நினைத்திருப்பார்களா? எந்நிலையிலாவது அதற்கு முயன்றிருப்பார்களா?

நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் எப்போதாவது அன்புடன் இருக்கவும் அன்பைப் பெறவும் முயன்றிருப்பார்களா? அன்பு ஒரு பெரிய இன்பம் என்பதையாவது அறிந்திருப்பார்களா?

நீங்கள் சொல்வதைப்போல அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அதற்கான காரணங்கள் இரண்டுதான். ஒன்று உயிரின் இயல்பான இச்சையும் பற்றும். காமம், பிள்ளைப்பாசம் போன்றவை அவர்களின் உணர்ச்சிகளல்ல. அவை உயிர்கள் தங்கிவாழ இயற்கையால் அளிக்கப்பட்ட அகவிசைகள்.

இரண்டாவது,அகங்காரம். அது பலவகைகளில் மொத்த வாழ்க்கையையும் இயக்குகிறது. எவருக்கும் குறைந்துபோய்விடக்கூடாது என்றும் அண்டை வீட்டானைவிட ஒருபடி மேலே செல்லவேண்டும் என்றும் ‘நாலுபேர்’ மதிக்கும்படி வாழவேண்டும் என்றும் கொள்ளும் வேகம். சமூகத்தில் ஓர் இடம் என்பது எந்த சமூக உறுப்பினருக்கும் உள்ள இச்சை.  அந்த இடத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வேகம் அகங்காரம்தான்.

இவ்விரு விசைகளால் உந்தி முன்னால் தள்ளப்பட்டு முதுமையை வந்தடைபவர்கள் நம்மில் தொண்ணூறு சதவீதம்பேர். வாழ்நாள் முழுக்க அவர்களின் புலன்களும் ஆன்மாவும் வேறெதையும் அறிந்திருப்பதில்லை. சுகம் என அவர்கள் சொல்வது அடிப்படை இச்சைகளின் நிறைவை.  அன்பு என அவர்கள் சொல்வது உயிரின் இயல்பான பற்றை. நிறைவு என அவர்கள் சொல்வது அகங்காரத்தின் ஈடேற்றத்தை.

இந்தவாழ்க்கை அதன் முடிவில் வெறுமையை அன்றி வேறெதைச் சென்றடையும்? உலகியல் சார்ந்த எதையும் முழுமையாகப் பின் தொடர்ந்து செல்லும் எந்த மனிதனும் வெறுமையை சென்றடைந்தே தீரவேண்டும். வேறு வழியே இல்லை. அது அதன் இயல்பான முடிவு. அந்த நரகம் நோக்கித்தான் அவர்கள் மொத்த வாழ்க்கையாலும் தேடிவந்திருக்கிறார்கள். அங்கே வந்தபின் அதை எப்படித் தவிர்க்கமுடியும்?

எனக்குத் தெரியும். திரும்பத்திரும்ப இந்த வெறுமையில் இருந்து என்னிடம் பேசும் பலர் இருக்கிறார்கள். ‘உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் உங்கள் அழகுணர்வை நிறைவு செய்யக் கற்றதில்லை. எளிய கேளிக்கைகள் அன்றி எதையும் அறிய மாட்டீர்கள். உங்கள் அறிவுத்தேடலை வளர்க்கப் பயின்றதில்லை. உலகியல் கணக்குகளுக்கு அப்பால் சிந்தித்ததில்லை. ஆன்மீகமாக எதையும் தேடியதில்லை. கடவுளிடம் பேரம் மட்டுமே பேசியிருக்கிறீர்கள். கடைசியில் இந்தக் கடைசி அங்கத்தில் எதைக் கற்க முடியும் ? எதைச்செய்ய முடியும்?’ என நான் சொல்வேன்.

‘நரகத்துக்குச் செல்லும் கடைசிக்கணம் வரை கடவுளிடம் கோரிக்கை வைக்க முடியும்’ என்று கிறித்தவர்கள் சொல்வதுண்டு. அதைத்தான் இங்கும் சொல்ல வேண்டியிருக்கிறது.

*

இந்த வினாவின் இன்னொரு பக்கம் உண்டு. அதைப்பற்றி சில விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. நம்மிடம் பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டவை. அவை சம்பந்தப்பட்டவர்களால் தேர்வுசெய்யப்பட்ட உறவுகள் அல்ல. ஆகவே குண இயல்பு, ரசனை, அறிவுத்திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுவதேயில்லை. ஆகவே ஆழமான ஆளுமை முரண்பாடுகளுக்கான இடம் அதில் உள்ளது.

ஆனால் இவ்வகைத் திருமணங்களில் தோற்றம், பண்பாட்டுப்பின்புலம், செல்வநிலை ஆகியவை நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. அத்துடன் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் ஆணும் பெண்ணும் உலகியலில் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் அதற்கான சமரசங்கள் பற்றிய தெளிவுடன் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் மனைவி ஆவதற்காக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே பெரும்பாலான நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உலகியல் தளத்தில் சுமுகமாகச் செயல்படுகின்றன. ஆரம்பத்தில் காமம். பின்னர் பிள்ளைவளர்ப்பு. அதன்பின் அவர்களுக்கான திருமணங்கள். அதுவரை எந்தச்சிக்கலும் இல்லாமல் குடும்பம் ஓடிச்செல்கிறது. ஆனால் இக்காலகட்டத்தில் அந்த இருவர் நடுவே மிக மிக அபூர்வமாகவே புரிதலும் இணைதலும் நிகழ்ந்திருக்கும். இருவர் தங்கள் பங்களிப்பை ஆற்றும் ஓர் அமைப்பாகவே அந்தக் குடும்பம் இருக்கும்.

அந்தப்பணிகள் முடியும்போதுதான் இரு ஆளுமைகள் மட்டுமே எஞ்சும் நிலை வருகிறது. அன்பின்மை மிகப்பெரிய சுமையாக ஆகிறது. அதுவரை தேங்கிய கசப்புகள் மேலெழுகின்றன. அகங்காரங்கள் பேருருவம் கொண்டு ஆட்டிப்படைக்கின்றன. பெரும்பாலான முதிய தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொத்திக்கொண்டிருப்பவர்கள். சிலர் குருதிவழிய முடிவதும் உண்டு. என் பெற்றோர் போல.

இங்கே எழும் வினா, உண்மையில் முற்றிலும் வேறுபட்ட ரசனையும் அறிவுத்திறனும் குணநலன்களும் கொண்ட இருவரிடையே சாதாரணமான நட்பும் உறவும் உருவாக முடியுமா, அவர்கள் அன்புடன் வாழ முடியுமா என்பதுதான். முடியாதென்பதே நடைமுறையிலிருந்து கிடைக்கும் விடை. ஆனால் நான் முடியும் என்றே சொல்வேன்.

நம்முடைய ஒத்த ரசனையும் ஒத்த அறிவுத்திறனும் ஒத்த இயல்பும் கொண்டவர்களிடம் மட்டுமே நம்மால் பிரியமாக இருக்க முடியும் என்பது ஒரு பெரிய மாயை.  இளவயதில் அந்த மாயை எனக்கும் இருந்தது. பின்னர் அதை என் அகங்காரம் என்று கண்டுகொண்டேன்.  ரசனையிலும் அறிவிலும் இயல்பிலும் என்னைப் போன்றவர்களிடம் நான் என்னை அதிகமாக நிறுவிக்கொள்ள முடிகிறதென்பதனால் நான் அவர்களை நாடுகிறேன், அவ்வளவுதான். அந்த சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் என் அகங்காரம் நிறைவடைவதனால் அவை எனக்குப் பிடித்திருக்கின்றன. ஆகவே நான் அவற்றை இனியவை என்று நினைக்கிறேன். என் அகங்காரத்தை அங்கீகரிப்பவர்களை நல்லவர்கள் என்றும் இனியவர்கள் என்றும் நேசிக்கிறேன்.

ஒரு குமரிமாவட்ட டீக்கடையில் நான் சென்றமர்ந்தால் அங்கிருக்கும் விவசாயிகள் என் வாசிப்பை, எழுத்தை, சிந்தனையை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். அவர்களின் உலகில் அவை செல்லுபடியாவதில்லை. ஆகவே அவர்களை அன்னியர்களாக நான் நிராகரிக்கிறேன். இதுதான் எப்போதும் நிகழ்கிறது.

மாறாக நான் என் அகங்காரத்தை கொஞ்சம் கழற்றிவிட்டு அவர்களுடன் சென்றமர முடிந்தால் எனக்கு புதியதோர் உலகம் அறிமுகமாகிறதென்பதை நாற்பது வயதுக்குமேல்தான் நான் கண்டுபிடித்தேன். அங்கே நான் யாருமல்ல என்பதே எனக்கு பெரிய விடுதலை. மணிக்கணக்காக வாழைவிவசாயத்தின் பிரச்சினைகளைப்பற்றியோ ரேஷன்கடை மண்ணெண்ணையின் விலை பற்றியோ நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தேன். அது அவர்களை நேசிக்கச் செய்ததையும் கண்டேன்.

உறவுகளிலும் அதேதான். ஒரு கணவன் தன் அகங்காரத்தை கொஞ்சம் கழற்றிவிட்டு மனைவியின் உலகில் உட்செல்ல உண்மையிலேயே முயன்றால் அது மிகமிக எளிது என்பதையும் அது மிக உற்சாகமான ஒரு புதிய உலகம் என்பதையும் உணரமுடியும்.

நான் என்னிடம் தனக்கும் மனைவிக்குமான தூரம் பற்றி பேசிய ஒருவரிடம் நீங்கள் மனைவியுடன் சேர்ந்து பாத்திரம் கழுவியிருக்கிறீர்களா, சமையல் செய்திருக்கிறீர்களா, வீடு சுத்தம் செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அதில் ஆர்வம் இல்லை என்றார். மனைவியின் ஆர்வங்களை, அவர் சொல்லும் விதவிதமான வாழ்க்கைத் துணுக்குகளை கவனித்திருக்கிறீர்களா என்றேன். அவற்றிலும் ஆர்வமில்லை என்றார்.

ஆர்வத்தை உருவாக்குங்கள். அதற்குத் தடையாக இருப்பது உங்கள் அகங்காரம். அதைத்தாண்டிச் செல்லுங்கள். அது உண்மையில் பெரிய திறப்பாக அமையும் என்றேன். அவர் புரிந்துகொள்ளவில்லை. மனைவியை தன் உலகுக்கு கட்டாயப்படுத்திக் கொண்டுவருவதைப்பற்றியே பேசினார். மனைவியை உங்கள் உலகுக்குக் கொண்டுவர ஒரே வழிதான், நீங்கள் அவர் உலகுக்குச் செல்லுங்கள் என்றேன். அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

நாம் நுழைய முடியாத உலகம் என ஒன்றில்லை. நாம் உரையாடமுடியாத நெருங்க முடியாத மனிதர் என எவரும் இல்லை. நாம் அதற்காக முயலவேண்டும், அவ்வளவுதான். இன்று பகல் முழுக்க ஆட்டோவில் அலைந்தேன். ஆட்டோக்காரர் ஆர்சி புத்தகத்தின் நடைமுறைச் சிக்கல்களை மிகமிகமிக விரிவாகச் சொன்னார். நான் அதை முழுக்க கவனித்தேன். என் கருத்துக்களையும் சொன்னேன். நான் எவ்வளவு அறியாமையுடன் இருக்கிறேன் என்பதில் அவருக்கு மனநிறைவு. எனக்கு உண்மையில் அவ்வளவு உற்சாகமாக இருந்தது. ஆர்சி புக்கைப்பற்றி வேறு யார் எனக்கு இவ்வளவு அக்கறையுடன் சொல்லித்தரப்போகிறார்கள்?

[எக்காலத்திலும் ஆர்சி புக்குடன் அரசலுவலகம் பக்கம் போகக்கூடாது என்று மட்டும் புரிந்தது. அதை அவரிடம் சொன்னேன். எங்கிட்ட சொல்லுங்க சார், நான் பாத்துக்கறேன் என்று ஆர்வமாகச் சொன்னார். நான் லௌகீக வாழ்க்கையில் மிக வெற்றிகரமான ஆசாமி. ஆனால் என் வாழ்க்கைமுழுக்க எனக்காக என் வேலைகளை பிறர்தான் செய்கிறார்கள். இன்னொரு புதிய ஆள் உள்ளே வந்தாயிற்று என நினைத்துக்கொண்டேன்]

அதை நம் மனைவியிடம் உறவினர்களிடம் கடைப்பிடிக்கமுடியும். அதைச் செய்யவேண்டுமென நாம் முயலவேண்டும். அவ்வளவுதான். நாம் நம் அன்றாட வாழ்க்கையில் உறவுகளை மேம்படுத்த, அன்பு காட்ட, அக்கறைகொள்ள நாமாக முயற்சி செய்வதில்லை. அது நிகழவேண்டுமென நினைக்கிறோம். அது நிகழாமல் நம் அகங்காரத்தால் தடுத்தும் வைத்திருக்கிறோம். கொஞ்சம் முயன்றால்கூட மிகமிக எளிய விஷயம் இது என்பதுதான் உண்மை.

கடைசியாக மீண்டும் ஓஷோ. அன்புடன் இருப்பது மிக எளிய செயல், அதற்காக கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டால்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்நேயம் அறக்கட்டளை