சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப் பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன்.
அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணி வந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள், மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள்.
‘என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.
எனக்கு வருத்தமாக இருந்தது. நானே அத்தையின் மொழியை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பேசமுடியும்
இப்பகுதிக்கே உரிய பழைமையான மலையாள வட்டாரவழக்கு ஒன்று உண்டு. அதில் சி.வி.ராமன்பிள்ளை போன்றவர்கள் செவ்வியல் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த ‘மலையாண்மை’ என்று அதைச் சொல்வார்கள். அத்தை அறிந்த ஒரே மொழி அதுதான்.
சின்னவயதில் நானெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மொழி மாறியது. தரப்படுத்தப்பட்ட பொதுமலையாளம் நோக்கி நகர்ந்தது. அத்தையைப்போல சில அழிந்துவரும் உயிரினங்கள் இன்னும் அம்மொழியில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பிறருக்குமான தொடர்பே முழுமையாக அழிந்துவிட்டது.
இதே நிலைதான் குமரிமாவட்டத்தின் வட்டாரத்தமிழ் பேசுபவர்களுக்கும். பெரும்பாலும் கிராமத்து வயதானவர்கள்தான் அதை இன்று பேசுகிறார்கள். அடுத்த தலைமுறை முழுமையாகவே வெளியே வந்துவிட்டது. நானோ நாஞ்சில்நாடனோ புனைவுகளில் எழுதும் தமிழ் இன்றும் வேணாட்டிலும் நாஞ்சில்நாட்டிலும் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவை நாட்டுப்புறக்கலைகள், நாட்டாரிலக்கியங்கள், பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் போல முழுமையாகவே அழிந்துவிடும் நிலையில் உள்ளன.
நடந்துகொண்டிருப்பது ஒரு பிரம்மாண்டமான சமப்படுத்தல். சராசரிப்படுத்தல். பழங்கால பழங்குடி மற்றும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்பது சின்னச்சின்ன பண்பாட்டு பகுதிகளை உருவாக்குகிறது. அவை பிற பண்பாட்டுப் பகுதிகளுடன் தேவையான அளவுக்கு மட்டுமே உறவுள்ளவை. மக்கள் அன்று இடம்பெயர்வது மிகக்குறைவு. தங்கள் நிலப்பகுதிக்குள்ளேயே முழுமையாக வாழ்ந்து நிறைவார்கள். வணிகமும் படையெடுப்புகளும் மட்டுமே புறத்தொடர்பை உருவாக்குகின்றன. ஆகவே அந்தப் பகுதியின் பண்பாடு தனக்கான தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்கிறது.
இந்த பண்பாட்டுப்பகுதிகளை காட்டில் ஊறித்தேங்கியிருக்கும் சிறிய நீர்த்தேக்கங்கள் எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் பண்பாடு என்பது ஒரு பெருமழை. பெருவெள்ளமாக அது வருகையில் இந்த நீர்த்தேக்கங்களை எல்லாம் இணைத்து ஒன்றாக்கி தானும் வளர்கிறது. அனைத்தையும் அடித்துக்கொண்டு செல்கிறது. அந்த பெருக்கில் எல்லா நீர்நிலைகளின் நீரும் உள்ளது, ஆனால் எதற்கும் தனித்தன்மை இல்லை.
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளை தகவல்தொழில்நுட்பத்தின் யுகம் எனலாம். அச்சு ஊடகம், போக்குவரத்து, மின்னணு ஊடகம் ஆகியவை வளர்ச்சியடைந்தன. கூடவே பெருந்தொழில்கள் உருவாகி மக்கள் இடம்பெயரவும் ஒருவரோடொருவர் கலக்கவும் கட்டாயத்தையும் உருவாக்கின. ஆகவே எல்லா தனிப்பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்க நேர்ந்தது.
குமரிமாவட்டத்தில் வேணாடும் நாஞ்சில்நாடும் வெவ்வேறு மொழியும் பண்பாடும் கொண்டவை. அவை ஒன்றாயின. குமரிப்பண்பாடு தமிழின் பொதுப்பண்பாட்டுடன் கலந்தது. தமிழ்ப்பண்பாடு இந்தியப் பண்பாட்டின் பகுதியாகியது. இந்தியப்பண்பாடு உலகளாவிய பண்பாட்டின் ஒரு துளியாகியது. இரு நூற்றாண்டுகளாக இந்த அடையாளமிழப்பும் கலப்பும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன
இந்தக் கலப்பு மெல்ல ஆரம்பித்து வேகம் பிடித்து, தகவல்தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லச்செல்ல உச்சத்தை அடைகிறது. இது நவீன காலகட்டத்தின் ஒரு தேவையும் ஆகும். பல்வேறு மக்கள் ஒன்றுகலந்து வாழ்ந்தாகவேண்டுமென்ற நிலையில் பொதுமையையும் சராசரியையும் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அதுதான் வசதியானது.
உதாரணமாக, ஓர் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒரே மொழிபேசி ஒரே வகையான பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தால்தான் ஆலை சுமுகமாக நிகழமுடியும். பொதுமை இரண்டும் இல்லாமல் தொடர்பு நிகழாது. அது இல்லாமல் நிர்வாகமே சாத்தியமில்லை. சென்ற இருநூறாண்டுகளில் நாம் எல்லாத் துறைகளிலும் பொதுமை சராசரித்தன்மை ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.
சென்ற நூற்றாண்டின் மாபெரும் தகவல்தொழில்நுட்பம் சினிமா. தமிழ்சினிமாவை கூர்ந்து நோக்கினால் வணிகசினிமா எப்படி மெல்லமெல்ல பொதுமையையும் சராசரியையும் உருவாக்குகிறது என்பதைக் கண்டு வியப்போம். தமிழ்சினிமா தமிழ்நாடு முழுக்கச் சென்று அனைவரையும் மகிழ்வித்தாகவேண்டும். இங்கே வட்டாரத்துக்கு ஒரு மொழியும் பண்பாடும் இருந்தது. சாதிக்கொரு மொழியும் பண்பாடும் இருந்தது. சினிமா இவற்றில் ஒரு பொதுவான சராசரியான வடிவத்தை மெல்லமெல்ல அமைத்துக்கொண்டது
ஆரம்பகாலத் தமிழ் சினிமா தரப்படுத்தப்பட்ட ‘அச்சு’ மொழியை பேசியது. கதாபாத்திரங்கள் இன்ன சாதி, இன்ன வட்டாரம் என தோராயமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டார்கள். அது ஏற்கனவே இருந்த வணிகநாடகத்தால் உருவாக்கப்பட்ட பொதுமையும் சராசரியும். மெல்லமெல்ல எம்ஜிஆர் காலகட்டத்தில் சினிமா பிரம்மாணடமாக வளர்ந்தபோது அந்தப் பொதுமை இன்னும் பெரிதாகியது, சராசரி இன்னும் துல்லியமாகியது. எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் பொதுவாக சாதி அடையாளம் இல்லாதது. எந்த வட்டார வழக்கையும் அது பேசவில்லை. [கூர்ந்து நோக்கினால் அது தமிழின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தது என ஊகிக்க இடமிருக்கும்]
இவ்வாறு சினிமா உருவாக்கிய சராசரிப் பொதுமொழி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே புழங்க ஆரம்பித்தது. அது வசதியானதாக இருந்தது. பொதுவெளியில் கையாள்வதற்குரிய கருவியாக இருந்தது. நாமெல்லாம் அந்தப் பொதுமொழி நோக்கி நம்மையறியாமலேயே நகர்ந்துகொண்டிருந்தோம். நம் தாத்தாவின் மொழிக்கும் நம் மொழிக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டால் இது தெரியும். தொலைக்காட்சி வந்ததும் இந்தவேகம் உச்சநிலையை அடைந்தது. வட்டார வழக்குகள் ஏறத்தாழ முழுமையாகவே அழிந்தன.
இந்த அழிவு ஒருவகையில் தவிர்க்கமுடியாதது. வட்டார வழக்கு என்பது சென்றகாலத்தைய ஒரு அடையாளம். இன்று அந்த வட்டார அடையாளங்களுடன் நாம் இல்லை என்னும்போது அந்த மொழியை மட்டும் வைத்துக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனால் அதில் மிகப்பெரிய ஓர் இழப்பு உள்ளது. அந்த வட்டாரவழக்கு ஒரு நெடுங்காலப் பண்பாட்டுப்பதிவு. ஒரு வட்டாரத்துக்கு மட்டுமே உரிய வேளாண்மை, கலைகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவை அம்மொழியில் வட்டாரத் தனித்தன்மையாக உறைந்துள்ளன.
நம் வாழ்க்கை விவசாயத்துடன் தொடர்புடையது என்பதனாலேயே விவசாயம் சார்ந்த சொற்கள் நம்மிடம் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றிலும் நூற்றாண்டுகளாக நம் முன்னோடிகள் நிகழ்த்திய அனுபவம் சார்ந்த அறிதல்கள் உள்ளன.
உதாரணமாக குமரிமாவட்ட வட்டாரவழக்கில் உள்ள வேளாண்மை குறித்த சொற்கள். தறுப்பு என்றால் நெல்லின் அடிக்கற்றையின் கனம். அது எவ்வளவு கதிர் நிற்கும் என்பதற்கான ஆதாரம். மாட்டின் உடலுறுப்புகளைக்குறிப்பதற்காக மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வட்டாரச்சொற்கள் உள்ளன. பூஞ்ஞ அல்லது புள்ளிருக்கை என்றால் திமில். கொண்டமணி என்றால் கொம்புக்கு நடுவே உள்ள குமிழ்.
மண்ணைக்குறிக்கத்தான் எத்தனை சொற்கள்! எனக்கே எவ்வளவு சொற்கள் தெரிந்திருக்கின்றன! செம்மண், கருமண், களிமண், களர்மண், உவர்மண், கடுமண் போன்ற மண்வகைகள் அனைவரும் அறிந்தவை. பாருமண் என்றால் உறைந்து கல்லான மண். வெட்டியெடுத்து வீடுகட்டுவார்கள். காரைமண் என்றால் சுண்ணாம்புமண். பன்ன மண் என்றால் வேர்கள் மண்டிய மண். பொற்றை மண் என்றால் மேட்டுநிலத்து மண். பொருமண் என்றால் பொலபொலவென்ற மண். பதக்கு மண் என்றால் நீர் ஊறி நிற்குமளவுக்கு இலைகள் மட்கிய மண். சதம்பு மண் என்றால் வளமற்ற சதுப்புமண். சொத்துமண் என்றால் வளமான காட்டுச்சதுப்பு மண்… யோசித்தால் ஐம்பது மண்வகைகளைப் பட்டியலிட்டுவிடமுடியும்.
நாட்டுப்புற வைத்தியம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாது. ஊரை என்றால் வாயிலிருந்து வரும் புளித்தவாடை என்பது நாட்டுப்புற வைத்தியனுக்குத் தெரியும். கொந்தை என்றால் கணியான் வைக்கும் மரத்தாலான மணிமுடி என அதன் ரசிகர்களுக்குத்தெரியும்.
வட்டார வழக்கு அழிவதென்பது நாம் பழங்குடிக்காலத்தில் இருந்தே சேர்த்துவைத்த ஞானம் அமர்ந்திருக்கும் பீடம் உடைந்து சரிவதுதான். வட்டாரவழக்கு அழிந்துபட்டமையால்தான் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்து பறவைகளின் பெயர்கள் சொல்லத்தெரியவில்லை. பத்து மரங்களை அடையாளம் காட்டத்தெரியவில்லை. அந்திக்கும் மாலைக்கும் நடுவே உள்ள மஞ்சள்முறுகும் வெளிச்சத்தைச் சுட்டிக்காட்ட நம்மிடம் சொல் இல்லை. [மணிவெளிச்சம்] நம் அனுபவமும் அறிதலும் சூம்பிவிட்டன
அதற்காக வட்டாரவழக்குக்குச் செல்லமுடியுமா என்ன? அது சாத்தியமில்லை. நதி ஒரே திசைக்குத்தான் ஓடமுடியும். அடாடா அழிகிறதே என்ற ஒப்பாரிகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எவரும் அப்படி பழைமைக்குச் செல்லப்போவதில்லை.
அப்படியென்றால் செய்யக்கூடியதொன்று உள்ளது. வட்டாரவழக்கையும் அதிலுள்ள நாட்டார் அறிதல்களையும் முழுக்க நவீன மொழியில் நிறைத்துக்கொள்வதுதான். அந்தச் செம்புப் பாத்திரத்திலிருந்து இந்த கண்ணாடிக் குடுவைக்குக் கொண்டுவருவது. நாட்டார் ஞானத்தையும் வட்டார வழக்குகளையும் நம் செல்வங்கள் என்று கொண்டால் நாம் இதைச் செய்யமுடியும்.
ஐரோப்பா இதில் ஒரு முன்னுதாரணம் – எதிர்மறையாக. அவர்கள் மிகவேகமாக நவீன வாழ்க்கைக்குள் வந்தவர்கள். அந்தவேகத்தில் தங்கள் ஒட்டுமொத்த நாட்டார் ஞானத்தையும் இழந்தார்கள். ஐரோப்பா இருவகையில் தங்கள் நாட்டார் ஞானத்தை இழந்தது. ஒன்று பதினேழாம் நூற்றாண்டு முதல் அவர்கள் செவ்வியல்மீது பெரும் நாட்டம் கொண்டு செவ்வியலை உச்சகட்ட சாதனையாக முன்வைத்து அதைநோக்கிச் சென்றார்கள். இரண்டாவதாக நடைமுறை சார்ந்த நவீனத்தன்மையை மிகவும் சார்ந்திருந்தார்கள். முதல்விஷயம் உச்சியிலும் இரண்டாம் விஷயம் அடித்தளத்திலும் நிகழ்ந்தது. ஆகவே அங்கு நாட்டாரியலும் வட்டாரவழக்குகளும் அழிந்தன.
அந்த அழிவை அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் உணர்ந்துகொண்டார்கள். எஞ்சியதை மீட்பதற்கான பெருமுயற்சிகள் செய்யப்பட்டன. இன்று நாட்டார் ஞானத்தில் மிகப்பெரிய கவனம் கொண்டவர்கள் ஐரோப்பியர்களே. இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் வாழும் நாட்டார் பண்பாட்டையும் கலைகளையும் வட்டார வழக்கையும் ஆவணப்படுத்துவது நவீனமொழியில் நினைவில் நிறுத்திக்கொள்வது இரண்டுக்கும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அதிகம்.
ஆனால் இங்கே நம் கல்வித்துறையில் அவர்களால் நிதியூட்டப்பட்டு இங்கே சில போலிமுயற்சிகள் நிகழ்கின்றனவே ஒழிய உண்மையான பணிகள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் நம் கல்வியாளர்கள் செல்வந்தர்கள், ஆகவே உயர்குடிகள், ஆகவே நகர்புறவாசிகள், ஆகவே கிராமம் மீது ஏளனம் கொண்டவர்கள். இக்காரணத்தால் நாட்டாரியல் பற்றிய சில கொள்கைகளை ஆங்கிலத்தில் வாசித்துவிட்டு, தோராயமாகப் புரிந்துகொண்டு, சிக்கலான மொழியில் அதைச் சொல்லி அறிவுஜீவி பாவனை செய்ய மட்டுமே அவர்கள் முயல்கிறார்கள்.
வட்டாரவழக்கையும் நாட்டார் ஞானத்தையும் இருவகையில் நவீனவாழ்க்கையில் நிலைநிறுத்த முடியும். ஒன்று ஆவணப்படுத்துதல். முறையாகப் பதிவுசெய்து தொகுத்தல். இது கல்விநிறுவனங்கள் சார்ந்த ஒரு பணி. நாட்டார் அறிவுகள் சார்ந்து இது பெரிதும் பயனுள்ளதே. மருத்துவம் வேளாண்மை போன்ற தளங்களில் உள்ள நாட்டார்ஞானம் அவ்வாறு தொகுக்கப்படலாம்.
ஆனால் நாட்டார் ஞானத்தையும் வட்டார வழக்கையும் இன்றைய வாழ்க்கைக்குள் நிலைநாட்ட கலையிலக்கியங்களால்தான் முடியும். இன்று ஒரு தூய நாட்டுப்புறக் கலையை எத்தனைபேர் அமர்ந்து ரசிப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. அந்தக்கலைகள் உருவாகி வந்த பண்பாட்டுப்புலமும் நிகழ்ந்த வாழ்க்கைக் களங்களும் இன்றில்லை. அவற்றின் மனநிலைகளை நாம் பகிர்ந்து கொள்வது இன்று சாத்தியமும் இல்லை. ஆய்வாளர்கள் அல்லாத பிறர் அவற்றை இன்று முழுமையாக அமர்ந்து பார்க்கவே முடியாது.
நான் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டார்கலைகளை அணுகியபோது இந்தச் சிக்கலைச் சந்தித்தேன். என்னால் அவற்றின் நிதானமான நகர்வை ரசிக்கமுடியவில்லை. அவற்றில் உள்ள வேகமும் தீவிரமும் என்னைக் கவர்ந்தபோதே அவற்றில் உள்ள பழைமையான மதிப்பீடுகளும் பழைய கலைக்கூறுகளும் என்னை அன்னியப்படுத்தவும் செய்தன. அவற்றில் உள்ள உணர்ச்சிகரமோ நகைச்சுவையோ என்னைக் கவரவில்லை.
இன்று ஒரு நவீனக்கலை அந்த நாட்டார்க் கலைகளின் சாரத்தை உள்வாங்கி எனக்காக மறுஆக்கம் செய்து தருமென்றால் அது என்னை ரசிக்கச்செய்யும். திரிச்சூர் ரூட்ஸ் என்ற அமைப்பு நவீன நாடகத்துக்குள் கொண்டுவந்த உண்மையான நாட்டார் கலைக்கூறுகள் என்னை மரபின் பிரம்மாண்டத்தை உணரச்செய்தன, நவீன கலையனுபவத்தையும் அளித்தன.
அதேதான் இலக்கியத்துக்கும். உண்மையில் வட்டார மொழி கொண்ட நாட்டார் இலக்கியம் என்பது இங்குள்ள ’சந்தைப்பதிப்பு’ நூல்களிலேயே உள்ளது. அந்த நூல்களை நாம் வாசிக்கவோ ரசிக்கவோ முடியாது. அந்த வட்டாரமொழி நாஞ்சில்நாடனின் கண்மணி குணசேகரனின் இலக்கியப்படைப்புகளில் வரும்போதே நம்மால் ரசிக்கமுடிகிறது. நாட்டார்பண்பாடும் வட்டாரமொழியும் நவீனகாலகட்டத்தில் நம்மிடம் வந்துசேர, நம்மில் வாழ இலக்கியமே சிறந்த வழி.
கலைகளும் இலக்கியமும் செவ்வியலுடன் கொண்டிருக்கும் அதே வேர்ப்பற்றை நாட்டார் பண்பாட்டுடனும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான வீரியத்துடன் வெளிப்படமுடியும். பண்பாட்டுத்தொடர்ச்சியை உருவாக்கமுடியும். அதற்கு இன்று வட்டாரமொழி மிகமிக முக்கியமான வாகனம்.
[அந்திமழை இதழில் எழுதிய கட்டுரைNov 7, 2012, மறுபிரசுரம்/