“அய்யோ அம்மா” என்ற டேனியின் சப்தம் கோல்செஸ்டர் ரயில் ப்ளாட்பார புறாக்களை பதற அடித்தது. அவை கூட்டமாக திடுக்கிட்டு சட்டென எழும்பி சற்று தூரம் போய் அமர்ந்தன, ஒரு குட்டி அலை போல.
டேனியின் கவனம் எங்கோ இருந்தது. இல்லையெனில் இப்படி, அதுவும் அனைத்து படிகளையும் ஒழுங்காக ஏறி கடைசி படியிலிருந்து தரைக்கு கால் வைக்கும் போது கவனக்குறைவாக காலை வைக்க மாட்டார். வழுக்கி, அனிச்சையாக கத்திக்கொண்டே முன் சாயும் போது இடது கையை தடவி படிகளை ஒட்டிய கம்பிகளை தடுமாறி பிடித்ததனால் முன் மண்டையில் நச்சென படவேண்டிய அடி குறைந்துவிட்டது. இடது கை முட்டு சரியாக கம்பிகளில் மோதி, உராய்ந்து…
ஸ்டேஷன் வார நாட்களின் பின் காலை பொழுதுகளில் பொதுவாக கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். இருந்தும் ஐந்தாறு பேர்கள் சேர்ந்துவிட்டார்கள்.
“Are you alright mate?” என்று பின்னால் இளம் குரல் அவர் தோளைத் தூக்கிவிட்டுக் கொண்டே கேட்டது. அதையே பெரிய ஸ்பீட் பிரேக்கர் நெற்றிச் சுருக்கங்களுடன் சிரமப்பட்டு காலை மடக்கி அவர் எதிரே ஒரு வெண் தாத்தா கேட்டார். வெளிறிய பிங்க் ஸ்பீட் பிரேக்கர்கள்.
“எனக்கு ஒன்றும் ஆகவில்லை…அப்பா” என்று மெலிதாய் டேனி பதில் சொன்னாலும் இடது கையை லேசாய் அசைத்தவுடனேயே வலி மெதுவாய் தூங்கி விழித்த முகத்துடன் வந்தது.
“தண்ணீர் வேண்டுமா?” கவலையாய் ஒரு ஸ்கர்ட் அணிந்த வயதான மாது கேட்டார்.
டேனிக்கு கூச்சமாக இருந்தது. இத்தனை வருடங்களில் அவர்தான் இப்போது எப்படி இருக்கிறது என்று மற்றவர்களிடம் கேட்டிருக்கிறார். அவரது பிஸியோதெரபி துறையில் இருந்து ரிடையர்ட் ஆகும்வரை கணக்கற்றவர்களிடம்.
“ஹலோ” என்றவாறே ஸ்டேஷன் பணி உடையிலிருந்த ஒரு கருப்பின மாது அவர் அருகே அமர்ந்தார். கூடவே அவர் கையிலிருக்கும் முதலுதவிப் பெட்டியும் அமர்ந்தது.
“இந்தக் கையா” என்றவாறே அவரது முழங்கை சட்டையை மெதுவாக தூக்கி சுருட்டிய போது முழங்கை மூட்டு வறண்டு பறபறவென (வெளிறி) இருந்தது. குளித்தபின் எண்ணெய் தேய்க்காமல் போனோமே என்று நினைத்துக்கொண்டார்.
“ஒன்றும் பெரியதாய் இல்லை, மிக்க நன்றி, நன்றி” என்று மெதுவாக, அழுத்தமாகச் சொன்னார். அந்த மாது தனது கரிய பளபளப்பான விரல்களால் மெதுவாக அழுத்திவிட்டு தோளில் தட்டி விட்டு மறைந்து போனார். டானி நிதானமாக ப்ளாட்பார்மில் நடந்து அங்கு நின்று கொண்டிருந்த லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் போகும் ரயில் பெட்டியில் நுழைந்து அமர்ந்துகொண்டார்.
ரயில் மெதுவாக ஊர்ந்து வேகம் கொண்டபோது டேனி சற்றே சுற்றி இருந்தவர்களை கவனித்தார். எதிரில் ஒரு பெரிய பூப்போட்ட ஸ்கர்ட்களுடன் கால் மேல் கால் போட்ட வெள்ளை பாட்டி. அவருக்குப் பக்கத்தில் இன்னொரு வெள்ளைப் பெண்மணி. பார்த்தவுடனேயே தெரிந்தது -இது இங்கிலாந்து வெள்ளையல்ல. கிழக்கு ஐரோப்பா வெள்ளை. அனேகமாக போலந்தாகத்தான் இருக்கும். அவர் நட்பாக புன்னகைத்துவிட்டு மடியில் இருந்த ஈ புக்கை நோக்கி குனிந்துக்கொண்டார்.
அவருக்குப் பக்கத்து இருக்கையில் நீல நிற பேப்பர் வெயிட் கண்களுடன் ஒரு பத்து வயது குழந்தை இவரையேப் பார்த்துக்கொண்டிருந்தது. மெல்லச் சிரித்தார். டானியின் பட்டை ப்ரேம்களைத்தாண்டி சிரிப்பு குழந்தைக்கு தெரிந்ததா என்று தெரியவில்லை, கூச்சமாக சிரித்துவைத்தது.
விழுந்ததின் படபடப்பு முற்றிலும் மறைந்துவிட்டது. இந்த மாதிரி படபடப்புகள் அவருக்கு புதிது. எந்த காரியத்தையும் நிதானமாக கூர்ந்துதான் செய்வார். எதிர்பாராதவைகள் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. பட்டை கண்ணாடி முகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பது தெரிந்தவர் போன்ற நிதானம் இருக்கும். பெருத்த உடலுடனும் பட்டைக் கண்ணாடிகளுடனும் நடக்கும்போது நடையும் பனிக்கட்டியின் மேல் நடப்பது போல ஒரு காலை அழுந்த பதியவைத்து உறுதிசெய்து கொண்ட பின் தான் அடுத்த கால். அதனால்தான் விழுந்தவுடன் இந்த மாதிரி பழக்கமில்லாத படபடப்பு.
பத்து நிமிடங்கள் கழித்து அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அந்த வெள்ளைப் பாட்டி மெதுவாய் எழுந்து ஸ்கர்ட் மடிப்புகளை பின்பக்கமாய் நீவியவாறே வெளியேறினார். மறுபடியும் ரயில் வேகம் பிடித்தது. டேனியின் பின்னாலிருந்து ஒருவர் வந்து எதிரில் அமர்ந்த போது டேனி அவரைக் கவனிக்கவில்லை.
டேனி தான் போய்க்கொண்டிருக்கும் காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். அந்த தேங்காய் எண்ணை வாசனைதான் டானியின் கவனத்தைக் கலைத்தது. அழுந்த வாரிய தலையுடன், சின்ன குங்குமப்பொட்டுடன் எதிரில் இருப்பவரைப் பார்த்தவுடனேயே டானிக்கு ஷெர்லாக் ஹோம்ஸைப் போல சில விஷயங்கள் தெரிந்துவிட்டது. அவரை நோக்கி கவனமாக சிந்திவிடாமல் புன்னகைத்தார். எதிரில் இருப்பவர் ரொம்ப நேரம் தேடிக்கொண்டிருப்பவரை கண்டது போல சட்டென தாராளமாக சிரித்தார்.
டேனி “நீங்கள் இந்தியாவிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் வினவினார்.
“ஆமாம். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன்…என் பெயர் பழனிச்சாமி” என்றார். பின் “எப்படிங்க நான் ஊர்ல இருந்து வந்தேன்னு கரக்டா கேட்டிங்க” என்று தமிழுக்குத்தாவினார்.
டேனி அதே கவனத்துடன் சற்றே பெருமிதமாக “இந்த ஜூன் மாதத்தில் தோல் கோட்டு போட்டுருக்கிங்களே, அதான்”
தமிழ் பிரிட்டிஷ் உச்சரிப்பில் கொச்சையாக இருந்தது.
பழனிச்சாமி ” ஆமாங்க, நான் மட்டும்தான் போட்டிருக்கேன், இல்ல?” என்று சுற்றிப் பார்த்தார். பெட்டியில் இருந்த அனேக ஆண்கள் டி சர்ட்களுடனும், ட்ரவுசர்களுடனும் இருந்தனர். பெட்டியில் கடைசியில் நின்று கொண்டிருந்தவர் வெறும் முண்டாசு பனியன்தான்.
“என்ன பண்றது சார். வந்து நாலு நாள்தான் ஆகுது. உங்க ஊர் ஜிலுஜிலு ஒத்துக்கணும்ல?” என்றார்.இதைத்தவிர பழனிச்சாமி எல்லாரையும் முறைத்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததும் ஒரு காரணம். அவரது இந்தியாவிலிருந்து வாங்கியிருந்த காலணிகளும் காரணம். ஆனால் இதையெல்லாம் டானி அவரிடம் சொல்லவில்லை.
சற்று மவுனத்திற்குப் பின் டேனி சற்றே திடுக்கிட்ட குரலில் “ஆமா, எப்படி எங்கிட்ட தமிழ்ல பேசினிங்க?”
இந்த முறை பெருமிதம் பழனிச்சாமியின் முறை “அதான் கீழே விழும்போது அய்யோ அம்மான்னு கத்தினிங்களே”
“ஓ, நீங்க பாத்திங்களா?”
“ஆமாங்க, கொஞ்சம் தள்ளி பெஞ்சிலதான் உட்கார்ந்திட்டிருந்தேன். அப்புறம் உங்க பின்னாடியேதான் இந்த கோச்சில ஏறினேன்”
டேனி பட்டைக் கண்ணாடியை சரி செய்துகொண்டார்.
“ரொம்ப வருஷமா இங்க இருக்கிங்களா சார்?” வினவினார் பழனிச்சாமி.
“ஆமாம்…for a while” என்றார் டேனி.
பழனிச்சாமி அவரையேப் பார்த்துக்கொண்டிருந்தார். “முப்பது வருஷங்களுக்கு மேல ஆகுது” என்று சஸ்பென்ஸை சாதாரணமாக சொன்னார்.
“அடேயப்பா…” பழனிச்சாமி மருத்துவரிடம் மூச்சை இழுத்துவிடுவது போல தலையையும் நெஞ்சையும் நிமிர்த்தி இறக்கினார்.
“போன வருஷம்தான் ரிடயர்ட் ஆனேன்”
“அப்படியா, தெரியவே இல்லைங்க”
சற்று நேரம் வெளியே ஜன்னல்களின் மேல் வரைந்து வைத்த படங்கள் போல் தெரிந்த தொடர்ந்த பச்சை நிலங்களையும் அவ்வப்போது தூரத்தே தோன்றி மறையும் குதிரைகளையும் பார்த்துக்கொண்டிருந்தார் டேனி.
பின், “பைதெ வெ, என் பெயர் டேனி” கை குலுக்கினார்.
“எம். எம்.ஸிலதான் படிச்சேன்…பிஸியோதெரபி டிப்ளமோ”
“ஓ…அப்பல்லாம் ஈசியா வேலை கிடைச்சிருக்குமே, இல்லிங்களா?”
“ம்…அப்படியும் சொல்ல முடியாது…சரியான சமயத்தில சரியான அட்வைஸ் கிடைக்கணும். அவ்வளவுதான்”
பழனிச்சாமிக்கு இன்னும் சரியாக புரியவில்லை. விவரமாக கேட்க தயக்கமாக இருந்தது.
“நீங்க?” என்று நிறுத்தினார் டேனி.
“எனக்கு தாராபுரங்க. ஊரு கேள்விப்பட்டிருக்கிங்களா? பழனி பக்கத்தில”
“அட, தெரியுமே?” டேனி கவனம் காட்டினார். பழனிச்சாமிக்கு உற்சாகமாக இருந்தது.
“என்என் பேட்டை வீதில ஸ்வதிக்கா பேப்பர் மார்ட். நாப்பது வருஷங்களா ஒரே கடை ஸார். அப்பா காலத்தில இருந்தே இருக்கு”
“ஐஸீ”
“மாப்பிள்ளை இங்க வேலை பார்க்கிறார்”
“ஐடியா?”
“ஆமா, கரக்டா சொல்லிட்டிங்களே! மாப்பிளையும் பொண்ணும் இங்க அஞ்சு வருசமாக இருக்காங்க.”
“…”
“ஒவ்வொரு சம்மர்லையும் நானும் வீட்லயும் உங்க ஊருக்கு வந்துடுவோம். இதோட மூணாவது சம்மர்.”
“…”
“மாப்பிளை மாச ரயில் டிக்கெட் எடுத்து கொடுத்துடுவார். இங்கிலிஷ் ஹெரிடேஜ் மெம்பர்ஷிப் கார்டும் எடுத்து கொடுத்துடுவார். நான் பொண்ணு கட்டிக்கொடுக்கிற சாப்பாட்டை எடுத்துக்கிட்டு தினமும் ஒவ்வொரு இடமா லண்டனை சுத்திட்டு வருவேன்”
“ம். குட், குட்…இங்கிலிஷ் ஹெரிடேஜ் லண்டன்ல நிறைய இடங்களை மெயிண்டெயின் செய்யறதில்லையே…எல்லாத்துக்கும் காசு வாங்குவாங்களே?”
“ஆமாங்க…நான் சும்மா ப்ரீ மியுசியம், பார்க், காலரின்னு அப்படியே…”
“குட், குட்…நேத்து எங்க போனிங்க?”
“நேத்து சும்மா பேக்கர் ஸ்டீரிட் போய் ரெண்டு நடை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் நடந்துட்டு வந்தேன்” சிரித்தார் பழனிச்சாமி.
“ஓரளவுக்கு இங்கிலிஷ் லிட்டரேச்சர் படிப்பேன். போன வீக் எண்ட், ஏவான்னு ஒரு ஊருக்கு மாப்பிள்ளை கூட்டிட்டு போனார்”
“ஓ, பிடிச்சிருந்ததா?”
“ஏதோ அந்த காலத்தில ஷேக்ஸ்பியர் இருந்த வீட்டை மியுசியம் மாதிரி வச்சிருக்காங்க…சும்மா போய் உள்ள தாகூர் சிலை கிட்ட நின்னு ஒரு போட்டோ! அவ்வளதான்!”
இப்போது ரயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றது. பழனிச்சாமிக்கு பக்கத்து இருக்கை காலியானது. உள்ளே ஏறிய இருவரும் அந்த இடத்தை நோக்கி வந்தனர். பின் மனமே இல்லாமல் அந்த வெள்ளை இளைஞன் நடுத்தர வயதுகாரர்க்கு வழி விட்டான்.
“இப்பல்லாம் எல்லாரும் நம்ம பக்கத்தில உட்கார்ந்துக்குவாங்க” என்று டானி சிரித்தார்.
பழனி புரியாமல் விழித்தார்.
“நான் வந்த புதுசுல எல்லாம் இப்படி கிடையாது…நம்ம பக்கத்துலலாம் உட்கார மாட்டாங்க…பஸ்ஸுல, ட்ரயின்ல…”
“அப்படியா? லண்டன்லயா?”
“ம்…லண்டன்லையும் சரி, நான் வேலை பார்த்த மத்த ஊருங்களிலும் சரி…”
“அதுவும் வேல்ஸ்ல ஹே ஆன் வே (Haye On Waye) ன்னு ஒரு ஊரு. ஊரு பூரா பழைய புஸ்கக கடைகளா இருக்கும். அங்க ஒரு வருஷம் இருந்தேன். பஸ்ஸில் என் பக்கத்துல மட்டும்தான் இடம் இருக்கும். எல்லாரும் நின்னுகிட்டு வருவாங்க ஆனா உட்கார மாட்டாங்க”
“நிறைய ஊர்கள்ல வேலை பார்த்திருக்கிங்களா ஸார்?”
“ம்…வேல்ஸ், ஷெப்பீல்ட், சவுத்தாம்டன்னு நிறைய சுத்தியிருக்கேன். இப்ப திரும்பிப் பாத்தா ஆச்சரியமாத்தான் இருக்கு”
சற்று மவுனம். டானி இப்போது பழனிச்சாமியை நேர்ப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் பார்க்கவில்லை.
“யார்க்க்ஷயரில்தான் கொஞ்சம் அதிகமா கஷ்டப்பட்டேன்…பையன் பிரவுன் குக்கி, பாக்கி (paki) னு என்னைப் பார்த்து ஸ்கூல்ல, தெருவில எல்லாம் கத்தறாங்கன்னு தினமும் அழுவான்”
“அய்யோ…போலிஸ்ல கம்ப்ளையண்ட் மாதிரி…?”
டேனி ஒன்றும் சொல்லாமல் சிரித்தார். பின் ஜன்னலுக்கு வெளியே பார்வை போய்விட்டது.
“ஹாஸ்பிட்டல கொஞ்சம் மல்லுக்கள், கன்னட ஆட்கள் எல்லாம் இருந்தோம். வேலை முடிஞ்சு வரும்போது நாலைந்து பேராகத்தான் வருவோம். தனியா வரவே மாட்டோம். சப்வேல சாயந்தரமெல்லாம் போக மாட்டோம். சில சமயம் பாட்டில் எல்லாம் காதருகே பறக்கும்”
சில நொடிகளுக்குப் பின் “எங்க ஊர்ல, வளவுக்குள்ள நாங்க எல்லாரையும் எல்லாம் வுடமாட்டோம். இங்க வந்தா என்னை இவங்க…ஊர்ல சொன்னா நம்பவே மாட்டாங்க”
“வெளியதானே பிரச்சனை. வேலை பாக்கிற இடத்தலலாம் ஒன்னும் பிரச்சனையிருக்காதுங்களே?”
“ரொம்ப இருக்காதுதான்”
இருந்தன, ஏகப்பட்ட சிரமங்கள் பட்டிருக்கிறார் டேனி.
“இப்பல்லாம் ரொம்ப கிடையாது. சட்டங்கள் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கு”
“நம்ம ஆளுங்க சில சமயம் அதையும் மிஸ்யூஸ் பண்ணிடுவாங்க…என்னை நீக்ரோன்னு திட்டிட்டான்னு ஒன்னும் இல்லாத விஷயத்திற்கெல்லாம் கம்ப்ளயிண்ட் பண்ணிடுவாங்க!”
“ஒரு பையன் மட்டும்தானா சார்?”
“ஆமாம். ஆனந்த் மட்டும்தான் எங்களுக்கு”
“ஓ..ஆனந்த்…”
பழனிச்சாமி இழுத்ததும் டேனிக்கு புரிந்தது.
“என்னோட முழுப்பேரு தனகோபால். சுருக்கமா டேனி”
“ஓ..ஓகேங்க” என்றார் பழனிச்சாமி
“பையன் இப்ப என்ன பண்றார் சார்?” டேனியின் பார்வை ஜன்னலிருந்து பழனிச்சாமியின் மேல் பட்டதும் பழனிச்சாமிக்கு என்னவோ போலிருந்தது.
“அவன் இப்ப நியுசிலாந்த்ல வெலிங்க்டன்ல டாக்டரா வேலை பண்றான்”
“ஓ…சந்தோசம்”
“இப்பத்தான் போய் ஆறு மாசம்தான் ஆகுது. ஆகஸ்ட்ல லீவுல வரான்…அவன் விஷயமாத்தான் நான் இப்ப லண்டனுக்கு போய்ட்டு இருக்கேன்”
“சரிங்க” என்ன விஷயம் என்று கேட்க பழனிச்சாமிக்கு துறுதுறுவென்று இருந்தது. ஆனால் கேட்கவில்லை.
இருவரும் ஜன்னலுக்கு வெளியே மஞ்சள் படுக்கைகளை பார்த்தவாறே இருந்தனர்.
“இந்த மஞ்சள் பூவிலிருந்துதான் ஆயில் எடுக்குறாங்களா ஸார்?”
“ஆமாம். இப்போ ரொம்ப பாப்புலர்னு போல…”
லண்டன் லிவர்பூல் ஸ்டேஷன் நெருங்கிவிட்டதாக கரகரத்த குரல் ஒலித்தது.
“சரி, இன்னிக்கு எங்க போகப்போறிங்க?”
“இன்னிக்கு டவர் ஆப் லண்டன் போலாம்னு இருக்கேன் சார். மாப்பிளை ஒரு கூப்பன் கொடுத்தார். அங்கதானே எட்டாம் ஹென்றி ராணி தலையை வெட்டினாரு?”
“அந்த டவர் மேல ஆயிரம் வருஷ சரித்திர தூசி இருக்குங்க. மெதுவா நாள் பூரா பாருங்க”
ஸ்டேஷனில் இருந்த ஆட்டோமேடிக் கதவுகள் பழனிச்சாமி டிக்கெட்டிற்கு வழி திறக்க மறுத்தன. பக்கத்திலிருந்த ஒரு தாடி அலுவலர் பழனிச்சாமியின் டிக்கெட்டை நன்றாக உறுத்திப் பார்த்துவிட்டு அனுமதித்தார். இருவரும் மெல்ல நடந்தனர். டேனிக்கு நிறைய நேரம் இருந்தது.
“வாங்க, ஒரு காப்பி சாப்பிடலாமா?” என்றார்.
பழனிச்சாமி தயங்கி “ப்ளாஸ்க்ல டீ கொண்டுவந்திருக்கேன்” என்றார்.
டேனி “பரவாயில்ல. எனக்கும் ஒரு கப் கொடுங்க” என்றார்.
இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர். எதிரில் கையில் பெட்டிகளுடன் இருக்கும் சிறுவர்கள், சிறுமிகள் சிலைகள். கீழே என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க பழனிச்சாமி கண்களைச் சுருக்கினார்.
“இதுவா, செகண்ட் வேர்ல்ட் வார் சமயத்தல ஹிட்லருக்குப் பயந்து இங்கிலாந்திற்கு அனுப்பட்டு இந்த ஸ்டேஷன் வந்த ஐரோப்பிய யூதக்குழந்தைகள் சிலைங்க”
“என்னங்க, நம்ம ஊர்ல தெருவுக்கு தெரு பிள்ளையார் மாதிரி இங்க எங்க பார்த்தாலும் இந்த செகண்ட் வேர்ல்ட் வாரை பத்தி ஏதாவது கண்ல பட்டுகிட்டே இருக்கு”
“முதல் உலகப்போரையும் விட மாட்டாங்க…எதையும் மறக்க மாட்டாங்க” என்றவாறே டீயை உறிஞ்சினார் டானி.
“சக்கரை..” பேக் பாக்கின் பக்கத்தில் தடவ ஆரம்பித்தார் பழனி.
“இல்ல போடமாட்டேன், டீ நல்லா இருக்கு”
“ஒன்னு பண்ணுங்க, ஏன் கூடவே வாங்க, பேசிட்டே நடக்கலாம். வழில ஏதாவது ஒரு ட்யூப் ஸ்டேஷன்ல உங்களை ஏத்திவிடறேன். டவர் ஹில் ஸ்டேஷன்லதான் நீங்க இறங்கணும், பக்கம்தான்”
“ஓகேங்க, எனக்கு ஒன்னும் அவசரமேயில்லை” என்று ப்ளாஸ்க்கை பேக் பேகில் வைத்தார் பழனிச்சாமி.
****
“நிறைய நம்ம முகங்கள் தெரியுது இல்லைங்களா?”
“ஆமாமா. கனேரி வார்ப் பக்கம் போங்க, ட்யூப்ல தெலுங்குல சத்தமாக மொபைல் பேசிட்டு இருப்பாங்க”
“நிறைய முன்னேற்றம்ங்க…இன்னும் பத்து வருசத்தில பாருங்க, ஏன், இப்பவே பாருங்க, மெடிக்கல், ஐடி, பாங்க்ன்னு எங்க பாத்திங்கன்னாலும் நம்ம பசங்க, பொண்ணுங்க முகங்களாத்தான் தெரியும்”
ஸ்டேஷன் வாசலில் இரு புறங்களிலும் இலவசப் பேப்பரை முகத்தில் திணிப்பது போல்காட்டிக்கொண்டிருந்தவர்களும் களைத்த இந்திய முகங்களாகத்தான் தெரிந்தனர். கேட்கலாம் என்று நினைத்தார் பழனிச்சாமி. ஆனால் கேட்கவில்லை.
இருவரும் அவசரமே இல்லாமல் ஒவ்வொரு தெருவாக கடந்தனர். முன்னொரு காலத்தில் சாரட்டுகள் மட்டுமே போய்கொண்டிருந்த நனைந்த தெருக்களில் இப்போது நெருக்கி கொண்ட சிவப்பு நிற டபுள் டக்கர் பஸ்களும், பெரிய பெரிய கருப்பு பிஎம்டபுள்யூக்களும் லாண்ட் ரோவர்களும் ஜாகுவார்களும் சாரி சாரியாக சைக்கிள்களும் முட்டி மோதி போய் வந்துகொண்டிருந்தன. சிக்னல்களில் சிவப்பு ஒளிர்ந்தாலும் பாதசாரிகள் வண்டிகள் வராத சமயம் பார்த்து தெருக்களை ஓடிக் கடந்தனர். வித விதமான ரெஸ்டாரண்ட்கள் – ஐரோப்பிய, தாய், வியட்நாம், மிடில் ஈஸ்ட் என்று எல்லாவற்றையும் விட அதிக இந்திய”கறி (curry)” கடைகள்.
“ஷெப்பீல்ட்டில்தானே…ஆமா, ஷெப்பீல்ட்டில்தான். இந்த ஊருக்கு வந்த புதுசில ஒரு ஞாயிற்று கிழமை. யாருடா கதவைத் தட்றாங்கன்னு திறந்தா போலிஸ்!”
“அய்யோ!”
“உங்க மேல, கீழ் வீட்டு வீட்டுக்கார பெண்மணி புகார் கொடுத்திருக்காங்கன்னு சொல்றான்”
“சொன்னா நம்ப மாட்டிங்க…நாங்க சமைக்கும் போதெல்லாம் எங்க வீட்டில இருந்து துர் நாற்றம் வருதாம். அதாவது மசாலா வாசனை. அவங்க குழந்தைகளுக்கு அலர்ஜியே வந்துட்டதாம்! எப்படி…திருட்டு பயலுங்க!”
“இப்ப சொல்லச் சொல்லுங்க, பாக்கலாம். ஒவ்வொரு சம்மர் பார்பிக்யூவிலயும் அக்கம்பக்கத்து வீட்டில எல்லாம் எப்படா கூப்புடுவோம்னு காத்துட்டு இருப்பாங்க! சும்மா ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா போதும். படையெடுத்துடுவாங்க, அத்தனையும் துளி கூட விடாம சாப்ப்ட்டு ராத்திரி எல்லாம் முடிஞ்சது, கெளம்புன்னாதான் போவாங்க”
நிதானமாக அவர்கள் பாங்க் ஸ்டேஷன் அருகில் வந்த போது மேகம் கலக்காத சுத்த சூரிய ஒளி. டூரிஸ்ட்கள் – நிறைய சீனர்களும் கிழக்கு ஐரோப்பர்களும்- கைகளில் கைடு மேப்புகளை வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தார்கள்.
“ஏங்க, நேத்து நைட் பாத்த சயன்ஸ் பிக்க்ஷன் படம் மாதிரி இன்னொரு கிரகத்திலிருந்து பறக்கும்தட்டு வந்தால் எல்லா ஊர்கார சாம்பிள் பீஸ்ஸும் ஒரே இடத்திலேயே கிடைக்கும்ல, என்ன சொல்றிங்க?”
டேனி பெரிதாய் புன்னகை புரிந்தார்.
“இதோ, பாங்க் ஸ்டேஷன் வந்தாச்சு. டவர் ஹில் ஸ்டேஷன் இங்கிருந்து பக்கம்தான்”
“சரிங்க, உங்களை சந்திச்சதில சந்தோஷம். ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, உங்க நம்பரை ஸ்டோர் பண்ணிக்கிறேன், அப்புறம் ஒரு நாள் கூப்புடுறன்” என்று தன் எண்ணைச் சொன்னார் பழனிச்சாமி.
***
டேனி மேலும் நடந்து, அதிகரித்த மூச்சு வாங்கலுடன் சென்ட் பால் கதீட்ரலுக்கு வந்த போது மதியம் மணி பனிரெண்டைத் தாண்டிவிட்டது. கதீட்ரலுக்கு நேர் எதிரே இருக்கும் வழியில் நடந்தார். மில்லினியம் பாலம் அகண்ட ஒற்றை வெள்ளிக் கம்பியாக தேம்ஸின் மேல் கிடந்தது. சிரத்தையாக போட்டோ எடுப்பவர்களுக்கு சில செகண்ட்கள் காத்திருந்து அவர்களின் நன்றியை சிறு புன்னகையில் அங்கீகரித்து பாலத்தைக் கடந்தார்.
தேம்ஸ் கரையோரம் சுற்றி சுற்றி இருக்கும் ஏகப்பட்ட அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் சாண்ட்விச்சுகளுடனும், கையில் கோப்பைகளுடனும் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தார்கள்.
தேம்ஸ் நதி வயிறு முட்டச்சாப்பிட்டது போல நிறைந்து வெளிச்ச அலைகளும் இருட்டு அலைகளுமாக கலந்து போய்க்கொண்டிருந்தது.
டேனி கடந்த இரு நாட்களாக கவனித்து தேர்ந்தெடுத்திருந்த, நதியை நோக்கியிருந்த ஒரு பெஞ்சில் போய் அமர்ந்தார். பெஞ்சின் மறு முனையில் இருந்த இளம்பெண் அவரைக் கவனிக்கவில்லை. ஒரு கையில் சாண்ட்விச்சும் மறுகையில் கோப்பையும் கண்கள் மடியிலிருந்த புத்தகத்தின் மேலும் வைத்திருந்தாள்.
சில விநாடிகளுக்குப் பின் திரும்பி “ஹலோ” என்றார்.
அந்தப் பெண் தலை தூக்கி முதலில் எதிரில் பார்த்து பின் பக்கவாட்டில் திரும்பி “ஹலோ தேர்” என்று சிரித்தாள். பளபள கரிய நீள கூந்தலும் அலுவலக ஸ்கர்ட்டும் டாப்ஸும் அழகாக இருந்தாள். ஆனந்திற்கு பிடித்ததில் ஆச்சரியமே இல்லை என்று நினைத்துக்கொண்டார்.
“மூன்றாவது நாளாக சந்திக்கிறோம். இங்குதான் வேலை செய்கிறீர்களா?” என்றார் டேனி.அவளது அலுவலகம் ஒரு ஐம்பது அடி தூரத்தில்தான் இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.
“ஆம். இங்கிருந்து ஐம்பது அடி தூரத்தில்தான் இருக்கிறது” என்றாள்.
சாதாரணமாக பேசும்போதே கண்கள் மின்னும் போல என்று நினைத்துக்கொண்டார்.
“ம்…நானும் மூன்று நாட்களாக இந்தியாவிலிருந்து வந்திருக்கும் நண்பருக்கு லண்டன் சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கிறேன்”
“ஓ…நல்லது”
அவள் இரண்டாம் தலைமுறை தமிழ்ப் பெண் என்று அவருக்குத் தெரியும்
“தவறாக நினைக்கவில்லையெனில் நீங்கள் ஒரு தமிழர்தானே?”
“ஆமாம். சரியாக கண்டுபிடித்துவிட்டீர்களே…என் பெயர் இந்திரா…இந்திரா உதயக்குமார்”
உறுதியாக இருந்தது அவளது கை குலுக்கல்.
“ஓரளவிற்கு தமிழ் பேசுவேன், ரொம்ப கஷ்டப்படாம” சிறிது வெட்கமும் சிரிப்புமாகச் சொன்னாள்.
அவருக்குத் தெரியும். வார இறுதிகளில் லண்டன் தமிழ்சங்கத்தில் நடத்தும் தமிழ் பள்ளியில் பல வருடங்கள் படித்திருக்கிறாள் என்று ஆனந்த் சொல்லியிருக்கிறான்.
“என் அப்பாவிற்கு தாராபுரம்ன்னு ஒரு ஊர்தான் நேடிவ். பழனிக்குப் பக்கத்தில…”
“நான் கைக்குழந்தையாக இருக்கும்போது லண்டன் வந்தோம்”
“ஓ, ரொம்ப நல்லது. ஊருக்கு போயிருக்கிங்களா?”
“ஓ யெஸ். ரெண்டு வருஷத்திற்கு ஒருதடவையாவது தாராபுரம் போய்டுவோம். நீங்க என்னை நீ என்றே கூப்பிடலாம்”
“அதனால் என்ன…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே டானிக்கு உள்ளே லேசாக கரை புரண்டது. தாராபுரம்…இந்த பழனிச்சாமி கூட அந்த ஊர்காரர்தானே…
“தாராபுரத்தல எங்கம்மா?”
“அலோசியஸ்ன்னு ஒரு ஸ்கூல் நினைவிருக்கு.அதற்கு எதிரில் உள்ள தெருவில் உள்ளே போகணும். பாட்டி,கஸின்ஸ் எல்லாம் அங்கதான் இருக்காங்க”
மென்மையாக அவளது மொபைல் ஒலித்தது. “எக்ஸ்யூஸ்மி ப்ளீஸ்” கொச்சைத் தமிழ் மறைந்து தற்போது பிரிட்டிஷ் உச்சரிப்பு வந்து கொண்டது. அவள் போனை காதில் வைத்துக்கொண்டே கரையோரம் போனாள்.
டானி பதற்றமே இல்லாமல் தனது மொபைலை எடுத்து recent calls ல் இருந்த எண்ணிற்கு டயல் செய்தார்.
“ஸார் வணக்கம். பழனிச்சாமி பேசறன்”
“பழனிச்சாமி, ஒன்னும் தொந்தரவில்லையே போன் பேசறதிற்கு”
“சேச்சே, அதல்லாம் ஒன்னுமில்லைங்க. நானே உங்களை கூப்பிடம்னு இருந்தேன்”
“அப்படியா, இருக்கட்டும். ஒரு விவரம் வேண்டும், உங்க ஊர்க்காரரைப் பத்திதான்”
“சொல்லுங்க, சொல்லுங்க”
“உங்களுக்கு தாராபுரத்தல உதய குமார்னு யாரையாவது தெரியுமா?”
“என்னங்க, இப்படி மொட்டையா கேட்டா..”
“இருங்க, இருங்க, எவ்வளவு சின்ன ஊரா இருந்தாலும் ஒரு பேரை மட்டும் வச்சிக்கிட்டு தெரியுமான்னு கேட்கிறது தப்புதான். இருந்தாலும் ஒரு சான்ஸ் பாக்கலாம்னுதான்”
“அவர் வீடு அலோசியஸ் ஸ்கூலுக்கு எதிர்ல இருக்கிற தெருவுல இருக்காம்”
“அலோசியஸ் ஸ்கூலுக்கு எதித்தாப்புலயா..” பழனிச்சாமி மெல்லிய “ம்” முடன் யோசிப்பது கேட்டது.
“ம்…அந்தப்பக்கம்லாம் டொம்பக் குடிதானங்க இருக்கு…அந்த காலத்தல இருந்தே அவங்க தானே இருக்காங்க”
டானியின் தாடை துணுக்குற்று சற்றே அசைந்தது.
“இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறியாச்சு, நான் சொல்றது ரொம்ப வருஷங்களுக்கு முன்னே” பழனிச்சாமி பேசிக்கொண்டே போனார்.
நாளை ஆனந்திடம் போனில் எப்படி பேசுவது என்பதை மில்லினியம் பாலத்தின் இந்தக் கரையிலிருந்து அந்த கரைக்கு போவதிற்குள் முடிவு செய்துவிட்டார். அவன் அடுத்த மாதம் வரும் போது செய்யவேண்டிய விஷயங்களை திரும்ப கோல்செஸ்டர் ஸ்டெஷன் போவதிற்குள் தீர்மானித்துவிடுவார்.
ஸ்டேஷன் என்றவுடன் அவரது வலது கை தன்னிச்சையாக இடது கை மூட்டைத் தடவி விட்டுக்கொண்டது. அந்த கருப்பி ஏதோ புது ஆயிண்ட்மெண்ட் சொன்னாளே, பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டே நடந்தார்.