தென்புலம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம்.அண்மையில் ஆதிச்சநல்லூர் தொடர்பாகவும்,கடல்கொண்ட குமரி நிலம்(குமரிக்கண்டம்?) தொடர்பாகவும் வாசித்துக்கொண்டிருந்தபோது தங்களின் ‘ஆதிச்சநல்லூர் சிதம்பரம்’ கட்டுரையையும் http://www.jeyamohan.in/?p=2143 ‘வையாபுரிப்பிள்ளை குறித்து’ என்ற கட்டுரையையும் http://www.jeyamohan.in/?p=63 மீண்டும் வாசிக்கநேர்ந்தது.

‘வையாபுரிப்பிள்ளை குறித்து’ கட்டுரையில் தாங்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்.
‘குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், ஏராளமான தொன்மங்கள் ஆகியவற்றைக் குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்]’

இதனை வாசித்த பின்னர் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ என்ற குறள் மனதின் ஒருமூலையில் ஓடிக்கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் முன்பு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியொன்றின் பதிவை இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி துணுக்குறவைத்தது.’எத்திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாதென்று கூறுவார்கள்?’என்பதுதான் அக்கேள்வி.பதில் வடக்குத்திசை.இதைக்கேட்டதும் சிறிது அதிர்ந்துவிட்டேன்.ஏனென்றால் இது எங்களூரில் வழமையாகச்சொல்லப்படும் விடயம்.வடக்கே தலைவைத்துப் படுத்துப் பலமுறை நான் அம்மாவிடம் பேச்சு வாங்கியிருக்கிறேன்.இந்த நிகழ்ச்சியைப்பார்த்த பின்னர் தமிழ்நாட்டிலும் இந்த வழமை இருக்கின்றது என்பதை அறிந்தபோது எத்தனை நூறாண்டுகளாக இம்மரபு பேணப்பட்டு வந்திருக்கவேண்டும் என்று தோன்றியதே அதிர்ச்சிக்குக் காரணம்.

இதன் தோற்றுவாய் எதுவாக இருக்கமுடியும்?வடக்கே தலைவைத்துப்படுத்தால் கால்கள் தென் திசையை நோக்கியிருக்கும்.அப்பொழுதுதான் தென்புலத்தார் என்பதனை மனது தொடர்புபடுத்தியது.தெற்கில் கால்களை நீட்டக்கூடாது.அது இறந்த முன்னோர்களுக்கு அவமரியாதை என்பதனால் அவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்று உணர்ந்தேன்.இவற்றுடன் ஆதிச்சநல்லூர் பற்றிய சிந்தனையும் இணைந்துகொண்டது.மிகப்பெரிய இடுகாடு.தென்புலத்தார்.அப்படியாயின் பண்டைக்காலத்தில் இடுகாடுகளைக் குடியிருப்பின் தென்திசையில் அமைக்கும் வழமை இருந்துவந்ததா என்று சிந்தனையோடியது.அவ்வாறாயின் இதுவரை கண்டறியப்பட்ட பண்டைத்தாழிக்காடுகளுக்கு வடக்கே ஆராய்வதன் மூலம் அவர்கள் குடியிருந்த பகுதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கலாம்.

மீண்டும் ஆதிச்சநல்லூர் பற்றி இணையத்தில் தேடினேன்.’Iron Age habitational site found at Adichanallur’ என்ற கட்டுரையைக்கண்டேன்.http://www.hindu.com/2005/04/03/stories/2005040301931400.htm.
அது கூறுகிறது ‘The site discovered now is on the north and north-western slopes of the urn-burial mound at Adichanallur. It is a few hundred metres away from the burial fields.’

ந.சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்,

இந்திய நிலப்பகுதியில் மிகக்குறைவாகவே தொல்லியல் அகழ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. காரணம் நம் தொல்லியல்துறையில் உள்ள நிதிப்பற்றாக்குறை. சென்ற கால்நூற்றாண்டில் நிகழ்ந்த உலகமயமாக்கம் சார்ந்த மனநிலை இதெல்லாம் தேவையற்ற வேலை என்ற மனநிலையை அரசு வட்டாரத்தில் உருவாக்கியிருக்கிறது. நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே வருகிறது

அதை மீறி ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்று நிலத்தடி ஆய்வை மேலே நின்றுகொண்டே கேளாஒலியலை மூலம் நிகழ்த்தி அடிபப்டைத்தேடலுக்குப்பின் தோண்டும் வசதி உள்ளது . இந்த சாத்தியக்கூறு ஏராளமான தொல்லியல் தடையங்களைஅளித்தபடி உள்ளது.

வட இந்தியாவில் ஐந்தாயிரம் வருடத்துக்குமேற்பட்ட தொல்நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபடியே உள்ளன. ஹரப்பா-மொகஞ்சதாரோ காலகட்டத்தைச்சேர்ந்தவை, அல்லது முந்தையவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா கால நகரங்களில் தோலவீராதான் பெரியது என்கிறார்கள். இன்னும்பெரிய ஒரு நகரை அடையாளம் கண்டிருக்கிறார்கள், அகழ்வாய்வுசெய்யப்போகிறார்கள் என்று செய்தி.

இந்தத் தொல்நகரங்கள் எல்லாமே பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத் [கட்ச்] பகுதியில் உள்ளன. சமீபமாக பிகார், உத்தரபிரதேசம் பகுதிகளிலும் புதைநகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

தென்னகத்தில் இன்னும் இவ்வளவு பழைய தொல்நகரங்கள் எதுவும் கண்டடையப்படவில்லை. இங்கே கண்டடையப்பட்ட நகரங்களில் ஆதிச்சநல்லூர்தான் பழையது. அது இரும்புக்காலகட்டத்தைச்சேர்ந்தது. அதிகபட்சம் மூவாயிரம் வருடம்

ஆதிச்சநல்லூரில் ஆரம்பத்தில் முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று கர்நாடகத்தில் மைசூர், மங்களூர் , கோலாபூர் பகுதிகளிலும் ஆந்திராவில் நாகார்ஜுனகோண்டா பகுதிகளிலும் முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கண்டடையப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே பண்பாட்டைக் காட்டக்கூடிய முதுமக்கள்தாழிகள் அவை. இரும்புக்காலகட்டம் என்று சொல்கிறார்கள்.

இதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை பெருங்கற்கள் என்னும் கல்நினைவுச்சின்னங்கள். அவை தென்னகம் முழுக்க உள்ளன. பெரும் கற்களை நாட்டி வைத்த வளையங்கள். அறைகள். சிறிய கோபுரங்கள். குடைக்கற்கள். அவை முப்பதாயிரம் வருடம் வரை பழைமை கொண்டவை என்கிறார்கள்

ஆச்சரியமென்னவென்றால் தமிழகத்தில் உள்ள அதே பெருங்கற்களை நாம் ஸ்பெயின் முதல் மஞ்சூரியா வரை யுரேஷியா முழுக்கக் காண்கிறோம். கிட்டத்தட்ட ஒரே வகையானவை

உலகநாகரீகமே ஒன்றுதான் என்ற எண்ணத்தையே அவை உருவாக்குகின்றன. மனிதர்கள் தங்களை மனித இனம் என உணரும் ஒரு காலம் வரும்போது அந்த உண்மையான மனித வரலாற்றையும் எழுதுவார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஉலகாளும் பொருளின்மை
அடுத்த கட்டுரைவிவாதிக்கப்பட்ட படைப்புகள்