அன்புள்ள திரு. ஜெயமோகன்,
வணக்கம் நலம் அறிய ஆவல், இபோதுதான் “அறம் ” புத்தகத்தை வாசித்து முடித்தேன், முன்பே உங்கள் வலைத்தளத்தில் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ வாசித்து உள்ளேன் . ஆனால் ‘அறம் ” புத்தகத்தை வாங்கவில்லை (ஆனால் ஓர் ஆண்டுக்கு முன்பே என் நண்பன் ஒருவனுக்கு அவன் திருமணத்திற்கு ‘அறம் ‘ புத்தகத்தை பரிசளித்தேன், இன்னொருவருக்கு ‘அறம் ‘ புத்தகத்தை சிபாரிசு செய்து சென்னை ‘நியூ புக் லேன்ட் இருந்து வாங்கி கொடுத்தேன். எல்லாம் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ கதைகளுக்காக மட்டுமே அதை செய்தேன்).
இப்போது “அறம் ” புத்தகத்தை வாசிக்கையில் இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறிவிட்டேனே என்ற எண்ணமே வந்தது (சமீபத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “அறம் ” புத்தகத்தை பற்றி கூறியுள்ளார், அதனால் “அறம் ” புத்தகத்தை வாங்கினேன்)..எல்லாமே மிகவும் அருமையான கதைகள் (ஏனோ எனக்கு ‘மயில் கழுத்து” அவளவாக பிடிக்கவில்லை அதை மட்டும் பாதியில் விட்டுவிட்டேன் ).. “சோற்றுக்கணக்கு’ கதை மட்டும் 5 முறை , ‘வணங்கான் 3 முறை படித்துவிட்டேன்..
அனைத்து கதைகளும் என்னை ஏதோ செய்து விட்டன.நானும் வாழ்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேல்லோங்கியது.
திருச்சி நட்புக்கூடல் நிகழ்சிக்கு வரவேண்டும் என்றிருந்தேன், ஆனால் வர முடியவில்லை.விஷ்ணுபுரம் இலக்கியக்கூடலுக்கு வரலாம் என்று திரு.விஜயராகவன் அவர்களுக்கு கைபேசியில் அழைத்தேன், ஆனால் 50 இடங்களும் முடிந்துவிட்டது என்றார். எங்கள் அலுவகத்தில் நாகர்கோவில் சேர்ந்த ஒரு பணியாளர் உள்ளார், அவரிடம் பார்வதிபுரத்தை விசாரித்து வைத்துளேன்.
பெங்களூரில் நட்புக்கூடல் நிகழ்ச்சி நடத்த ஏதேனும் திட்டம் உள்ளதா? உங்களை நேரில் சந்திக்க ஆவலாகி உள்ளேன்.
இப்படிக்கு
ரா.அ.பாலாஜி
பெங்களுரு
அன்புள்ள்ள பாலாஜி
பெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென எண்ணம் உள்ளது. நேரம் அமையவேண்டும். பார்ப்போம்.
அறம் அதன் அனைத்துக்கதைகளிலும் இலட்சியவாதம் பற்றிப் பேசுகிறது. பெரும் இலட்சியவாதங்கள் லௌகீக உலகின் மூர்க்கமான விதிகளில் இருந்து மனிதன் தப்பிச்செல்ல உதவக்கூடியவை. ‘வாழ்க்கையில் சாதிப்பது’ என்பது வாழ்க்கையை அர்த்தபூர்வமாக வாழ்வதே. உலகியல் சாதனைகள் அல்ல. இலட்சியவாதம் வாழ்க்கையை வாழச்செய்கிறது
குமரிமாவட்டத்தில் ஃபாதர் தொம்பர் என்ற ஏசு சபை பாதிரியார் இருந்தார். நான் அவரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் முட்டம் படகுத்தொழிற்சாலை, சுங்கான்கடை பானைத்தொழிற்சாலை என பல அமைப்புகளை நிறுவி அடித்தள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டிருக்கிறார். ஒரு பெரும் இலட்சியவாதி
[அறம் வரிசை கதைகளில் ஒன்று அவரைப்பற்றியது. அது சரியாக அமையவில்லை.ஆகவே பிரசுரமாகவில்லை.அந்தக்கருவே பின்னர் கடல் ஆக மாறியது]
தொம்பர் பற்றிப்பேசுகையில் சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார். அவரது முயற்சிகள் எல்லாம் உலகியல் லாபங்களை மக்களுக்கு அளிப்பதற்கானவை. அவற்றில் சில நிறைவேறின. பல தோல்வியடைந்தன. இன்று வெற்றியடைந்த தொழிலும் தோல்வியடைந்த தொழிலும் எல்லாம் காலத்தில் பின்னகர்ந்து நினைவில் இல்லாமலாகிவிட்டன
அப்படியென்றால் அவரது வாழ்க்கையின் பொருளென்ன? அவர் தோல்வியடைந்த ஒருவரா? ஆமாம் என்றார் நண்பர். நான் சொன்னேன் அவர் சலிக்காமல் பணியாற்றிக்கொண்டே இருந்தார். அப்பணிமூலம் ஏசுவிடம் பேசிக்கொண்டே இருந்தார். ஆகவே அவரது வாழ்க்கை முழுமையடைந்தது. இலட்சியவாதத்தின் உச்சகட்ட சாத்தியம் அதுதான் என
ஜெ