11
படகில் என்னை ஏற்றி கேபினுக்குள் கொண்டுசென்றதும் ‘ஸிட்!” என்று கூவி ,நான் அமரும் முன்னரே ஓங்கி கன்னத்தில் அரைந்தான் கன்னத்தில் மரு இருந்த அந்த ஹவல்தார் மேஜர். நான் சுதாரிக்கும் முன் அடிவயிற்றில் உதை விழுந்தது. அபப்டியே சரிந்து அமர்ந்தேன். ”நோ! நோ !அவரை ஒன்றும் செய்யாதீர்கள்! ப்ளீஸ்…ப்ளீஸ்…வேண்டாம் !வேண்டாம்! ” என்று ஜ்வாலாவின் அலறலைக் கேட்டேன். அவளை இழுத்தபடி அடித்தட்டில் எஞ்சின் அறைக்குக் கொண்டுசென்றார்கள். என் இடது கையில் விலங்கு பூட்டை திறந்து படகின் வளையம் வழியாக விட்டு மீண்டும் பூட்டி என்னை படகோடு கட்டினார்கள்.என்னால் எழ முடியாது திரும்ப முடியாது. சற்று வசதிபப்டுத்திக் கொள்வதற்காக நான் திரும்பியபோது ஜவான் ” லைªடா கி பால்… சாலா… அராம் ஹெ”என்று உறுமியபடி என்னை ஓங்கி அறைந்தான். இந்த அறைகள் என்னை அச்சுறுத்துவதற்காக அல்ல. நான் இப்போது லெ·ப்டினெண்ட் அல்ல, கைதிதான் என ஐயமில்லாமல் உணர்த்துவதற்காக.
படகு அலைகளில் ஊசல் போல ஆடியது. என் தலை படகின் இரும்பு உள்தகட்டில் மோதியது. கீழே ஜ்வாலாவின் அலறலும் அழுகையும் கேட்டது.
நான் “ப்ளீஸ்…அவளை ஒன்றும் செய்யாதீர்கள்…. அவளுக்கு ஒன்றும் தெரியாது ப்ளீஸ்”என்று அழுகையுடன் மன்றாடினேன். அந்த லான்ஸ் நாயக் என்னை ஓங்கி அறைந்து ”ஷட் அப் யூ சன் ஆவ் எ பிச்” என்றான்
நீரின் சுழற்றலில் படகு பலவாறாக திரும்பியது. முட்டித்ததும்பியது.
சட்டென்று கரையில் துப்பாக்கி மின்னல்கள் பளிச்சிட்டன. ஒலிகள் சற்றுதள்ளி வேறு இடத்தில் கேட்பதுபோல பிரமை எழுந்தது. படகில் ஒரு ஜவான் ”யா அல்லா! ” என குண்டு பட்டு விழுந்தான். அவன் அலறல் காபினுக்குள் எதிரொலித்தது. படகிலிருந்த கிரனைட் லாஞ்சர் படகே அதிரும்படியாக சுடத் தொடங்கியது.அதன் முழக்கம் என் காதுகளை ரீங்கரிக்கச் செய்தது. வெடிமருந்து புகை படகிலேயே குமட்டச் செய்தபடி தங்கியது. கரையில் அதன் குண்டுகள் விழுந்து புகை எழுப்பி வெடிபப்தைக் கண்டேன். பல இடங்களில் புதர்களினூடாக தெரிந்த குண்டு வெடியொளிகளும் அவ்வப்போது தெரிந்த மணிப்பூர் போராளிகளின் தலைகளும் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதை தெரிவித்தன.
குண்டுகள் நீரிலும் படகிலுமாக பாய்ந்தன. படகின் இரும்புப்பகுதிகளில் குண்டுகள் களங் களங் என்று பாய்ந்து சிதறிய ஒலி கேட்டது. படகை சுழற்றி திருப்பி அதை தப்பவைத்தபடி ஓட்டினார்கள். நீரோட்டம் அதிகமான இந்த காட்டாறுதான் பாதுகாப்பு .
இருபக்கமும் கடுமையான போர் நடந்துகொண்டிருந்தது. படகில் மேலும் இருவர் அலறி விழுந்தனர். கரையில் சேதம் அதிகமாக இருக்கலாம். படகில் இன்னமும் அவர்களின் கிரனைட் விழவில்லை. நீரில் விழுந்து குபீரிட்டு மறைந்தன அவை. ஆனால் இன்னும் சில நிமிடங்கள் தான். இன்னும் சில கணங்கள்….
எதிரே இன்னொரு ஆயுதம் தாங்கிய இந்தியப் படகு சுட்டபடியே எதிரோட்டமாக வந்தது. அதைக் கண்டதும் கரையில் இருந்த மணிபுரிப் போராளிகள் சிலர் உரக்க கூவினர்.
கரையில் புகை அடர்ந்து மூடியிருந்தது.அதன்மீது மேலுமேலும் குண்டுகள் விழுந்தன. காற்றில் புகைத்திரை விலகியபோது விழுந்துகிடந்த போராளிகளின் உடல்களைக் கண்டேன்.
பின்னர் கரை அமைதியானது. எங்கள் படகை மற்ற படகு பின்தொடர்ந்தது. விசித்திரமான சுழற்றலால் எனக்கு குமட்டி வந்தது. இருள் பரவி கரைகள் மறைந்தன. படகுக்குள் இயந்திர அறையில் மட்டும் ஒளி இருந்தது. அங்கே மெல்லிய குரலில் ரேடியோ குழறியது. படகில் ஜவான்கள் பிஸ்கட்டும் டீயும் சாப்பிடும் ஒலி கேட்டது. காயமடைந்த இருவரின் முனகல்கள். அவர்களுக்குக் கட்டுபோடுகிறார்கள்.
நான் சற்று தூங்கியிருக்க வேண்டும். என்னை அவர்கள் தட்டி எழுப்பியபோதுதான் விழித்துக் கொண்டேன். காலையில் படகுகள் சேறு மண்டிய கரையருகே ஒதுங்கியிருந்தன. என் விலங்குகள் அவிழ்க்கப்பட்டன. இருகைகளையும் முன்னால் சேர்த்து பூட்டப்பட்டன.
கரையிறக்கி நடக்கக் செய்தனர். அருகே அவளை இட்டு வந்தனர்.தன் அனைத்து உறுதியையும் இழந்து அவள் நனைந்த பறவை போல ஒடுங்கி குறுகி குனிந்து நடந்தாள். தோள்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன. அவளை கிட்டத்தட்ட இழுத்தபடி சென்றனர். அவள் ஓர் உணர்வால் என்னை திரும்பிப்பார்த்தாள். வலிப்பு வந்தவள் போல உடல் துடிக்க ”நெல்!” என்று ஒலியில்லாமல் கூவி கைநீட்டினாள். கையும் உடலும் துடித்தன. மீண்டும் மீண்டும் அதே உதட்டசைவு. அதே துடிப்பு…
நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். என் உதடுகளை இறுகக் கடித்திருந்தேன். அழக்கூடாது என்று எனக்கே ஆணையிட்டுக் கொண்டேன்.
அவளை இழுத்தார்கள், கால்தடுமாறி தரையில் அவள் விழுந்தபோது அப்படியே தூக்கி சென்றார்கள்.
கரையில் நான்கு டிரக்குகள் நின்றன. அவற்றில் வந்து கரையில் கூடி நின்ற ஜவான்கள் எங்களை விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். மெல்லிய சிரிப்பின் ஒலி கேட்டது. நான் கடந்துசென்ற போது ஒருவன் ”சாலா மத்ராசி…. சாலா ”என்று கூவி ஓங்கி துப்பினான்.
சேற்றில் நடந்து சென்று ராணுவ டிரக்கில் ஏற்றப்பட்டேன்.அவளும் காயமடைந்தவர்களும் இன்னொரு டிரக்கில். என் டிரக்குக்குள் நாயரும் இரு ஜவான்களும் ஏறிக் கொண்டார்கள்.
டிரக் எங்கள் கம்பெனி தலைமையகத்தை அடைந்தது. அது பழைய கிராம நிர்வாக அலுவலகம். அதைச்சுற்றி முட்கம்பிச்சுருள் வேலி. தரையில் ஆழ ஊன்றிய இரும்புத்தடிகளில் இரும்புத்தகடுகளை ஸ்க்ரூ செய்து பிணைத்து உருவாக்கப்பட்ட கோட்டைக்குமேல் காவல் கோபுரங்களில் கிரனெட் லாஞ்சர்கள் காத்திருந்தன. எம் 16 ரை·பிள்களும் ஏ.கெ.47 இயந்திரத்துப்பாக்கிகளும் எம்4 கார்பைன்களும் ஏந்திய வீரர்கள் மணல்மூட்டைகளுக்கு அப்பால் நின்றனர். கம்பி வாசல் திறந்து கிடந்தது.
என்னை நேராக காம்ப் ஆ·பீசுக்குக் கொண்டுசென்றார்கள். நாயரும் லெப்டினெண்ட் மேஜரும் கூடவே வந்தார்கள். இருவரும் இறுக்கமாக இருந்தனர். அங்கே என் கம்பெனி கமாண்டர் மேஜர் திரிபாதியின் அறை வாசலில் நான் நிறுத்தப்பட்டேன். எல்லா அலுவலக அறைகளையும் போலத்தான் அதுவும். காத்திருப்போருக்கான பெஞ்சு. இரட்டைக் கதவு. மேலே இந்திய ராணுவத்தின் அடையாளம். எங்கள் கம்பெனியின் முத்திரை. பக்கச்சுவரில் பெரிய அறிவிப்புப் பலகையில் என் குழுவில் இறந்த ஜவான்கலின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அஞ்சலி எழுதபப்ட்டிருந்தது. தியாகராஜன், சிராஜ், திம்மய்யா,ஸ்ரீகண்டன்,மாணிக்கம்,சண்முகம்…. ஒவ்வொரு முகமாக குபீர் குபீரென என்னை நோக்கி வந்தன. என்னை அவர்களின் கண்கள் சந்தித்தன.
கதவு திறந்து மேஜர் வெளியே வந்தார். பஞ்சாபி பிராமணர். வெள்ளையன் போல சிவந்த ஒல்லியான முகம். சாம்பல் கண்கள். என்னை தெரியாத ஆளைப்பார்ப்பது போலப் பார்த்தா. ” இஸ் ஹி வூண்டட்?” என்றார். காப்டன் ”நோ சர்”என்றார். ”வேர் இஸ் ஹிஸ் வெபன்ஸ்?”
நாயர் ஹிந்தியில் ”அவர் ஆயுதங்களும் அடையாளங்களும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டார்” என்றான்.
மேஜர் என்னை மீண்டும் பார்த்தார். ”கைதுசெய்யும்போது சாட்சியாக இருந்த எத்தனைபேர் இருக்கிறீர்கள்”
“நான்குபேர் இருக்கிறோம். மீதி ஐந்துபேர் சுடப்பட்டார்கள்”என்றான் நாயர்.
“இவரை கஸ்டடியில்; வையுங்கள்….யூனி ·பார்மைக் கழற்றிவிடுங்கள் ”என்றார் ” விரிவான விசாரணை பிறகு. அந்தப்பெண் எங்கே?’
காப்டன் ” தனி அறையில் வைத்திருக்கிறோம்” என்றார்
மேஜர்”அவளை நான் பார்க்க வேண்டும்”என்றபடி முன்னால் நடந்தார் .
“எஸ் சார்” என்றார் காப்டன். இருவரும் அவரை தொடர்ந்தார்கள்.
என் ஆடைகளை அவர்களே கழற்றி வெள்ளை பைஜாமாவும் குர்தாவும் தந்தார்கள். யூனி ·பார்மை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஸீல் வைத்தார்கள். பின் என்னை இழுத்து காவலறைக்குக் கொண்டுசென்றார்கள். சாதாரணமான ஸ்டோர் அறைதான். மட்கிய காகித நாற்றமும் தூசுவீச்சமும் இருந்தான. ஜன்னல்களை பூட்டி இரும்புப்பட்டை வைத்து இறுக்கி மூடியிருந்தனர். மேலே ஓடு. அதை எட்ட முடியாதபடி இரும்புவலை அடிக்கப் பட்டிருந்தது. தரையில் சிமிண்ட் வைத்து பதிக்கப்பட்ட இரும்பு வளையத்தில் விலங்கால் என்னைக் கட்டி பூட்டினார்கள்.
கதவு வெளியே பூட்டப்பட்டது.
நான் அதுவரை நடந்ததை என்னுள் ஓட்டினேன். எதுவுமே நம்பும்படியாக இருக்கவில்லை. ஏதோ கெட்ட கனவில் இருப்பதுபோலிருந்தது. தூக்கம் வந்தது. அதுவரையிலான மன அழுத்தம் எப்படியோ குறைவது போல ஓர் அமைதி மனதில் நிறைவது போல உணர்ந்தேன். அவளை ஒன்றும் செய்யமாட்டார்கள். இந்திய ராணுவ வீரர்கள் பலர் ஏ.எல்.எ·பின் கைதிகளாக இருக்கையில் அவள் ஒரு பெரிய சொத்து…
கதவு திறந்தது. ஏழடி உயரமான ஜவான் ஒருவர் உள்ளே வந்தார். பின்னால் மேலும் இரு ஜவான்கள். மேல் சட்டை இல்லாமல் பனியன் மட்டும் போட்டிருந்ததனால் அவர் என்ன ரேங்க் என்று தெரியவில்லை. பின்னால்வந்த இருவரும் லான்ஸ் நாயக்குகள்.
என் பூட்டை திறந்து என் இருகைகளையும் சேர்த்து பின்னால் கட்டி நிறுத்தினர். என்னை பார்த்தபடியே சுற்றி வந்தார். உணர்ச்சியற்ற மிருகக் கண்கள். மிருகத்தின் உடல்.
இந்தியில் ” நீ செய்தது எல்லாம் தெரிந்துவிட்டது”என்றார் ”எங்களுக்குத் தேவை உன் வாக்குமூலம்”
நான் பேசாமல் நின்றேன்
”நீ வாக்குமூலம் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் உன்னை சித்திரவதை செய்வோம்…”என்றார் அவர்.” நீ லெ·ப்டினெண்டாக இருந்தவன். உனக்குத்தெரியும் ராணுவச்சித்திரவதைகளைப் பற்றி”
என் வயிற்றுக்குள் உருண்டு வலியுடன் அடிநெஞ்சை முட்டிய அந்த குளிர்ந்த பந்தை பற்கலைக் கடித்து தாங்கிக் கொண்டேன்
”நகங்களைப் பிய்ப்போம். மயிர்களை ஒவ்வொன்றாக பிடுங்குவோம். எலும்புகளை உடைப்போம்…. ஆசன வாயில் மிளகாயும் அமிலமும் தடவுவோம்.” என்னை உற்று பார்த்தபடி சொன்னார்.
என் உடல் காற்றில் இலை நுனி போல நடுங்குவதை உணர்ந்தேன். நடுக்கம் ஏறி ஏறி என் உள்ளே ஓடிய சொல்லோட்டம் கூட நடுங்கி அதிர்ந்தது. பற்கள் கிட்டித்தன.
”பல முறைகள் உள்ளன. பனிக்கட்டிமீது படுக்க வைக்கலாம். மின்சார அதிர்ச்சி அளிக்கலாம். தலைகீழாக ·பேனில் கட்டிவைத்து சுழலச்செய்யலாம்”
என் வயிற்றிலிருந்து சிறுநீர் நழுவி பாண்ட் நனைந்தது. சட்டென்று என்னைப்பற்றிய வெட்கம் என்னைக் கவ்வியது. நான் ஒரு லெப்டினெண்ட் . ஏழு வருடம் ராணுவசேவை செய்தவன். இல்லை அப்படி உடைந்துபோக மாட்டேன். என் முழு எண்ணங்களையும் சிறுநீரிலேயே நிலைநாட்டினேன். என் பிரக்ஞையால் அதை இழுத்து பிடித்து என்னுள் நிறுத்தினேன்.
”…..எங்கள் நோக்கம் அதல்ல. நாங்கள் விரும்புவது ஒரு வாக்கு மூலம்”
நான் ஒன்றைக் கண்டு கோண்டேன். அச்சம்தான் சித்திரவதையின் முக்கியமான கருவி. அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். ஆனால் அச்சம் நம்மை மீறியது.ளதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. உதாசீனம் செய்ய சிறந்தவழி பிறிதொன்றை கவனிப்பது.
” ……சொல்”
பேசக்கூடாது. பேசுவதென்பது அவன் சொல்வதைக் கவனிப்பது. கவனித்தால் அதற்கு மனம் எதிர்வினைச் செய்யும். அஞ்சும். அது எனக்கான சொல்லே இல்லை. எனக்குப் புரியும் மொழியே இல்லை. அது வெறும் ஒலி. அது என் முன் ஒலிக்கவேயில்லை.
”சொல்…. நீ புத்திசாலி”
நான் என் முழுக்கவனத்தையும் என் சிறுநீரிலேயே நிறுத்தினேன். ஒரு துளி மட்டும் விட முயன்றேன். அடுத்த துளியை பிடித்து நிறுத்த வேண்டும். ஒரு துளி. அடுத்தது அதேகணத்தில் —- நிறுத்த என் முழு உடலையும் இறுக்கவேண்டியிருந்தது. நிறுத்திவிட்டேன். வெற்றியின் உவகையை உணர்ந்தேன்.
”லெ·ப்டினெண்ட்… நீங்கள் நான் சொல்வதை கவனிக்கவேண்டும்….”
மீண்டும் ஒருதுளி. ஒரே துளி….
”லெ·ப்டினெண்ட் காப்டன் நெல்லையப்பன்….நீங்கள் தப்ப ஒரேவழிதான் இருக்கிறது. இது வெறும் மிரட்டல் அல்ல என்று உங்களுக்குத் தெரியும். துரோகிகளுக்கு ராணுவத்தில் மன்னிப்பே இல்லை”
மீண்டும் ஒரு துளி
”ஓகே …நீங்கள் இதை தேர்வுசெய்கிறீர்கள்”
அவர்கள் என்னைப் பிடித்து ஜன்னல்சட்டத்தில் இறுக்கிக் கட்டினார்கள்.
”இன்னும் பிந்திவிடவில்லை லெ·டினெண்ட்…”
அவன் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் தகடை எடுத்தான். அதற்குள் டங்ஸ்டன் சுருள் இருக்கிறதென நான் ஊகித்தேன். சாதாரண அயர்ன் பாக்ஸிலிருந்து கழற்றியது. அதை என் புஜத்தில் வைத்து கட்டினான்.
என் நெற்றியெங்கும் வியர்வை கொட்டியது. என் கைவிரல்கள் கிட்டித்து ஒன்று இன்னொன்றுமீது ஏறிக்கொண்டன. தாடையை இறுக்கிக் கொண்டேன். தோள்சதைகள் மாபெரும் எடை ஒன்று தலையில் ஏறியவை போல தெறித்தன.
அவன் மறுமுனையை ஒரு பிளக்கில் செருகினான். ”நான் இன்னும் சுவிட்சை ஆன் செய்யவில்லை லெ·ப்டினெண்ட். உங்களுக்கு இன்னும் சில நிமிட அவகாசம் இருக்கிறது”
நான் என் கால்களால் துழாவி கீழே ஒரு சிறு பொருளை அறிந்தேன். ஏதோ பாட்டில் மூடி. அதை என் கால்விரல்களால் நெருடினேன். அதை எவ்வளவு வலித்தாலும் விடக்கூடாது. அதுதான் என் சுய கௌரவம் என்னுடைய தனித்தன்மை. என்னுடைய மனம். அதை விடவே கூடாது. அதை பற்றிக் கொண்டேன்
அவர் சுவிட்சில் கைவைத்து என்னைக் கூர்ந்து பார்த்தார். ” டேக் கேர்….இதுதான் கடைசி நிமிடம்”
நான் அந்த மூடியை என் கால்களால் பற்றிக் கொண்டேன்.
”ஓக்கே…” சுவிட்சை அவன் போட்டான். கம்பியில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம். என் உடல் உண்மையிலேயே அந்த மின்சாரத்தை உணர்ந்தது போல விதிர்த்தது. சில கணங்களில் தகடு சூடாயிற்று. மெல்லிய சூடுதான்…சூடு அதிகரித்தது. சில கணங்கள். சில கணங்கள். சிலகணங்கள். அல்லது ஒரே கணம்தானா? என் சதையை எரித்து இறங்கியது கடுமையான எரிச்சல். உடலே எரிந்தது. மூளைக்குள் அமிலம் நிறைந்தது. கொதித்தது. மூளைச்செல்களை எரித்து எரித்து எரித்து….நான் அந்த மூடியை கால்களால் பற்றியிருந்தேன். என் விரல்கள் அதை நழுவ விட்டன. அதை மீண்டும் இழுத்து பிடித்துக் கொண்டேன். மீண்டும் நழுவியது. விரல்கள் என் கட்டுப்பாட்டைவிட்டு வலிப்புகொண்டவை போல் நெளிய மீண்டும் பற்றிக் கொண்டேன். விரல்கள் தீப்பிடித்து எரிந்தன. அது நழுவி உருள எம்பி கட்டைவிரலால் பிடித்தேன். பிடித்து விட்டேன். அறையே எரிந்தது. அமிலமழை. அமில அருவி. அதை பிடிக்க அடுத்த கால்விரலை அசைக்க முடியவில்லை. ஒட்டியிருந்தது. கால்விரல்களை இழுத்து இழுத்து அதை கவ்வினேன். பிடித்துவிட்டேன்.பிடித்தாகிவிட்டது. நழுவவில்லை. இன்னும் கெட்டியாக…ஆம்.
மனதில் ஒருகணம் ஆறுதல் .மறுகணம் உடலெங்கும் பரவியிருந்த வலிப்பை உணர்ந்தேன். உடம்பு கோணலாகி துள்ளிதுள்ளி துடிப்பதையும் கழுத்து இறுகி விரைத்து நின்றிருப்பதையும் உணர்ந்தேன்.
அவன் சுவிட்சை நிறுத்தினான்
”இதுதான் அந்த வலி லெ·ப்டினெண்ட்”என்றான் என்னருகே வந்து அந்த பட்டையை என்தோலோடு பிய்த்து எடுத்தான். தோல் கருகி புகைவிட்டு அதில் ஒட்டியிருக்க என் சதை வெந்து வெளுத்து திறந்திருந்தது. வெந்த சதையின் வாசனை ஏதோ உணவை நினைவூட்டிய விந்தையை அப்போதுகூட என் மூளையின் ஒரு மூலை வியந்துகொண்டது. மேலும் அதிசயமாக ஒன்றை உணர்ந்தேன். அங்கே வலியே இல்லை. வலி நரம்புகளும் கருகி விட்டனவா? ஆனால் அங்கே மட்டும்தான் வலி இல்லை. உடலெங்கும் கடுமையான வலி இருந்தது.
அப்போது இன்னொன்றும் தெரிந்தது, வலியைப் பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்க முடியாது என்ற கற்பனையே பொய். வலியை தாங்க முடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்க முடியும். அதை செயல்முறைகல் மூலம் உணர உணரத்தான் சித்திரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படி கடுமையாக ஆவதில் இருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது.இதோ என்னைப்போல.நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்….அந்த வெற்றியுணர்வு என்னை பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று.
”இது ஒரு தொடக்கம்தான் லெ·ப்டினெண்ட். இன்னும் உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. இப்போதுகூட உங்கள் வாக்குமூலத்தை நீங்கள் தொடங்கமுடியும்” என்றான்
அவனது தன்னம்பிக்கை நிறைந்த அந்த புன்னகை! எனக்கு சட்டென்று புன்னகை வந்தது. உலகமெங்கும் சித்திரவதை செய்யும் ஆட்கள் அதை அனுபவித்தவர்களே அல்ல என்பதுதான் இன்றுவரை அம்முறை நீடிப்பதன் மர்மம். சித்திரவதை என்பது சற்று தாக்குபிடித்தால் கடந்துசெல்லக்கூடிய ஒன்றுதான் என அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களும் அதை கற்பனை செய்து பெரிதுபடுத்திக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறார்கள்.
”உங்களை இன்னும் ஒரு சோதனைக்கு நான் உட்படுத்தவேண்டியிருக்கிறது…”
நான் அவனையே கூர்து நோக்கினேன். சட்டென்று குறுக்குத்துறை சுப்ரமணிய சாமி கோயில் மணல்மேடு நினைவில் எழுந்தது. இனிய காற்று. தாமிரவருணியில் குளித்துபோகிறவர்கள் விட்டுச்செல்லும் சோப்புமணம். எண்ணை மணம். நான் அங்கே இருந்தேன். உடல் பலவீனமாக இருக்கும்போது மட்டுமே கற்பனைகள் கொள்ளும் உக்கிரமான துல்லியம்.நான் அங்கே இருந்தேன். வெகுதொலைவில். மணலில் படுத்திருந்தேன். நீரில் இறங்கி மறுகரை சென்று மீண்டேன். ஆழமில்லை. தொடைவரைத்தான் தண்ணீர்… உண்மையில் நான் அங்கே இருப்பதாகவே பட்டது. அந்தச்சிறையும் வதையும் வெறும் கனவென மனம் பிரமை காட்டியது.எது உண்மை எது பிரமை?அது மனம் கொள்ளும் தெரிவுதானா? உடலை வெல்ல மனம் செய்யும் மாயமா இது? உடைந்துபோகாமலிருக்க மனம் செய்யும் முயற்சியா? ஆனால் நான் தாமிர வருணியில் இருந்தேன்… குளிர்ந்த நீரை உணர்ந்துகொண்டிருந்தேன்
அவன் என் நகங்களை சிறு குரடால் பற்றினான். ”கொஞ்சம் வலிக்கும் லெ·ப்டினெண்ட். ஆனால் நீங்கள் நினைத்தால் இதை தவிர்க்க முடியும்…”
பூர்ணகலாவில் என்ன படம்? பழைய படம். வசந்தமாளிகை. சிவாஜி வாணிஸ்ரீ. சிவாஜி கையில் கோப்பையுடன் சால்வை போர்த்தி நிற்கும் போஸ்டர். வாணிஸ்ரீயின் பெரிய கொண்டை.
”நீங்கள் சிந்த்தித்துப் பார்க்கலாம் லெ·ப்டினெண்ட். எல்லாம் முடிந்துவிட்டது.ஏன் இந்த பிடிவாதம்?”
மயக்கமென்ன….. என்ன ஒரு இழுப்பு. என்ன ஒரு குரல். இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் கண்ணே…. டிஎம்எஸ் . விபூதி பூசப்பட்ட ஏரு நெற்றி. டிஎம்எஸ். கே.வி மகாதேவன் இசை…. கன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன். ஊடாக ஒரு ரயில் பயங்கர ஓசையிட்டு கடந்துபோவது போல வலி கடந்துசென்றது. பாடலில் அபசுரம் கலந்ததுபோல அதன் ஓசை. யாருடைய அலறல் அது? இன்னொரு பாட்டு இன்னொரு பாட்டு… ஆ1 ”யாருக்காக யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை!” ஊடே ஒலிக்கும் அந்த பயங்கர அலறல். அதுவும் அப்பாடலின் பகுதிதான்…..”எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவளென்று எழுதுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று” …அலறல். சிரிப்பொலி. நான்தான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
என் மூன்று விரல்களின் நுனி செங்குழம்பாக இருந்தது.நான் வெறிபிடித்தவன் போல சிரித்துக் கொண்டிருந்தேன். கண்களில் நீர் வழிய.
”லெ·ப்டினெண்ட் இங்கே பாருங்கள்…”
“‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவளென்று எழுதுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று அஹ்ஹஹ்ஹஹ்ஹா”
அவன் சற்று தள்ளி என்னைப்பார்த்தான்.
”இந்த வேடத்தால் நாங்கள் ஏமாந்துவிடமாட்டோம் லெ·ப்டினெண்ட். நீங்கள் தப்பவே முடியாது. இப்போது கொஞ்சம் ஓய்வெடுங்கள். இரவில் காயங்கள் கடுமையாக வலிக்கும். வலியுடன் இருளுக்குள் விழித்திருந்தால் நல்ல முடிவு கண்ணுக்குப்படும். குட் நைட்!”
அவர்கள் என்னை அவிழ்த்து மீண்டும் வளையத்தில் கட்டியபின் வெளியே சென்றார்கள். கதவு மூடப்பட்டது. நான் அக்கதவையே பார்த்தேன். எங்கிருக்கிறேன்? சினிமா. ஆம் நான் ஒரு ஆங்கில சினிமாவுக்குள் நுழைந்துவிட்டேன். கதாநயகனைச் சித்திரவதை செய்கிறார்கள். போர் படம். ·பஸ்ட் பிளட்… ?
அந்த மூடியை சற்று தள்ளி தரையில் பார்த்தேன். சிறிய கார்க் அது. சட்டென்று எல்லாம் தெளிவடைந்தது. கைகளைத் தூக்கிப் பார்த்தேன். தோள்காயத்தைப் பார்த்தேன். ஆமாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். சித்திரவதை. கற்பனைகள் பிரமைகள் வழியாக நான் அவற்றைக் கடந்து வந்துவிட்டேன். ஆம் கடந்துவிட்டேன்.அவ்வளவுதான். நான் புன்னகை செய்தேன்
கதவு திறந்தது. உணவுத்தட்டும் தண்ணீர் ஜாடியுமாக டபேதார் வந்தான். என்னருகே அவற்றை வைத்தான்.
”சாப்பிடுங்க சார்’என்றான்
நான அவனையே வெறித்துப்பார்த்தேன்
”சாப்பிடுங்கள் நெல்லையப்பன்சார்… என்னைத்தெரியல? கான் சார்… முகமது ரியாஸ் கான். நம்பளுக்கு திண்ணவேலிதான்சார்… ஏர்வாடிப்பக்கம் ஆத்தங்கரப்பள்ளி. …சார மூண்டுவாட்டி பாத்திருக்கேன். சாப்பிடுங்க…நல்ல சாப்பாடுதான்…”
நான் தட்டை இழுத்துக் கொண்டேன்.சாப்பிட்டு பலநாள் ஆனதுபோல உணர்ந்தேன்.ஆவேசத்துடன் சாப்பிட்டேன். நடுவே விக்கி தண்ணீர் குடித்தேன்.
”பட்டாளத்தில கெடைக்க சோறு கொலச்சோறுண்டு எங்க இத்தாத்தா சொல்லுவாஹ. நம்ம வாப்பா பட்டாளம்தான்… மாமா பெரியவாப்பா அல்லாருமே பட்டாளாம்தான்…ஆனா இந்த சட்ட கடன் வாங்கின மொதலு. அது நம்மள்க்கு தெரியும் சார்….சாப்பிடுங்க”
தட்டுகளை எடுத்ததும் அவன் மெல்ல குனிந்தான். ரகசியக்குரலில் ”இந்தாங்க பிள்ளவாள்… ”என்றான் ஒரு கொளுத்திய பீடி
”கஞ்சா. இளுத்தியன்னாக்க வலி தெரியாது. நல்லா தூங்கலாம். இளுங்க…நாம குடுத்ததா சொல்லிப்பிடாதீங்க”
நான் அதை மீளமீள இழுத்தேன். மணமில்லாத புகை.
அவன் ” நாம பாண்டிப்பட்டாணி…. தோக்கும் ஈட்டியும்ணு தலையில எளுதியிருக்கு. உங்களுக்கு என்னெண்டு எளவாப்போடுது பிள்ளவாள்? தாம்ரர்ணிப் பக்கம் காடுகரைண்ணு பாத்திட்டு நெல்லையப்பன்சாமியக் கும்பிட்டிட்டு யா அல்லான்னு இருந்திருக்கலாம்… ம்ம்… என்னமோ போங்க தலயெளுத்து சும்மா விடுமா? ” அவன் எச்சத்தை வாங்கிக் கொண்டான் ”வாறன்….சொல்லிப் போடாதிஹ”
அவன் சென்றபின் கதவு மூடியது. நான் அக்கதவையே பார்த்திருந்தேன். பல நாட்கள். பல வருடங்கள்.
மெல்ல பாட்டு கேட்டது. சற்று தள்ளி .”மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் கண்ணே…” சுவரில் காதுவைத்து அந்தப்பாட்டைக் கேட்டேன். அது சட்டென்று நின்றது. நானே பாடினேன் .”மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் கண்ணே…”.
இரவெல்லாம் டி எம் எஸ் பாட்டுகளாக பாடினேன். ‘முல்லைமலர் மேலே ‘ , ‘ அந்த நாள் ஞாபகம்’ ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ . ஊடாக கடும் வலி என்னை சாட்டையால் சொடுக்கியபோது விழித்து என் இருண்ட அறைக்குள் அமர்ந்திருந்தேன். வலி தாளாமல் சுவரில் தலையால் முட்டி கூவி அழுதேன். வலியழுகையையே பாட்டாக மாற்றிக்கொண்டேன். ‘முத்துக்களோ கண்கள்…’ . எதிரே கதவில் சினிமாக்காட்சிகளை சிலசமயம் கண்டேன். அவை உருவெளித்தோற்றங்கள் என்றும் அப்போது தெரிந்திருந்தது. சிலசமயம் அந்தப்பாடல்காட்சிகளை நெல்லை பூர்ணகலாவிலும் ரத்னாவிலும் பாப்புலரிலும் அமர்ந்து திரையில் கண்டேன். சிலசமயம் அம்மா அப்பாவுடன் அமர்ந்து டிவியில் கண்டேன். ‘அமைதியான நதியினிலே ஓடம்’. அதை மட்டும் பலமுறை கேட்டேன், கண்டேன். இரவெல்லாம்.
[மேலும்]