புதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்

ஓலையினால் செய்யப்பட்ட சிறு தடுக்கு மறைவுக்குள் இறுக்கிக்கட்டிய கச்சத்துடன், உடலில் பூசப்பட்ட மஞ்சள் வர்ணம் அழியாதபடி இரண்டு கைகளையும் விரித்து கம்புகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தார் ஆசான். தரையில் துலக்கிய பழைய வெண்கலக் கிண்ணங்களில் மஞ்சள், கருப்பு வெள்ளை, சிவப்பு என வண்ணக்குழம்புகள் இருந்தன. ஆசான் உடம்பை விரைப்பாக வைத்து கருங்கல் போல அசையாமல் இருந்தார். சோமனும், கோவிந்தனும் தூரிகையால் வண்ணங்களைத் தொட்டு ஆசானின் உடலில் கோடுகளை எழுதிக்கொண்டிருந்தனர். கருங்கல் மெதுமெதுவாக பாதங்களிலிருந்து வளர்ந்து ஒரு புலிச்சிலையாக கண்முன்னே உருமாறிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு வருடமும் சாஸ்தா காவு திருவிழாவின் கடைசி நாளன்று மாலையில் ஆசானின் புலிக்களி நடக்கும். களிக்கு ஒரு மண்டலம் முன்பே ஆசான் விரதத்தைத் தொடங்கி விடுவார். அசைவ உணவைத் தொடமாட்டார். ஒருநாள் தவறாமல் தினமும் காலை மாலை இருவேளையும் ஆற்றில் குளித்து சாஸ்த காவிற்கு சென்று தொழுவார். எப்போதும் தமாஷும் சிரிப்புமாக கலகலப்பாக இருக்கும் ஆசான் ஆளே மாறி விடுவார். வெற்றிலை எச்சில் சிவப்பாக கடைவாயின் இருபக்கமும் ரத்தக் கோடு போல வழிய, காவி வேட்டியும், வெற்று மார்பும், தோளில் மடித்துப்போட்ட காவித் துண்டுமாக கைகளைப் பின்னால் கட்டி தலையைத் தாழ்த்தி தனியனாக அலைவார். கடைசி மூன்று நாட்களில் பேச்சும் சுத்தமாக நின்றுவிடும். களிநாளன்று ஆசான் அதிகாலையில் எழுந்து ஆற்றில் குளித்து காவிலே பூஜை முடித்த பின் புலிவேஷம் வரைவது ஆரம்பிக்கும். அன்று முழுவதும் தண்ணீர் கூட குடிப்பதில்லை. முழுவதும் வண்ணம் பூசியபின்னரும் அது உலரும் வரை அசையாமல் நின்றிருக்கவேண்டும்.

பரம்பரையாக புலிக்களி ஆடும் குடும்பத்தின் ஒரே வாரிசு ஆசான். கடைசி வாரிசும் கூட. ஆசான் திருமணமே செய்து கொள்ளவில்லை. வாழ்க்கையையே இந்தக் கலைக்காகவே செலவழித்தவர். கொச்சி மகாராஜா சக்தன் தம்புரான் ஆரம்பித்துவைத்த புலிக்களியில் நீண்டகாலம் கழித்து வேஷத்திலும், அடவிலும் பல புதிய நுணுக்கங்களை உருவாக்கி சேர்த்தவர். “சாட்சாத் சுவாமி ஐயப்பனுடைய புலிப்படையிலுள்ள ஒரு புலியின் அவதாரம் தான் ஆசான்!” என்பார் கோயிலின் தந்திரி இலஞ்சிக்காவுமணை திருமேணி. எவ்வளவு பணம் கிடைப்பதாக இருந்தாலும் வெளியூர் சென்று புலிக்களி ஆடமாட்டார். புலிக்குத்திக்காடு சாஸ்தா காவின் திருவிழாவில் ஆசானின் புலிக்களியைக் காண்பதற்காகவே கடைசிநாளில் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாக வருவார்கள்.

“என்னடா வேடிக்கை அங்கே?” என்று குரல் எழுப்பிக் கொண்டே உத்ஸவக் கமிட்டி மெம்பர் பாலசந்திரன் தம்பி கையில் ஒரு குச்சியுடன் வேகமாக வந்தார். தடுக்கிலுள்ள ஓட்டைகள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தேனிக் கூட்டில் கல்விட்டெரிந்தது போல கலைந்து ஓடினார்கள். தடுக்கினருகில் வந்ததும் குரலைத் தாழ்த்தி, “என்ன சோமா..ஆயிற்றா?” என்று கேட்டார். உள்ளிருந்து மெல்லிய குரலில், “இதோ.. வால் வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. இன்னும் நேரம் இருக்கிறதே..” என்று பதில் வந்தது.

“சரி..நடக்கட்டும். கவனம்.” என்று சொல்லி கம்பை வீசிவிட்டு பஞ்சவாத்திய மேளக்காரர்கள் அமர்ந்திருந்த அரசமரத்தடி மேடையை நோக்கி நடந்தார். அங்கே இருவர் லாந்தரை பற்ற வைக்கும் முயற்சியில் இருந்தனர். அந்த பகுதியில் லேசான மண்ணென்னை வாடை அடித்தது. மேளவாத்திய கோஷ்டி வாத்தியங்களை வார்பிடித்து முறுக்கியும், தட்டிப் பார்த்து சுருதி சேர்த்துக் கொண்டும் வெற்றிலை குதப்பிய வாயால் குழறிப் பேசிச் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். “குட்டன் மாறாரே… காரியங்கள் எல்லாம் எப்படி போகின்றது? களியை கம்பீரமாக்கித் தரவேண்டும்” என்று குழைந்து சிரித்தார். அவர்களில் பருத்த சரீரம் உடைய ஒருவர் வெற்றிலையைத் துப்பாமல், செண்டைக் கோலை கையில் பிடித்து மார்போடு சேர்த்து, தலையை லேசாகச் சாய்த்து, ‘நான் இருக்கிறேன்’ என்பது போல கண்ணை மெதுவாக மூடித் திறந்தார். “அப்போ சரி.. நூறுகூட்டம் வேலைகள் இருக்கின்றது. நான் தானே எல்லாவற்றுக்கும் ஓடியாக வேண்டும்?” என்றபடி பழைய சிரிப்பை அதேமாதிரி வழியவிட்டுப் போனார். அவர் போனதும் மாறார் வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு, “அப்புறம், மாறாருக்கு செண்டைக் கோலை கையில் எடுத்துக் கொடுத்ததே நான் தானே? என்பான், அற்பன்” என்றார். எல்லோரும் வெற்றிலை எச்சில் சிந்திவிடாமல் வானத்தைப் பார்த்து கவனமாகச் சிரித்தனர்.

மெல்ல இருட்டிக்கொண்டு வரும்போது பெண்கள் கும்பலாக அடிக்குரலில் கிசுகிசுப்பது போல சத்தமிட்டுக்கொண்டு லாந்தர்கள் பிரகாசமாக எரியத்தொடங்கின. காவில் மரங்கள் அடர்த்தியாக இருப்பதனால் வேகமாக இருட்டிக்கொண்டிருந்தது. சுற்றிலும் இருந்த பெருமரங்களின் அடிமரம் லாந்தர் விளக்கு ஒளியில் நன்றாக புடைத்துக் கொண்டு தெரிந்தன. மேலே செல்லச்செல்ல லாந்தர் வெளிச்சம் குறைந்து உச்சிக்கிளைகளும் இலைகளும் இருளோடு பிண்ணிக்கொண்டு இருண்ட வானில் ஊடுறுவி மறைந்தன. நடுவே ஒரு சதுரமான மண்மேடையில் வரிசையாக கல் நாகங்களும், நாகத்தின் விரிந்த படத்தின் நிழலில் நிற்கும் பெண் தெய்வங்களுமாக நின்றிருந்தன. அவற்றின் மேல் சந்தனம் மஞ்சள் குங்குமம் எல்லாம் பூசப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முன்னே பெரிய இலைகளில் தானியங்களும் பழங்களும் பூவும் பரப்பி வைத்திருந்தார்கள். அதன் முன்னே உள்ள நிலத்தில் கூட்டி, நீர் தெளித்து சுத்தப்படுத்தியிருந்தார்கள். சற்றுத் தள்ளி அலங்கார முகபடாம் பளபளக்க, பந்த வெளிச்சத்தில் மங்கிய பொன் நிறத்தில் கொம்புகள் இருளைக் கிழித்துக் கொண்டு முன்னோக்கி நீண்டிருக்க மூன்று கொம்பன் யானைகள் நின்றிருந்தன. அவற்றில் மையத்தில் நின்றிருந்த உயர்ந்த யானையின் மத்தகத்தில் சாஸ்தாவின் திடம்பு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. யானைகளின் முதுகில் முத்துக்குடையும், வெண் சாமரமும், ஆலவட்டமும் ஏந்திய பையன்கள் தயாராக நின்றிருந்தனர். யானைகள் எதிலும் சிரத்தையின்றி தும்பிக்கையை காற்றில் அளைந்து கொண்டு, காதை வீசி மௌனமாக காத்திருந்தன.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தனர். கையில் தாலப்பொலி ஏந்திய பெண்கள், சந்தனக் குறி நெற்றியில் துலங்க, தீப ஒளியில் மின்னும் புன்சிரிப்புடன் வரிசையாக நின்றிருந்தனர். இளைஞர்கள் சிற்சிறு கும்பலாக நின்று உரக்கப் பேசியும், பெண்கள் பக்கம் கண்களை ஓடவிட்டபடியே அவ்வப்போது என்னமோ சொல்லிச் சிரித்துக்கொண்டும் இருந்தனர். சிறுகுழந்தைகள் இரைச்சலாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க, கைக்குழந்தைகள் அம்மாக்களின் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்தன. சில புரியாமல் அழுதுகொண்டிருந்தன. வயதானவர்கள் அருகிலிருப்பவர்களின் கையைப் பிடித்துகொண்டும் சாய்ந்து கொண்டும் நின்றிருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம், அருகாமை கிராமங்கள் முழுவதுமே அங்கிருப்பது போல தோன்றியது. எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷமும், காரணமறியாத உற்சாகமும், எதையோ எதிர்ப்பார்த்திருப்பதைப் போன்ற ஆர்வமும் நிறைந்திருந்தது.

பஞ்சவாத்தியக் குழு அணிவகுத்து நின்றது. சங்கு மும்முறை ‘ஓம்’ என்று முழங்க திமிலயும், மத்தளமும் நிறுத்தி நிதானமாக ‘தி..தி..தி..த..தோம்’ என்று முதல் காலத்தில் முழங்க ஆரம்பித்தன. ஆசானை ஒரு துணித்திரையை பிடித்தபடி மறைத்து மேடைக்கருகே கூட்டிவந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் துவங்கிவிடும். வேகமெடுத்து மேளமும், சேங்கிலைத்தாளமும் முழங்கிய ஒலியில் வேறெந்த ஒலியும் கேட்கவில்லை. ஒரு கணத்தில் திடீரென அனைத்து ஒலிகளும் நிற்க, திரைகளை தாண்டி மேலெழும்பி குதித்து வந்தது புலி. மிக உக்கிரமான ஆண்புலி.

தாளவாத்தியங்கள் மீண்டும் நிதானமாக கதியில் ஒலித்தன. புலி நான்கு திசையிலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து பதுங்கி கூட்டத்தை நோக்கி முன்னேறியது. மக்கள் பின்னே நகர்ந்து விலக மத்தியில் விரிவான வட்டமாக காலியிடம் உருவானது. புலி சிவந்த நாக்கை வெளியில் தொங்கவிட்டு, கால் சலங்கை தாளவாத்தியத்தின் லயத்திற்கேற்ப ஓசையிட அடிவைத்து வட்டத்தின் விளிம்பை ஒட்டி நடைபயின்றது. திடீரென்று காற்றில் எம்பிக் குதித்து கீழே விழுந்து தரையோடு ஒட்டிக் கொண்டு முறைத்தது. கால்நகங்களால் பூமியைப் பிராண்டி மண்ணை கிளறி வீசியது. கால்களை பக்கவாட்டில் வைத்து முன்கால் நகங்கள் காற்றைக் கீற சீறியபடி நகர்ந்தது. எதிர்பார்க்காத கனத்தில் சட்டென்று அந்தரத்தில் கரணம் அடித்துப் பாய்ந்தது. தாளத்தின் வேகம் கூடக் கூட புலியின் வேகமும் கூடியது. சுழன்றும் வளைந்தும், பாய்ந்தும் எட்டுத்திக்கையும் மிரட்டியது. புலியின் சுழற்சி வேகத்தில் அதன் வால் நுணி பட்ட போது சிறுபிள்ளைகள் அலறி பக்கத்தில் இருப்பவர்கள் உடலோடு ஒண்டிக் கொண்டன. புலியின் ஆக்ரோஷமான கண்களை சந்திக்க நேர்ந்தபோது இளம்பெண்கள் மனம் ஒரு கனம் படபடத்து அதிர்ந்தது. இளைஞர்கள் பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க கால்களை பூமியில் அழுந்த ஊன்றிக், கை நகங்களை கடித்துக் கொண்டு இருந்தனர். அவ்வப்போது மேளத்தோடு சேர்ந்து கைகளை வானில் வீசி கொண்டு கத்தினார்கள். லாந்தர், தீப்பந்த வெளிச்சம் வியர்வையின் எண்ணைப் பளபளப்புள்ள புலியின் உடலை குதித்து எரியும் நெருப்புப் பிழம்பாக்கியது. புலி வேகம் கொண்டு பாய்ந்த திசைகளிலெல்லாம் மக்கள் மிரண்டு பின்வாங்கினர். புலிகடந்ததும் குறுகுறுப்புடன் அதன் போக்கை வேடிக்கை பார்த்தனர். புலி அசராமல் வேகமும் நுணுக்கமுமான அதன் அசைவுகளால் கூட்டத்தின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது. மக்கள் பிரமித்துப் போய் புலியைக் கண்டுகொண்டிருந்தார்கள்.

தந்திரி சம்பிரதாயமாக ஒரு ஆட்டுக்குட்டியை நடுவே விரட்டிவிட, புலி ஒரே பாய்ச்சலில் அதன் கழுத்தைக் குறிவைத்துப் பாய்ந்து பற்களால் கவ்வி தூர எறிந்தது. கீழே விழுந்த ஆடு ‘ம்மே.. ‘ என்று கத்திக்கொண்டே தெறித்து எழுந்து, தெருவை நோக்கி ஓடியது. கடைவாயில் அடக்கிவைத்திருந்த வைத்திருந்த ரத்த மாத்திரையை கடித்து ரத்தம் வழிய துள்ளிக்குதித்தது புலி. போற்றி ஒரு வெண்கல கிண்ணத்திலிருந்து நீரெடுத்து புலியின் மேல் தெளிக்க, அது பாய்ந்து சென்று மேற்கே ஓடையை தாவிக்கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது.

ஆசான் இனி மறுநாள் தான் கண்ணில் தட்டுப்படுவார் என்று எல்லோருக்கும் தெரியும். மறுநாள் காலை அவர் சுத்தமாக குளித்து காவிற்குச் சென்று சாஸ்தாவை வழிபட்டு, நெற்றியில் சந்தனக் குறியும் குங்குமும் தீற்றி வரும்போது, முற்றிலும் வேறு மனிதராக இருப்பார். சாயாக்கடையில் அவரது உரத்த சிரிப்பும் நக்கலும் களைகட்டும். ஊர் திரும்பும் பக்கத்து கிராமத்து மக்களுக்கு வழிப்பேச்சுக்கான கதை முழுக்க ஆசானின் புலிக்களியாகவே இருக்கும். புலிக்குத்திக்காட்டு இளைஞர்கள் ராத்திரி முழுதும் ஆசானின் புலிக்களியை வியந்து பேசி, யார் யார் எப்போது எப்படிப் பயந்தார்கள் என்று நடித்துக் காட்டியும், தங்கள் மீது பரிகாசம் திரும்பும் போது ‘இல்லவே இல்லை’ என்று சமாளித்தபடியே கள்குடித்து பொழுதைக் கழித்துவிட்டிருக்கும். காலையில் ஆசனைக் காத்து அவருக்கென்று பெரும் கும்பலே கனாரன் நாயரின் சாயாக்கடையில் உட்கார்ந்திருக்கும். அவருக்கு சாயாவும், புட்டும், பழம்பொரியும் என்று தடபுடல் உபசாரங்கள் இருக்கும். குடும்பம் இல்லாததால் சாஸ்தா காவின் காவல்காரன் வேலப்பன் வீட்டில் சில நாள் சாப்பிடக்கூப்பிட்டால் போவார். பெரும்பாலும் யாராவது ஒருவர் வீட்டில் அவருக்கு உணவு நிச்சயம் உண்டு. இல்லையென்றால், தானே உலை வைத்துக்கொள்வார்.

oo0oo

எந்த வருடத்தையும் விட இந்த வருடம் ஆசானின் புலிக்களி அபாரம் என்று திருவிழாவிற்கு வந்திருந்த அனைவரும் பேசிக்கொண்டார்கள். வியாக்ர மூர்த்தி சாநித்யம் பரிபூரணமாக இருந்ததாகவும், சாஸ்தா ப்ரீதியடைந்துவிட்டதாகவும் தந்திரி பாலச்சந்திரன் தம்பியிடம் கூறினார். திருவிழா முடிந்த அன்று இரவு தொடங்கிய மழை, இரண்டரை மாதங்கள் விட்டு விட்டு தொடர்ந்துகொண்டிருந்தது. ஊரே நீரில் முக்கியெடுத்த நுரைபஞ்சு போல சொதசொதத்துக் கிடந்தது. கிராமத்தைச் சூழ்ந்திருந்த பொற்றைகளில் கருமேகம் கொழுத்த குழந்தைகள் போலத் தவழ்ந்திறங்கியது. வெயில் படும் நேரம் குறைவாகவும், நீராவி புகைபோல பனி சூழ்ந்தும், இருந்தது. சில சமயங்களில் பத்தடி தூரத்தில் வருபவர் யார் என்று உச்சி நேரத்திற்கும் சொல்ல முடியாது. காவினை அடுத்துள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாலையில் வேலப்பன் டீக்கடை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, எதிரே ஓட்டமும் நடையுமாக தலையில் முண்டாசாகச் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துவர்த்தும், கையில் கொச்சக் கயிறுமாக வந்த தோப்பியன், “வேலப்பண்ணா… தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை காணோம். காவுப் பறம்பில் பார்த்தீர்களா? ” என்றான். குரல் தழுதழுத்தது. அழுதுவிடுவான் போல் இருந்தது. சிறு கூட்டம் சேர்ந்தது. எல்லோரும் தோப்பியனின் தொழுவத்தை சுற்றிலும் கவனமாகப் பார்த்தனர். ஒரு பிடியும் கிட்டவில்லை.

மூன்றாவது நாள் குஞ்சிக்காதர் மாப்ளா “என் றப்பே…” என மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். தோப்பியன் கனாரன் நாயரின் சாயாக்கடைக்கு வந்து விஷயத்தைச் சொல்லி அங்கிருந்தவர்களைக் கூட்டிக்கொண்டு போனான். மாப்ளயின் கோழிக் கூண்டு துவம்சம் செய்யப்பட்டிருந்தது. முட்டைகள் உடைந்து கூண்டின் கம்பிகள் வழியே ஒழுகியிருந்தது. மண்ணில் ரத்தம் சிந்தியிருப்பதற்கான தடயமாக கருஞ்சிவப்பு ஈரப்பொட்டுக்கள் தெளிக்கப்பட்டது போல இருந்தன. பழுப்பும், சிவப்பும், வெள்ளையுமாக கோழி இறகுகள் பிய்ந்து சிதறி கூண்டின் அடியிலும் முற்றமெங்கும் பரவிக்கிடந்தது. ரத்தமும், முட்டையின் மஞ்சள் கருவுமாகச் சேர்ந்து நாறின. கலவரம் நடந்த இடம் போல இருந்தது மாப்ளயின் முற்றம்.

அடுத்தடுத்து ஓடைக்கரையில் இருந்த புஷ்கரன் பிள்ளயின் வீட்டுக் கன்றுக் குட்டி, ராஜப்பன் நாடாரின் எருமைக் கன்று, மாத்துக்குட்டியின் ஆடு, என ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தது. ஊரின் நிம்மதி போனது. ஆடு மாடு வளர்ப்பவர்கள் பீதியடைந்தார்கள். “ஏதாவது ப்ரேத, பிசாசு வேலையாக இருக்குமோ?” என்று சந்தேகம் தெரிவித்தான் வேலப்பன். “இப்படித் தான்..” என அவன் ஆரம்பித்த உடனே கம்யூனிஸ்டான புஷ்கரன் பிள்ளை, “வேலப்பா நீ இருக்கின்ற ஊரில் இன்னொரு பிசாசு வராது. உன் உளறலையெல்லாம் அங்கு சாயாக்கடையில் மட்டும் வைத்துக் கொள். இது கண்டிப்பாக ஏதோ திருடனின் கைவரிசை தான்” என்றார். விவாதம் சூடானவுடன், பாலச்சந்திரன் தம்பி குறுக்கிட்டு, “திருடன் ஏன் பணம் பொருள் எதையும் கொள்ளையடிக்காமல் ஆடு மாடுகளை மட்டும் திருடவேண்டும்? இது வேறு ஏதோ” என்று புதிய ஒரு யூகத்தை வைத்துவிட்ட திருப்தியுடன் பிறரைப் பார்த்தார். காத்திருந்த மாதிரி வேலப்பன், “அதான் நான் சொன்னேன்..” என்று ஆரம்பிக்க புஷ்கரனின் முறைப்பில் பாதியில் நிறுத்தினார். கடைசியில் பஞ்சாயத்து பிரசிடெண்ட் சுகுமாரன் மேனோன் தலையிட்டு, ஊர் இளைஞர்கள் முறைவைத்து தினம் இரவில் தெருக்களில் ரோந்து சுற்றி காவல் காக்க வேண்டும் என்று முடிவானது.

காதை அடைத்து தலையில் துண்டால் முண்டாசு கட்டிக் கொண்டு, கையில் கம்பு, கத்தி, அரிவாள், டார்ச் லைட் சகிதமாக உற்சாகமாக இளைஞர்கள் ஊர்க்காவலுக்கு புறப்பட்ட முதல் நான்கு நாட்களில் எல்லாம் சரியாக இருந்தது. திருடன் பயந்து ஓடிவிட்டான் என்று சந்தோஷப்பட்ட ஐந்தாவது நாள் தெற்குப் பொற்ற அடிவாரத்திலுள்ள வீட்டில் ஆட்டுக் குட்டி காணாமல் போனது. ஊர் கலவரமடைந்தது. மறுபடியும் இளைஞர்கள் முழு விழிப்புடன் ஒரே நேரத்தில் பல குழுக்களாகப் பிரிந்து ரோந்து சுற்றினார்கள். ஒரு நாள் இரவு பலசரக்குக் கடை ராமுன்னியின் வீட்டில் இருந்து தீனமான குரலில் மாடு கத்துவதைக் கேட்டு தூரத்திலிருந்து டார்ச்சை அடித்துப் பார்த்தனர். பளபளப்பான உடலில் வரிகள் கொண்ட ஒரு பெரிய உருவம் மாட்டின் குரல்வளையைக் கடித்து இழுக்க முயல்வதைப் பார்த்து ஒருவன் கம்பை விட்டெறிய அது விருட்டென்று பாய்ந்து சென்று இருட்டில் மறைந்தது.

“அது புலியே தான். மாட்டின் குரல்வளையைக் கடிப்பதை நாங்கள் கண்ணால் பார்த்தோம்” என இளைஞர்கள் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்கள். பெரியவர்களுக்கு அதைக் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. புலிக்குத்திக்காடு என்று ஊருக்கு பெயரே ஒழிய அவர்கள் யாரும் வீட்டுப் பெரியவர்களிடமோ வேறு எந்த வழியிலோ அந்த ஊரில் புலி இருந்ததற்கான ஒரு கற்பனைக்கதையைக் கூடக் கேட்டதிலை. திருடர்கள் தொல்லையாக இருக்குமானால் கையில் சிக்கினால் சக்கையாக கவனித்து விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்றிருந்தவர்களுக்கு, பிரச்சனை ஒரு புலி என்றதும் ஒன்றுமே புரியவில்லை. அன்றுமுதல் அந்திக்குப் பின் வெளியில் நடக்கவே பயந்தனர். பகலில் கூட தனியாக நடமாட அஞ்சினார்கள். புலிபயம் எப்பொழுதும் ஊரின் குரல்வளையை இறுக்கியது. சாயாக்கடைப் பேச்சுகளில் புலி தான் பிரதான் இடம் பிடித்தது.

தந்திரி, “புலியின் சுபாவம் என்ன, அது எப்படி வரும், புலி பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கலாம், என்ன செய்து பிடிக்கலாம், என்னென்ன தேவை?? எவ்வளவு சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஆசானை ஊரிலேயே காணவில்லையே? என்ன ஆனார்?” என்று கேட்டார்.

வேலப்பன், “அவர் கோயில்களில் பஜனம், தீர்த்தாடனம் என்று கிளம்பிப் போய் இரண்டுமாதம் ஆகிறது. என்னிடம் அப்படித் தான் சொல்லிவிட்டுப் போனார்” என்றான். அனைவரும் கொஞ்ச நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வெறித்திருந்தனர்.

ஆறு மாதங்கள் கழிந்தது. பெரும்பாலும் யாராவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருட்டில் பாயும் மிருகத்தைக் கண்டார்கள். கிராமம் சுத்தமாகத் தன் உறக்கத்தைத் தொலைத்து விட்டிருந்தது. உண்மையா பொய்யா என்றே கண்டுபிடிக்க முடியாதவாறு புலியைப் பற்றிய கதைகள் பெருகின. அது பத்தடி நீளமென்றும், கோரைபற்கள் குட்டியானையின் இளம் தந்தம் அளவுக்குப் பெரியதென்றும், ஒரே தாவலில் பதினைந்தடி உயரமுள்ள கோயில் மதிலைத் தாண்டியதாகவும், பக்கத்து ஊரில் ஒரு ஆளைக் கொன்று தின்று விட்டதாகவும் புலி கதைகளில் வளர்ந்து வலியதாகிக் கொண்டே போனது.

பஞ்சாயத்து தீர்மானத்தில் வனத்துறையிடம் தகவல் சொல்லி வரவழைக்க முடிசெய்யப்பட்டது. இரண்டு நாள் கழித்து ஒரு ஜீப்பில் நாலுபேர் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ஆளில்லாத ஆசானின் வீட்டில் தங்க ஏற்பாடும், தங்கப்பனின் கடையில் சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டது. கால்தடங்களை ஆராய்ந்து புலி தான் என்று உறுதி செய்துகொண்டார்கள். கிராமத்து ஆட்களும் சேர்ந்து கொள்ள மூன்று நாட்கள் இரவும் பகலும் புலி ஊருக்குள் வரும் வழித்தடங்களை நிச்சயம் செய்து கொண்டார்கள். கூண்டுக்குள் ஆடு ஒன்றை கட்டிப்போட்டு உயிருடன் பிடிக்க முயன்றார்கள். புலி மிகச்சாமர்த்தியமாக கூண்டுக்குள் இருக்கும் ஆட்டை சீந்தக் கூட இல்லை. இங்கும் பக்கத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஆடு கோழி என ஏதாவது மறைந்து கொண்டே இருந்தது. கிழக்கில் இருக்கும் பொற்றையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் ஒரு ஆளை காணவில்லை என்று தகவல் வந்ததும், “ஆள் கொல்லிப் புலி” என்று ரிப்போர்ட் எழுதியனுப்பி சுட்டுக் கொல்ல ஆணை பெற்றனர்.

அது முதல் ஊர் சுறுசுறுப்பானது. நாசம் பிடித்த புலி குண்டடி பட்டு செத்துத் தொலையும் நாளை ஆர்வமாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கிடந்தது. ஊரின் வெவ்வேறு இடங்களில் உயரமாகப் பரண் அமைத்து பைனாகுலர் வழியாக புலியின் நடமாட்டத்தைக் கண்கானித்தார்கள். எந்த வாய்ப்பையும் தவற விட்டுவிடக் கூடாதென்று முக்கியமான வழித்தடங்களில் பொறி வைத்திருந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து காலை வேளையில், ஓடைக்கரையில் கள் இறக்க பனை மரம் ஏறிய முத்தப்பன் தாழம்புதருக்கு அருகில் வாய்பிளந்து கிடக்கும் புலியைப் பார்த்துவிட்டு, சைக்கிளின் பின்னிருக்கையில் கள்ளுப்பானை குலுங்கிப் பொங்கி வழிய பறந்து கொண்டு கடைவீதிக்கு வந்தான். “புலி செத்து விட்டது. புலி செத்துவிட்டது, சத்தியம். நான் என் இரண்டு கண்ணாலும் பார்த்தேன்” என்று சந்தோஷமாக உறக்கக் கூவினான். ஆட்கள் வனத்துறையினரின் ஜீப்பிலும், சைக்கிளிலும், கால் நடையுமாகச் சென்று ஓடைக் கரையில் குவிந்தனர்.

அங்கே ஒற்றை புலியாக வந்து தன்னந் தனியாக கிராமங்களை மரண பீதியில் நடுங்கச் செய்து, இரவுகளை கொடூரப் பொழுதாக்கி, ஊராரின் உறக்கம் கெடுத்து ஆறு மாதமாக பதறி அலற விட்ட புலி முள் கத்திகள் பொருத்திய கனத்த இரும்புப் பொறியில் சிக்கி, அடிவயிறு முழுதும் கத்திகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தது. புலியின் வால் ஓடைநீரில் கொடி போல அலைய, பின்னங்கால்கள் ஓடையிலும், உடலின் முன்பக்கம் கரையிலுமாக வாய்பிளந்து வெறித்த கண்களால் பொறியில் மாட்டியிருந்த பெரிய ஆட்டிறைச்சியை பார்த்தபடி செத்துக்கிடந்தது.

பிளந்த வாயும், அதன் கண்களின் உக்கிரமும் புலி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது, சட்டென்று கத்திகளைக் உதறிக் கொண்டு எழுந்து விடும் என்று தோனவைத்தது. மக்கள் அச்சத்துடன் ஜாக்கிரதையாக் அதள்ளியே நின்றிருந்தனர். உண்மையிலேயே மிகப்பிரம்மாண்ட்மான புலி தான். முன்னங்கால்லல் ஒரு அடி அடித்தால் ஒரு மாட்டைக் கூட வீழ்த்தி விடும் அளவுக்கு உறுதியாக இருந்தது. வனத்துறையினர் முதலில் பெரிய கம்புகளைக் கொண்டு குத்திப் பார்த்தனர். இறந்துவிடது என சந்தேகமின்றி தெளிந்த பின்பு மக்கள் அதை நெருங்கி வந்து தயக்கத்துடன் தொட்டுப் பார்த்தனர். அதன் ரோமம் அடர்ந்த பளபளப்பான சருமத்தை தடவிப்பார்த்தனர். அதன் நகங்களின் வலிமையை விரலால் அழுத்தி உணர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் எல்லாம் பழகிப்போனது. மக்கள் கீசக வதம் கதகளி பார்த்துவிட்டு அதிகாலை சோம்பலாக வீட்டுப் போவது போல சாதாரனமாகக் கலைந்து சென்றனர்.

ooOoo

ஆசான் ஊர் திரும்பியதும் அவரிடம் புலியுடன் கிராமம் கழித்த ஒவ்வொரு நாளையும் உணர்ச்சிப் பூர்வமாக கதையாக விவரித்தனர். புலிக்கதையும், அது செத்துக் கிடந்ததையும் பேசிப் பேசி மெல்ல வேறு பேச்சுகளுக்கு ஊர் மாறியது.

புலிக்குத்திக்காட்டு சாஸ்தா காவு உத்ஸவம் வழக்கம் போல சிறப்பான ஏற்பாடுகளோடு இந்த வருடமும் பரபரப்பாக ஆரம்பமாகியது. ஊர் தியேட்டரில் புத்தம் புது படம் -பிரேம்நசீர் நடித்தது, இறக்கியிருந்தார்கள். உத்ஸவம் ஸ்பெஷல் திரையிடுகைக்காக. கோவிலிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள். முதல் நாள் கானமேளா, பின்னர் நாடன் பாட்டு, இடையில் ஒரு நாள் திரைப்படம் என்று திருவிழா அதகளப்பட்டுக் கொண்டிருந்தது. கடைசி நாள் ஆசானின் புலிக்களி, இம்முறை இவருக்கென தனியே புலி முகமுடி ஒன்றும் செய்து வைத்திருந்தார். அந்தப் புலி இன்னேரம் உயிரோடிருந்தால் ஆசானைக் கண்டு ஓடியிருக்கும். ஆசான் கடுமையான விரதங்களை குறையின்றி பூர்த்திசெய்து, நதியில் குளித்து தந்திரியிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு புலிவேஷத்திற்காக பாறை போல அசையாது நின்றார். ஒரு புலி ஆசானில் கொஞ்ச கொஞ்சமாக உயிர் பெற்றது. ஆட்டம் துவங்கியது, மேளத்தின் துடிக்கு ஒப்ப மிகச்சரியாக புலி சிவப்புத் திரைச் சீலையை உக்கிரமாக தாவி குதித்து உறுமியது. விண்ணுக்கும் மண்ணுக்கும் எழுந்து சீறியது, முன்னங்கால்களை முன்னே நீட்டி தலையை புதைத்து பதுங்கிப்பாய்ந்தது.

கூட்டம் சிரித்து மகிழ்ந்தது. சின்னப் பையன்கள் புலி சுழன்றாடுகையில் அதன் வாலைப் பிடிக்க முயன்றனர். ஆண்கள் தாளத்துக்கேற்ப கைகளையும், துவர்த்துகளையும் உயரத் தூக்கி காற்றில் வீசி ஆர்ப்பரித்தனர். சில இளைஞர்கள் ஆசானோடு சேர்ந்து ஆடினார்கள். பிரேம்நசீர் படம் ஆரம்பித்துவிடும் என கொஞ்சம் இளம் பெண்கள் நகர்ந்தார்கள். அதைக் கண்டுவிட்ட இளைஞர் கும்பல் ஒன்று உற்சாகமாக அவர்கள் பின்னால் தொடர்ந்து சென்றது. நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு புலி கூட்டத்தின் ஒரு பக்கம் பாய்ந்து வந்து நின்று உறுமியது. அங்கிருந்த ஒரு சிறுமி அலறினாள். அம்மா அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, “பயப்படக்கூடாது மக்களே.. நிஜப்புலி தான் இறந்துபோய்விட்டதே… இது வெறும் களிதானே..” என்று சமாதானப்படுத்த சிறுமி சிரித்துக் கொண்டே புலியைப் பிடிக்க கைநீட்டினாள். புலி ஒருகனம் முறைத்துவிட்டு தந்திரியை நோக்கிப் பாய்ந்தது. மத்தளமும், கொம்பும், திமிலயும், இலைத்தாளமும் சேர்ந்து உச்சத்தில் ஒலிக்க தந்திரியின் காலருகே நின்ற ஆட்டுக்குட்டியை பற்களால் கவ்வி தூர எறிந்தது. எதற்கும் காத்திருக்காமல், தாவி ஓடையை கடந்து காட்டில் புகுந்தது.

ooOoo

டீக்கடையில் ஆசான் ஏன் காலையில் டீ குடிக்க வரவில்லை என்று வேலப்பன் கேட்டுக்கொண்டிருந்தான். மாலை வரையும் வராத போது சந்தேகம் வந்து சுளுந்துகளை ஏற்றிக்கொண்டு ஓடையை கடந்து காட்டினுள் சென்று திசைக்கு மூவராக தேடினார்கள். ஆசான் கடைவாயில் ரத்தம் வழிய மேல் ஓடை நீரில் கால் நனைய கிடந்தார்.

முந்தைய கட்டுரைபிரகாஷ் சங்கரன்
அடுத்த கட்டுரைராஜகோபாலனின் கன்னிப்படையல்-கடிதங்கள்