கன்னிப்படையல் பற்றி…

அன்புள்ள ராஜகோபாலன்

கன்னிப்படையல் படித்தேன். கதைகள் தரிசனத்தால், கவித்துவத்தால், கூர்ந்த அவதானிப்புகளால் அழகும் ஆழமும் பெறுவதுண்டு. அபூர்வமாகச் சிலகதைகள் அப்பட்டமான நீதியுணர்வாலேயே ஆழம் பெறுகின்றன. மேலதிகமாக எதுவும் தேவைப்படுவதில்லை. உடலில் இருந்து வெட்டி முற்றத்தில்போட்ட சதை போலக் குருதி வழிய அவை கிடக்கும். இது அத்தகைய ஒரு கதை.

நீதிமறுக்கப்பட்டவர்களின் கண்ணீர் வரலாறு முழுக்க அதிகாரமுற்றத்தில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்றார் வள்ளுவர். அபூர்வமாக சில கண்ணீர்த்துளிகள் உலராமலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவைதான் எப்போதுமே மானுடநீதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றன

நிகழ்ச்சிகளை கணேசன் சொல்லும் விதத்தில் உள்ள அடிவயிற்று வேகத்தாலேயே நல்ல கதையாக ஆகிவிட்டிருக்கிறது இது

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு