புதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்

அமைதி என்பது மரணத் தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்

அசையும் கிளையோ?

அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ?

எழுந்து சென்ற பறவையினால்

அசையும் கிளையோ?

-தேவதேவன்

ஆரோக்கியமானபோது சிந்திப்பது தொடர்ச்சியற்றும் இலக்கற்றும் இருப்பதும், ஆரோக்கியமற்றபோது அதுவே தொடர்ச்சியும், விரிவுடன் கூடிய ஆழமும் கொண்டிருப்பதுமாக தெரிகிறது. இளம்வயதில் தோன்றிய ஏதோஒரு விசயம் பலவருடங்களாக நினைவைவிட்டு அகலாமல் காலங்கள் தோறும் வளர்வதையும், மனதின் மூலைகளில் இண்டுஇடுக்குகளில் தொடர்ந்து வளைய வருவதையும், பலசமயங்களில் சற்று ஆச்சரியத்துடன்தான் அனுமானிக்க முடிகிறது. ஆனால் ‍ஆரோக்கியமான காலங்களில் நினைவு தெரிந்து ஒருநாளும் தொடர்ந்து சிந்தித்ததாக நினைவில்லை. ஒரு விசயம் அல்லது செயல் செய்யவேண்டும் என நினைத்தால் அதை உடனே செய்துவிடவேண்டும். அது சமூகஅமைப்புகளுக்கு எதிரானதுபோல தோன்றினாலும்‌ எது தேவையாக‌ப் படுகிறதோ அல்லது கேட்டுக்கொண்டவரின் நலன் கருதி, அல்லது ஒருவித உந்துதலில், வேகத்தில் அப்போதைக்கு அதை செய்து விடுவதுதான் வழக்கம். அதைப்பற்றி பிறகும் சிந்தித்ததும் இல்லை. வேறுமாதிரி செய்திருக்கலாம் என்று நினைத்தால் அதுவே கொஞ்சம் அதிகம்தான்.

அலுப்பிலும் தொடர்சிந்தனையிலும் இருந்த‌ வழக்கத்திற்கு மாறாக கண்விழித்துவிட்ட விநாயகமூர்த்திக்கு ஏற்பட்ட மன‌ சிக்கல்களும், குழப்பங்களும், நடு தூக்கத்தில் விழிப்பு கொண்டுவிட்ட குழந்தை போல‌ பயத்தில் யாரையாவது அழைக்க வேண்டுமென்று பரபரப்பு ஏற்பட்டது. அந்த அறையை நிதானமாக‌ துழாவியும் அவர் கண்களுக்கு எதுவும் தட்டுப்பட்டதாக தெரியவில்லை. கொஞ்சகாலமாக மருத்துவமனைகளிலும் வேறுவீடுகளிலும் இருந்து வருவதால் யாரின் வீடு என்ற யோசிப்பின் குழப்பம் அவரை பேசாமல் இருக்க வைத்துவிட்டது..

இடப்பக்கமாக‌ இருந்த சிறிய குண்டுபல்பு, ஒரு குழந்தையின் சிரிப்புபோல மங்கி மினுக்கி‌ வெளிச்சத்தை குறைத்து அதிகரித்து காட்டிக் கொண்டிருந்தது.. பல்புக்குள்ளிருக்கும் பிலமென்ட் சுளிப்பு நன்கு பரிச்சயமான ஒன்றுபோல இருந்தது. அதை நீண்ட நாட்களாக கவனித்து வந்ததால் இருக்கலாம் என்ற நினைப்பு சற்று பயத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த பல்பு வலப்பக்கம் இருந்ததாகவும் ஒரு ஞாபகம். ஒருவேளை பெட்டில் மாறிப் படுத்திருக்கிறேனோ என யோசித்தார்.

காலத்தின் வேகமும், தீவிரமும் நம்பமுடியா அதன் இரக்கமற்ற தன்மையும் மனதை கொஞ்ச காலமாக அலைக்கழித்தபடியிருக்கிறது. இப்போதுதான் பருத்திக்கார தெருவில் டிராயர் மட்டும் அணிந்து தெருவில் ஓடிவிளையாடியதுபோல் நினைவிருக்கிறது, அதற்குள் இத்த‌னை வருடங்கள் கடந்துவிட்டன. அந்த அலைக்கழிப்பில் வலதுகாலை எடுத்து இடதுகாலின்மீது வைத்து கழுத்திற்கு ஒரு கைகொடுத்து கண்கள் மேலே நிலைகுத்தியிருக்க‌ மல்லாந்தபடியே சிந்திக்க நினைத்தார்.. ஏதாவது தீவிரமாக‌ சிந்திக்கும் போதெல்லாம் அப்படித்தான் செய்வார். அவருக்கு பிடித்தமான அடிக்கடி செய்யும் செய்கையும்கூட‌. வலதுகாலின் அசைவை அனுமானித்துக் கொண்டிருந்தார். செய்யமுடியவில்லை என்பது சற்று நேரங்கழித்து புலப்பட்டது. நினைவுவந்தவராக‌ துடிக்கும் உடலின் பலவித அசைவுகளுடன் இடப்பக்கமாக கையை ஊன்றி சுவற்றை தடவி எழுந்தமர்ந்தார். சில சமயங்களில் அவராக எழுந்து கொண்டாலும் பல சமயங்களில் எழுந்தமர யாராவது உதவி செய்யவேண்டும். எழுந்தமர்ந்ததும் கிழக்கு என நினைத்த ஒரு பக்கமாக பழநியாண்டவர் கோயிலை நோக்கி தோளைசுருக்கி ஒருகை மட்டும் உயர்த்தி கண்களை மூடி வழிபட்டார்.

எழுந்து அமர்ந்தபின் தலை குனிந்து ஒரு ரப்பர் உருவம்போல அமர்ந்திருப்பது அவருக்கே வெறுப்பாக இருந்தது. அமானுஷ்ய அமைதி அந்த இருளில் நீண்டு கொண்டே சென்றது எரிச்சலை ஏற்படுத்தியது. முத்தம்மா விளக்கமாறால் தரையை பலமாக‌ தேய்ப்பதை கேட்டதும் தூக்கத்தில் விழிப்புகொண்ட பறவைபோல் தலைதூக்கி சற்று ஆசுவாசமானார். இவ்வொலிகள் மட்டும் தினமும் சரியாக கேட்டுவிடுகின்றன இப்போது மணி ஐந்து இருக்கலாம். இனி கொஞ்சம்கொஞ்சமாக சத்தங்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துவிடும். இந்தநாள் குழந்தைகளின் அழுகுரல், பரபர காலடி ஓசைகள், வண்டி எடுக்கும் ஓசைகள், தெருவில் தண்ணீர் தெளிக்கும் ஓசைகள், காய்கறி, பால்காரனின் ஓசைகள், குழாயில் தண்ணீர் பிடிக்கும் ஓசைகள், நடுகட்டு பர்வதத்தின் துணி துவைக்கும் தப்தப் ஓசைகள் என்று நாள் சுழன்றபடியே செல்லும். ஒவ்வொரு சமயமும் இந்த‌ சத்தங்களில்தான் அவர் வாழ்க்கையே செல்வதாகவும் தோன்றும்.

கவனமாக‌‌ இருபக்கமும் திரும்பி பார்த்துக்கொண்டார். அறையில் தான் ஒருபக்கமாகவும் சாமான்கள் மற்றொரு பக்கமாகவும் வைக்கப்பட்டிருப்பதாக பட்டது. தன்னை ஏதோ ஒரு வகையில் உதாசீனபடுத்த நினைக்கும் இந்த செயல் யோகேஷ் ஒருவனால் மட்டுமே செய்ய‌க் கூடியது என நினைத்தார். நன்றாக இருந்த ஒரு சமயத்தில் சில காரணங்களுக்காக அவனை கொலை செய்யகூட நினைத்ததுண்டு. கனகத்தின் வற்புறுத்தலால் அவன் தப்பிப் பிழைத்ததாக நினைத்துக் கர்வம் கொள்வார். இப்போது அப்படி நினைக்கவில்லை ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாக தோன்றியது. அவனில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை என்பதை வருத்தமாக நினைத்துக்கொண்டார்.

சுவற்றிலிருந்த பல்லி ஒன்று மெதுவாக அந்த பல்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவேளை அங்கு பூச்சியிருக்கலாம், அது சரியாக தெரியவில்லை. கண்பார்வை குறைந்துவிட்டது, காதும் லேசாக மந்தம்தான். நாக்கில் ருசிகூட இல்லைதான், பசியினால் டாக்டர்கள் பரிந்துரையில் யோகேஷ் கொடுக்கும் உணவுகளையே சாப்பிடவேண்டியிருக்கிறது. இந்தவகை உணவு, இந்த‌வகை உடைகள், இன்ன நேரத்தில் தூக்கம் போன்ற அனைத்தையும் யோகேஷ் ஒருவனே முடிவு செய்கிறான். இது ஒருவகையான‌ அராஜகமாக தோன்றும். ஆனால் தனக்கு அவன் எத்தனை செய்தாலும் தான் அவனுக்கு செய்தவற்றிற்கு பழிவாங்குகிறானோ என்ற எண்ணம் மாறாமல் இருந்தது.

முதல்வீடு முத்தம்மாவின் கட்டு ரொம்பநாளாக ஒண்டிக்கட்டை. ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பாள், அடுத்து ராமு-‍பர்வதம் கட்டு, ஏழு பிள்ளைகள் கொண்ட அடிக்கடி சண்டையிடும் தம்பதிகள் குடும்பம். அவருக்கு கல்யாணமான புதிதிலிருந்து கவனித்து வருகிறார். இந்தவீட்டின் கடைசி கட்டு அவர்களுடையது. வீட்டுகட்டில் ஏறியதும் கூடம், இடப்பக்கம் அடுப்படி அதை அடுத்து அவரிருந்த அறை. அவ்வளவுதான் வீடு. அவரிருந்த அறையின் கட்டிலிருந்து கட்டுவாசலைத் தாண்டி வீட்டுவாசலையும் திண்ணையையும் பார்க்க முடியும். வீட்டு வாசலில்தான் அந்த‌ உருவத்தை கொஞ்ச நாளாக கண்டுவருகிறார்.

லேசாக பசியாகவும் தலைசுற்றலாக‌வும் இருந்தது. இடுக்கு உள்ள‌ கதவின் வழியாக பார்க்கும் குறுகிய பரப்பு காட்சி போலவும், பெரிய தலைகளும், சிறிய உடல்களுமாக மனிதர்கள் மட்டுமே நிரம்பி வழியும் பெரிய பரப்பு காட்சிகளாக – பலநேரங்களில் தெரிவதுதான் – காலை எழுந்ததிலிருந்து தெரிந்து கொண்டிருந்தன. அந்த காட்சிகள் அவரை நீரில் தள்ளி அமுக்கிவிடுவதுபோல‌ அழுத்திக் கொண்டிருந்தன. கண்களை மூடியபின்பும் தொடர்வதை பெரும் அவஸ்தையாக உணர்ந்தார்.

ஆரம்பத்தில் வாசலில் நின்ற‌ உருவம் யோகேஷின் மாற்றாக நினைத்திருந்தார். அவனால் பறிக்கப்பட்ட சந்தோஷத்தை அந்த உருவம் அளிக்கும் எனவும் நினைத்திருந்தார். ஆனால் அப்படி இருக்கமுடியாது என்று கொஞ்ச நாளில் புரிந்துகொண்டார். அதன் கரும் உருவத்தை நினைக்கும் தோறும் உடலில் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.. நேற்று அந்த உருவம் வெளிவாசலிலிருந்து முன்னேறி நடுகட்டு எதிரே உள்ள சின்ன நீர்தொட்டியின் முன் நின்றிருப்பது போலிருந்தது. உள்ளே எப்படி வந்தது என்று அவருக்கு விளங்கவில்லை. நல்ல நிலையில் இருந்தபோது வெளியாட்களை யாரையும் உள்ளேவர அவர் அனுமதித்ததில்லை. யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்றுவிடக்கூடும், அதை எப்படியாவது விரட்டிவிடவேண்டும் எனவும் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் அதைப்பற்றி தெரிந்துகொண்டதாகவோ அதை கவனித்ததாகவோ தெரியவில்லை. அந்த உருவத்தைப் ப‌ற்றி மற்றவர்களிடம் சொல்லும் சமயத்தில் எல்லாம் நடுகட்டு ராமுவின் இரண்டாவது மகனை அழைத்து வருவார்கள். இது ஒரு வேடிக்கையாகவே அவர்களுக்கு தோன்றியது அவனைக் கண்டும் காணாதது போலிருந்தாலும் பல்லிளித்துக் கொண்டு புத்திசுவாதீனம் குறைந்த அவனும் அருகிலேயே நின்றிருப்பான்.

ஆனால் அந்த உருவம் தன் அப்பாவைப் போன்ற‌ உடல்மொழியுடனும் தாத்தாவைப் போன்று குள்ள உருவத்துடனும் இருந்தது எப்போதும் ஆச்சரியம் அளித்தது. அப்பாவிற்கு சற்று தூக்கிய தோள்கள் மெல்லிய தேகம் அந்த உருவமும் அப்படிதான் இருந்தது. அப்பாவை நினைத்தபோது வருத்தமாக இருக்கும். அவருக்கு இழுப்பு வந்த கடைசிநாளில் தண்ணீர் கொடுக்ககூட அருகில் யாருமில்லாமல் இறந்தார்.

ஒரு நிழலாட்டம் தன் முன்னே சென்றதும், ‘யாரு…’ என்றார். பதிலேதும் இல்லாமல் அந்த உருவம் கடந்து செல்வதை இருட்டில் எதையோ துழாவுவதுபோல் கண்களால் தொடர்ந்தார். சற்று நேரத்தில் அது மறைந்து போனது. அது கனகமாக இருக்கும். பலசமயங்களில் நேர்வதுதான் இது. பலவியாதிகளில் வீழ்ந்துவிட்ட‌ தனக்கு ஃபேன்போட சொல்வதையோ தண்ணீர் வேண்டும் என்று சொன்னதையோ மற்றவர்களுக்கு பெரிய விசயமாக தோன்றியதில்லை. ஆரம்ப நாட்களில் கண்டும் காணாமல் சென்றதை அவமரியாதையாக உணர்ந்து பெரும் கோபம் கொண்டிருக்கிறார். முக சதைகள் துடிக்க கத்தியிருக்கிறார். பின் அமைதியாக ‘உங்களுக்கு மனசாட்சியே இல்லையா’ என கடைசியாக வந்த வார்தைகூட பெரும் இரைச்சலில் கலந்த குழந்தையின் கீச்சுகுரல்போல காணாமல் போக‌. மெதுவாக‌ மிரட்டல்களுக்கும் அதட்டல்களுக்கும் மரியாதை இல்லை என்பதை அறிய அமைதியானார். அருகில் இருந்தாலும் தன் வார்த்தைகள் அவர்களை சென்றடைவதில்லை என்பதுதான் அவருக்குப் பெரும் வேதனை அளித்தது.

அப்பா இறக்கும்சமயத்தில் அந்த திண்ணையில் அவருக்கு துணையாக‌ பக்கத்தில் யாரும் இருந்ததில்லை. தன்வயதொத்த நபர்கள் பேரப்பிள்ளைகள் மட்டும் அவரோடு பேசுவார்கள். மூத்திரபீ நாற்றம் சகிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அப்பா பக்கம் திரும்பாமல் அவர் திண்ணையை முகசுழிப்புடன் கடந்து சென்றிருக்கிறார். அம்மா இறந்து பல ஆண்டுகள் தனிமையில் விடப்பட்டு திண்ணையில் கேட்பாரற்று கிடக்கும் நாட்களில் மருமகள்கள் மட்டுமே சாப்பாடு கொடுக்க சென்றார்கள். தன்னையும் சேர்த்த நான்கு பிள்ளைகள் வேகவேகமாக சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிகொண்டது நினைவிருக்கிறது. எத்தனை கற‌க்கமுடியுமோ கற‌ந்த பின்னும் அவர் மரணத்திற்கு காத்திருந்தது இன்றும் பெரும் பழியாக மனதிற்கு தோன்றியது.

இத்தனை செய்தும் அப்பா ஒன்றும் சொன்னதில்லை. என்ன செய்கிறது ஏதுவும் வேண்டுமா என ஒருநாள் கூட அவரிடம் பரிவுடன் கேட்டதாக நினைவில்லை. ஒருமுறையாவது கேட்டிருக்கலாம் என தோன்றும். மிக அரிதாக கண்கள் சந்திக்கும்போது ஒரு மெல்லிய அடிபட்ட பார்வையோடு கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொள்வதை கவனித்திருக்கிறார். தேறிவந்து மீண்டும் நடமாடுவார் என நினைத்தபோது சட்டென இறந்துபோனார். தாத்தாவின் மரணம்கூட தன் ஐந்துவயதில் இதுமாதிரி திண்ணையில் நிகழ்ந்தது லேசாக நினைவில் உள்ளது. அப்பாவும் தாத்தாவை இப்படி விட்டுவிட்ட‌தாக பேச்சிருந்தது அப்போது. யாருடனும் பேச்சுத் துணையற்று யாரின் உதவியும் இல்லாமல் தன‌க்கும் இதுபோன்ற ஒரு மரணம் நிகழ்ப்போவதை மனம் ஒப்பவில்லை.

பசியும் தலைசுற்றலும் அதிகரித்துக்கொண்டே சென்றது, கனகம் எங்கே? தன‌க்கு பிடித்த உணவுகளை செய்து தந்த‌ ஆரம்பகால கனகத்தை காண ஆவலாயிருந்தது.. கும்பகோணம் பெரியகடைத் தெரு இந்தியா ஜவுளிக் கடையில் கணக்குப் பிள்ளையாக சேர்ந்திருந்த சமயத்தில்தான் கனகத்தை திருமணம் செய்தார். மிக குறைந்த சம்பளத்தில் திருப்தியாக இருந்தாள். கனகத்திடம் கல்யாணமான புதிதில் தெரிந்த கவலையற்ற முகம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது உண்டு.. எந்த சின்ன விசயமும் அவளை சந்தோசப்படுத்தியது, எந்த பிரச்சனையையும் எளிதாக எடுத்துக்கொள்ள பழகியிருந்தாள். ஆனால் கொஞ்சம் காலங்களில் ஒரு பொறுப்பற்ற மனிதனாக தன்னை நிறுவ அவள் பெரும் முனைப்புடன் இருந்தாள் என்பதை மட்டும் அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

தன் இடதுகையை விரித்து கண்களுக்கு பக்கத்தில் வைத்து குனிந்த தலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் தன் உடலும் மனமும் தானும் வேறுவேறானவைகள் என்று சட்டென ஏற்பட்ட நினைப்பு அலைக்கழித்தது. பல நேரங்களில் அவர் சுயநினைவை இழந்து பின் சுயநினைவைப் பெறுவதுமாக இருப்பதை சில சமயங்களில் அவரால் உணரமுடிந்தது. சுயநினைவற்ற நாட்களைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்..

நினைப்பதைவிட காலம் வேகமாக செல்வதை மீனாட்சி, யோகேஷ், சுதா பிறந்து வளர்ந்து வந்த காலங்களில் உணர்ந்தார். எந்த குழந்தையின் வளர்ச்சியையும் முழுமையாக கண்டதாக நினைவில்லை. ஏன் மனைவின் மாற்றங்களைக்கூட அவரால் சரியாக கணிக்கமுடியவில்லை. கணக்குப்பிள்ளையாக இருந்த, கடை கடன் பிரச்சனையில் வேலையை விட்டுவிட்டு வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காமல் சேலைவாங்கி விற்க‌ சேலைகளை கொள்முதல் செய்வதாக கூறி கோவை, பெங்களூரு, சூரத் என்று பல இடங்களுக்கு ஊர்களுக்கு சுற்ற ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பொறுப்புடன் இருந்தாலும் நன்பர்களின் சேர்கை அவரை மாற்றிவிட்டது. அப்போழுது குடும்பத்தை கவனித்த‌ விவரமற்ற கனகத்திடம் தப்பித்துகொள்ள முடிந்தது..

ஆனால் பதின்பருவத்தில் இருந்த மகன் யோகேஷை கண்டுணர்ந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுதில்தான். கையில் காசில்லாமல் சேலைகளை விற்கமுடியாமல் கடன்கிடைக்காமல் வறுமையில் தவித்துக் கொண்டிருந்த நாட்கள் அது. ‘இங்கு சைக்கிள்களுக்கு காற்று அடித்து தர‌ப்படும்’ என்று கோணலாக‌ எழுதப்பட்ட போர்டை வைத்து ஒரு வீட்டு திண்னையில் நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்து காற்று அடித்துக்கொடுத்து காசு வாங்கி கொண்டிருந்தான். ச‌ட்டென ஒரு தெரிப்பு தன்னுள் ஏற்பட்டதை அவர் கவனிக்க தவறவில்லை. தனக்கு தோன்றாத‌ அல்லது கவுரவ குறைவாக நினைக்கின்ற ஒன்று, தன்மகன் மூலமாக நிகழும் ஒரு புரிதல் அவருக்கு தெரிந்து நானல்ல அவன் என்கிற அதிர்ச்சி அவரை பின்வந்த நாட்களில் அலைக்கழித்தபடியிருந்தது. அப்போது மகன் யோகேஷின் அப்போதைய‌ குறைந்த சம்பாத்தியத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருப்பதை அவர் அதுவரை அறிந்திருக்கவில்லை. அவன் செய்கைகளை அவன் அறியாமல் கவனிக்கலானார். குழந்தைகளுக்கு அவன் எடுக்கும் டியூசன், காலையில் பேப்பர் ஏஜென்டிடம் வேலை என அவர் அறிந்தபோது பெரிதும் துணுக்குறலானார்.

மீனாட்சி, சுதா திருமணங்களுக்குப் பின், யோகேஷ் மிக தெளிவாக அவரை பின்தொடரலானான். சட்டம், நீதிநெறி என்று பேசலானான். செலவிற்கு சொத்துக்களை சில விற்க நினைத்தபோது முட்டுகட்டையாக இருந்தான். தாத்தாவிற்குபின் சொத்து பேரனுக்கே என வாதிடலானான். கோர்ட் வரை அவன் சென்று அவரை ஒன்று செய்யவிடாமல் செய்தான். அந்த அவமான‌மும், கெளரவகுறைவும் இன்றும் அவர் மனதை பிழிகிறது. தன்னிடம்கூட சொல்லாமல், குடும்பகவுரவத்தை நினைக்காமல் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டான் யோகேஷ். அந்த சமயத்தில்தான் அவனை கொல்லவேண்டுமென்று நினைத்திருந்தார். நாற்பதுவந்தால் நாயின் குணம் என்பது மாதிரி அந்த வயதின் குணமோ என்னவோ உணவில் விஷம், அடிதடி, ஆள்கடத்தல், என்றெல்லாம் நினைக்க தோன்றியது. அப்பாவின் பணத்திற்காக மகனிடம் சண்டையிட வேண்டியிருந்தது, அவனை அதிகாரம் செய்து பழகியிருந்த அவருக்கு, அவனின் வளர்ச்சி அவரின் கவுரவத்தை எப்போதும் சீண்டியது..

வெய்யில் ஏறியபின் யோகேஷ் வந்து கிண்ண‌த்தில் அறைக்கப்பட்ட ரசம் சாதம் ஸ்பூனில் வேகமாக கொடுத்துவிட்டு சென்ற பின்னே மனம் சற்று ஆசுவாசமானது. மாத்திரைகள் உண்டபின் கனவுகளோடு உறங்கி போனார். கால்களை பிடித்து தன்னை யாரோ சுற்றுவது போல தூக்கம் கலைந்து வெளிவந்தபோது காலைய நினைவுகள் இல்லை..

தன் வாழ்வில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழவேண்டுமென எப்போதும் நினைத்து வந்தார். எரிச்சலை ஊட்டும் யோகேஷின் செய்கைகளை, அவன் விதிக்கும் தடைகளை உடைத்து வெளியேற வேண்டும் என தினமும் நினைத்துக் கொள்வார். நா;ளெல்லாம் வெக்கையில் அமர்ந்திருந்தபின், காலைக்கடன்களையும், உணவு உட்கொள்ளலையும் பெட்டிலே முடித்துவிட்டு அமர்ந்திருந்த அவருக்கு அன்று மாலையே யோகேஷின் தடைகளை மீறுவார் என்று அவரே நினைக்கவில்லை இந்த மனஉளைச்சலே அவரை அனைத்து கட்டுபாடுகளையும் உடைத்து கொண்டு வெளியேறவைத்தது. நல்ல உடைகளை அணிந்து கொண்டார். எட்டுமுழம் மல்வேட்டி, உள்ளிருக்கும் பனியன் தெரியும் கழுத்து பின்பக்கத்தில் தூக்கிவிடப்பட்ட சட்டை அணிந்திருந்தார். தன் மகனுக்குத் தெரியாமல் மெல்ல எழுந்து கட்டுவாசலை ஓசைப்படாமல் கடந்து நின்றிருந்த உருவத்தை கவனிக்காததுபோல அதனை கடந்து சென்றார். வாசலில் வந்து நின்றபோது தானே தன்னை மேலிருந்து காண்பதுபோல் உணர்ந்தார். நடந்து வெளிவாசலை கடந்து தெருவில் நடந்துசெல்வதை பக்கத்து வீட்டு, எதிர்வீட்டுக்காரர்கள் சாதாரண நிகழ்வாக பார்த்து சிரித்து விட்டு சென்றார்கள். கிழக்கே நடந்து கடலங்குடி வழியாக ராமசாமி கோயிலை அடைந்தார். நண்பர்களோடு சிற்பங்களை கண்ட அந்த கோயிலை நினைவுகூர்ந்தபடி கும்பேஸ்வரர் கோயிலை அடைந்தார். கடைகளை கடந்து தெரிந்த நபர்களின் அழைப்புகளை மென்மையாக‌ தவிர்த்து உள்பிரகாரம் வரை சென்றார். நடுவே யானை நின்றிருந்தது. கொண்டுவந்திருந்த வாழைப்பழங்களை யானைக்கு கொடுத்தார். கடவுளை சேவித்தபின் வெளிவந்து வெங்கடேஸ்வராவில் கும்பகோணம் டிகிரி காப்பியை ரசித்து குடித்தார். பின் டைமண்ட் வழியாக மகாமக குளத்தை அடைந்தார். அங்கு நின்றிருந்த சில நண்பர்கள் அவரை கண்டுகொண்டார்கள், வடைபோன்ற பட்சணங்களை அவருக்கு உண்ண அளித்தார்கள். காற்றுவாங்கி அவர்களுடன் அளாவியபின் மீண்டும் கடலங்குடி தெருவழியாக வீடு வந்தார்.

வீடு உள்ளே நுழைந்தபோது தண்ணீர் தொட்டியருகே நின்றிருந்த உருவம் கட்டு வாசலருகே நின்றிருந்தது பயத்தை ஊட்டியது. போகும்போது ஏதும் சொல்லாத உருவம் வரும்போது சட்டென வழிமறித்து என்னுடன் வா என்றது. திடுக்கிட்டு நின்றவர், ஒருநிமிடம் அதனை உற்று கவனித்தார். ‘ஏன் உன்னுடன் வரவேண்டும்’ என கேள்வி கேட்டார். ‘உங்களுக்கு இங்கு இருக்க விருப்பமில்லை என அறிகிறேன், என்னுடன் வந்தால் நீங்கள் விரும்பும் வாழ்க்கை வாழமுடியும்’ என்றது. சற்று நிதானித்து ‘உன்னுடன் வர எனக்கு விருப்பமில்லை, அத்துடன் எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன’ என்றார். ‘என்ன வேலைகள்’ என்றது உருவம். சற்று யோசிப்பதுபோல பாவனை செய்தபடி அதனை கூர்ந்து கவனித்தார் ‘ம்ம் வந்து நிறைய படிக்க எண்ணியுள்ளேன். வாழ்க்கையில் இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன என்பது உனக்கு தெரியும்தானே’ என்றார். இந்த நிலையில் உங்களால் முடியுமா என்றது உருவம். ‘ஏன் முடியாது’ சற்று கோபத்தில் குரலை உயர்த்தினார் ‘அதெல்லாம் முடியும் நீ தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்’ என்றார். சரி அப்படியானால் அது முடிந்தது என்னுடன் வரவேண்டும் என்றது உருவம். ஒரு கரிய நாய் ஒன்று அருகில் நின்றிருப்பது போலிருந்தது. அது உண்மையல்ல என்பதுபோல் மீண்டும் கவனம்பெற்று சரி என்று அவசரமாக கூறியவர் எப்படியோ தப்பித்தால் போதும் என்று ஓடி கட்டிலில் வந்து சேர்ந்தார். லேசாக பதற்றமாக இருப்பது போலிருந்தது. நெஞ்சுகூடு வேகமாக அசைந்து கொண்டிருந்தது. இருந்தாலும் தைரியமாக அதனிடம் பேசிவிட்டுவந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கட்டிலில் நன்றாக சம்மணமிட்டு அமர்ந்து கொண்டபோது தன்முன்னால் நின்ற சிறுவனை சட்டென கவனித்து பதறிப்போனார். யாரிவன்? சிரித்தபடியிருக்கும் இந்த சிறுவன் தன்னை தொட முயற்சிப்பதில் பயங்கொண்டு கத்திவிட்டார்.

‘டே.. சும்மாரு’ என்று எங்கிருந்தோ ஒரு குரல். அவன் கைகளை விலக்கிக்கொண்டான்.

அவனையே உற்றுபார்த்தார். இரண்டு அல்லது மூன்று வயதிருக்கலாம். ஏதோ ஒரு கணத்தில் தன்னை தாக்கிவிட்டு ஓடக்கூடும் என ஏனோ நினைக்க தோன்றியது. தன்னை மீண்டும் தொட முயற்சித்தவ‌னை

‘யார் நீ’ என்று வேகமாக கேட்டார். தன் குரல் தனக்கு அன்னியமாக எங்கோ கேட்டது.

அவரைக்கண்டு சிரித்தபடியிருந்தான். சற்று ஆசுவாசத்துடன் உன்பெயரென்ன என்றார்.

பாலவிநாயகம் என்று தூரத்தில் கேட்டது. யோகேஷ் தரையை கழுவிக்கொண்டே அந்த பதிலை சொல்லியிருக்கிறான்.

அந்த பெயர் அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. யோகேஷ் இப்போது பெரிய ஆள் போல ஆகிவிட்டிருப்பதாக தெரிந்தது. அவனிடம் பேசவேண்டும், தன் அகங்கார உணர்ச்சிகளை கட்டுபடுத்தி சற்றேனும் தான் நெகிழ்ச்சியுடன் இருப்பதற்காகவேனும் அவனுடன் பேசவேண்டும். தனக்கு சிசுருசை செய்வது அவன்தான். தான் அவனுக்கு செய்ததைவிட தான் எதிர்பார்த்ததைவிட அதிகமும் அவன் செய்துவிட்டான். உடலும் மனமும் கனத்தது. அவனிடம் பேசவேண்டுமென்றிருப்பதை அவன் கவனிக்கிறானா?.

சற்று அருகில் வந்ததும், ‘மருந்து சாப்பிடுறீங்களா’ என்றான்.

ஆங்…

மருந்து… மருந்து சாப்பிறீங்களா?

அ… உனக்கு விருப்பமிருந்தா கொடு சாப்பிறேன்.

எனக்கு என்ன விருப்பம் இருக்கு

ஆங்…

வாய் குழறியது. விட்டுவிட்டு வந்ததாக தோன்றியது. கேட்டுவிடவேண்டும் அவன் என்ன தான் சொல்கிறான் என்று பார்த்துவிடவாவது வேண்டும்.

‘எனக்காகவா இவ்வளவும் பண்ற..’ என்றார்.

‘எது’

என்னை கவனிக்கிறது.. இந்த வேலையெல்லாம்.

‘இல்ல’

ஆங்…

‘இல்ல, எம் மவனுக்காக பண்றேன்’ என்றான் தீர்க்கமாக‌

இரண்டுநாளா ஏதோ பேசுறீங்கன்னு பார்த்தா… ரொம்பத்தான் கேள்வி கேக்குறீங்க என்று கூறியபடி கடந்து சென்றான்.

அவன் செல்வதையே கவனித்துகொண்டிருந்ததில் அவர் கண்களில் வர்ணஜாலங்களாக தெரிந்தன. என்ன சொல்கிறான். இந்த பழநியாண்டவர் தெருவில்தான் அப்பாவுடன் தெருமுனையில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அப்பாவுடன் வேண்டாவெறுப்பாக அப்பா பாடிய கந்தரனுபூதி ஞாபகத்தில் வருகிறது.. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. ஆம் அது கடைசிவரி. முதல் வரி என்ன? என்னுடைய வாழ்வு யாரை நம்பியிருக்கிறது? எந்த கர்மா என்னை துரத்துகிறது? நான் என் வாழ்வை மட்டும்தான் மனதில் நினைக்கிறேனா? உருவாய் அருவாய் உளதாய் இலதாய். எதற்காக இந்த உலகத்தில் தனியனாக வந்தேன். நானா இந்த உலகத்தில் அனைத்து வளங்களையும் நுகர்ந்து வாழ்கிறேன். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய். எனக்கு மட்டுமானதா இந்த‌ வளங்கள். என்னுடலா இந்த இன்பதுன்பங்களை அறிந்துகொள்கிறது? கருவாய் உயிராய் கதியாய் விதியாய். என் புலன்கள் எதை இதுவரை அறிந்திருக்கின்றன, எதை விட்டிருக்கின்றன‌. என் புலன்கள் அழியும் காலத்தில் நான் எதைத்தான் பெறுகிறேன். எதற்காக‌ இவ்வளவு தூரம் ஓடிவந்தேன். அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில், அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக‌. என்ன சொன்னான் அவன். எனக்காக இல்லையா தன் மகனுக்கா என்றா சொன்னான். உடல் ஒருமுறை உதறியது போலிருந்தது. மின்னல் ஒன்று இறங்கி பூமிக்குவருவது போன்ற ஒளிதாக்கியது. மெல்ல‌ தலைதூக்கி முன்பே அறிந்த‌ பதற்றத்தோடு வாசலை நோக்குகையில் வீட்டுகட்டு வாசலில் நின்றிருந்த அந்த கரிய உருவம் தடைகளற்று கடகடவென நடந்து தன்னை நோக்கி வருவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் மேலும் கடிதங்கள்