நண்பர் ஷாஜி சென்னையில் இருந்து ஏப்ரல் இரண்டாம்தேதி ஒரு முக்கியமான கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். DTTC கொரியர் வழியாக.இன்னமும் வந்து சேரவில்லை. சென்னையில் கேட்டால் அனுப்பபப்ட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகர்கோயிலில் கேட்டால் இங்கே இருந்தால் கொடுப்போம், இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. வந்ததா என்று பார்க்க எங்களிடம் கம்ப்யூட்டர் ஏதும் இல்லை. எழுதியெல்லாம் வைப்பதுமில்லை. இப்போது உங்கள் கடிதம் இங்கே இல்லை என்று பதில்.
இதற்கு ஒரு வாரம் முன்னால் வா.மணிகண்டன் அனுப்பிய கடிதம் இதேபோல பலநாள் சிக்கலைக் கொடுத்து ஒருவழியாக எங்கிருந்தோ வந்து சேர்ந்தது. இது வாரம் ஒருமுறை நிகழ்ந்து எனக்கு கடுமையான நேரவிரயத்தையும் மனச்சள்ளையையும் அளித்து வருகிறது.
ஆகவே இதை கொரியர் வழி கடிதம் அனுப்பும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பாக அளிக்கிறேன். தயவுசெய்து DTTC , பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் போன்ற கொரியர்களில் எனக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டாம். அவை எனக்கு பலநாட்கள் கழித்து மட்டுமே கிடைக்கின்றன. பலசமயம் கிடைப்பதில்லை. கடிதம் அனுப்பியவர்கள் தொலைபேசியில் கேட்டு கேட்டு அது பெரும் தொந்தரவாக உள்ளது.
உள்ளூர்கொரியர் அலுவலகங்களில் கேட்டால் அவர்கள் வெறும் கமிஷன் ஏஜென்டுகள் ம்ட்டுமே என்றும் ஒரு பகுதியில் பல தபால்கள் சேர்ந்தபின்னர் மட்டுமே கொண்டுகொடுக்க முடியும் என்றும் அதுவே கட்டுப்படியாகுமென்றும் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள்.
தபால்களை வாங்கும்போது பல நிறுவனங்கள் எல்லா இடத்திலும் கிளைகள் இருப்பதாகச் சொன்னாலும் கமிஷன் ஏஜென்டுகளே உள்ளனர். மேலும் கொரியர்களை கொண்டு கொடுக்கும் பையன்களும் கமிஷன் அடிப்படையிலேயே பணியாற்றுகிறார்கள். ஒரு கடிதம் இரண்டு கடிதத்துக்காக அவர்கள் வருவதில்லை. அலுவலகங்கள் வணிகர்களை மட்டுமே அவர்கள் பொருட்படுத்துகிறார்கள்
புரஃபஷனல் கொரியர் நாகர்கோயில், தக்கலை ஊர்களில் முறையான அலுவலகமும் முறையான தபால் பட்டுவாடாவும் உள்ள அமைப்பு. புரஃபஷனல் கொரியரில் தபால் அனுப்புங்கள்.பிற கொரியர் நிறுவனங்கள் பற்றி என்னிடம் விசாரிக்காதீர்கள்
நன்றி