இரு இடங்களில் எங்களைத்தேடும் கும்பலில் இருந்து பதுங்கி தப்பினோம். காடு முழுக்க எங்களைத்தேடுகிறார்கள் என்று தெரிந்தது. இந்தப்பெண் கூடவே இல்லாவிட்டால் இந்தக்காட்டில் நடமாடவே முடியாது. மழை விட்டு ஈரம் உலர்ந்த இலைகள் காற்றில் சிலுசிலுத்தன. மழை இல்லாவிட்டால் மணிப்பூர் காட்டுக்குள் நீராவி நிறைந்துவிடும். வெக்கை ஆளைக்கொல்லும். வியர்வை உடலெங்கும் வழிந்தது. பெரிதாக மூச்சுவிட்டபடி கனத்த காலடிகளை எடுத்து வைத்து சேற்றில் நடந்தோம். இலைகளில் ஒட்டியிருந்த தேரைகள் தாவிக்குதித்தன. புதர்ப்பறவைகள் புப் புப் என்றபடி எழுந்து பறந்தன.
”தண்ணீர்”என்றேன். அவள் கமுகுப்பாளைக்குடுவையில் நீர் வைத்திருந்தாள். குடித்துவிட்டு கொடுத்தேன். அவளும் குடித்தாள்.
”வலி இருக்கிறதா?”
“கொஞ்சம்”
“அசையும்போது மட்டும் வலிக்கிறதா , இல்லை சும்மாவே தெறிக்கிறதா?”
“அசையும்போது மட்டும்தான்”
தொட்டுப்பார்த்துவிட்டு ”சூடாக இல்லை”என்றாள் “செப்டிக் ஆகவில்லை. இந்த பச்சிலைகள் நல்ல ஆண்டிபயாட்டிக்குகள்”
“தாங்ஸ்”
அவள் சாதாரணமாக தொடர்வதுபோல ”மியான்மரில் நிறைய தமிழர்கள் உண்டு”என்றாள்.
“அப்படியா?”
“ஆமாம். என்னுடன்கூட நிறைய தமிழர்கள் படித்தார்கள். அவர்களெல்லாம் ரப்பர்த் தோட்டத்தில் வேலைபார்க்கிறார்கள்”
“ம்” என்றேன்
“பெண்களெல்லாம் அழகாகவே இருக்கமாட்டார்கள். நல்ல கறுப்பு நிறம். பல்லெல்லாம்கூட பெரிதாக இருக்கும்”
நான் அதைக் கேட்டதாக காட்டிக் கொள்ளவில்லை
”ஆனால் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். பயங்கரமாக சத்தம் போட்டு கூவிக் கூவிச் சண்டைபோட்டு பேசுவார்கள்”
நான் அவளை பார்க்கவேயில்லை. அவள் பார்வையை உணர்ந்தபடியே இருந்தேன்.
மேலும் நடந்தோம்.
”இங்கே உயரமான பாறை ஒன்று இருக்கிறது. அதன் மீதிருந்து இப்பகுதியை பார்ப்பார்கள். நாம் புதர்களுக்குள் பதுங்கித்தான் போகவேண்டும்” என்றாள்
புதர்கள் வழியாக தவழ்ந்து சென்றோம். பாறை மீது இருவர் எம் 249 ஸ்க்வாட் ஆட்டமாட்டிக்குடன் நிற்பது தெரிந்தது. பச்சை இலைகளை உடல் முழுக்க கட்டிய அங்கமி வீரர்கள்.
மறு எல்லைக்குச் சென்றதும் அவள் எழுந்தாள். நானும் எழுந்தேன். அவள் ”அந்த தமிழ்ப்பெண்களுக்குச் சாப்பிடக்கூடத் தெரியாது. அசிங்கமாக சாப்பிடுவார்கள். குரங்குகள் போல , கைகளால் அள்ளி அள்ளி வாயில் போட்டு மெல்வார்கள்…” என்றாள்
”ஷட் அப்” என்று சீறினேன்.
என் கோபம் கண்டு அவள் முகம் சிவந்துவிட்டது
ஒரு நீரோடை செல்லும் ஒலி கேட்டது. பாசிப்பச்சைக் கற்களில் மோதியபடி ஓடைநீர் உடைந்து கண்ணாடியாகிச்சென்றது . பாறை இடுக்குகளில் கால்வைத்து இறங்கினோம். நான் முகம் கழுவிக்கொண்டேன். அவள் சற்று தள்ளி பாறை மறைவுக்குப்போய் தன் உடைகளை விலக்கி உடலைக் கழுவினாள். நீரில் சந்தனம் போல் கரைந்து நெளிந்த அவள் பிம்பத்தை கண்டேன். மனம் படபடத்தது.
அருகே ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறினோம்.
அவள் என்னருகே அமர்ந்தாள். தன் முழங்கால்கள் மீது தலையைச் சரித்துக் கொண்டாள். மெல்ல தனக்குள் ஒரு மணிப்புரி மொழிப்பாடலை முனகினாள். நான் அவளையே நோக்கி அமர்ந்திருந்தேன்.
”இது அங்கமி மொழிப்பாடலா?” என்றேன்
“இல்லை பர்மிய மொழி பாடல். அங்கமியில் நாட்டுப்புற பாடல்கள் மட்டும்தான். எனக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காது”
“‘ஏன்?”
“எனக்கு மாடர்ன் பாட்டுதான் பிடிக்கும்.”
நான் புன்னகை செய்தேன்
அவள் உடனே ”அதற்காக நான் அங்கமி மொழியை விரும்பவில்லை என்று பொருள் இல்லை”
“புரிகிறது” என்றேன் புன்னகையுடன்.
“என்ன புரிகிறது?”
”உன் மனம்”
“என்ன மனம்?”
நான் சிரித்தேன்.
அவள் சினத்துடன் ” உங்கள் நினைப்பு புரிகிறது. நான் இதையெல்லாம் உள்ளூர விரும்பவில்லை. மாடர்னாக வாழ விரும்புகிறேன். அப்படித்தானே நினைக்கிறீர்கள்?”
“அதில் என்ன தவறு?”
“டாமிட்” என்று சீறினாள் ”எனக்கு என் நாட்டு விடுதலைதான் முக்கியம். அதற்காக சாவதுதான் என் …”
“நாடு விடுதலை அடைந்தபிறகு நகப்பாலிஷ் போட்டிருக்கலாமே”
“நகப்பாலீஷா நானா?”
நான் அவள் கைகளைப் பிடித்து மலர்த்தினேன். அழிந்த நகப்பாலீஷ். ” ஒருவாரம் முன்னால் நகப்பாலீஷ் போட்டிருக்கிறாய். காட்டுக்குள் இது கிடைக்கவேண்டுமென்றால் நீ சொல்லி அனுப்பி வரவழைத்திருக்கவேண்டும்…’
“சீ…”என்று கையை இழுத்துக் கொண்டாள். ”இது… இது..” சட்டென்று வேகம் கொண்டு கையை தரையில் பரபரவென உரசினாள். பிறகு அப்படியே குவிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
நான் அவள ழுவதையே பார்த்து அமர்ந்திருந்தேன். பின்பு மெல்ல அவள் தோளைத் தொட்டேன். அவள் என் கையை உதறினாள். நான் விலகிக் கொண்டேன்
சட்டென்று முகம் துடைத்து எழுந்து ”போகலாம்”என்றாள்.
காடு தன்மை மாறியது. சதுப்புத்தரை அகன்று சற்று திடமான நிலம் வந்தது. வேர்கள் அடர்ந்து பின்னிய நிலத்தில் புதர்கள் குறைவாக இருந்தன. குட்டையான புதர்களில் செண்டு செண்டாக மலர்கள்.
இருவரும் புதர்களை விலக்கி நடக்கும்போது நான் ” இதில் வெட்கப்படவோ அழவோ ஏதுமில்லை.”என்றேன்”நீ ஒரு பெண். பெண்ணாக இருப்பதில் என்ன தவறு? பெண்ணுக்குரிய உணர்ச்சிகள் ஏன் உன்னிடம் இருக்கக் கூடாது?”என்றாள்.
”டாமிட். நான் ஒருய் போராளி. அவ்வளவுதான்”
”நீ ஒரு அழகான பெண்”
”புல் ஷிட்”
”இனிமையானவள்..”
”ஷட் அப் ப்ளீஸ்”
”சொல்லுவேன். நீ ஒரு மஞ்சள் தேவதை. கோல்டன் டால்….”
அவள் முகம் சிவந்து முன்னால் ஓடினாள்.நான் பின்னால் சென்றேன். அவள் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டேன். ஒரு காட்டுமலரைப்பறித்து முகர்ந்து பார்த்தபின் அதை காதோரம் சூடினாள்.
”உனக்கு பூ நன்றாக இருக்கிறது…”
அவள் வெட்கிச்சிவந்த முகத்துடன் சிறு குழந்தைபோல ”இஸ் இட்?” என்றாள்
”ரியலி”
அவள் பெருமூச்சுவிட்டாள். மெல்லிய குரலில் குற்ற உணர்வுடன் “ஐ லவ் சினிமா”என்றாள்
“குட்”என்றேன்
“……..ஆன்ட் ஐஸ்கிரீம்” இம்முறை குரலில் உற்சாகம்.
“ஓக்கே. தென்…”
“சின்னக் குழந்தைகள்…..”
“வெரிகுட்…”நான் புன்னகைத்தேன் ” பாய்ஸ்?”
“ச்சீ… ஐ ஹேட் தெம்.”
“ஏன்?”
“என்னைச் சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்”
“ஒரு இடத்தில் அந்தச் சீண்டல் பிடிக்க ஆரம்பித்துவிடும்”
“அதெல்லாமில்லை. ஐ ஹேட் பாய்ஸ்”
“அடாடா… அப்படியானால் எப்படி குழந்தைகள் வரும்? உனக்குத்தான் குழந்தைகள் பிடிக்குமே”
” யூ”என்று சீறினாள்”ஐ வில் கில் யூ” என்றாள். முகம் ரத்தமாகச் சிவந்துவிட்டது.
நான் சிரித்தேன்.
இருள் பரக்க ஆரம்பித்திருந்தது. என் கடிகாரத்தில் ஐந்து மணி ஆகவில்லை.
”இருட்டுகிறது”என்றேன்
“ஆமாம்.நாம் இங்கே தங்கவேண்டும். ”
“இவ்வளவு சீக்கிரமே இருட்டுகிறது” என்றேன் வியப்புடன்
”இங்கே நான்கு மணிக்கே இருட்டும்… இன்று மேக மூட்டமே இல்லை. பின்னிரவில் நிலா வரும் என்று நினைக்கிறேன்…”
“அப்படியா?”
“இன்று என்ன நாள் தெரியுமா?”
“என்ன?”
“சைத்ர பௌர்ணமி ” என்றாள் ”புத்த பூர்ணிமா”
“அப்படியா?”
“வருடத்தில் நிலா மிக முழுமையாக அழகாக இருப்பது இந்த ஒருநாளில்தான். மியான்மாரில் இந்த நாளை தேசியவிழா போலக் கொண்டாடுகிறார்கள்….”
”எங்களுக்கும் இந்த நாள் முக்கியம்தான். நாங்கள் சித்ரான்னம் செய்து கொண்டுபோய் ஆற்றுக்கரையில் வைத்து குடும்பத்தோடு சாப்பிடுவோம். குறுக்குத்துறை சுப்ரமணியசாமி கோயில் என்று ஒரு கோயில் எங்களுரில் ஆற்றின் அருகே இருக்கிறது. அங்கே மணல்மேடு அழகாக இருக்கும். அங்கே அமர்ந்து சாப்பிடுவோம். மணல் ராத்திரி ஏழெட்டு டீம் விடிய விடிய கபடி ஆடுவார்கள். ”
“நீங்கள் ஆடுவீர்களா?”
“இல்லை. என் அம்மா விடமாட்டார்கள். அடிபடும் என்று சொல்வார்கள். அம்மா விட்டாலும் அக்காமார்கள் விடமாட்டார்கள்”
“அய்யே”என்று சிரித்தாள் ”அக்கா சொன்னால் கேட்பீர்களா?”
“சொன்ன பேச்சு கேட்காவிட்டால் என் மூத்த அக்கா பயங்கரமாக கிள்ளுவாள். அவள் நினைப்பதுதான் வீட்டில் நடக்கும். அப்பாகூட மறுபேச்சு பேசமாட்டார் . சின்ன அக்கா என் பக்கம். இன்னொரு அக்காவுக்கு எப்போதுபார்த்தாலும் பாட்டு கேட்பதுதான் வேலை. வேறு ஞாபகமே இருக்காது. சிலோன் ரேடியோ எங்களூரில் நன்றாகக் கேட்கும். நிறைய தமிழ்பாட்டு போடுவார்கள். அதை கேட்டபடியே இருப்பாள் ”
“மியான்மாரில்கூட சிலோன் ரேடியோ கேட்கும். நல்ல பாட்டுகள்…. நான் கேட்டிருக்கிறேன் ”
” அப்படியா?” என்றேன் வியப்புடன்
” மியான்மாரில் சினிமாவே இல்லையே” என்றாள் அவள் ”பாட்டும் குறைவு”
” சரிதான் சினிமாப் பாட்டு இல்லாமல் எப்படி வாழ்வது? எனக்கும் சினிமாப்பாட்டு என்றால் உயிர். ஒருமுறை சென்னை போனபோது தேடிப்போய் டிஎம் சௌந்தர ராஜனைப் பார்த்தேன்…பெரிய பாடகர்”
“தெரியும். ‘அமேடியான நடியினிலே ஓடெம்….அடிகமான வெல்லம் வன்றால் ஆடெம்”
“மைகாட்!”என்று கூவி விட்டேன். ”மை காட்! எவ்வளவு பாட்டு தெரியும்…?”
“நிறைய தெரியும். இங்கே கூட சில சமயம் சிலோன் ரேடியோ எடுக்கும். மழை இல்லாமலிருக்கவேண்டும் .” அவள் பாடினால் ‘ நீல நயெனங்களில் ஒரு நீன்ற கனெவு வன்றது…” அவள் நன்றாகவே பாடினாள். ஆனால் ஒரு வகை சீன ஒலி கூடவே கலந்திருந்தது.
என் மனம் விம்மியது. மறு கணம் கூம்பியது .”முகாமில் சரவணன் என்று ஒரு லேன்ஸ் நாயிக் இருந்தான். அவனும் நானும்தான் தமிழ் பாட்டு போட்டி போட்டு பாடுவோம். ராத்திரியெல்லாம் பாடிக்கொண்டே இருப்போம். தியாகராஜன் பாட மாட்டார் ஆனால் எல்லா பாட்டுக்கும் வரிகள் தெரியும். அப்றம் நாயர். அவந்தான் சரியான பாடகன்…பெரும்பாலும் எல்லாருக்குமே சினிமாப்பாட்டுமீதுதான் பெரிய மோகம்… எங்கள் கம்பெனியில் இரவ்வெல்லாம் மாறி மாறிப்பாடுவோம். தெலுங்கு மலையாளப்பாடல்கள்…. பாட்டுப்போட்டிகூட உண்டு…”
“ஐயம் சாரி”
” ஏன்?”
“என்னால்தானே?”
“நீ என்ன செய்வாய்? சாகத்தானே இங்கே வந்தோம்?” நான் கசப்புடன் சொன்னேன் ”பாட்டு சினிமா எல்லாவற்றையும் விட்டுவிட்டு அனாதையாக செத்து காட்டில் அழுகுவதற்காக…”
அவள் முகமும் கூம்பியது. நான் பெருமூச்சுவிட்டேன்.
நான் திடீரென்று ஏற்பட்ட வேகத்துடன்” ஏன் இந்த சண்டைகள்? எதர்காக இப்படி சுட்டுக்கொண்டு சாகிறோம்?”
அவள் ஏதோ சொல்ல வந்தாள். நான் மேலும் சீற்றம் கொண்டேன் ”….ஸ்டாப். அந்த ஐடியாலஜி ஷிட் எல்லாம் என்னிடம் சொல்லதே. ஐடியாலஜி மதம் தேசம் கொள்கை ….ஷிட் ஷிட் ஷிட்…. மனிதனை மனிதன் சுட்டுத்தள்ளுவதற்கு எத்தனை காரணங்கள். எத்தனை ஆயுதங்கள்…”
”நீங்கள் பார்த்த முதல் போரா இது?”
நான் வெறுப்புடன் பேசாமலிருந்தேன்.
‘நான் இதுவரை எட்டு சண்டைகளைப் பார்த்துவிட்டேன். என் அம்மா குண்டுபட்டு சிதறிகிடந்ததையும் கண்டேன்” அவள் சொன்னாள் ”நானும் நினைப்பேன் .போரே இல்லாத இடம் உண்டா என்று. பயமே இல்லாமல் வாழக்கூடிய இடம்….”
”இருக்கிறது. நமக்கு இந்த ஆயுதங்களை உருவாக்கி விற்கக்கூடிய நாடுகள். பார்த்தாயா பெரெட்டா. அமெரிக்க கம்பெனி. இந்தக் கம்பெனியில் ஷேர் வாங்கியவர்களெல்லாம் நிம்மதியாக இருப்பார்கள். ஹாலிடேக்கு மியான்மாருக்கும் இந்தியாவுக்கும் வந்து கலைப்பொருட்கள் வாங்குவார்கள்…” நான் உரக்கச் சிரித்தேன்.
”எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்லை. ஆனால் வேண்டியவர்களின் இறப்பு மேலும் மேலும் வெறியை ஏற்றுகிறது. அம்மாவின் பிணத்தின் முன் வைத்து நான் முடிந்தவரை இந்திய ராணுவத்தினரைக் கொல்ல சபதம் எடுத்தேன். மனம் சோர்வுறும்போதெல்லாம் அம்மாவை நினைத்தால் எனக்கு வேகம் ஏறும். உண்மையில் எங்கள் யூனிட்டில் எல்லாருக்குமே இப்படி தனிப்பட்ட கோபமும் வெறுயும்தான் இருக்கிறது. இந்திய ராணுவம் எங்களைக் கொல்லக் கொல்ல எங்களுக்கு போராடும் வேகம் ஏறுகிறது……”
“அதற்காகவே உங்களை பலிபோடுகிறார்களோ என்னவோ”
அவள் ”இருக்கலாம்”என்றாள் ” நான் இந்தியர்களை மனிதர்களாக நினைத்ததே இல்லை…. முகாமில் உங்களைப் பார்த்து முகங்கள் அறிமுகமான பிறகு எல்லாருமே மனிதர்களாக ஆகிவிட்டீர்கள்….” .
”எல்லாரும் இப்போது வெறும் நினைவுகள்….” என்றேன். தாளமுடியா மனப்பாரத்தை என் உடல் முழுக்க உணர்ந்தேன். இருவரும் தத்தம் நினைவுகள் கனக்க அப்படியே அமர்ந்திருந்தோம்.
அவள் பேச்சை மாற்றுவதுபோல ” அக்காக்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?” என்றாள்
”மூத்த அக்காள் பெயர் காந்திமதி. டீச்சராக இருக்கிறாள்.”
“சரிதான். நினைத்தேன் ,அவர் டீச்சராகத்தான் ஆவார் என்று”என்று சிரித்தாள்
” அவளுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பெண்கள். அம்பாசமுத்திரத்தில் இருக்கிறாள். கணவரும் டீச்சர். சின்ன அக்கா கோமதி. அவள் கணவருக்கு டெல்லியில் வேலை. ஒரு பையன். கடைசி அக்கா காதல் திருமணம். வேறு ஜாதி ”
“ஜாதி என்றால்”
“வேறு இனக்குழு.நாடார் என்று பெயர்…” என்றேன் ”என் அப்பாவுக்கு பயங்கர கோபம். அவள் வீட்டைவிட்டுபோய் கல்யாணம் செய்துகொண்டாள். நான் லீவுக்குபோனபோது அவள் வீட்டுக்குப்போய் சமாதானம் செய்தேன். அவள் கணவர் இரும்புக்கடை வைத்திருக்கிறார். நல்ல மனிதர்.அவளுக்கு ஒரு பையன்”
“பாட்டு கேட்கிற அக்காவா காதலித்தது?”
“ஆமாம்.”
“நினைத்தேன்”என்று மீண்டும் சிரித்தாள்.
நானும் சட்டென்று சிரித்தேன். ”என் அத்தான் பாட்டு கேசட் கொடுத்தே காதலித்தாராம்”
”அப்பா என்ன செய்கிறார்?”
“தமிழ் ஆசிரியராக இருந்தார். இப்போது ரிட்டையர் ஆகி விட்டார். கந்தபுராணச் சொற்பொழிவு ஆற்றுவார்.”
“அம்மா?”
“அம்மாவுக்கு என்ன? எப்போது பார்த்தாலும் சமையல்கட்டு. டிவி சீரியல் பார்ப்பது. வெள்ளிக்கிழமை தோறும் காந்திமதியம்மனை பார்க்க கோயிலுக்குப் போவாள். நெய்விளக்கு ஏறுவாள்…”
“·போனில் பேசுவீர்களா?”
“இங்கே சிக்னல் கிடைக்காது. கடிதம் வரும். இப்போது அக்காக்கள் இல்லாமல் வீடு உறங்கி கிடக்கிறது. கல்யாணம்செய்துகொள் என்று சொல்கிறாள் . ஒரே அலுப்பு ”
அவள் வேறு பக்கம் பார்த்தபடி ” ஏன், செய்து கொள்ளவேண்டியதுதானே?” என்றாள்
“காப்டன் ஆக பிரமோஷன் ஆகட்டும் என்று பார்த்தேன்”
“இதுவா காரணம் ?” பயனெட்டால் மரத்தைக் குத்தினாள்
“அதில்லை. அது ஒரு சாக்குதான். எனக்கு சம்பிரதாயமாகப் போய் பெண்ணெல்லாம் பார்ப்பது சங்கடமாக இருக்கிறது”
“என்ன சங்கடம்?”
“இல்லை. மிக அந்தரங்கமான ஒன்றை எல்லாரும் சேர்ந்து பேசி முடிவுசெய்து செய்வது சரியில்லை என்று நினைப்பு. ”
“நீங்கள் ரொம்ப ரொமாண்டிக்” என்று சிரித்தாள்
“அதுதான் பாட்டு கேட்பதிலேயே தெரிகிறதே” நானும் சிரித்தேன்.
”பெரிய கண்களும் கூர்மையான மூக்கும் கொண்ட கருப்பான பெண் வேண்டும் – இல்லையா?”என்றாள்
எங்கள் கண்கள் சந்தித்தன. ஒருகணம் எதுவோ ஒன்று பிறந்து வளர்ந்து நடுவே நின்று சிரித்தது
”நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்” நான் கண்களை விலக்கினேன்
”அதுதானே நியாயம்?” அவளும் விலக்கினாள்
“எனக்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லை”
“இல்லாமலா சொல்வார்கள்?”
“மனிதர்களின் பாதிப்பேச்சு மனதை சொல்வதற்காக அல்ல, ஒளிப்பதற்காக”
“நீங்கள் எதை ஒளித்தீர்கள்?” சட்டென்று திரும்பி கூரிய நோக்குடன் கேட்டாள். கண்கள் சந்தித்தன. மிகக்கூரிய நுனிகள் மட்டும் உரசின.
அது இருவருக்கும் நடுவே நடனமாடியது
நான் என் பயனெட்டால் ஒரு மரத்தை குத்தி ”தெரியவில்லை.”என்றேன் ” பெரும்பாலும் வெற்று ஈகோ. இல்லாவிட்டால்—” நான் தரையை பார்த்தேன். ” இந்த இடம் சற்று உலர்திருக்கிறது”
அவள் புன்னகையுடன் மரங்களைப்பார்த்தபடி நடந்தாள். துள்ளி ஒரு மரத்தின் தாழ்ந்த கிளையை பிடித்தாள். சரசரவென அவள் மீது பூக்கள் கொட்டின. மலர் அபிஷேகம் போல. கண்களை கசக்கியபடி தலையிலும் தோள்களிலும் பொன்னிறப் பூக்களுடன் நின்றாள்.
”கண்ணில் விழுந்துவிட்டதா?”
“இது தேன் நிறைந்த பூ”என்றாள் .கண்களைக் கொட்டியபடி ”நிறைய தேன் எறும்பு” தோளிலிருந்து ஒரு பூவை எடுத்து வாயில் வைத்து சப்பினாள். நான் ஓரு பூவை எடுத்தேன்
‘ரொம்பக் கொஞ்சமாகத்தான் தேன் இருக்கும்” என்றாள் ‘ரொம்பச்சின்ன பூ தானே”
”தேனீக்கு அதுபோதுமே”என்றபடி சப்பினேன். ”மென்மையான தித்திப்பு
நாங்கள் ஓரு பாறைவெடிப்பை அடைந்தோம் .”இது நல்ல இடம். மழைவந்தாலும் நனையாது” என்றாள் அவள். பாறையைச்சுற்றி மரங்கள் அடர்ந்து பாறைமீதே சரிந்து கிளைபரப்பி நின்றன. உதிர்ந்த மலர்கள் கரிய பாறைப்பரப்பில் யானை மத்தகம் மீதுசெம்புள்ளிகள் போல விரிந்து பரவிக்கிடந்தன. இளம்குளிர் காற்று அலையலையாக வீசியது.
”ஆமாம் ”என்றேன். அங்கே என் மழைக்கோட்டை கழற்றி வைத்தேன். உள்ளே வியர்வை கொட்டியது. குளிர்காற்று இதமாக இருந்தது.
”மழை வருமா?”
“உடனே வராது”என்றாள். காடு இருண்டுவிட்டது. சில்வண்டு ஒலி. அப்பால் ஒரு மிருகத்தின் காலடி ஓசை
”உங்கள் குடும்பத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது ”என்றாள்
“அப்படியா?”என்றேன் அர்த்தமில்லாமல்
“ஆனால் நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர்களை விரும்ப மாட்டீர்கள் இல்லையா?”
“அதெல்லாமில்லை. என் சின்ன அக்கா கணவர் இறைச்சி இல்லாமல் சாப்பிடமாட்டார். அவள் நன்றாக குழம்பு வைப்பாள்”
“உங்கள் ஊரில் எல்லாவற்றையும் எளிதாக விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள்”
“அப்படித்தானே வாழவேண்டும்?”
“ம்’ என்றாள் ,பிறகு பெருமூச்சுவிட்டாள்
எனக்குக் களைப்பாக இருந்தது. கால்களை நீட்டிக் கோண்டேன். கோட்டாவி விட்டேன். இருளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“காயம் வலிக்கிறதா?” என்றாள் அவள்.
“கொஞ்சம்” என்றேன்
”நாலைந்துநாள் வலிக்கும் . பிறகு சரியாகப்போய்விடும்.”
மெல்ல தூங்கிவிட்டேன்
[[மேலும்]