விற்பனையும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ,

நான் நலமே. தங்களுக்கும் வருகின்ற நாட்கள் சிறப்பாக அமைய எனது பிரார்த்தனைகள்.

அசோகவனம்- இப்புதினத்தை அற்புதமாக உருவாக்கி எங்களுக்கு ஒரு விருந்தாகப் படைக்க வேண்டுகிறேன்.

நிறைய கேட்க , எழுத தோன்றினாலும் தேவையில்லாமல் உங்கள் நேரத்தை வீணடித்து விடுவேனோ என்ற ஒரு பயம் இருக்கிறது. முதல் கடிதத்தையே எழுதலாமா? வேண்டாமா? என்று நெடுநாள் யோசித்து ஒரு வழியாக அனுப்பினேன்.

ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. கேட்க வேண்டாம் என்று முடிவு செய்துவிடும் முன் கேட்டு விடுகிறேன்.

தமிழில் வரும் புதினங்கள் யாவும் ஆங்கில நாவல்களைப் போல் விற்பனை ஆவதில்லை என்பது தெளிவான ஒரு விஷயமே. தமிழில் எழுதினால் ஒரு குறுகிய வட்டத்தினுள் அதாவது தமிழ் நாட்டில் மட்டும்தான் விற்பனை ஆகும், ஆனால் ஆங்கிலத்திலோ மிக விரிவடைந்த ஒரு வட்டம் உள்ளது என்று சிலர் பதில் கூறினார்கள்.

அப்படியே வைத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டினுள் ஆங்கில நாவல்கள் படிக்கப்படும் அளவிற்கு தமிழ்ப் புதினங்கள் படிக்கப்படுவதில்லையே? புத்தகக் கடைகளில் புகழ் பெற்ற ஆங்கில நாவல்கள் இருக்கும் அளவிற்குத் தமிழ்ப் புத்தகங்கள் இல்லையே?

இதற்கு ஒரு காரணம் தமிழில் வரும் புத்தகங்களுக்கு, ஆங்கில நாவல்களில் இருக்கும் ஒருவித “universality” தன்மை இல்லாததே என்று எனக்குப் படுகிறது. இதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். தமிழில் புதினங்கள் மட்டமானவை என்று நான் சொல்ல வரவில்லை. அனைவரையும் சென்றடைய கூடிய ஒரு ஈர்ப்பு சக்தி இல்லையே என்றுதான் சொல்ல வருகிறேன்.

உதாரணமாக, Stephen King போன்றோருடைய கதைகளை எடுத்துக் கொண்டால், அனைத்துமே King வாழும் Maine என்ற நகரத்தை சுற்றி புனையப்பட்டவையே. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒருவித “universality” பிரதிபலிக்கும்.

இன்னும் தெளிவாக சொல்வதானால் “The Da Vinci Code”, “Angels & Demons” போன்ற கதைகளை எடுத்துக் கொண்டாலும் அதில் பழைய புராண விஷயங்களைப் புதிதானதொரு கண்ணோட்டத்தோடு ஆசிரியர் கூறியிருப்பார். கதை முழுக்க ஒரு வித மர்மமும், விறுவிறுப்பும் இழைந்தோடும். இதே போல் Mathew Reily எழுதிய “Temple” நாவலை எடுத்துகொண்டாலும் மிக சாதாரண ஒரு கதைக்களம் தான் ஆனால் கதை முழுக்க விறுவிறுப்பு குறையாமல் ஒருவித “universality” தன்மையோடு போகும். அக்கதையினை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதை மிக எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் , மற்றும் அக்கதையின் விறுவிறுப்பு சற்றும் சோடை போகாது.

இதை போல் ஒருவித புது முயற்சி. யாரும் கற்பனையில் எண்ணிப் பார்க்க முடியாத ஒருவித கதை தமிழில் வெளிவருமேயானால் அது தானாகப் பல வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கும் என்பது என் கருத்து.

நான் கேட்க வந்த கேள்வியை ஒருவாறு கேட்டுவிட்டேன். அது உங்களுக்குப் புரியக் கூடிய வகையில் தெளிவாக உள்ளதா என்று தெரியவில்லை. தமிழை விட ஆங்கில நூல்கள் சிறந்தவை என்ற கருத்தை நான் இங்கு சொல்லவில்லை. இக்கடிதம் அப்படி ஒரு எண்ணத்தை உங்களுக்கு உருவாக்கினால் அதனை என் எழுத்து முறை சரியல்ல என்று எடுத்துகொள்ளுங்கள்.

நான் இதற்கு முன்னரே சொன்னபடி, நான் படித்த நாவல்களில் சிறந்ததாக “காடு” உள்ளது. ஆனால் இதிலும் நான் சொல்லும் universality தன்மை இல்லாததாலே இதுவும் குறுகிய வட்டத்தினுள் சிறந்த நூலாக விளங்குகிறது என்பது என் கருத்து.

மிக மோசமாக எழுதப்பட்டிருக்கும் “Shiva Trilogy”, அதன் “universality” தன்மைக்காக இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேல் விற்பனையாகும் போது நல்ல நூல்கள் அப்படி விற்காமல், மக்களை சேராமல் இருப்பது மனதிற்குக் கஷ்டமாக உள்ளது.

அதனால் தான் இந்தக் கடிதம்.

அன்புடன்,
கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்

இன்று நம் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலவழிக் கல்வி கற்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கு இயல்பாகவே ஆங்கில பிரபலநாவல்கள் [பரப்பியல் ஆக்கங்கள்] அறிமுகமாகின்றன. அவற்றை தொடர்ச்சியாக வாசித்துத் தள்ளுகிறார்கள். அவற்றை உயர்ந்த ரக வாசிப்பு என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் மேலைநாட்டுப்பல்கலைகளில் தொடர்புடையவர்கள் அல்ல என்றால் ஒருபோதும் தாங்கள் வாசிப்பது இலக்கியமல்ல என்று அவர்கள் அறியப்போவதில்லை. நடைமுறையில் மிகக்கணிசமானவர்கள் கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் வாசிப்பைப்பற்றி ஒரு பெருமிதம் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் எப்போதோ ஒரு தமிழ் இலக்கியநூலை அவர்கள் வாசிக்க ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மனவிலக்கம் ஏற்படுகிறது. அவர்கள் வாசித்த ஆங்கில பரப்பிலக்கியத்தில் உள்ள சில அம்சங்கள் அவற்றில் இல்லை என்ற எண்ணம் உருவாகிறது. அவற்றை பலர் என்னிடம் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆங்கிலப்பரப்பிலக்கியத்தில் உள்ள வாசிப்புச் சுவாரசியம், சீரான மொழிநடை மற்றும் கதைக் கட்டுமானம், உலகப்பொதுத்தன்மை ஆகியவை இந்தபடைப்புகளில் இல்லை என்று முடிவுசெய்கிறார்கள். இது ஒருபெரும் குறை என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

என் வாசகர்கள் பலர் அலுவலகங்களில் அவர்களின் நண்பர்களுடன் இலக்கியம்பற்றிப் பேசும்போது இந்த வினாவை எதிர்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது இலக்கியம் பற்றிய புரிதலின்மையின் விளைவு. ஓர் ஆரம்பவாசகன் இதைக் கேட்டால் அவனிடம் விளக்கலாம். அவனுக்கு வயது முப்பதைந்துக்கு மேல் என்றால் அவனிடம் ‘சரிதான்சார் நீங்க சொல்றது’ என்று சொல்லி விலகிவிடலாம் என்பதே என் எண்ணம். அதற்குமேல் அவர் இலக்கியம் வாசிக்க மிகமிகக்குறைவாகவே சாத்தியம்.

ஆங்கில பரப்பிலக்கியத்தின் பரிணாம வரலாற்றை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஹாலிவுட் திரைப்படங்களின் பரிணாம வரலாற்றுக்கும் அதற்கும் சமானத்தன்மை நிறைய உண்டு. இன்று உலகளாவப் பரந்துள்ள பரப்பிலக்கியம் என்ற எழுத்துவகை ஆங்கிலத்தில் இருந்து விரிந்து வளர்ந்ததுதான்.

பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் வாசிப்புச்சூழலில் இன்றைய பரப்பிலக்கியத்தின் முன்னோடி வடிவங்கள் உருவாயின. பதினெட்டாம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இலக்கியங்கள் கல்வியறிவுபெற்ற பிரபுக்களின் வாசிப்புக்காகவே எழுதப்பட்டன. பெரும்பாலும் விருந்துகளில் அவை உயர்தரக் கேளிக்கையாக வாசிக்கப்பட்டன

பத்தொன்பதாம்நூற்றாண்டில் கல்வியறிவு அடித்தள மக்களையும் சென்றடைய ஆரம்பித்தது. அன்று உருவாகிவந்த முதலாளித்துவ பொருளியலுக்கு கல்விகற்ற உழைப்பாளிகள் தேவை என்பதனால் முதலாளிகள் கல்வியை பரப்பினர். இவ்வாறு கல்வியறிவுபெற்ற உழைப்பாளிகளில் ஒருசாரார் வாசிக்க ஆரம்பித்தனர். அச்சுமுறை இயந்திரமயமாகி அதிகமான பிரதிகள் அச்சிடமுடியும் என்ற நிலை வந்தது. இவ்வாறு வாசிப்பு என்பது ஒரு பெரும் சமூகப் பொழுதுபோக்கு என்ற நிலையை அடைந்தது.அதற்கான வணிகசாத்தியங்கள் தென்பட ஆரம்பித்தன.

சிலவருடங்களிலேயே மிகப்பெரிய வணிகவெற்றி அடைந்த எழுத்தாளர்கள் உருவாகி வந்தார்கள். அவர்களின் எழுத்தை அச்சிட்டு வாசகர்களிடையே கொண்டுசென்று சேர்க்கும் பதிப்பகங்களும் புத்தகக் கடைகளும் உருவாகிவந்தன. வணிகம் என்று வந்தபின் தொடர்ச்சியான பின்னூட்டஅவதானிப்பு முக்கியமானதாக ஆகிவிடுகிறது. எது அதிகம் ரசிக்கப்படுகிறதோ அது அதிகம் எழுதப்பட்டது. சிலவருடங்களிலேயே வணிக எழுத்துக்கான அடிப்படைச் சட்டகங்கள் உருவாகிவந்தன.

மூன்று முக்கியமான சட்டகங்களைச் சொல்லலாம். ஒன்று வேகப்புனைவு. [Thriller] வகை எழுத்து. அதற்குள் சாகசக்கதைகள், துப்பறியும் கதைகள், அமானுடக்கதைகள் என பல வகைமைகள் உண்டு. கணிசமான வரலாற்றுக்கதைகளும் இந்தவகைக்குள் அடங்குபவைதான். இரண்டு, உணர்ச்சிப்புனைவு [Romances] மிகையுணர்ச்சிகள் கொண்ட குடும்பக்கதைகள், காதல்கதைகள் இவ்வகைப்பட்டவை. வீரம் தியாகம் போன்றவற்றை மையமாகக் கொண்ட வரலாற்றுப்புனைவுகளும் இவ்வகைக்குள் அடங்குபவை. மூன்று, பாலுணர்ச்சிக்கதைகள்.

இந்தவகைகள் ஒவ்வொன்றிலும் செவ்வியலாக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், அகதா கிறிஸ்ஃடியின் நாவல்கள், பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா மற்றும் மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன் போன்றவை முதல்வகையின் செவ்வியல் ஆக்கங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சார்ல்ஸ் டிக்கன்ஸின் டேல் ஆஃப் டு சிட்டீஸ் ,எமிலி பிரோண்டியின் வுதரிங் ஹைட்ஸ், போன்றவை இரண்டாம் வகைக்கு உதாரணமானவை.

மிகவிரைவிலேயே அமெரிக்கா வணிக எழுத்தின் மையமாக ஆகியது. அங்கே அது ஒரு பெருவணிகமாக எழுந்து உலகமெங்கும் கிளைபரப்பியது. ஆங்கிலம் காலனியாதிக்கம் வழியாக உலகமெங்கும் பரவியபோது அதற்கு உலகளாவிய சந்தை உருவானது. இன்று நாம் வாசிக்கும் எழுத்தின் மிகப்பெரும்பகுதி அந்த ‘இலக்கியத்தொழிற்களத்தில்’ உருவாக்கப்படுவதுதான்.

அந்த தொழிற்களம் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. புனைவு அளவுக்கே புனைவிலி எழுத்துக்களும் வணிக நோக்குடன் உருவாக்கப்படுகின்றன. உலகமெங்குமிருந்து மொழியாக்கங்கள் வந்துசேர்கின்றன. அந்த எழுத்துக்கள் மிகத்தேர்ந்த தொழில்முறை நூல்தொகுப்பாளர்களால் செம்மைப்படுத்தப்படுகின்றன. மிகப்பெரும் செலவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு அவை உலகம் முழுக்கச் சென்று சேர்கின்றன.

இந்த களத்தில் உக்கிரமான போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.’விற்றால் வாழு,இல்லையே அழிந்துபோ’ என்ற சூத்திரம் செயல்படுகிறது. நாம் வெற்றிபெற்று சந்தைகளை நிறைத்துள்ள படைப்புகளை மட்டுமே அறிவோம். விற்காமல் போனதனாலேயே இரண்டேமாதங்களில் மீண்டும் காகிதக்கூழாக ஆக்கப்பட்ட பல்லாயிரம் படைப்புகள் உள்ளன. அவற்றுக்கும் வணிகவெற்றிபெற்ற படைப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடென்பது மிகமிகக் குறைவு. பலசமயம் விற்கப்பட்ட நாவல்களைவிட விற்காதுபோன நாவல்களே மேலும் முக்கியமானவை. அவை சுவடே இல்லாமல் மறைந்துபோகும்.

ஏன் ஒரு நூல் விற்கிறது? அது அந்த வணிகத்தொழிற்களத்த்தின் நிபுணர்களுக்கே எப்போதும் பெரியபுதிர்தான். ஆகவே பின்னூட்டத்தை ஒட்டி கொள்கைகளை, வடிவ முன்மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையிலேயே அங்கே புனைவுகளை எழுதமுடியும். நீங்கள் குறிப்பிட்ட அத்தனை நாவல்களிலும் அந்த மாறாத ‘டெம்ப்ளேட்’ இருப்பதைக் காணலாம்.

டாவின்ஸி கோட் வேகப்புனைவுக்கான அமெரிக்க வடிவ இலக்கணத்தின் மிகச்சிறந்த சமீபகால உதாரணம். அதே விஷயத்தை எழுதிய அதைவிட நல்ல புனைவுகள், அபுனைவுகள் ஏழெட்டாவது நான் வாசித்திருப்பேன். அந்த இலக்கணத்தை கச்சிதமாக கையாண்டு டான் பிரவுன் வென்றார். என் வருத்தம் என்னவென்றால் சிறந்த அறிவியலாளரான கார்ல் சகன் மிகச்சிறந்த கதைக்கருவுடன் காண்டாக்ட் போன்ற நாவலை உருவாக்கும்போதுகூட அமெரிக்க எழுத்துச்சந்தை அதன் வடிவத்தை தீர்மானிப்பதுதான். எல்லி அரோவே ஒரு அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதும் அவளது நிறுவனத்தலைவர் மூர்க்கமாக அதை ஏற்க மறுக்கிறார். அதேபோன்ற நிகழ்வு வராத ஹாலிவுட் சினிமா எதையாவது நாம் பார்த்திருக்கிறோமா?

அந்த வடிவஉருவகம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இப்போதுள்ள கார்களின் வடிவம் எப்படி உருவாகிவந்தது? ஆரம்பத்தில் அவை சாரட்டுகளை போல இருந்தன. அமர்ந்து செல்வது மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டது. கார்களின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின்தடை முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டு இன்றைய வடிவம் உருவானது. அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டபடியே உள்ளது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்பொருளுக்கும் ஒரு வடிவம் உள்ளது. அவ்வாறுதான் இந்த புனைவுக்கான இன்றுள்ள வடிவஉருவகமும் உருவாகிவந்துள்ளது.

அதாவது டான் பிரவுன் எழுதிய வடிவத்தை உருவாக்கியது அவரல்ல. உலகமெங்கும் உள்ள வாசகர்களின் சராசரி ரசனைதான். நமக்கு எதுபிடிக்குமோ அதை அவரைக்கொண்டு எழுதச்செய்து அதை நாம் வாசிக்கிறோம்.

நுகர்வோரின் சராசரி அந்த வடிவத்தை உருவாக்குகிறது. அதன்பின் தீவிரமான விளம்பரம் மற்றும் பிரச்சாரம் மூலம் அந்த சராசரிக்குரிய வடிவம் அனைவருக்கும் பிடித்தமானதாக ஆக்கப்படுகிறது. ஒருகட்டத்தில் அதுதான் சரி, அதுதான் அழகு, அதுதான் முழுமை என நாம் நம்ப ஆரம்பிக்கிறோம். நாமே அதன் பிரச்சாரரகர்களாக ஆகிறோம். டாவின்சி கோட் நாவலை நம்ம்மிடம் படிக்கும்படிச் சொன்னவர் நமது பக்கத்து இருக்கை நண்பராகவே இருப்பார்.

இந்த அமெரிக்க வணிக எழுத்தின் இதே எழுத்து-பிரச்சார முறைமைகள் இப்படியே பிற வணிகஎழுத்துச் சந்தைகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்திய ஆங்கிலம் சார்ந்து இப்படி ஒரு வணிக எழுத்துச்சந்தை கடந்த இருபதாண்டுகளாக உருவாகி வந்துள்ளது. சென்ற 23 ஆம் தேதி மும்பையில் இன்ஃபினிட்டி மாலில் ஒரு புத்தகக்கடையில் இந்த சந்தையை கண்முன் புத்தகப்பெருக்கமாகப் பார்த்தேன்.

இன்று இந்தியாவெங்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலமே கல்விமொழி, பேச்சுமொழி. அவர்கள் அமெரிக்கப்புனைவுகளை வாசித்தாலும் கூட அவர்களுடைய ரசனையில் கொஞ்சம் இந்தியத்தனம் எஞ்சியிருக்கிறது. அந்த ரசனையை வணிகமாக மாற்றிக்கொள்ள விழைபவை இந்த இந்திய வணிகஎழுத்து நூல்கள். பல ஆயிரம் நூல்கள் சென்ற பத்தாண்டுகளில் வந்து குவிந்துள்ளன. ஏராளமான தமிழ்ப்பெயர்களையும் கண்டேன். ஸ்லம்டாக் மில்லியனர், சிவா டிரையாலஜி போன்றவை அவற்றில் வெற்றிபெற்றவை.

இந்தியச்சந்தையின் ரசனையை பின்னூட்டம் மூலம் மதிப்பிடும் முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. சிவா டிரையாலஜிக்குப்பின் அதேபோன்ற நூல்கள் நூற்றுக்கணக்கில் வந்துள்ளன. அனுமன், பீமன் எல்லாரையும் பற்றி. அவற்றில் ஒரு நாலைந்து நூல்கள் தேறும், மற்றவை அழியும். வணிக எழுத்தின் செயல்முறை பற்றி ஒருமுறை அப்டைக் சொன்னார், அது விந்தணுக்களின் பயணம் போல என்று. பல கோடியில் ஒன்றே சென்று சேர்கிறது. மற்றவை ஓர் ஆவேசத்தின் விளைவாக ஆர்வமாகக் கிளம்புகின்றன அவ்வளவுதான்.

இவை எல்லாம் வணிக எழுத்து என ஏன் சொல்கிறோம்? இலக்கியமும் இதே சந்தைப்படுத்தல் வழியாக இதே கடைகள் வழியாகத்தான் இன்று விற்கப்பட்டாகவேண்டும், வேறு வழி இல்லை. ஆனால் இலக்கியத்துக்கு இந்த வணிக எழுத்தில் இருந்து தெளிவான திட்டவட்டமான வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை அறியாதவர்கள்தான் இலக்கியத்தை வணிகஎழுத்துக்களுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். விற்பனையை வைத்து வெற்றி தோல்வியா என மதிப்பிடுகிறார்கள்.

உண்மையில் வணிகஎழுத்தின் வாசகர்களே எண்ணிக்கையில் எப்போதும் மிகப்பெரும்பான்மையாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சராசரி அறிவுத்திறனும் சராசரி ரசனையும் கொண்டவர்கள். அந்த சராசரிக்காகவே அவை உருவாக்கப்படுகின்றன. இலக்கியவாசகன் என்றுமே ஒரு விதிவிலக்கு. சராசரித்தனம் அவனுக்கு சலிப்பையும் சிலசமயம் எரிச்சலையும்தான் உருவாக்கும். ஆகவே வணிகஎழுத்தின் ரசிகனான சராசரியிடம் இலக்கியநூலைப்பற்றி பேசமுடியாது, புரிந்துகொள்ளவே மாட்டான்.

இலக்கியத்திற்கும் வணிகஎழுத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? ஒரேவரியில் இப்படிச் சொல்லலாம். ‘வணிக எழுத்தை வாசகன் தீர்மானிக்கிறான், இலக்கியத்தை எழுத்தாளன் தீர்மானிக்கிறான்’

எழுத்தை ஓர் உரையாடல் என்று கொண்டால் அதில் இரு தரப்புகள் உள்ளன. சொல்பவன், கேட்பவன். கேட்பவனுக்காக, அவனை சுவாரசியப்படுத்தி அதற்கு கட்டணம் பெற்றுக்கொள்வதற்காகப் பேசுவது வணிகஎழுத்து. பேசுபவன் தன் ஞானத்தை கேட்பவனுக்குச் சொல்வது இலக்கியம். கேட்பவனின் நலன் சொல்பவனுக்கு முக்கியம். அதன்மூலம் தான் அடையும் லாபம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. இரண்டுமே உரையாடல்தான். ஆனால் இரண்டுக்கும் நடுவே பெரும் வேறுபாடுண்டு.

வணிகஎழுத்து நெடுஞ்சாலை.அது பல்லாயிரம் வண்டிகள் ஓடி ஓடி உருவானது. எதிர்வினைகளால் செப்பனிடப்பட்டது. அதில் உள்ள கச்சிதமும் சகஜமான ஓட்டமும் ஒருபோதும் இலக்கியத்தில் இருக்காது. ஏனென்றால் இலக்கியமென்பது ஒற்றையடிப்பாதை. கன்னிநிலத்தில் ஒருவன் தன் பாதங்களை எடுத்துவைத்து உருவாக்கும் புதியபாதை அது.

ஆகவே இலக்கியத்தில் நீங்கள் வணிகஎழுத்தில் அடையப்பட்டுள்ள சிலவிஷயங்களை ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. அனைவருக்கும் பொதுவான சராசரித்தன்மை, ஏற்கனவே பழகிப்போன வடிவம், நன்றாக செப்பனிடப்பட்ட சரளமான மொழிநடை போன்றவை வணிக எழுத்தின் அடிபப்டைக்குணங்கள். இலக்கியத்தில் அவை ஒருபோதும் இருக்காது. நேர்மாறாக இலக்கியப்படைப்பு மிகக்குறிப்பாக ஒரு இடத்தை நோக்கிச் செல்வதாகவே இருக்கும். தான் சொல்லும் விஷயத்துக்குரிய புதியவடிவத்தை அது அடைந்திருக்கும். அதன் நடை அதற்குரிய உணர்ச்சிகள், மற்றும் தர்க்கம் ஆகியவற்றுக்கேற்ப புதியதாக நிகழ்ந்திருக்கும்

ஆகவே இலக்கியப்படைப்பில் எப்போதும் பிசிறுகள் இருக்கும். ஒருபோதும் ஒரு வணிகப்படைப்பின் கச்சிதம் அதற்கு இருக்காது. அதன் சிலபகுதிகள் சிதைந்தோ முழுமையாக உருவாகாமலோ இருக்கலாம். அதன் பெரும்பகுதி சமகாலத்திற்கு பொருந்தாமல், புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கலாம். அதன் கட்டமைப்பு விசித்திரமானதாக இருக்கலாம்.

உலகின் மிகப்பெரும் இலக்கியப்படைப்புகள் சமகாலத்தில் முற்றிலும் புரிந்துகொள்ளப்படாது போயிருக்கின்றன. உதாரணமாக போர்ஹெஸின் முதல்நூல் வெளியானபோது மொத்தமே 13 பிரதிகள்தான் விற்றது என அவர் எழுதியிருக்கிறார். விற்பனை இலக்கியப்படைப்பின் அளவுகோலாக ஒருபோதும் இருப்பதில்லை. எந்த மகத்தான இலக்கியப்படைப்பை விடவும் சாதாரண சராசரி வணிக எழுத்து அதிகமாக விற்கும். அதனால் அந்த வணிக எழுத்து இலக்கியப்படைப்பைவிட மேலானதல்ல. அந்த அளவுகோலும் ஒப்பீடும் மிகமிகத் தவறானவை.

இப்போது நீங்கள் சொல்வதிலுள்ள அபத்தம் புரிந்திருக்குமென நினைக்கிறேன். அதாவது நீங்கள் ஓர் எழுத்தாளன் அவனுடைய அந்தரங்கத்தேடலின் விளைவாக எழுதும் இலக்கியத்தை வாசக ரசனைக்கேற்ப ஏன் மாற்றி எழுதக்கூடாது என்று கேட்கிறீர்கள். எழுத்தாளனின் அகத்தின் வெளிப்பாடாக உள்ள எழுத்து ஏன் ஒரு வணிகத்தொழில்நுட்பத்தின் உருவாக்கமாக இருக்கக்கூடாது என்று கேட்கிறீர்கள். வாசகனை நோக்கி தன்னை முன்வைக்கும் எழுத்தாளனிடம் அவன் ஏன் வாசகன் விரும்புவதை பேசக்கூடாது என்கிறீர்கள்.

உங்கள் வயது குறைவு என்று மின்னஞ்சல் படம் காட்டியதனால் தான் இவ்வளவு நீளமாக எழுதுகிறேன். எரிக் சேகல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எழுபதுகளில் அவர் எழுதிய லவ் ஸ்டோரி என்ற நாவல் மிகமிக பிரபலம். எல்லா கல்லூரிமாணவர்களும் அதை வாசித்தனர். லட்சக்கணக்கில் அது விற்றது. ஃப்ரெடெரிக் ஃபோர்சித் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எழுபதுகளில் அவரது தி டே ஆப் த ஜாக்கால் சமீபத்தில் டாவின்ஸி கோட் விற்றதை விட பெரிதாக விற்றது. வணிக எழுத்தில் அப்படி அலை கிளம்பிக்கொண்டே இருக்கும்.

வணிகஎழுத்து ஒரு தொடர்ந்த செயல்பாடு. ஆயிரக்கணக்கில் நூல்கள் வெளியாகின்றன. அவற்றில் சட்டென்று சில எழுத்துக்கள் ‘புல்ஸ் ஐ’ ஐ தொட்டுவிடும். அவற்றை உச்சகட்ட விளம்பரம் மூலம் உலகமே வாசிக்கச்செய்வாகள். ஆனால் அவை மிகமிகக் குறைந்த காலத்துக்கே நீடிப்பவை. ஏனென்றால் வணிகத்துக்கு அடுத்த அலை தேவை. இலக்கியம் ஒருபோதும் அந்தப்போட்டிக்குள் செல்லமுடியாது.

ஐரோப்பாவிலும் இலக்கியம் உள்ளது. அது அதிகமாக விற்கப்படாது தேர்ந்த வாசகர்களுக்காக மட்டுமே பிரசுரிக்கப்படுகிறது. சென்ற ஐந்தாண்டுகளில் பெரிதும் கொண்டாடப்பட்ட ராபர்ட்டோ பொலானோவின் 20666 ஐ நீங்கள் சொல்லும் எந்த நூலுடனும் ஒப்பிட முடியாது. அது மிகமிக அபூர்வமான வாசகர்களுக்கு மட்டுமே உரியது. அதில் பொதுத்தன்மை இல்லை, மிகச்சிக்கலான வடிவம் கொண்டது, மிகமிகச்சிக்கலான நடைகொண்டது. அதன் கால்வாசி சரியாக உருவாகி வரவே இல்லை.

ஆனால் ஒன்றுள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அங்குள்ள தீவிர இலக்கியமேகூட ஓரளவு விற்கிறது. அதற்குக் காரணம் அவை பொதுவாசகர்களை நோக்கி இறங்கி வந்திருக்கின்றன என்பதல்ல. அங்கே இலக்கிய வாசிப்புப்பழக்கம் வேரூன்றியிருப்பதனால் அதிக வாசகர்கள் இலக்கியம் நோக்கி ஏறிச் செல்கிறார்கள் என்பதுதான். இலக்கியத்தை தன்னை நோக்கி இழுக்கக்கூடாது என்றும் தான் வளர்ந்து இலக்கியம் நோக்கிச் செல்லவேண்டும் என்றும் அவர்களுக்கு சிறுவயதிலேயே சொல்லப்பட்டுள்ளது

நம் இந்தியச்சூழலில் அந்த வகையான கல்வி குடும்பத்திலோ கல்விநிலையங்களிலோ அளிக்கப்படுவதில்லை. ஆகவே நம்மவர் இலக்கியம் வாசிப்பதற்கான மன அமைப்புடன் இல்லை. அவர்கள் வாசிக்கும் வணிக இலக்கியத்தை அளவுகோலாகக் கொண்டு ஏன் இலக்கியம் அதைப்போல இருக்கக்கூடாதென்று கேட்கிறார்கள்

ஆகவே காடு போன்ற நாவல்கள் அதிகம் வாசிக்கப்படாமைக்குக் காரணம் அந்நாவல் அல்ல. அது அவ்வாறே எழுதப்படமுடியும். உலகமெங்கும் அப்படித்தான். அதை வாசிக்கும் மனநிலை இங்கே வளர்க்கப்படவில்லை, அவ்வளவுதான். ராபர்ட்டோ பொலானோவை வாசிக்கும் ஒருவருக்கு காடு எந்தச்சிக்கலையும் கொடுக்காது. ராபர்ட்டோ பொலானோ ஒருலட்சம் பிரதிகள் விற்கையில் டான் பிரவுன் ஒருகோடி பிரதி விற்கிறார். ஆகவே சுஜாதா பத்தாயிரம் பிரதி விற்கையில் காடு இரண்டாயிரம் பிரதி விற்பது பெரிய ஆச்சரியம்தான்

ஜெ

முந்தைய கட்டுரைசர்கம்
அடுத்த கட்டுரைபெண்களிடம் சொல்லவேண்டியவை- கடிதம்