சாதி-கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , ” நாமெல்லாம் சிஎஸ்ஐ நாடார் ” என்பான். இப்படிப் பகுத்துக் கொண்டே செல்வான். மனிதமனம் எப்போதும் உன்னைவிட நான் உயர்ந்தவன் என சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதற்கான அற்பக் காரணங்களைத் தேடி வீண் வெட்டிப் பெருமை பேசிப் பகுத்துக் கொண்டே போய் தன்னை மற்றவரை விட உயர்ந்தவரென எண்ணித் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இப்போதும் பெரும்பான்மையான கிராமங்களில் கீழூர் மேலூர் அல்லது வடக்கூர் தெக்கூர் எனப் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஆழ் மன எண்ணங்களைத்தான் சாதியின் பெயரால் ஆட்சியைப் பிடிப்பவர்கள் வலுவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மருதுபிள்ளை அவர்கள் பாட்டையா தேசியவினாயகம் பிள்ளையவர்களைக் குறிப்பிட மறந்துவிட்டார்.

மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துத் தங்கப்பதக்கம் வாங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் வலைப்பதிவு இது. இடஒதுக்கீட்டைப் பற்றிய மாயயைக் காட்டுகிறது.

http://www.payanangal.in/2010/06/blog-post.html

பாலா

அன்புள்ள பாலா

சாதிபற்றிய பேச்சுக்களில் ஒரு இரட்டைநிலைக்கு இந்தியமனம் பழகிக்கொண்டுவிட்டது. பொதுவெளியில் சாதியொழிப்புப் பேச்சு. தனிப்பேச்சுக்களில் சாதியப்பேச்சு. அந்தப்பேச்சு தகவல்களைப் பொருட்படுத்தாது. மனப்பிம்பங்களையே முன்வைக்கும்.

தமிழில் ராமதாஸ் ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிவிட்டிருக்கிறார். அதி தீவிரப் பெரியாரியராக அறியவந்தவர் அவர் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். எந்த சராசரிபெரியாரியருக்குள்ளும் இருக்கும் இடைநிலைச் சாதிய வெறியை அப்பட்டமாக மேடைகளில் முன்வைப்பதன் வழியாக எல்லாரையும் மேடைக்கு வந்து உண்மையைப்பேசும்படி கட்டாயப்படுத்துகிறார். வழக்கமான சாதியொழிப்பு பாவலாக்களை, ‘எல்லாத்துக்கும் பாப்பான் தான் காரணம்’ போன்ற ’கொள்கை’களைக் களைந்து உண்மையில் நம் சமூகத்தின் பிரச்சினை என்னஎன்பதை முன்வைத்துப்பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம்

ஜெ

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் சந்திரசேகரசரஸ்வதி ஸ்வாமிகளின் “தெய்வத்தின் குரல்” புத்தகத்தை (இரண்டாம் பகுதி) படித்துக் கொண்டிருந்தபோது வர்ணாஸ்ரமம் குறித்த சில சந்தேகங்கள் எழுந்தன. தங்கள் தளத்தில் இது குறித்து எழுதியிருக்கிறீர்களா என்று தேடியபோதும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கடிதம்.

வர்ணாஸ்ரமம் மற்றும் ஜாதி ஆகியவற்றை நான் பின்வருமாறு புரிந்து கொண்டிருந்தேன்.

வர்ணங்கள் குணத்தின் அடிப்படையிலேயே பெறப்படுகின்றன, பிறப்பினால் அல்ல. ஒரு பிராமணருக்குப் பிறந்தவன், அப்பிறப்பாலேயே பிராமணன் ஆவதில்லை. தன்னுடைய குணம் மற்றும் அதனையொட்டி செய்யும் செயல்களைக் கொண்டே அவனது வர்ணம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் ராவணன், விஸ்வாமித்திரர், சத்தியகாம ஜாபாலி. மேலும் ஜாதிகளைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் ஒரே வர்ணத்தைச் சேர்ந்தவர், தத்தம் வர்ணங்களில் வழிவழியாகத் திருமணம் செய்து, அதனால் பிராமணருக்குப் பிறப்பவர் பிராமணராகவே அறியப்பட்டார், இவ்வாறாக ஜாதி உருவானது என்று எண்ணியிருந்தேன்.

மேலும் தற்காலத்திலும் ஒருவிதத்தில் வர்ணாஸ்ரமம் இருந்து கொண்டுதான் வருகிறது என்று எண்ணுகிறேன்.

அறிஞர்கள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் = பிராமணர்கள்
அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் = ஷத்திரியர்
வணிகர்கள் = வைசியர்
பிற தொழில்கள் மூலம் இம்மூவருக்கும் உதவுபவர்கள் = சூத்திரர்கள்

என்று வரையறை செய்திருந்தேன். அதாவது நேர்மையாகத் தன் கடமைகளை ஆற்றுபவர்கள்.

ஆனால், தெய்வத்தின் குரல் புத்தகத்தில் ஜாதி முறை குறித்து அவர் கூறியிருந்த கருத்துக்கள் ரொம்பவே என்னை குழப்பிவிட்டன. கீழ்க்கண்ட இணையதளத்தில் நான் படித்த பகுதிகள் முழுவதும் கொடுக்கப் பட்டுள்ளன.

http://www.kamakoti.org/tamil/2dk69.htm

இதில் “பிறப்பால்தான் வர்ணம் அமைகிறது. மேற்கூறிய உதாரணங்கள் வெறும் விதிவிலக்குகள்தான். அவை விதியாகிவிடாது. பிறப்பால் வர்ணத்தை அடைவதால்தான் சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தைக்குக் கல்வி கற்பிப்பது சாத்தியமாகிறது (குணத்தை கண்டுபிடிப்பதற்குள் வயதாகிவிடுமே!)” என்றெல்லாம் கூறியுள்ளார்.

மேலும் இவற்றுக்கு உதாரணமாக கீதையையும், அது குறித்து காந்தியின் கருத்துக்களையும் காட்டுகிறார். “கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்றுதான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை). ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே” “The Gita does talk of Varna being according to guna and Karma, but guna and Karma are inherited by birth” என்று காந்தி கூறியுள்ளதாக சொல்கிறார்.

இப்போது என்னுடைய கேள்விகள்.

1. மேற்கண்ட வர்ணாஸ்ரமம் குறித்த என் புரிதல்கள் சரிதானா? (சரியில்லை என்னும் பட்சத்தில் ஹிந்து மதத்தையே நிராகரித்து விடுவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் வழி தோன்றவில்லை)
2. வர்ணாஸ்ரமம் குறித்து காந்தி எவ்வித நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்?
3. இன்றைய உலகில் வர்ணாஸ்ரமத்தின் நிலை என்ன?
4. வர்ணாஸ்ரமம் குறித்து கீதையில் உண்மையில் என்ன / என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது?

தங்களுக்கு நேரமிருக்கும்போது விளக்கமுடியுமா?

அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.

அன்புள்ள கணேஷ்,

நான் இந்த விஷயம் பற்றி விரிவாகவே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.


காந்தியும் சாதியும் 1


காந்தியும் சாதியும்2


சாதியும் கதைகளும்


நாயக்கர்களும் சாதியும்

சாதியும் ஜனநாயகமும்

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்

சாதி நூறுநாற்காலிகள்
சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சந்திரசேகரர்

காந்தியும் சந்திரசேகரரும்
சந்திரசேகர்ரும் ஈவேராவும்

போன்ற கட்டுரைகளை வாசிக்கவும்.

[பொதுவாக இவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் சம்பந்தப்பட்ட சொற்களை -சாதிமுறை, சந்திரசேகரர், காந்தி போன்று- இணையதளத்தில் தளத்தில் தேட என்ற பகுதியில் தட்டச்சிட்டு தேடி அவை சார்ந்த கட்டுரைகளை வாசித்துவிட்டுக் கேட்பதுதான் நல்லது. நூறு பக்கம் எழுதியபின்னரும் அதைப் புதிய கேள்வியாக முன்வைப்பதைத்  தவிர்க்க அது உதவும். குறைந்தபட்சம் கூகிளிலாவது என்பெயருடன் அச்சொல்லைப் போட்டுத் தேடிப்பார்க்கலாம்]

மூன்று அடிப்படைப்புரிதல்களை நான் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன்


1. இந்துமதம் என்பது ஒருசிலரால் உருவாக்கப்பட்ட ஒரு நிலையான அமைப்பு அல்ல.
அதை தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டுப்புரிந்துகொள்ளக்கூடாது. இந்துமதத்துக்கு என மையத்தரிசனமோ, மூலநூலோ, மையப்படுத்தப்பட்ட அமைப்புகளோ கிடையாது.

இந்துமதம் இந்தியப்பெருநிலத்தில் வாழ்ந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சமூகப்பரிணாமத்தை அடைந்தபோது அவற்றின் சிந்தனைகளின் தொகுதியாகவும் நம்பிக்கைகளின் தொகுதியாகவும் பண்பாட்டின் தொகுதியாகவும் உருவாகி வந்தது. அதில் ஓங்கிநிற்கும் கூறுகள் உண்டு, அடங்கிய கூறுகள் உண்டு. ஆனால் எதுவும் மையக்கூறு அல்ல.

ஆகவே இந்துமதம் இதைச் சொல்கிறது என எவரும் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்லப்படுவது இந்துமதத்தின் ஒரு தரப்பு. மறுதரப்பும் வலுவாகவே இந்துமதத்தில் இருக்கும். அதை முன்னெடுக்கும் உரிமை எந்த இந்துவுக்கும் உண்டு.

2. இந்துமதம் இரு வகையில் பரிணாமம் கொண்டது. ஒன்று அதன் சமூகப்பரிணாமம். அங்கேதான் சாதியமைப்பு போன்ற பல சட்டதிட்டங்களும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் உள்ளன. அவை அதிகபட்சம் அரைநூற்றாண்டுக்குள் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். இந்த சமூகப்பரிணாமக்கூறுகள் இந்துமதத்தின் சாராம்சமானவை அல்ல. இந்துமதத்தில் தீர்க்கதரிசனமதங்களைப்போல கறாரான ஒழுக்கக் கொள்கைகள் இல்லை. இவ்வளவுபெரிய தொகுப்புமதத்தில் அவை இருக்கவும் முடியாது.

இந்துமதத்தின் சாராம்சம் அதன் ஆன்மீகப்பரிணாமப் படிநிலைகளே. அவற்றுக்கும் இந்த சமூகவிதிமுறைகளுக்கும் ஆசாரங்களுக்கும் சம்பந்தமில்லை. எந்த சமூகமுறையும் எந்த நிறுவனமும் இந்துமதத்தில் நிலையானது அல்ல. அவை எல்லாமே தொடர்ந்து பல்வேறு தத்துவ உரையாடல்கள் மூலம், அதிகாரப்போட்டிகள் மூலம், சமூக மாற்றங்கள் மூலம் வளர்ந்தும் உருமாறியும் வந்துள்ளன.

3. சந்திரசேகர சரஸ்வதி தமிழ் ஸ்மார்த்த பிராமணர்களின் ஆசாரங்களை நிலைநாட்டும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு மடத்தின் தலைவர். அவர் அச்சாதியினரில் ஆசாரவாதிகளால் குருவாகக் கொள்ளப்படுபவர். அவரைப்போல வேளாளர், செட்டியார், கவுண்டர் என எல்லா சாதியினரிலும் மடங்களும் தலைவர்களும் உள்ளனர்.

அவர் அந்த மடம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் கருத்துக்களைச் சொல்வார். அது அவரது கடமை. அவர் பழையன அழியாமல் காக்கும் பொறுப்புள்ளவர். பழைமையின் நன்றும் தீதும் அவரால் ஒரே சமயம் முன்வைக்கப்படும்.

இந்தப்போக்கு எல்லா மடாதிபதிகளிலும் இருப்பதைக் காணலாம். அவர்கள் எவரும் இந்துமதத்தின் ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகள் அல்ல. அவர்கள் சார்ந்த அமைப்பின் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைதன்னறத்தின் எல்லைகள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்