அன்புள்ள ஜெயமோகன்,
ஹ ர ணி வணக்கமுடன்.
முதல்முறை தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தாங்கள் நாகர்கோயிலில் இருந்து தங்களின் மாமனார் வீட்டுக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். அப்புறம் இரண்டாம் முறை தங்களின் ஏழாம் உலகம் நாவலை வாசித்துவிட்டு பிரமித்துப்போய் உடனே உங்களிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்தபோது தங்களின் தொலைபேசி எண் என்னிடத்தில் இல்லாமல் போனதால் இயலவில்லை. இருப்பினும் அந்தத் தவிப்பு என்னிடத்தில் இருந்துகொண்டேயிருந்தது. அப்புறம் ஒரு நிகழ்விற்காக தஞ்சைக்கு வந்திருந்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நானும் தஞ்சைப் பெரியகோயில் புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணத்தில் மறுபடியும் ஏழாம் உலகம் பற்றிய எனது பிரமிப்பை வெளிப்படுத்தியபோது உடனே என்னிடத்தில் தொலைபேசி எண் உள்ளது பேசுங்கள் என்று தந்தார். அப்போது தொடர்புகொண்டபோது தாங்கள் உதகையிலிருந்து பேசினீர்கள். இவற்றுக்கிடையில் விஷ்ணுபுரம் குறித்த உரையாடலுக்காக தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் இந்நாவல் குறித்து தஞ்சையிடமிருந்து எதிர்விளைவுகூட வரவில்லை என்று தெரிவித்து மயிலாடுதுறை சிலம்பு ஓட்டலில் நடைபெறும் கூட்டத்திற்கு வரச்சொல்லி கடிதம் போட்டிருந்தீர்கள். நானும் பேராசிரியர் சீனி. துரைச்சாமியும் கலந்துகொள்வதாக அச்சிடப்பெற்றிருந்த நிகழ்வு அது. எதிர்பாராத நிலையில் அதிலும் கலந்துகொள்ளமுடியாமல் போனது. இருப்பினும் ரப்பர் தொடங்கி காடு அப்புறம் இரவு எனத் தொடர்ந்து வாசித்துக்கொண்டேயிருக்கிறேன்.
இவற்றுக்கிடையில்தான் அறம் குறித்து வாசிக்கவேண்டும் என்கிற முனைப்பை என்னுள் நண்பர்கள் விதைத்துக்கொண்டேயிருந்தார்கள். நானும் முயன்று எனது மாமா பையன் வழியாக போனவாரத்தில் சென்னையிலிருந்து அதனை வாங்கி முழுமூச்சாக இரண்டு நாளில் வாசித்து முடித்தேன். மனம் கலங்கிப்போயிருக்கிறேன் ஜெயமோகன். இந்தஒரு தொகுப்பிற்காக உங்களை எனது மனமார்ந்த நெஞ்சின் ஆழத்திலிருந்து வணங்குகின்றேன்.
நாலைந்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் ஒரு கட்டுரையை நான் வாசித்த நினைவு. அதில் பல செய்திகள் இருந்தாலும் ஒரேயொரு விஷயம்தான் என்னை நிரம்பவும் பாதித்தது. யாரோ ஒரு அயல்நாட்டு அறிஞரின் கருத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அதாவது அபிரபலமற்றிருத்தலுக்கு ஒரு துணிச்சல் வேண்டும் என்பதுதான் அதன் மையக் கருத்தாக இருந்தது. அதுவரை எனக்குள் இருந்த லேசான பிரபலமாகவேண்டும் என்கிற கருத்தை நான் முற்றாக விலக்கிவிட்டேன். எனவே மனம்போன போக்கில் எழுதுவது, படிப்பது என்பதாக எனது இலக்கியப்பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது அடிக்கடி தோன்றுவது எழுதுவதைவிட வாசிப்பது வெகு சுகமாக உள்ளது. அற்புதத் தருணங்களை அது வாரி வாரி வழங்குகிறது.
அறம் என்னுள் ஏற்படுத்திய விளைவுகள் எனது வாழ்வின் அர்த்தமான பாதையில் நான் சென்றுகொண்டிருப்பதன் சத்தியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்றுவரை ஒழுக்கம் நேர்மை சரியான தரம் என்பதான இலக்குகளில் வடிவமைத்துக்கொண்டிருக்கும் எனது வாழ்வின் மேன்மையைச் சான்று படுத்துவதற்கு எனக்கு அறம் தொகுதி வெகுபயனாக உள்ளது.
ஒவ்வொன்றையும் படித்துவிட்டு அதிர்ந்துபோயிருக்கிறேன். என்ன எழுத்துக்கள் அவை? சத்தியத்தின் தேடல்கள் எப்போதும் ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கும் என்பதை அவை உணர்த்துகின்றன. இந்த ஒரு தொகுப்போடுகூட நீங்கள் உங்கள் படைப்பிலக்கியப் பயணத்தை நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த பல ஆண்டுகளுக்கு நீங்கள் வழங்கப்போகும் படைப்புக்கள் எல்லாமும் அறத்தின் கீழாகவே அடங்கிவிடும் என்பதுதான் என்னுடைய கருத்து.
நான் தமிழ் இலக்கியங்களை போதிக்கின்ற தமிழ்ப் பேராசிரியனாக களத்திலே நிற்பவன். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்று புறநானூறு பேசியதையும் மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் என்றும் கோல் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்றும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்றும் தன்னுடைய கணவனை இழந்துவிட்ட கொடிய தருணத்தில் கொங்கையைப் பிய்த்து மதுரையை எரிக்க முயன்றபோது நிதானம் தவறாது அறம் காக்கவேண்டும் என்கிற முனைப்பில் அறவோரை விடுத்து அந்தணரை விடுத்து மகளிரை விடுத்து குழவிகளை விடுத்து வயதோரை விடுத்து பசுக்களை விடுத்து நல்லோரை விடுத்து தீப்பற்றுக என்றும் சொன்னதையெல்லாம் வாசித்ததையெல்லாம் சத்தியத்தின் வாசல்களாக மாணவர்களுக்குத் திறந்து காண்பித்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு இந்த அறம் போன்ற தொகுப்பும் இன்றைய கால கட்டத்தின் கட்டாயப் பாடமாக வைக்கப்படவேண்டும் என்பதுதான் எனக்கு நியாயமாகப் படுகிறது ஜெயமோகன்.
குர் ஆனில் ஒரு வாசகம் உண்டு. ஒழுக்கம் எந்த உருவத்தில் வந்தாலும் அதற்குரிய தகுதியை அது அடைந்துவிடும் என்று. அற இலக்கியங்களும் அற வாக்கியங்களும் அறவோர்களும் இதைத்தான் அடைத்து நிற்கும் இலக்கியங்களில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். இந்த சத்தியங்களையெல்லாம் அற்புதமான தருணங்களாய் உண்மையின் பேழையிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இது மனிதனுக்கு வேண்டிய நியாயப்பாடம். அனைவரும் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டும். இல்லை இல்லை மனதால் அறம் தொகுப்பை ஏந்திக்கொள்ளவேண்டும். பெண்கள் கற்பைக் காப்பது குறிதத பண்பாட்டு உறுதியைப் பெற்றிருப்பதுபோல இந்தத் தொகுப்பை தமிழின் மனிதன் எல்லாம் கொள்ளவேண்டும்.
இப்போது இந்த உலகம் சிதைந்துகொண்டிருக்கிறது. மனசு முழுக்க வக்கிரத்தை சுமந்து பாழ்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதன் மனித எண்ணம் கொண்டவனாக இல்லை. உள்ளத்தனைய உயர்வு இல்லை. அறிவு அற்றம் காக்கும் கருவி. தருமம் தலை காக்கும் என்பது எல்லாம் இவர்களுக்கு அச்சடித்த பொறுக்கித்தனமாகவும் இலக்கிய அயோக்கியத்தனங்களாகவும் இதைப் படிப்பவர்களும் உணர்ந்தவர்களும் எழுதுபவர்களும் யாரோ போல் உணரப்படுகின்ற அவலக் கால கட்டத்தில் புடம் போட்ட தங்கத்தைப்போல இந்த அறம் வந்திருக்கிறது ஜெயமோகன். உங்களுக்கு தமிழ்ப் படைப்புலகம் நிறைய கடன் பட்டிருக்கிறது.
நான் உங்கள் அறம் தொகுப்பில் கண்டது போல பல மனிதர்களைக் கண்டு கொண்டிருக்கிறேன். அவர்களுடன் பக்கத்தில் தினமும் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் இந்த உலகத்தின் வன்மங்களால் அடையாளப்படுத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கேலிக்குரிய பொருளாகச் சித்தரிக்கப்படுவதோடு படும் துயர்களையெல்லாம் பற்றி ஏராளமாக எழுதவேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச நியாயத்தையாவது மனிதன் தன் வாழ்நாளில் பின்பற்றி இறந்துபோனால் அவனுக்கு வீடுபேறு உறுதி. அறம் இதைத்தான் அசையாமல் மனத்தை அசைத்துச் சொல்கிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.. என்று கணியனாரும்.. சிதலை தினப்பட்ட ஆலமரம் போல வயதுகாலத்தில் பெற்றோர்களைத் தாங்கும் பிள்ளைகளை நாலடியாரும் தன்னை அறிந்தபின் தனக்கொரு கேடில்லை.. என்று திருமந்திரமும் சொன்னதை வெகு எளிமையாக அறத்தில் வலியுறுத்துகிறீர்கள் ஜெயமோகன். என்ன சொல்லி சொல்லி பிரமிப்பது என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நூறு நாற்காலிகள் கதைகளில் நாயாடியின் தாய் கதறும்போது நான் செத்துப்போய் மறுஜென்மம் எடுத்தேன். சோற்றுக் கணக்கில் உறவின் அவலத்தைக் கணடு துடித்துப்போனேன். யானை டாக்டரில் ஒரு உயர்ந்த ஈடு இணையற்ற மனிதநேயத்தை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலாரைப் பிரதியெடுத்தேன்..அறம் என்ற முதல் கதையில் வாடி வதங்கினேன்… கோமலின் பெருவலியில் அந்த மாமனிதனின் ஆளுமையைக் கண்டு அஞ்சி நடுங்கினேன்.. இவர்களால்தான் வாய்மையும் மும்மாரியும் பொழிந்து இந்த மன்பதை செழித்துக் கிடக்கிறது. உலகம் உய்யும். உலகம் யாவையும் என்பதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழின் யாரும்சொல்லமுடியாத அசைக்கமுடியாத பண்பாட்டைக் கண்டு அசந்து நிற்கிறேன்.
ஒரு மனிதனை மேலும் மனிதனாக்குகிறது. மனிதனாகப் பிறந்து மனிதனாக இயங்க மறுப்பவனை மனிதனாகு என்று எளிதாக மாற்றுகிறது. எப்படியெல்லாம் வாழ்வது வாழ்வில்லை. அல்லது இதுவரை வாழ்ந்தது போகட்டும் இனி இப்படி வாழ் என்று அறம் உரைக்கும் அறம் தமிழின் என்றைக்கும் வழிகாட்டும் அணையாவிளக்கு.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயமோகன்.
வாய்ப்பமைவில் உங்களைச் சந்திப்பேன்.
நன்றி வணக்கம்.
அன்புடன்…..
ஹரணி.
அன்புள்ள ஹரணி,
நலம்தானே? நீண்டநாளுக்குப்பின் தொடர்பு கொள்கிறோம். முதலில் நான் உங்களை வாசகராக நினைக்கவில்லை, நீங்கள் என் சமகால எழுத்தாளர்.
அறம் கதைகளை எழுதியபோதிருந்த என் அகக் கலக்கம்தான் அதில் ஒரு வேகத்தைச் சேர்த்தது என நினைக்கிறேன். இன்று அக்கதைகள் பலர் மனதைத் தொடுவதைப்பார்க்கையில் அந்தக் கலக்கம் நம் சமகாலத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. அறம் இன்றும் வாழ்கிறதா என்ற ஐயம் ஒரு பெரிய கொந்தளிப்பாக பலர் உள்ளங்களில் இருந்துகொண்டிருக்கிறது.
அதற்கான விடையாக அறம் கதைகள் அமைந்திருக்கின்றன. அமைந்தன, அதன் வழியாக என் நம்பிக்கையை மீட்டுக்கொண்டன.
அறம் வரிசைக் கதைகளின் நீட்சியாக வாசிக்கத் தக்கது நான் எழுதிய ‘இவர்கள் இருந்தார்கள்’ என்ற நூல். வாழ்ந்த மனிதர்களைப்பற்றிய நினைவு.
ஜெ