பெண்களிடம் சொல்லவேண்டியவை…

வணக்கம் ஜெயமோகன் சார் ,

உங்கள் வலைத்தளத்தைத் தொடர்ந்து வசித்து வருகிறேன் . முதலில் உங்கள் நடையை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகச் செறிவான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள கொஞ்ச காலம் தேவைப்பட்டது . உங்களின் நேர்மையையும் எளிமையையும் வியந்து கொண்டு இருக்கிறேன் . உங்களின் காடு , அறம் வரிசைக் கதைகளை வாசித்து இருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது இன்றைய காந்தி வாசித்து கொண்டு இருக்கிறேன். சில நாட்களாக உங்களின் சமீபத்திய வெண்கடல் சிறுகதையை அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்

நான் இப்பொழுது தொழில் நுட்பத் துறையில் இருக்கிறேன். என்னுடைய துறையில் திறமையாக வேலை செய்து நல்ல நிலையில் இருக்கிறேன். கொஞ்ச காலமாக என் மனதில் உள்ள கேள்வி இது.

வழக்கமாக ஆண்களுக்குப் பெண்கள் என்றால் அறிவு குறைவுதான் என்கின்ற எண்ணம் இருக்கிறது. பெண்கள் திறமையாக இருந்தால் அதை மட்டம் தட்டி, இகழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். பெண்ணாக இருந்து அவள் தன் கணவன் மற்றும் சகோதர்களை விட அதிகம் சம்பளம் வாங்குவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பாங்கு இங்கு நம் மக்களிடம் இல்லை. ஒரு பெண் உயர்ந்த நிலையில் இருக்கிறாள் என்றால் , அவள் தன் திறமையால் வந்து இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இந்தப் போக்கு நம் மக்களிடையே எப்போது/ஏன் வந்தது ?

ராஜி

அன்புள்ள ராஜி,

பொதுவாகப் பெண்கள் அவர்களுக்கு எதிரான மனநிலைகளைப்பற்றி அதிகம்பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அந்தமனநிலைகளைப்பற்றி அவர்கள் மிக ஒற்றைப்படையான உணர்ச்சிவேகத்துடன் எழுதுவதுதான். பெரும்பாலும் அவர்களுக்கு ஆண்களே வாசகர்கள். அவர்கள் தங்களை நீதிமான்களாகக் காட்டும்பொருட்டு இத்தகைய எழுத்துக்களை ஆதரித்துப் பெண்களுக்கும் மேலாக உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசுகிறார்கள். இது நம் சமூகத்தில் ஒரு கூட்டு சுய ஏமாற்றாக வளர்ந்துவருகிறது. கறாராக இதை அணுகிப் பேசவேண்டிய நேரம் வந்திருக்கிறது. இந்தப் பொய்க்குமிழிகளை உடைத்தாகவேண்டியிருக்கிறது.

உண்மை, தமிழ்ச்சமூகத்தில் பெண்களுக்கெதிரான மனநிலைகள் அதிகம். வன்முறைநிறைந்த ஒடுக்குமுறை என்றும் உள்ளது. கல்வியும் நாகரீகமும் அதை சிறிதளவே மாற்றியிருக்கின்றன. இன்னும் செல்லவேண்டிய தொலைவு அதிகம். அரசியல் சித்தாந்தம் பேசக்கூடியவர்கள் தங்களைப் பெண்களுக்கு எதிரான மனநிலைகளில் இருந்து மேலே சென்றுவிட்டவர்கள் என்பார்கள். மரபையும் மதத்தையும் குறைசொல்வார்கள். ஆனால் தனிவாழ்க்கையில் அவர்களே மோசமான ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள். இதெல்லாம் உண்மை.

ஆனால் இந்த மனநிலையின் காரணமாக உள்ள பின்புலத்தை நாம் ஆராயவேண்டும். நம் சமூகம் உருவாகிவந்த பரிணாமத்தின் விளைவாகவே இந்த மனநிலைகளும் உருவாகிவந்துள்ளன. அதாவது இந்துப்பண்பாடு என்றும் இந்தியப்பண்பாடு என்றும் தமிழ்ப்பண்பாடு என்றும் நாம் எவற்றையெல்லாம் சொல்கிறோமோ அவற்றையெல்லாம் உருவாக்கிய வரலாற்றுப்பரிணாமமே இந்த ஆணாதிக்க மனநிலைகளையும் உருவாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அதற்கான தேவை இருந்திருக்கலாம். அன்றைய தங்கிவாழ்தலுக்கு அது உதவியிருக்கலாம். இல்லாமல் இந்த அளவுக்கு வேரூன்றி நீடித்திருக்காது.

பழங்குடிக்காலம் கொடும் போர்களின் காலம். தமிழகம் அதிலிருந்து நிலப்பிரபுத்துவத்துக்கு வந்த காலகட்டத்தின் ஆவணங்கள் தமிழ் சங்கப்பாடல்கள். புறநாநூறு உக்கிரமான போர்களைச் சித்தரிக்கிறது. எந்தவித அடிப்படை அறமும் கையாளப்படாத மூர்க்கமான போர்கள். எதிரிகளின் ஊர்களை எரித்து அழித்தல். அவர்களின் குடிநீர் ஊற்றுகளை யானையை விட்டு அழித்தல். எதிரிமன்னர்களைக் கொன்று தலையையும் பல்லையும் கொண்டுவந்து நினைவுச்சின்னமாகப் பாதுகாத்தல். அத்தகைய சமூகத்தில் ஆண் போர்புரிபவனாகவும் பெண்கள் வம்சத்தை வளர்ப்பவளாகவும் இனம்பிரிக்கப்பட்டார்கள். பெண்களைக் கொல்வது கூடுமானவரை தவிர்க்கப்பட்டது.

ஆகவே பெண் பாதுகாக்கப்படவேண்டியவள் ஆனாள். ஒரு செல்வமாக மாறினாள். அதனாலேயே கவர்ந்து செல்வதும் நடந்தது. பெண்ணுக்கான போர்களை நாம் எல்லா நிலப்பிரபுத்துவப் பண்பாடுகளிலும் காண்கிறோம். பெண்ணை ஆண் தன் உடைமையாகக் கருதுவதும் அவளுடைய பாதுகாப்பு தன்னிடம் என நினைப்பதும் இந்த வரலாற்றுப்பின்புலம் உடைய மனநிலைகள். அதே மனநிலையின் மறுபக்கம்தான் தன்னுடையவள் அல்லாத பெண்ணை சீண்டுவதும் அடைய நினைப்பதும் எல்லாம். பிறபெண்களிடம் எந்த எல்லைக்கும் இறங்கி நடந்துகொள்ளும் சராசரி தமிழ் ஆண், தன்னைச்சேர்ந்த பெண்களிடம் அப்படி ஓர் அன்னியன் நடந்துகொண்டால் கொந்தளித்தெழுவதை இன்றும் காணலாம்.

நம் குடும்பத்தில், அலுவலகத்தில் ஆண்களிடம் பெண்கள் காணும் மனநிலை என்பது இந்த இருபாற்பட்ட தன்மை கொண்டது. தன்னைப் பாதுகாவலனாக நினைப்பார்கள். ஆகவே பெண்ணைப் பாதுகாக்கப்படவேண்டிய பலவீனர்களாகக் கருதுவார்கள். அதேபோலத் தன் பாதுகாப்புக்குள் வராத பெண்களை எப்போதும் தாக்கவும், வெல்லவும், முடியவில்லை என்றால் அவமதிக்கவும் முனைவார்கள். ஒட்டுமொத்த ஆண்மனநிலையை இந்த நடவடிக்கைகளுக்குள் சுருக்கிவிடலாம்,

இன்று, ஜனநாயக யுகத்தில் இம்மனநிலை அதன் முந்தையகாலப் பயன்பாட்டை இழந்துவிட்டது. பொருத்தமற்ற புராதனவிஷயமாக மாறிவிட்டது. இன்று பெண்களின் தற்சார்பையும் சுயமரியாதையையும் தடுக்கும் சக்தியாக இது மாறிவிட்டிருக்கிறது. பெண்கள் எதிர்த்துப்போராடி வென்றாகவேண்டிய ஒன்று ஆணிடம் உள்ள இம்மனநிலை.

ஆனால் இதற்கு மறுபக்கம் ஒன்றுண்டு. ஆணிடம் மேலே சொன்ன மனநிலையை உருவாக்கிய அதே மரபுதான் இங்கே பெண்ணிடம் அதற்கு இசைவான சில மனநிலைகளை உருவாக்கியிருக்கிறது. புறவாழ்க்கையில் எதற்கும் பொறுப்பேற்கத் தயங்குவது, தன்னுடைய சொந்தபலத்தை நம்பி நிற்க முயலாமல் இருப்பது போன்ற மனநிலைகள் பெண்களுடையவையாக உருவாகி வந்துள்ளன.

அதாவது ஆண் தன்னை பாதுகாப்பாளன், பலசாலி என்று பாவனைசெய்வதை இயல்பான மனநிலையாகக் கொண்டிருப்பதைபோலவே தான் பாதுகாக்கப்படவேண்டியவள், அபலை என்ற பாவனையைப் பெண்ணும் இயல்பாகக் கொண்டிருக்கிறாள். ஆண் பெண்ணைப் பாதுகாக்கவும் தாக்கவும் முயல்வதைப்போலவே பெண் அடைக்கலம் புகவும் ஆணைப் பயன்படுத்திக்கொள்ளவும் பழகியிருக்கிறாள்.

எந்த ஒரு விஷயத்திலும் அதை நிமிர்ந்து நின்று நேரடியாக எதிர்கொள்ளாமல் அனுதாபம் தேடமுயல்வதும், அதற்காக எல்லா வழிகளையும் கையாள்வதும்பெண்களின் முக்கியமான இயல்புகளாக வளர்ந்து வந்துள்ளன. அந்த அனுதாபக்கோரல்களில் முக்கியமானது ‘பெண் என்பதனால் ஒடுக்கப்படுகிறோம்’ என்று சொல்லிக்கொள்வது.பெண்கள் மீதான எந்த குற்றச்சாட்டுக்கும் உடனடியான பதில் ‘நான் பெண் என்பதனால் இதைச் சொல்கிறீர்கள்’ என்பதே.

பொதுவெளிக்கு வரும் பெண்கள் இன்று சந்தித்து வெல்லவேண்டிய முக்கியமான சிக்கல் அவர்களிடம் உள்ள இந்த மரபார்ந்த மனநிலைகள்தான். எப்படி ஆண் தன்னுள் உறையும் நிலப்பிரபுத்துவகால மனநிலைகளுக்கு எதிராகப் போராடவேண்டுமோ அதேபோல பெண்ணும் போராடியாகவேண்டும். ஆனால் இந்தப்பிரக்ஞை கொண்ட பெண்கள் மிகமிகமிகக் குறைவு. நேர்மாறாகத் தன்னுடைய இந்த இயல்புகளை ஒருவகை ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொண்டு பொதுவெளியில் குறுக்குவழியில் வெற்றிபெற முயலும் பெண்களே அதிகம்.

நான் என் இதுநாள் வரையிலான பொது/வெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒருதருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப்பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன். இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை. மாயாவதி முதல் மம்தா பானர்ஜி வரை. இதுதான் அப்பட்டமான உண்மை

அலுவலகங்களில் வேலைசெய்பவர்களுக்குத் தெரியும் எந்த ஒரு பொறுப்பையும் பெண்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என. அங்கே தாங்கள் பெண்கள் என்பதனால் ஒரு சலுகையை எதிர்பார்ப்பார்கள். அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பெண் என்னும் அனுதாபம் மூலம் அதிலிருந்து தப்ப முயல்வார்கள். அழுவாரகள், அபலையாக பாவனைசெய்வார்கள். மிகமிகப் படித்த, நாகரீகமான, திறமையான, சுதந்திரமான பெண்கள்கூட அவர்கள் அறியாமலே இந்த பாவனைக்குள் செல்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆண்களின் ‘பாதுகாவலன்’ மனநிலையை மிகத்திறமையாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

நான் சொல்வது கொஞ்சமேனும் பொறுப்புகளை ஏற்கும் பெண்களைப் பற்றி. மிகப்பெரும்பாலான பெண்கள் அந்தப்பொறுப்புகளைக்கூட ஏற்பதில்லை. ஆண்களின் அகங்காரத்தைத் தங்கள் நுணுக்கமான பாவனைகள் மூலம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆண்களில் ”முற்போக்காளர்களையும்” , புரவலர்களையும், வழிகாட்டிகளையும், ஏவலர்களையும் உருவாக்கிக்கொண்டு மேலே சென்றுகொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு உடனடி வெற்றியாக இருக்கலாம். ஆனால் பெண் நவீன காலகட்டத்தில் அடையவேண்டிய இடம் என்று பார்த்தால் மிகப்பெரிய தோல்வி

ஆக, பெண்களின் உண்மையான சிக்கலே இதுதான். இதை அவர்களிடம் சொன்னால் உடனே ஆணாதிக்கவாதி என்று வசைபாடுவார்கள். அவர்களை எவரும் குறைசொல்ல அவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் அனைத்துச்சிக்கல்களுக்கும் பிற ஆண்களே காரணம் என்று நம்புகிறார்கள். அவர்கள் நோக்கில் அவர்கள் மீது எந்தப்பிழையும் இல்லை. அவர்கள் களையவேண்டிய அகச்சிக்கல்கள் ஏதும் இல்லை. அவர்கள் சுமக்கும் வரலாற்றுச்சுமைகலும் ஏதுமில்லை.அதை இரவுபகலாகக் கதை ,கவிதை, கட்டுரை என அனைத்திலும் பிலாக்கணம் வைப்பது தங்கள் உரிமை என நினைக்கிறார்கள். அந்தப் பிலாக்காணத்தை உயர்கலை என சொல்லாதவனை மீண்டும் ஆணாதிக்கவெறியன் என்பார்கள்.

ஆணாதிக்கமனநிலை பற்றிப் புகார் செய்யும் பெரும்பாலான பெண்கள் ஆணிடமுள்ள ஆணாதிக்க மனநிலைகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அந்தக் கனியின் இனிப்பு தேவை, முள் தேவையில்லை- அவ்வளவுதான்.

ஒருபெண் தன்னுள் உறையும் அந்த நிலப்பிரபுத்துவ மனநிலைகளை வென்றுவிட்டாளென்றால் அக்கணமே அவள் விடுதலை பெற்றுவிடுகிறாள். அதன்பின் நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை சுமந்தலையும் ஆண்களின் பேச்சும் செயல்பாடுகளும் அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவள் மேலே சென்றுவிட்டவள். அவர்கள் அவள் காலுக்குக் கீழே ஊர்ந்துகொண்டிருக்கக் காண்பாள்

நான் என் மகளிடம் சொல்பவை இவை. அவற்றையே எந்த நவீனகாலப் பெண்ணிடமும் சொல்வேன்.

ஜெ

[மறுபிரசுரம். முதற்பிரசுரம் அக்டோபர் 2012]

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் சித்திரங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45