சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள், அது பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய சர்ச்சைகள், அதிருப்திகள் ஆகியன வருடா வருடம் கேட்டுக் கொண்டே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், ஓர் எழுத்தாளர் என்கிற முறையில் சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?
— பி.கே. சிவகுமார், அமெரிக்கா.
இக்கேள்விக்கான பதிலைச் சில உபகேள்விகளாகப் பகுத்துத்தான் சொல்லமுடியும். இக்கேள்விகள் தொடர்ந்து எழக்கூடியவை.
அ] சாகித்ய அக்காதமி விருது ஒரு சிறு பரிசு. அரசு அளிப்பது. அதை ஏன் இந்த அளவுக்குப் பொருட்படுத்த வேண்டும்?
ஆ] ஒருவர் பரிசு பெறும்போது சர்ச்சையைக் கிளப்புவது நாகரிகமா?
இ] மற்ற மொழிகளில் இப்படிக் கண்டனங்களும் சர்ச்சைகளும் நிகழ்கிறதா?
ஈ] இதற்கு என்ன தீர்வு?
அ] சாகித்ய அக்காதமி விருதைவிடப் பண அளவில் பெரிய விருதுகள் பல தமிழில் உள்ளன. ராஜா சர் முத்தையா செட்டியார் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது. இவற்றை யார் பெற்றாலும் யாருமே பொருட்படுத்துவது இல்லை. முறையே செட்டியார்களுக்கு, நாடார்களுக்கு, தி.மு.க கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை அளித்துத் தரப்படும் பரிசுகள் அவை என அனைவரும் அறிவார்கள். சாகித்ய அக்காதமி விருது அப்படிப்பட்டதல்ல. அது நேருவும் டாக்டர் ராதாகிருஷ்ணனும் உருவாக்கிய ஒரு தன்னாட்சி நிறுவனத்தால் அளிக்கப்படுவது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, சிந்தி முதலிய ஒரு சில மொழிகளில் மட்டுமே தரமற்ற படைப்பாளிகள் பரிசு பெற்றுள்ளார்கள். கன்னடம், உருது, வங்கம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் தரமற்ற ஒரு படைப்பாளிகூட விருது பெற்றது இல்லை. தமிழிலும் அது பல முக்கியமான படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அப்பரிசுக்கு ஒரு தரம் உள்ளது. அப்பரிசு ஒரு மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது. அப்பரிசு அளிக்கப்படும்போது ஒரு நூல் அதுவரை பரிசுபெற்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படுகிறது. அங்கு ஓர் இலக்கிய மதிப்பீடு உருவாக்கப்படுகிறது. திறனாய்வாளர்கள் பொருட்படுத்துவது இந்த மதிப்பீட்டையே.
ஆ] ஒரு படைப்புக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைப்பதென்பது ஓர் இலக்கிய மதிப்பீடு வெளிப்படுத்தப்படுவது ஆகும். அம்மதிப்பீட்டை சிலர் ஏற்பது எப்படி இயல்பானதோ அப்படியே சிலர் மறுப்பதும் இயல்பானதே. மாற்று மதிப்பீடை உள்ளே வைத்துக் கொண்டு வாழ்த்துவதுதான் கருத்துலக அநாகரீகம். மேலும் இப்படிப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுச் செய்திகள் உருவாகும் தருணமே மாற்று இலக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கச் சிறந்த தருணம். இன்று மௌனி, லா.ச.ராமாமிருதம், தி. ஜானகிராமன் என்றெல்லாம் சில இலக்கியப் படைப்பாளிகள் பரவலாக பெரும் படைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்களை இப்படி முக்கியப்படுத்திய மதிப்பீடுகளை க.நா. சுப்ரமணியம் போன்ற திறனாய்வாளர்கள் இதேபோன்ற பொது விவாதங்கள் மூலமே உருவாக்கினார்கள். பரிசுகள் அறிவிக்கப்படும் தருணம் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து விவாதிக்க ஏற்றது. பரவலாக மக்களிடையே இலக்கியமென்றால் என்னவென்று சொல்ல உகந்தது. முக்கியமான படைப்பாளி என்றால் விவாதம் மூலம் முன்னே நகர்வார்கள், பிறர் எத்தனை விருதுகள் பெற்றாலும் எப்படிப் புகழப்பட்டாலும் நிற்க மாட்டார்கள். விவாதமே ஒருவரை மதிப்பிடும் தளம். அகிலன் பெறாத விருதா, புகழா? வைரமுத்துவை விடப் பலமடங்கு அங்கீகாரம் பெற்றவர் அவர். அவரது இடம் இன்று என்ன?
இ] உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் பலவகை இலக்கிய மதிப்பிடுகள் உண்டென்பதனால் விவாதங்களும் உண்டு. நோபல் பரிசு பற்றிக்கூட கடுமையான விவாதங்கள் எழுந்தது உண்டு. [இர்விங் வாலஸ் எழுதிய ‘தி பிரைஸ்’ நோபல் பரிசு குறித்த ஒர் ஆர்வமூட்டும் நூல்]. இந்திய மொழிகளில் பொதுவாகச் சர்ச்சைகள் எழுவதுண்டு. உதாரணமாக நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தைச் சேர்ந்த யு.ஆர்.அனந்தமூர்த்தி ஞானபீடப் பரிசு பெற்றபோது யதார்த்தவாத மரபைச் சேர்ந்த எஸ்.பைரப்பா போன்றவர்கள் அவர் கன்னடப் பண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று சொல்லிக் கடுமையாக விமரிசனம் செய்தார்கள். ஆனால் அடிப்படை இலக்கியத்தரம் கூட இல்லாதவர்கள் பரிசு பெறுவது தமிழிலும் தெலுங்கிலும் மிக அதிகம். அத்துடன் தமிழில் மெல்ல ஆனால் உறுதியான இலக்கிய இயக்கம் உருவாகிவருகிற காலம் இது. ஆகவே எதிர்ப்பும் விமரிசனமும் அதிகம்.
ஈ] பரவலாகப் பலர் சொல்வதுபோல சாகித்ய அக்காதமி அமைப்பைச் சீர்திருத்துவதனால் பலனில்லை. காரணம் எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் அதற்குப் பின்னால் உள்ள மக்களையே பிரதிபலிக்கும். சாகித்ய அக்காதமி விருது பேராசிரியர்கள், திறனாய்வாளர்கள், சக எழுத்தாளர்கள் ஆகிய முக்கூட்டு அமைப்பால் அளிக்கப்படுவது. இவர்களை அது பிரதிநிதிகரிப்பது இயல்பே. அக்காதமி விருதுகளின் தரம் மேம்படவேண்டுமானால் இவர்களின் தரம் மேம்படவேண்டும். மற்ற மொழிகளில் தரமான படைப்பாளிகள் மட்டுமே பரிசுவாங்குகிறார்கள் என்றால் இந்த பின்னணிச் சக்தியின் தெளிவே அதற்குக் காரணம். உதாரணமாக 2001ல் கேரள சாகித்ய அக்காதமி [இது கேரள அரசு சார்ந்த தனி விருது] விருது கெ.ஜி.சங்கரப்பிள்ளை என்ற தரமான படைப்பாளிக்கு வழங்கப்பட்டது. கூடவே இரண்டாம் பரிசு கம்யூனிஸ்டுக் கட்சிக்கவிஞர் பிரபாவர்மா என்பவருக்கும் அளிக்கப்பட்டது. இதழ்கள் கடுமையாகக் கண்டித்தன. வாசகர் கடிதங்கள் குவிந்தன. முக்கியமாக இடதுசாரி அறிஞர்களும் திறனாய்வாளர்களும் [இவர்களில் பலர் கெ.ஜி.சங்கரப்பிள்ளையின் இலக்கிய எதிரிகள்] கண்டித்தனர். பிரபா வர்மா பரிசை மறுக்க நேர்ந்தது. இப்படி நிகழும் வாய்ப்பு இருக்குமானால் மட்டுமே பரிசின் தரம் பேணப்படும். அதாவது அந்தத் தரம் அச்சமூகத்தால் பேணப்படுவதுதான்.
தமிழில் மெல்ல மெல்ல இந்நிலை உருவாகிவருகிறது என்பதையே நான் காண்கிறேன். இருபது வருடம் முன்பு வைரமுத்து இப்பரிசைப் பெற்றிருந்தால் எதிர்ப்பே இருந்திருக்காது. இன்று லட்சகணக்கில் செலவழித்து பரிசு பெற்றால்கூட எதிர்ப்பு உருவாகி அவற்றுக்கு பதில் சொல்லவே மீண்டும் லட்சக்கணக்கணக்காகச் செலவழிக்க நேர்கிறது. வைரமுத்து பத்து வருடங்களாக இப்பரிசுக்குச் செய்துவரும் முயற்சிகள் தமிழ்நாடு அறிந்தவையே. இருந்தும் இப்போது சிற்பியையும் வல்லிக்கண்ணனையும் நடுவர் குழுவில் உள்ளே நுழைப்பதில் தொடங்கி உச்சகட்டச் சக்தியைப் பயன்படுத்தித்தான் இவ்விருதைப் பெற முடிகிறது. இன்றுகூட வைரமுத்துவுக்குப் பரிசைத் தரலாம், ராஜேஷ்குமாருக்குத் தரமுடியாது. முப்பது வருடம் முன்பு எழில்முதல்வனுக்குப் பரிசளித்தார்கள். இன்று அப்படி ஊர்பேர் தெரியாத ஒரு பேராசிரியருக்குத் தந்துவிடமுடியாது. காரணம் அமைப்பு பெருமளவுக்கு மாறிவிட்டது என்பதே, அதற்குள் உள்ள சிலரைக் கவர்ந்து போராடித்தான் இதைச் செய்யவேண்டியுள்ளது.
ஆகவே தொடர்ந்த சமரசமற்ற திறனாய்வுகள்மூலம் அடிப்படை இலக்கிய மதிப்பீடுகளை வலுப்படுத்துவதே செய்யவேண்டிய விஷயம். அதனால்தான் பரிசுகள் அளிக்கப்படும் தருணங்கள் முக்கியமாகின்றன.