யானைடாக்டரும் பைரனும்

அன்பின் ஜெ ,

கடந்த இரு மாதங்களாகவே வாசிப்பு எதுவுமின்றிக் கழிந்தது ,வாங்கி சேர்த்த நூல்கள் பத்திற்கு மேற்பட்டவையாகிவிட்டது.உணர்சிகரமான கதையாக இருந்தால் இதமாக இருக்குமென எண்ணி ‘காடு’ வாசிக்க தொடங்கினேன்.முதல் இருநூற்றி ஐம்பது பக்கங்கள் கடந்துவிட்டேன்,முடித்து விட்டு எழுதுகிறேன்.இந்த வார விகடனில் இயக்குனர் சசி தங்களின் ‘யானை டாக்டர் ‘ ஐ மேற்கோளிட்டு எழுதியிருந்தார்,நான் யானை டாக்டர் படித்து ஒரு வருடம் ஆகியிருக்கும்,காடு படித்துக் கொண்டிருப்பதனலோ என்னவோ சற்று முன் படித்து விட்டு எழுதுகிறேன்.

இந்த முறை கதை ஓட்டம் அறிந்திருந்த காரணத்தால்,உவமைகளையே அதிகமும் கவனித்தேன்.//எண்ணங்கள் மீது மணல் சரிந்து நான் என்னை இழப்பதன் கடைசி புல் நுனி // இதில் “புல் நுனி” என்னை சிலிர்க்க செய்தது,நீங்கள் கூறியது போல் இயற்கையை மொழியில் அள்ள முயல்வதுதான் இலக்கியத்தின் கடைசி கட்ட சாத்தியம் என்பதை உணர முடிகிறது.அறம் கதைகளின் பாத்திரங்கள் தங்களின் நேரடி பரிச்சயம் அல்லாதவர்கள் என்று கூறியது போல
நினைவு,DR .கே இன் ஆளுமையை பைரனின் கவிதை கொண்டு கட்டி எழுப்பி இருக்கிறீர்கள்.”வாழத் தகுதியற்ற அற்பன் மனிதன் “,”Man,Vain Insect “.

நன்றிகளுடன்
பிரகாஷ் .

அன்புள்ள பிரகாஷ்,

உண்மையில் ஒரு கதையை இரண்டாம் முறை வாசிக்கையிலேயே நாம் அதை சரியாக அறிகிறோம். கதை என்பது ஒரு நெசவு. ஊடுபாவுகளின் பின்னல். நாம் ஊடுசரடை மட்டுமே முதல் வாசிப்பில் பின் தொடர்வோம். பாவு நம் கவனத்திலிருந்து தவறிவிடும்.

அறம் வரிசைக் கதைகள் எல்லாமே எளிமையான ஊடுசரடான கதையோட்டத்தைக் கொண்டவை. அவற்றைச் சொல்லும் மொழி பாவுசரடு. அந்த மொழி அந்த எளியகதைகளை ஊடறுத்து மேலதிக அர்த்தங்களை உருவாக்குகிறது.

பசுங் கானகத்தில் மணலில் புதையும் கனவு வருவதைப்போல

ஜெ

அன்புள்ள ஜெ

யானைடாக்டர் நாவலில் பைரனின் கவிதையை வாசித்தேன். லார்ட் பைரன் அடிப்படையில் ஒரு மனிதவெறுப்பு கொண்டவர். அதனால்தான் அவர் இயற்கையை நோக்கித் திரும்பினார்.

There is a pleasure in the pathless woods,
There is a rapture on the lonely shore,
There is society, where none intrudes,
By the deep sea, and music in its roar:
I love not man the less, but Nature more,
From these our interviews, in which I steal
From all I may be, or have been before,
To mingle with the Universe, and feel
What I can ne’er express, yet cannot all conceal.

என்ற குறுங்கவிதையில் அதை அவரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உண்மையிலேயே பைரன் கவிதையில் ஈடுபாடுள்ளவரா? அப்படியென்றால் அவரும் ஒரு மனிதவெறுப்பாளரா?

அருண் கே

அன்புள்ள அருண்,

பைரனின் கவிதையை நெடுநாளைக்குப்பின் மீண்டும் நினைக்க வைத்தமைக்கு நன்றி.

டாக்டர் கே உண்மையில் பைரனின் பெரும் வாசகர். அந்த மனநிலையையே கதையும் சொல்கிறது. அவரது மனவிலக்கத்தை, பைரன் இக்கவிதையில் சொல்லும் மனவிலக்கத்துடன் ஒப்பிடலாம்.

ஆனால் அதை மனித வெறுப்பு என்று சொல்லமுடியாது. மனிதனை இரண்டாகப் பிரித்துப்பாருங்கள். மனிதன் ஒரு விலங்கு. இந்த இயற்கையின் ஒரு சிறு அலகு. இன்னொருபக்கம் அவன் பெருந்திரளாகச் சேர்ந்து பல ஆயிரமாண்டுகளாக தனக்கென ஒரு நாகரீகத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறான். தன் சுயநலத்துக்காக. தான் வாழ்வதற்காகவும் அனுபவிப்பதற்காகவும். அவன் அதன் சிறு பகுதி.

மனிதனை இயற்கையின் ஒரு கூறாக அணுகுபவர்கள் அவன் உருவாக்கிய இந்த சுயநலம் மிக்க நாகரீகம் மீது ஒரு விலக்கத்தை மெல்லமெல்ல வந்தடைகிறார்கள். அதையே நாம் பைரனில் காண்கிறோம். பைரன் இங்கே மனிதன் என்று சொல்வது இயற்கையின் பகுதியாகிய மனிதனை அல்ல அவன் உருவாக்கிய நாகரீகத்தின் துளியான மனிதனையே.

அந்த மனவிலக்கம் டாக்டர் கே-வுக்கும் இருந்தது என்றே நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசெயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?
அடுத்த கட்டுரைபசி வீற்றிருக்கும் நடுமுற்றம்