புரவி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஈராறு கால்கொண்டெழும் புரவி படித்தவுடன் இதை எழுதுகிறேன். ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதைப் படித்திருப்பினும் இப்போது மீள்வாசிப்பினில் தான் இக்குறுநாவலின் சாரத்தை விளங்கிக் கொள்ள முடிந்தது. முன்னுரையில் நீங்கள் கூறியது போல சித்தர் ஞானத்தைப் பற்றிய அறிதல் இல்லாததால் நாவல் முழுவதுமாகத் திறக்காவிடினும் சில முக்கிய மன விரிவுகள் சாத்தியமாகியுள்ளன.

முதன்மையாக அறிதல் பற்றிய தெளிவு. நாவலின் மையக் கதாபாத்திரமான சாஸ்தான் குட்டிப்பிள்ளை நாவல் முழுவதும் தனக்கான ஞானத்தைத் தேடித் தேடி சலிக்கிறான். அனைத்து வழிகளையும் முயற்சித்தும் ஞானத்தின் ஒளிக்கீற்று அவனைத் தீண்டவில்லை. சைவ சித்தாந்த நூல்களைக் கற்கிறான், அய்யாவு நாடாரிடம் நீர்நோட்டம் பார்க்கப் பழகுகிறான், சடைமுடியாரை சந்தித்த பின்பு 9 வருடம் குகைச் சாமியாக வாழ்கிறான். அதிலும் தனக்கான பாதையை அறிய முடியாமல் தன்னால் ஞானம் பெற்ற ஞானமுத்தனிடம் வந்து சேர்ந்து இறுதியில் மரணப்படுக்கையில் தனக்கான மீட்பை அடைகிறான்.

தன் வாழ்நாள் முழுவதும் அறிதலுக்கான பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் அகங்காரத்தை அவனால் தாண்டவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் தேர்ந்தெடுக்கும் வழி மேலதிக துன்பத்தையே தருகிறது. அறிதலின் பேரானந்தத்தை அவனால் ருசிக்கவே முடியவில்லை. இதை நாவலில் வரும் 3 கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இதை அறியலாம்.

முதலாமவர் ஞானமுத்தன். நாவலில் சாஸ்தான் குட்டிப்பிள்ளைக்கு சுமைதூக்குபவராகவே அறிமுகமாகிறார். மண்ணுக்கடியிலிருக்கும் நீரை பிள்ளை சுட்டிக்காட்டும் போது தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று விழித்துக்கொள்ள அறிதலின் கனத்தை அடைகிறான். அப்போது ஒரு வரி அறிதலுக்கான விளக்கமாக வருகிறது.

“அவன் அறிந்ததை அவன் மனம் அறியவில்லை. அவன் மனம் அறிந்ததை அவன் சொல் அறியவில்லை.அனால் அறிந்ததே அவனாக, அறிதலை அறிய அவனில்லாத ஒருமையில் அங்கே கிடந்தான்.”

இந்த ஒருமை பிள்ளைக்கு நாவல் முழுவதிலும் சாத்தியப்படவே இல்லை. ஒவ்வொரு முறையும் அவனுடைய தர்க்க மனம் முன்னால் வந்து நிற்கிறது.

அடுத்த கதாபாத்திரம் அய்யாவு நாடார். நீர்நோட்டம் பார்க்கும்போது கையிலிருக்கும் வேப்பங்குச்சியே அவராக இருப்பவர். ஆறு மாத காலம் இவரிடம் வேறு நினைப்பே இன்றி கற்றுத் தேர்ச்சி பெற்ற போதும் பிள்ளைக்கு வழி திறக்கவில்லை. ஏனெனில் அவர் நீர்நோட்டத்தின் மீதான விருப்பத்தால் அல்ல, இதைக் கற்றால் தனக்கு ஞானம் கிட்டும் என்ற ஆசையினால் மட்டுமே கற்கிறார். இதனால் அவரின் அகங்காரம் மட்டுமே நிறைவுறுகிறது.

மூன்றாவதாக சடைமுடியார். இருத்தலின் பேரானந்தமாகவே ஞானத்தை அறிபவர். வெடித்து சிரிக்காமல் இவர் பேசுவதில்லை. வாழ்வை அறிந்தவர் உதிர்க்கும் பெரும் புன்னகை அது.

சடைமுடியார் உண்ட மாங்கொட்டையை விதைத்து விட்டு, குகைச்சாமியாக சொல்லறுத்து பிள்ளை வாழ்கிறார். இருந்தும் ஆன்மாவில் வேப்பங்குச்சியின் கசப்பே ஊறுகிறது. 9 வருடம் கழித்துப் பார்க்கும்போது மாமரம் பெரும் விருட்சமாக வளர்ந்திருப்பினும் பூவோ காயோ விடவில்லை. மரம் கனியாமல் மலடாக நிற்கிறது.

பிள்ளைக்கு ஞானத்தை அடையத் தடையாக இருப்பது எது? அனைத்தையும் பகுத்தாராயும் அவருடைய தர்க்க மனம். அவரின் விழிப்பு மனம் அனைத்திற்கும் விளக்கம் கேட்டு நிற்கிறது. அதைத் தாண்டி அவருடைய ஆழ்மனதை அறிதல் தொடுவதே இல்லை.

நாவலில் அவர் பெரு மகிழ்ச்சியுடன் கழித்த நாட்கள் இறந்து போன தன் மனைவி நாகம்மையுடன் வாழ்ந்த இரண்டு ஆண்டுகள் தான். அவர் கனவு மனம் ஏங்குவது அந்த வாழ்வைத்தான். உண்மையில் அவருக்கான மீட்பு அந்த வாழ்வில் தான் இருந்தது.

இது நாவலில் வரும் மூன்று கனவுகள் மூலம் உணர்த்தப்படுகிறது.

இதையே சடைமுடியார் சொல்கிறார்:

“உலகைத் தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர்? இந்த இடத்தை அறியும். இங்க இருக்கு உம்ம ஞானம். மூலாதாரம் கனிஞ்சு முளைக்கும் முழுநிலவு இங்கே உதிக்கும்”

இறுதியில் மரணப் படுக்கையில் தன் போத மனம் அழிந்து கனவு மனம் முழுவிழிப்பு கொண்டு ஞானத்தின் பேரனுபவம் கிடைக்கப் பெறுகிறான்.

இறுதியாகப் பிள்ளையின் சாம்பலை ஞானமுத்தன் அம்மாமரத்தின் கீழே புதைக்கிறான்.மறுவருடம் மரம் குலைகுலையாகக் காய்க்க ஆரம்பிக்கிறது. வாழ்நாள் முழுவதும் வேப்பங்குச்சியின் கசப்பை மட்டுமே அறிந்த அவன் ஆன்மா முடிவில் மாங்கனியின் தித்திப்பை சுவைக்கிறது.

இந்நாவலை வாசித்த பின்பு அறிதல் என்பதை கீழ்க்கண்ட சொற்றொடர்களாக மனம் தொகுத்துக் கொள்கிறது.

1) சுயமிழப்பு – தானின்றி அறிதலாகி இருத்தல்.
2) கனிதல் – இயற்கையின் பெருங்கருணையை உணர்தல்
3) இருத்தலின் பேருவகை கொள்தல்.

இதே போல் நாவலில் இருக்கும் உருவகங்களையும் படிமங்களையும் பற்றி விரிவாக ஆராயலாம். முக்கியமாக நிலத்தினடியில் ஓடும் நீர், நீர்நோட்டம் பார்க்கும் வேப்பங்குச்சி, நாகம்மை பற்றிய வர்ணனைகள், தனியே மலை உச்சியில் நிற்கும் மாமரம்…

சிறு மலைப்பே ஏற்படுகிறது!! 60 பக்க குறுநாவலிலேயே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதென்றால் 850 பக்க நாவலான விஷ்ணுபுரத்தில்!!! மீண்டுமொரு முறை விஷ்ணுபுரம் வாசிக்கவேண்டும்..

மிக்க நன்றி ஜெ.. அருமையான படைப்பைத் தந்ததற்கு…

மிக்க அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி
,

நிஸர்கதத்த மகராஜின் ஒரு வரி. மாயையின் மிகச்சிறந்த அவதாரம் அகங்காரம்.

நான் அகங்காரமற்றிருக்கிறேன், நான் அகங்காரத்தைப் புரிந்துகொண்டுவிட்டேன், அகங்காரத்தை அகற்றும் வழி எனக்குத்தெரியும் என்று ஒருவன் எண்ணுவதுகூட மோசமான அகங்காரமாக ஆக முடியும்.

நான் என் முதிரா இளமைமுதல் ஆன்மீகத்தில் அறியும் தடை இதுதான். எழுத்தாளன் என்பதும் ஆன்மீகவாதி என்பதும் இரண்டு முரண்படும் எல்லைகள். ஆன்மீகம் தன்னையழிப்பதிலிருந்து தொடங்குகிறது. இலக்கியம் தன்னை அளவுகோலாக்கி உலகை அறிவதில் ஆரம்பிக்கிறது. அகங்காரமில்லாமல் இலக்கியம் இல்லை.

அந்த முரண்பாடு விஷ்ணுபுரம் முதல் வெறும்முள் வரை பலவடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ்நேயம் அறக்கட்டளை
அடுத்த கட்டுரைசித்திரப்பாவை