அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சென்னையில் இருந்தபோது, நான் அதிகம் தமிழ் வாசிப்பதை அறிந்த எதிர் ப்ளாட் பெண்மணி ஒருவர் என்னிடம் படிக்கப் புத்தகம் கேட்டார். சிறுகதைத் தொகுதி வேண்டுமென்றார். ஓய்வுபெறும் முன் கணவர் இருந்த பாதுகாப்புத் துறைக்காக தில்லியில் இருந்தவர். அறுபது வயதிற்கு மேற்பட்டவர். ஆகவே அவருக்கு இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுதி 1 என்பதனைக் கொடுத்தேன். அடுத்த நாள் காலையிலேயே கதவைத் தட்டி இந்தப் புத்தகம் வேண்டாம் ‘இவருக்கு மெச்சூரிட்டியே இல்ல’ என்று ஆசிரியரைக் குறிப்பிட்டு சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார். எப்படி இவர் இப்படி சொல்கிறார் என்று சற்று அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பெண்மணி குடும்ப மகளிர் மாத இதழ்களைப் படிப்பவர், கொஞ்சம் ரமணிசந்திரன் மாதிரியான நாவல்களைப் படித்திருக்கிறார் என்று கொஞ்சநாள் கழித்து தெரிந்தது.
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் என்ற தி.ஜாவின் கதைக்கு இணையத்தில் எழுதப்பட்ட கமெண்டுகள் குஷ்டரோகம் ஒட்டுண்ணியல்ல என்று அப்போதே தெளிவாக சொல்லியிருக்கிறார் பார் என்ற தொனியிலேயே எல்லாம் இருந்தன. ஆனால் தெளிவற்ற பிள்ளையைக் குறித்துத் தந்தையின் தவிப்பை, ஆற்றாமையைக் குறிப்பிட்டு அவர் எடுக்கப்போகும் முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறார் என்பதைப் பற்றி எவரும் குறிப்பிடவில்லை.
என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பர் கனமான ஓருபுத்தகத்தைப் பார்த்துவிட்டு இதைப் படித்துவிட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்றார். அவர் வாசகர் அல்ல. என்வயதொத்தவர் என்னைவிட அனுபவமும், நடைமுறை அறிவும் கொண்டிருந்தார். ஆகவே அவர் சொல்லவதை மறுத்துக் கூறமுடியவில்லை.
இ.பா. ஓரளவு புத்திசாலித்தனமாகக் கதைகளை அரசியல், குடும்பப்பின்னணியில் எழுதியவர். ஆனால் அப்பெண்மணி மெச்சூரிட்டி இல்லை என்று புரிந்து கொள்கிறார். தங்கள் படிநிலையைவிடத் தாண்டி எழுதும் எழுத்தாளர்களை எப்படிக் குறைந்த படிநிலையாகப் புரிந்துகொள்கிறார்கள்? கதை என்பது பலருக்கு நேர்கோடாகவும், தவறான புரிதலுடனும்தான் உள்ளனவா? இத்தனைநாள் படித்தும் வாசிப்பனுபவதை உயர்த்திக்கொள்ள முடியாமல்தான் இருக்கிறார்களா? இது எப்படிசாத்தியம் என்று புரியவில்லை. அனுபவம் வாசிப்பு பற்றி நீங்கள் சொன்ன தராசு உதாரணம் ஞாபகம் இருக்கிறது. அதேவேளையில் பல்வேறு துறைகளில் அனுபவங்களும், வெற்றிகளும், மிகுந்த ஞானமும் (அவர்கள் பெற்ற பட்டங்களை சொல்லவில்லை) பெற்றிருப்பவர்களின் வாசிப்புகூட இதே நிலையில்தான் உள்ளது. துறைசார்ந்த, அனுபவம்சார்ந்த அறிவும், வாசிப்பும் வேறானவையா? வாசிப்பு நம் வாழ்கையில் நம்முடன் பயணிக்கவில்லையா?
நம் நடைமுறை வாழ்க்கைக்கு வாசிப்பு உகந்ததில்லையா? நம் வாழ்வின் செறிவை அளிக்காதபோது எந்தவகையில் அது நமக்குப் பயனளிக்க முடியும்.
அன்புடன்
கே.ஜே. அசோக்குமார்.
அன்புள்ள அசோக் குமார்
தமிழகத்தின் பொதுமக்களிடையே வேறு எந்தக் கலையில் தரமான ரசனையும் ஆர்வமும் இருப்பதைக் கண்டீர்கள்? எந்தத் தளத்தில் பொருட்படுத்தவேண்டிய சிந்தனைகள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்கள்? எங்கே அடிப்படைத்தகவல்களாவது தெரிந்துவைத்திருப்பவர்களை சந்தித்திருக்கிறீர்கள்?
நேற்று ஒரு நண்பர் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன்னல் ஃபேஸ்புக்கில் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஒரு கன்னடர் என்பதை அவர் சொன்னதும் நூற்றுக்கணக்கானவர்கள் கொந்தளித்து வந்து அதை எதிர்த்தார்கள். அது ஓர் அவதூறு என்றார்கள். எல்லாருமே ஈவேரா ஆதரவாளர்கள். அவரைப்பற்றி அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
எனக்கே இந்த அனுபவம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் நான் இணையதளத்தில் திராவிட இயக்கத்தில் உள்ள பிராமணவெறுப்புக்கு மலையாளிகளின் முக்கியமான பங்களிப்பு உண்டு என்று சொல்லியிருந்தேன். பயங்கரமான கொதிப்பு. ஆதாரம் எங்கே என்ற கூச்சல். டி. எம்.நாயர் பெயரை நான் சொன்னேன். அந்த தளத்தில் விவாதித்த எவரும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை!
இந்த தரத்தில் தான் எல்லாப் பொதுவிவாதங்களும் இங்கே நிகழ்கின்றன. தமிழர்களுக்கு ஆர்வமுள்ள துறைகள் மிகமிகக் குறைவு. முதன்மையாக சினிமா. அதன்பின் ஓட்டல் உணவுகள், சோதிடம் சம்பந்தமான விஷயங்கள் அதனுடன் இணைந்த ஆன்மீகம், கொஞ்சம் அரசியல். அந்த அரசியலில்கூட அடிப்படைத்தகவல்களைத் தெரிந்துகொண்டு பேசுபவர்கள் தமிழகத்திலேயே ஓர் பத்தாயிரம் பேர் இருந்தால் அதிகம்
பெரும்பாலான புரிதல்கள் இங்கே பொதுப்புத்தி சார்ந்தவை. அவைகூட வாசிப்பில் இருந்து பெறப்படுவதில்லை.மேடைப்பேச்சுதான் இங்கே பலரும் கவனிக்கும் ஊடகம். இன்று மேடைப்பேச்சைத் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். அந்த மேடைப்பேச்சு சார்ந்த துணுக்குகளை வார இதழ்களில் வாசிக்கிறார்கள். தமிழர்களின் அரசியல் ,பொருளியல், சமூகவியல், வரலாறு சார்ந்த எல்லாப் புரிதல்களும் இந்த எல்லைக்குள் அடங்கிவிடுகின்றன.
மேடைப்பேச்சுக்கு என ஒரு பாணி இங்கே உண்டு. எல்லாவற்றையும் புராணமாக ஆக்கிக்கொள்ளும் நம்முடைய மதமனநிலையில் இருந்து வந்தது அது. நமது மேடைப்பேச்சே மதச்சொற்பொழிவுகளில் இருந்து வந்ததுதான். ஆகவே எதையும் மிகையாகவும் பொய்யாகவும் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசுவார்கள். அதற்காகக் கட்டுக்கதைகளை உருவாக்குவார்கள். அதுவே வரலாறாகவும் அரசியலாகவும் நீடிக்கும்
அப்படி நம்மிடையே நீடிக்கும் எவ்வளவு அபத்தமான கதைகள் உள்ளன என்று பாருங்கள். காந்தியை பாரதி சென்றுசந்தித்து ஆசீர்வாதம் செய்தார் என்று ஒருகதை. ஆறுமுகநாவலர் ராமலிங்க அடிகள் நீதிமன்றம் வந்தபோது எழுந்து நின்றதைப்பார்த்து அவரது வழக்கை நீதிபதி நிராகரித்தார் என்ற கதை. இப்படிப் பல கதைகள்
அடுத்த காலகட்டத்தில் இன்னும் கீழே சென்றது பொதுப்புராணம். சி.என்.அண்ணாத்துரை அமெரிக்காவில் பிகாஸ் என்ற சொல் மூன்றுமுறை தொடர்ச்சியாக வரும்படி ஒருசொற்றொடரைச் சொன்னதும் மொத்த வெள்ளையரும் மிரண்டுபோய் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்று நம்பிக்கை. அதைப் படித்தவர்கள்கூட சொல்வதை நாம் காணலாம்.
இன்று இதோ எங்குபார்த்தாலும் ஈழப்போர் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி அப்பட்டமான வெற்றுக்கதைகள். வெறும் உணர்ச்சிக்கூப்பாடுகள். தமிழிலேயே ஈழப்போராட்டம் பற்றி ஆதாரபூர்வமான விரிவான நூல்கள் கிடைக்கின்றன.மிக எளிய அளவிலேனும் ஈழப்போர் அல்லது விடுதலைப்புலிகள் பற்றி ஒரு வரலாற்றுச்சித்திரம் உள்ள ஒருவரைப் பார்க்க தமிழகம் முழுக்க அலையவேண்டியிருக்கும்.
நம்முடைய இணையச்சூழலில் ஒருமுறை உலவி வந்தாலே போதும். ஒவ்வொன்றிலும் நம்பவே முடியாத அளவு மேலோட்டமான கருத்துக்களும் உணர்ச்சிகளும் புழங்குவதையே காண்போம். படிப்பு என்று தமிழகத்தில் நாம் சொல்வது வெறும் தொழிலுக்கான பயிற்சியை மட்டுமே. அது சிந்தனைக்கான பயிற்சி அல்ல. பண்பாட்டுப்பயிற்சியும் அல்ல. ஆகவே இங்கே படித்தவர்களும் படிக்காதவர்களும் சரிசமமாகவே பாமரர்கள். படித்தவர்கள் படித்தவர்களென்ற தன்னம்பிக்கையுடன் தங்கள் அறியாமையை முன்வைப்பதனால் இன்னும் பாமரர்களாகத் தெரிகிறார்கள்.
இதுதான் நம் நிலை. நாம் அறிவார்ந்த தளத்தில் மிகமிகத் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு சமூகம். சமகால உலகசிந்தனைகளைப்பற்றிய அறிவோ, நம்முடைய சிந்தனைகள் அல்லது வரலாற்றைப்பற்றிய தர்க்கபூர்வமான புரிதலோ இல்லாதவர்கள். அவற்றை நாம் வாழும் சூழலுடன் பொருந்த்திச் சிந்திக்கும் வழக்கமே அற்றவர்கள்.
இந்தப் போதாமையை நிரப்பவே நாம் எப்போதும் கூச்சலிடுகிறோம். கும்பலாகச் சேர்ந்துகொண்டு மிகையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். எந்த ஒரு விஷயத்தையும் உச்சகட்ட உணர்ச்சிநிலைகள் வழியாகவே அணுகுகிறோம். நாம் இங்கே சிந்தனையாளர்கள் என நினைப்பவர்கள் நம்முடைய இந்த அசட்டு உணர்ச்சிகளைத் தூண்டும் திறன் கொண்ட வசைபாடிகளை மட்டுமே.
ஒட்டுமொத்தமான இந்தச் சிந்தனைவறுமையின் ஒரு தளத்தையே நாம் இலக்கியத்தில் காண்கிறோம். தமிழகத்தில் பத்தாயிரத்தில் ஒருவருக்குப் புத்தகவாசிப்பு என்பது ஓர் அறிவுச்செயல்பாடு எனத் தெரிந்திருந்தாலே ஆச்சரியம்.மற்றவர்கள் ‘அதனாலென்ன பயன்?’ என்றுதான் கேட்பார்கள். உலகியல் வாழ்க்கையில் அதனால் என்ன உடனடி லாபம் என்றுதான் அதற்கு அர்த்தம். இந்த இணையதளத்திலேயே அதற்குத் திரும்பத்திரும்ப பதிலளித்திருக்கிறேன்.
வாசிப்பே இந்த அழகில் இருக்கையில் நுண்வாசிப்பு பற்றிப் பேசவே வேண்டியதில்லை. தமிழகத்தில் புத்தகம் வாசிப்பவர்களிலேயே ஒரு சிந்தனையைப் புரிந்துகொண்டு அதனுடன் விவாதிப்பதற்கான பழக்கம் கொண்டவர்கள் மிகக்குறைவு என்பதை காணலாம். ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதுமே பெரும்பாலானவர்கள் அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் பிரபலமான அரசியல்சரிகளுடன் அது ஒத்துப்போகிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள். அதைப்பற்றி மட்டுமே அவர்களால் பேச முடியும்.
இனிமேல் தமிழில் அதிகமாக சிந்தனைகளைப்பற்றிப் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். திரும்பத்திரும்ப அவர்கள் ஒன்றையே செய்வதைக் காணலாம். பள்ளிப்பிள்ளைகளுக்கு வினாத்தாள் திருத்தி மதிப்பெண் வழங்கும் ஆசிரியர்கள் அந்த பதிலில் சில வரிகளும் சொற்களும் இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். அவற்றை மட்டும் பார்த்து அடையாளமிட்டுக்கொண்டே சென்று மதிப்பெண் போட்டுவிடுவார்கள். இவர்களும் அப்படித்தான். இதுதான் அரசியல்ரீதியான சரியான சிந்தனை என மிகமிகத்தட்டையான நாலைந்து கருத்துக்கள் வைத்திருப்பார்கள். அவற்றைக் கண்டால் அடையாளம் செய்துகொண்டு கடைசியில் ஒரு மதிப்பெண் போடுகிறார்கள்.
ஆகவேதான் எப்போதும் இவர்கள் கருத்துக்களை மிக எளிதாக வகைப்படுத்துகிறார்கள். இது முற்போக்குக்கருத்து, இது பிற்போக்குக் கருத்து, இது இந்துத்துவா கருத்து, இது சாதியக்கருத்து என. புதியசிந்தனைகள் ஒருபோதும் இத்தகைய எளிய வகைப்பாடுகளுக்குள் அடங்குவதில்லை என இவர்களிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது.
நம்முள் இருந்துகொண்டு சிந்தனைகளை சந்திப்பது எது? நம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் புரிதல்தான். நாம் நம்மைத் தொடர்ச்சியாக ஆன்மீகமாகவும், பண்பாட்டுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கும்போதுதான் புதியசிந்தனைகளை நோக்கி உண்மையில் நமது மனம் திறக்கிறது. அந்தச்சிந்தனை நம்மை நாமே பரிசீலனைசெய்து அறிய வழிவகுக்கிறது. சிந்தனையின் இலக்கும் வழிமுறையும் அதுவே.
மேற்குறிப்பிட்ட தட்டைச்சிந்தனையாளர்கள் அவ்வாறு சுயபரிசீலனைக்கும் சுயஅறிதலுக்கும் செல்வதே இல்லை. அவர்களைப்பொறுத்தவரை அவர்கள் மிக மிகத் தெளிவானவர்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டு சொல்லிவரும் தரப்புதான் அவர்கள். அதற்கப்பால் அவர்களின் அகம் எப்படி சமூகவியல், பண்பாட்டு, அரசியல், ஆன்மீகக்கூறுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற கவனமே அவர்களிடமிருப்பதில்லை. ஆகவே எந்தச்சிந்தனையையும் அவர்களின் அகம் எதிர்கொள்வதில்லை.
அவர்கள் தங்களை மாறாத அளவுகோலாக வைத்துக்கொண்டு சிந்தனைகளை மதிப்பிடுகிறார்கள். அவர்கள் வெறுமே ‘கருத்துச் சொல்வது’ இதனால்தான்அந்தக்கருத்தை முன்வைத்து அறிவுபூர்வமாக விளக்கவோ விவாதிக்கவோ அவர்களால் முடியாது. ‘ஏன் அப்டி நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டால் புறவயமாக பதில்சொல்லமுடியாது. ஆகவே உடனே மிகையான உணர்ச்சிக்கொந்தளிப்பு கிளம்பிவரும்.
இலக்கியம் கருத்துச்செயல்பாட்டின் மிகநுண்மையான ஒரு வடிவம் என்று சொல்லலாம். நல்ல இலக்கியம் கருத்துக்களை முன்வைப்பதில்லை. கருத்துக்கள் உருவாகும் வாழ்க்கைச்சூழலை ஆராய்கிறது. தர்க்கபூர்வமாக ஆராய்வதில்லை. அந்த வாழ்க்கைச்சூழலை வெவ்வேறு வடிவங்களில் திருப்பி சித்தரிப்பது அதன் வழி
அது வாசகனிடம் எதிர்பார்ப்பது அந்த சித்தரிப்பைத் தன் கற்பனைமூலம் உண்மையான வாழ்க்கையாக விரிவாக்கிக் கொள்வதைத்தான். உண்மையான வாழ்க்கைச்சந்தர்ப்பத்தில் ஈடுபடுவதைப்போல உணர்ச்சிகரமாக, ஒவ்வொரு நுட்பமான தகவல்களையும் கவனித்துக்கொண்டு, அதைப் புரிந்துகொள்ள முயல்வதை. எப்படி வாழ்க்கையில் இருந்து கருத்துக்களை உருவாகிக்கொள்கிறோமோ அப்படி இந்த இலக்கிய அனுபவத்தில் இருந்தும் கருந்த்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆனால் இங்கே இலக்கியவாசிப்புகள் நிகழும் விதம் நம்பமுடியாத அளவுக்குத் தட்டையானது. தமிழகத்தின் பத்து கோடி மக்களில் பத்தாயிரம்பேர்தான் இலக்கியம் வாசிக்கவே வருகிறார்கள். அவர்களின் நிலை இது.
1.இலக்கியப்படைப்பை எழுதிவைக்கப்பட்ட ஒரு செய்தி என்ற அளவிலேயே அணுகுகிறார்கள். அதில் என்ன ‘சொல்லியிருக்கிறது’ என்று மட்டுமே பார்க்கிறார்கள். அந்தக்கருத்தை ஆசிரியர் சில நிகழ்ச்சிகளாக மாற்றியிருப்பதுதான் கதை என எண்ணிக்கொள்கிறார்கள். அந்தக் கருத்து தனக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும், தன்னால் ஏற்கப்பட்டதாகவும் இருந்தால் அது நல்ல கதை என நினைக்கிறார்கள்.
இலக்கியப்படைப்புகளில் அப்படி எந்தக்கருத்தும் சொல்லப்பட்டிருப்பதில்லை. அந்நிலையில் இவர்களே அதில் கருத்துக்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அது அரசியல்சரியாக அமைந்திருக்கிறதா என விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனடிப்படையில் அந்தக் கதையையும் ஆசிரியனையும் முத்திரைகுத்துகிறார்கள்.இதற்குக் கட்டுடைப்பு நுண்ணரசியல் என்றெல்லாம் எங்கிருந்தாவது சொற்களை அசட்டுத்தனமாகக் கடன்வாங்கிக்கொள்கிறார்கள். தமிழில் ‘அறிவுஜீவிகள்’ இலக்கியம் பற்றிப் பேசுவதில் தொண்ணூறு சதவீதம் இந்த வகைக்குள்தான் வரும்.
இலக்கியவாசகன் ஒரு தருணத்திலும் பொதுவான அரசியல் கருத்துக்களை இலக்கியப்படைப்புகளில் தேடமாட்டான், அதை வைத்துவிவாதிக்கமாட்டான்
2.இலக்கியப்படைப்பு தனக்குக் கேளிக்கையை அளிப்பதற்காக எழுதப்படுவது என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் பெரும்பான்மையினர். ஒரு கதை கதைச்சுவாரசியத்துக்காக மட்டுமே எழுதப்படுகிறது என்று நினைப்பவர்கள். வெறும் கதைச்சுவாரசியத்தை மட்டுமே அளிக்கும் ஒரு படைப்பு வாசகன் ஏற்கனவே அறிந்த வாழ்க்கையை அறிந்தவகையில் சொல்லக்கூடியது, அதன் கலவைகள் மட்டுமே கதைக்குக் கதை மாறுபடும்.
கேளிக்கைவாசகன் எப்போதுமே புதிய அனுபவத்தளங்களை அஞ்சுகிறான். ஏனென்றால் அவன் தேடுவது அவனுடைய சொந்தப் பகற்கனவின் எழுத்துவடிவைமட்டுமே. மாறாக இலக்கியவாசிப்பு எப்போதுமே புதிய அனுபவங்களை நோக்கியே செல்லும். தெரியாத வாழ்க்கைகளை வாழ ஆசைப்படுபவனே இலக்கிய வாசகன்.
இந்தவகை வாசகர்கள் எப்போதுமே கதையின் ‘முடிவு சரியில்லை’ ‘முடிவ நான் ஊகிச்சிட்டேன்’ ‘இந்தக்கதாபாத்திரத்தை இப்டி எழுதியிருக்கலாம்’ என்றெல்லாம் கருத்துச்சொல்வார்கள். ஒரு தருணத்திலும் இலக்கியவாசகன் இத்தகைய கருத்துக்களைச் சொல்லமாட்டான். இலக்கியம் தன் ருசிக்கேற்ப சமைக்கப்படுவது என்ற நம்பிக்கையில் இருந்து வரும் வரிகள் இவை.
இலக்கியம் என்பது ஒருவகை வாழ்க்கை, அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது நிகழ்ந்தது என்று இலக்கியவாசகன் நினைப்பான். ‘காந்திய கோட்சே சுட்டிருக்கப்பிடாதுங்க’ என்றோ ‘காந்திய சுட்டிருவாங்கன்னு அப்பவே நெனைச்சேன். அதனால சுட்டப்ப சப்புன்னு போச்சு’ என்றோ சொல்லமுடியுமா என்ன? அது ஏன் அப்படி நிகழ்ந்தது, அதன் உள்ளடுக்குகள் என்ன என்று மட்டுமே வாசகன் கவனம் இருக்கும்
3. இலக்கியப்படைப்பை நோக்கிக் கற்பனையையும் சிந்தனையையும் விரித்தெடுக்கமுடியாத தட்டைவாசகர்களில் ஒரு சாரார் தங்களை இலக்கியஆசிரியனை விட மேலான ஒரு பீடத்தில் நிறுத்த முயல்வதுண்டு. அவர்கள் அதற்குக் கண்டுபிடிக்கும் வழி என்பது தகவல்பிழைகளுக்காகத் தேடுவது.
தமிழில் இலக்கியம் பற்றி அதிகமாக எழுதப்பட்டிருப்பது தகவல்பிழைகளைப்பற்றித்தான். விஷ்ணுபுரம் வெளிவந்தபோது கிட்டத்தட்ட நூறு கட்டுரைகள் அதிலுள்ள தகவல்பிழைகளைப்பற்றி எழுதப்பட்டன. ஆரம்பத்தில் நான் நிறைய கட்டுரைகளுக்கு தகவல்சார்ந்து விளக்கம் அளித்தேன். பின்னர் ஆற்றூர் ரவிவர்மா சொன்னார், இலக்கிய ஆசிரியன் அவ்வாறு தகவல்விளக்கங்கள் சொல்லக்கூடாது, அந்தக்கடமை அவனுக்கில்லை என. ஆகவே நிறுத்திக்கொண்டேன்.
ஆனால் அதன் இரண்டாம்பதிப்பில் ஒருவரி எழுதினேன். ‘விஷ்ணுபுரம் பற்றி வெளிவந்த கருத்துக்களில் தகவல்பிழைகளைக் கண்டுசொல்லும் கட்டுரைகளே அதிகம். ஆனால் இந்த இரண்டாம்பதிப்பில் திருத்திக்கொள்ளுமளவுக்கு ஒரு தகவல்பிழைகூட சுட்டிக்காட்டப்படவில்லை’ என
ஒருவர் நாடகம் பார்க்கச்செல்கிறார். ‘என்ன இது, அஸ்தினாபுரி என்கிறார்கள். ஆனால் எட்டடிக்கு நால இடத்திலேயே நின்று பேசுகிறார்கள்’ என்று கேட்பாரென்றால் அவருக்கு என்ன தெரியும்? அந்த எட்டடிக்கு நாலடி இடத்தில் நிகழ்பவையில் இருந்து அஸ்தினாபுரியைக் கற்பனைசெய்ய முடிபவர்களுக்காகவே அந்த நாடகம் நிகழ்த்தப்படுகிறது.
இலக்கியம் என்பது மொழியினூடாகக் கற்பனைசெய்ய அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு. அந்த மொழிவடிவம் கற்பனைக்கான ஒரு முகாந்திரம். அதனூடாக நாம் நிகர்வாழ்க்கை ஒன்றை அடைகிறோம். அங்கு வாழ்கிறோம். அந்த வாழ்க்கையினூடாக ஆசிரியன் அளிக்கும் தரிசனத்தை, உணர்ச்சிகளை அடைகிறோம். அதுவே இலக்கியவாசிப்பு
அச்சுப்பிழைகளுக்காகவும் தகவல்பிழைகளுக்காகவும் வாசிப்பவன் முதலில் இழப்பது இலக்கியஅனுபவத்தை. பிழைகள் இல்லாத இலக்கியம் இன்றுவரை எழுதப்பட்டதில்லை. தல்ஸ்தோயின் பேரிலக்கியமான போரும் அமைதியும் வரை. ஐரோப்பிய இலக்கிய மதிப்பீடுகள் அந்தப்பிழைகளையும் ஆசிரியனின் புனைவின் அம்சங்களாகக் காண்பதனால் அவற்றைத் திருத்துவதுகூட கிடையாது.
இந்தத் தட்டைவாசிப்புகளே இங்கே எழுத்துக்களில் எப்போதும் நிகழ்கின்றன. நல்ல வாசிப்பு என்பது மிகமிக அரியதாகவே உள்ளது. தட்டையான பண்பாட்டுச்சூழலில் இருந்து தட்டைவாசிப்பு எழுவதில் ஆச்சரியமும் இல்லை
ஜெ