கன்னிநிலம் – நாவல் : 6

இரவில் முகாமில் எவரும் தூங்கவில்லை. நான் நள்ளிரவில் எழுந்து சாப்பிட்டுவிட்டு  சிக்னல் அறைக்குப்போய் சிகரெட்டுகளாக பிடித்தபடி ஒரு சொல் கூடப் பேசாமல் காத்திருந்தேன். மானிட்டர் அலைகளை எழுப்பியபடி இரைந்துகொண்டிருந்தது. மாணிக்கம் ” ப்ச” என்றான்

“என்ன?”

“நேராக இம்பால் சி.எச்.க்யூவுக்கே முயற்சி செய்கிறேன். ”என்றான்

”அத்தனை தூரமா?”என்றேன்

“இங்கே இந்த பாஸ்டர்டுகள் ஆப் செய்து வைத்துவிட்டு காலிடுக்கில் கைகளைப் பொத்திக்கொண்டு தூங்குகிறார்கள். பார்ப்போம். மேகங்கள் சாதகமாக இருந்தால் ஒருசில சொற்களை அனுப்பிவிட முடியும்….” அவன் மேலும்மேலும் பட்டன்களைத் தட்டுவதை பார்த்தபடி இருந்தேன்.

“நாயர் என்ன சொல்கிறான்?” என்றேன்

“புதைக்கிறார்கள்… அங்கே ஒரே சகதி… பன்றிகள்”

முகாம்வட்டார ரேடியோ ரிசிவர் முனகியது. ”நாயர்தான்” என்றான் சண்முகம்

“கொடு” என்றேன்

“ஹலோ  காட் ·ப்ளை … லெப்டினெண்ட் காப்டன் பேசுகிறேன்… ஓவர்”

“நாயர்.. ஓவர்”

“என்ன நிலைமை”

“பன்றிகள்”என்றான் சுருக்கமாக.

“கண்ணிவெடிகளை பன்றிகள் வெடிக்கவைத்துவிடக்கூடாது…”’

” இந்த ஆசாமிகள் அதிக எடையில்லை”

“பன்றிகள் எடையுள்ளவை”

“ஆமாம்.ஆனால் அவற்றுக்கு நான்கு கால்”

“வெல்…இது இரண்டுகால்பன்றிகளுக்கு மட்டும்”

நாயர் ” கண்டிப்பாக”என்றான் சிரித்தபடி.

நான் எழுந்தேன். ”ஒரு முறை ரவுண்ட் அடித்துவிட்டு வருகிறேன். பையன்கள் தூங்கிவிடக்கூடாதல்லவா?”

“எப்போது தாக்குதலை எதிர்பார்க்கிறீர்கள்?”

“அனேகமாக அதிகாலையில்….” என்றேன். சிகரெட் பற்றவைத்தபடி நடந்தேன்.

காவலர்களின் வணக்கங்களை வாங்கியபடி நடந்தேன்.டவர் மீது சிகரெட் புள்ளி தெரிந்தது

“டவர் 2 ”என்றேன்

“சார்”

“டவர் மீது சிகரெட்  நெருப்பு தெரிகிறது. பைனாகுலரில் நன்றாக தெரியும்… ”

“சாரி சார்’

“அணைக்கவேண்டாம். மறைத்துக்கொள்”

“சார்”

“யாரது ? சிராஜ்? ”

“எஸ் சார்”

“விஷ் யூ” என்றேன்.

என் கால்கள் அவள் அறைப்பக்கமாகவே கூட்டிச்சென்றன. உள்ளே நுழைந்தேன். அவள் கட்டிலில் படுத்துக்கிடந்தாள். கத்தி நான் வைத்த இடத்திலேயே இருந்தது.

என்னைக் கண்டதும் கண்களைத் திறந்தாள்.ஆனால் எழவில்லை.

கத்தியை எடுத்தேன் ” உனக்கு கத்தி வேண்டாமா?”என்றேன்

“வேண்டாம்”

“ஏன்?”

“அதனால் பிரயோசனமில்லை”

”ஆனால் கத்தி இருக்கும்போதுதான் நீ கூர்மையாக இருக்கிறாய்…” கத்தியை அவளருகே வைத்தேன். ” இப்போது நனைந்த பூனை போலிருக்கிறாய்”

நான் திரும்பி வாசலைநோக்கி நடக்கும்போது அவள் ” ஒரு நிமிஷம் காப்டன்  ” என்றாள்

“லெ·ப்டினெட்ண்ட்”’

“ஓகே. ஸம் ஷிட்” என்றாள் ”நீ என்ன நினைத்திருக்கிறாய்? நீ ஒரு முத்தம் கொடுத்ததனால் நான் உன்னை உள்ளூர காதலிக்க ஆரம்பித்திருப்பேன் என்றா?”

நான் அயர்ந்து போனேன். சட்டென்று கோபத்துடன் திரும்பி ”யூ…”என்றேன்

” நீ ஒரு இந்திய பாஸ்டர்ட்… நான் ஒரு நாயை காதலித்தாலும் உன்னைப்போன்ற ஒரு கறுப்புக் குரங்கைக் காதலிக்க மாட்டேன். புரிகிறதா?” அவளது முகத்திலிருந்த வெறுப்பு என்னை பதறச்செய்தது.

“வாயை மூடு” என்றேன் நரம்புகள் புடைக்க .

“ஆகவே நீ அடிக்கடி இந்தமாதிரி ரொமாண்டிக்காக நடந்து இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை. பீட் இட்”

நான் கண்களில் கண்ணீர் வரும் வரைக் கூசி நின்றேன். பிறகு சரசரவென்று இறங்கி வெளியே நடந்தேன்.  முகாம் படிகளில் நின்றபடி இருட்டில் தெரிந்த மலைகளை நோக்கிக் கொண்டிருந்தேன். புகைபிடித்தேன். சுற்றிசுற்றி நடந்து களைத்தேன். அதே சொற்கள் ஓயாது காதில் விழுந்தன. கறுப்புக்குரங்கு… பீட் இட் .கறுப்புக்குரங்கு… பீட் இட் .

சிகரெட் நுனியை என் கையில் வைத்து அழுத்தினேன். வலி நெற்றி நரம்புகளை துடிக்கசெய்தது. வலியை அகம் உணர்ந்தது, ஆனால் அது எண்ணக்களை மீட்கவில்லை. அது வேறு எங்கோ சென்றது.

நேராக என் அறைக்குச்சென்று மீண்டும் ரம் குடித்தேன். புதிய சிகரெட் பாக்கெட் எடுத்துக் கொண்டேன்.

சிக்னல் அறையில் இருந்து மாணிக்கம் என்னை அழைத்தான். ”லெப்டினெண்ட் மேஜர்…. லைனிலே  நாயர் . அவசரச்செய்தி”

நான் சிக்னல் அறைக்கு ஓடினேன் .நாயர் தொடர்பில் இருந்தான். ”காட் ·ப்ளை . காப்டன் ஹியர்.”

“நாயர். ஓவர்” என்றது குரல் ” சார் நாங்கள் இங்கே பிணங்களைப் பார்க்கிறோம்.. நம்முடைய ஆட்கள். நான்கு உடல்கள் ”

“யார்?”என்றேன் என் மூச்சு அடைபட்டது.

”காப்டன் சௌகான். அவரது தலை இல்லை.”

“மை காட்! தலை?”

“வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. நான்குபேருக்கும் தலை இல்லை. ”

நான் நாற்காலியில் அப்படியே பின்னால் சரிந்தேன்

“லெஃப்டினென்ட்”

“எஸ்”

“இவர்கள் கொல்லப்பட்டு ஒருநாள் தாண்டியிருக்கலாம். பிணம்  அழுக ஆரம்பித்துவிட்டது”

“ஓக்கே” என் நிதானத்தை மீட்டிருந்தேன்.

“பிடிபட்ட உடனே இவர்களைக் கொன்றிருக்கிறார்கள். ஆதாரத்துக்கு தலைகளை மட்டும் கொண்டுசென்றிருக்கிறார்கள்….”

”ஓக்கே. உடனே திரும்பி வந்துவிடுங்கள்..உடனே..சீக்கிரம்”

நான் பெருமூச்சுடன் சாய்ந்து ஒரு கணம் அமர்ந்தேன்.

“ஏன் அவர்கள் பிணைக்கைதிகளை உடனே கொல்ல வேண்டும்?” என்றான் மாணிக்கம்

“அவர்கள் அதிகம் பேர் இருந்திருக்க மாட்டார்கள். இவர்களைத் தூக்கிச்செல்ல முடியாமல் கொன்றிருப்பார்கள்.”

“பாஸ்டர்ட்ஸ்… கொன்றுவிட்டு வந்து உயிருடன் வைத்திருப்பது போல பேரம்பேசுகிறார்கள்”

சட்டென்று என் அடிவயிற்றிலிருந்து ஆவேசம் எழுந்தது. துப்பாக்கியை உருவியபடி எழுந்தேன்.

மாணிக்கம் என்னைப்பிடித்தான் ”சார் …ப்ளீஸ்”

அவனை உதறித்தள்லிவிட்டு இருளில் இறங்கி ஓடினேன். அவளது கூடாரத்தில் ஆவேசமாக நுழைந்தேன். வாசலில் நின்ற ஜவான் என்னை வியப்புடன் நோக்கினான்.

உள்ளே அவள் என் வேகத்தைக் கண்டதும் பாய்ந்து எழுந்தாள். நான் என் பெரெட்டாவை நீட்டினேன் அதன் லாக் கிளிக் என்று திறந்தது.  மூச்சிரைத்தேன். கண்களை மூடியபடி சடசடவென்று சுட்டேன்.

கூடாரத்துணி கிழிபட குண்டுகள் சென்றிருந்தன. அவள் சுருண்டு அப்படியே அமர்ந்திருந்தாள். விழித்த கண்கள். நடுங்கும் கைகளால் முகம்பொத்தியிருந்தாள்.

நான் மூச்சிரைத்தபடி வெளியே வந்தேன். சுப்புக்கண் தியாகராஜன் ஸ்ரீகண்டன் என முகங்கள் என்னை நோக்கின.

தியாகராஜன் “காப்டன்!” என்றான் பீதியுடன்

“சுடவில்லை. என்னால் முடியவில்லை. ”என்றேன் தளர்வுடன். துப்பாக்கியை ஓங்கி கீழே வீசினேன். லான்ஸ் நாயக் ஸ்ரீகண்டன் சற்று முகம் தெளிவது தெரிந்தது. பிறரும் இறுக்கம் தளர்ந்தனர்.

நான் நேராக சிக்னல் அறைக்குச்சென்று அமர்ந்துகொண்டேன். ஸ்ரீகண்டன் வந்தான் ”அவள் அரண்டு போய்விட்டாள். பேச்சே இல்லை” என்றான்

நான் தலையசைத்தேன்.

ரிசிவர் உறுமியது . ”எஸ் லெஃடினென்ட் ஹியர் ஓவர் ”

“லெஃடினென்ட், நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் எங்களுக்குப் பின்னால் மிக அருகே வந்துகொண்டிருக்கிறார்கள்…”

“சீக்கிரம் வந்துவிடுங்கள்” என்றேன். ரிசீவரை பொத்தியபடி ” ஆபரேஷன் ஆன்” என்று திடமான மெல்லிய குரலில் ஆணையிட்டேன். ரிசிவரில் ”நாயர்!” என்றேன்

“அவர்களை பார்க்க முடிகிறது. நிறையபேர். நிறைய ஆயுதங்கள்!”‘

வெளியே அலாரங்கள் அடித்தன. ஆட்கள் ஓடும் உரக்கப்பேசும் ஒலிகள். பரபரப்பு.

“லெஃடினென்ட், அவளைக் கொன்றுவிடலாம். இந்த பாஸ்டர்ட்ஸ் அவளை கொண்டு போக நாம் விடக்கூடாது” நாயர் சொன்னான்

“எஸ்”

“கொல்ல வேண்டியதுதான். உடனடியாக” நாயர் குரலில் வெறுப்பும் கோபமும் இருந்தன.

“நீ வந்துசேர்”

“பிள்ளைவாள் இதில கருணைக்கே இடமில்ல. அவ ஒரு நஞ்சு .நம்மள கூண்டோட ஒழிக்க வந்தவ. கில் ஹெர்”

“யூ கம் ஹியர் மான்”

“அவங்க கண்ணிவெடிகள் கொஞ்சநேரம் தடுக்கும்…அதுக்குள்ள வந்திடறேன்…சான்ஸ் இருக்கு”

”வா . ஓவர்” துண்டித்தேன்.

வெளியே மணல்மூட்டைகளுக்கு அடியில் எந்திரத்துப்பாக்கிகள் அருகே ஆட்கள் அமர்ந்தார்கள். குண்டுகளை தூக்கி கொண்டுபோய் குவித்தார்கள். விசில் ஒலியும் கட்டளைகளுமாக தியாகராஜனும் ஸ்ரீகண்டனும் ஓடினார்கள்.

“ஸ்ரீ” என்றேன்

“ஏஸ் சார்”

“சத்தம் அதிகம் கேட்கக் கூடாது. நாம் தூங்குவதுபோல இருக்கவேண்டும்”

“எஸ் சார்”

”இந்தப்பெண்ணுக்கு இன்னும் மூன்று பேரை காவல் போடு”

“எஸ் சார்”

என் கை ·போன் ஒலித்தது. நாயர்

” பிள்ளைவாள், அவங்க எங்கள பாத்தாச்சு…. ”

காட்டில் மறுகணம் ஏகே47 ஒலிகள் புறாச்சிறகுகள் அடித்துக் கொள்வதுபோல எழுந்தன. காட்டுப் பறவைகள் கலையும் ஒலி. எதிரொலிகள். வானத்தில் மெல்லிய ஒளி அதிர்ந்தது. கண்ணிவெடி வெடிக்கும் குப் குப் வெளிச்சம் காட்டுமரங்களின் இலையடிப்பகுதிகளை காட்டி அணைத்தது. மெல்லிய அலறல்கள் சில.

தொடர்ச்சியான இடியொலி போல குண்டுகள். வெடியோசைகள்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஜவான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். மெல்ல முகாம் முழுக்க சிகரெட்டுகள் ஒளிப்புள்ளிகளாகத் தெரிந்தன.

அரை மணிநேரம் குண்டுகள் ஒலித்தன. பின் அமைதி. என்னருகே நின்ற தியாகராஜன் என்னிடம் “காப்டன்… என்ன ஆச்சு ? நாயர்.. ?”

“இது போர்” என்றேன். அவன் முகம் இருளில் தெரியவில்லை

அமைதி நீண்டது. அமைதியாக காத்திருந்தோம். நான் நகம் கடிக்க கையை வாயருகே கொண்டுசென்று பின் தவிர்த்தேன். காற்று தொட்டபோதுதான் அந்தக்குளிரிலும் மெல்லிய வியர்வை உடலில் படர்ந்திருப்பதை உணர முடிந்தது.

சீறியபடி ஒரு கிரனைட் இருளில் வாணம் போல ஒளிசிதற தலைக்குமேல் சென்று விழுந்து வெடித்தது. வெடிபொருளின் குமட்டும் வாசனை. என் பதற்றம் விலகி உடல் முழுக்க ஒரு தினவும் வேகமும் ஏறின. போர். இதுவரை இத்தனை நேரான போரைப் பார்த்தது இல்லை. எத்தனை பயிற்சிகள். போலிச்சண்டைகள். இது உண்மையான போர். இங்கே சுட்டதும் சிரித்தபடி எழுந்து ”நீ அவுட்”என்று கூவ முடியாது. இது மரண விளையாட்டு. மரணம். மரணம்

மரணம்.எப்படி இருக்கும் அது? இல்லாமலாதல். எதுவுமே மிஞ்சாமலாதல். உடல், நினைவுகள், எண்ணங்கள். அம்மா அப்பா இல்லை. நண்பர்கள் இல்லை. நெல்லைத் தெருக்கள் இல்லை. கார்த்திகை சக்கரவர்த்தி திரையரங்குகள் இல்லை… சுசீலாவின் தித்திக்கும்  குரல்—.

ஏன் மரணத்தை இப்போது நினைக்கிறேன்? நான் கோழையா என்ன?ஆனால் என் மனதில் அப்போது அச்சமில்லை. ஒரு வித மரப்பு. சிந்தனைகளில் ஒரு நிதானம். மந்தம். இதோ அத்தனைபேர் நினைவிலும் ஓடுவது மரணம் அல்லாது என்ன?

தியாகராஜன் பைனாக்குலரில் பார்த்தபடி ” அது ஒரு எம் 203ஏ1 கிரனேட் லாஞ்சர் . பெரிய படை வந்திருக்கிறது” என்றான். ” ஒரு எம்கெ 19-3 40 எம் எம் கிரெனெட் மெஷின் கன்னை சிறு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள்….”

”அலெர்ட் ·பஸ்ட் லெவல் !”என்றேன்

மணல் மூட்டைகளை ஒட்டி இருந்த எம் 249 ஸ்க்வாட்  ஒன்று இலேசாக அசைந்த ஒலி மட்டும் இருளில் கேட்டது. நான் திரும்பி அதைப்பார்த்தேன். எ·ப் என் மேனு·பேக்சரிங் என்ற  எழுத்துக்களை உலோக ஒளியாகப் பார்த்தேன்.

இரண்டாவது கிரெனைட் மிக முன்னாலேயே விழுந்து வெடித்த ஒளியில் முகாமின் அத்தனைபேரும் பதுங்கியிருப்பது தெரிந்தது.

நான் அல்ட்ரா ரெட் பைனாகுலரால் பார்த்தவாறிந்தேன். டவர் மீதிருந்த சிராஜ் சட்டென்று ” ராஜர்.. மென் கமிங் ஓவர்”என்றான்

“செக் ரேஞ்ச் ஓவர் ”

“ரேஞ்ச் ஆல்ரைட் ஓவர்”

”செக் ஹிம்  ஓவர்”

”அவன் கையில் வெள்ளை கொடி வைத்து ஆட்டுகிறான்”

நான் தலையசைத்தேன். ஆமாம், தூது. சூழ்ந்து கொண்டு எங்களையே பணயக்கைதியாக்கப் போகிறார்கள்.

சில நிமிடங்களில் அதே கிழவன் வாசலுக்கு வந்தான். கதவை சற்றே திறந்து தியாகராஜன் சென்று கிழவனைக் கூட்டிவந்தான்.

”நீயா?” என்றேன்

“செய்தி…எங்கள் காப்டன் பேச விரும்புகிறார்.” அவன் ஒரு ஸ்பீக்கரை நீட்டினான்.

நான் அதை வாங்கி ஆன் செய்து காதில் வைத்தேன். ” நான் கமாண்டர்  பேசுகிறேன்”

“நீ என்ன பதவி?”என்றது கிழக்குரல்

”லெப்டினெண்ட், பொறுப்பு  காப்டன்”

“கவனி. உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நீங்கள் அங்கே வெறும் நாற்பத்தேழுபேர். நான்கு கிரானேட் லாஞ்சர். இரண்டு சப் மெஷின் கன். கொஞ்சம் ரைபிள்கள். ஓட்டை கார்பைன்கள் சில… நாங்கள் கிட்டத்தட்ட நாநூறு பேர் இருக்கிறோம்…”

“சரி, நான் பாதியை கணக்கு வைக்கிறேன்”

“உன் விருப்பம். அவளை உடனடியாக எங்கள் ஆளிடம் அனுப்பு. ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு பின்வாங்கு. உங்கள் உயிர் பிழைக்கும்..”

”நீங்கள் யார் . முதலில் அதைச் சொல்லுங்கள்”

” கமாண்டர் , செகண்ட் கம்பெனி , ஏ.எல்.எ·ப்”

“கமாண்டர் ஏ.எல்.எ·ப் , ஸாரி,  நாங்கள் இங்கே உயிர்பிழைக்க வரவில்லை. போரிட வந்திருக்கிறோம்”

“இதோபார் நீ விளையாடுகிறாய். உனக்கு அனுபவம் போதாது…”’

“பரவாயில்லை கமாண்டர். கற்றுக் கொள்கிறேன். ”

“அவளுக்கு சிறு தீங்கு நடந்தாலும்கூட உங்கள் தலை ஒன்றுகூட மிஞ்சாது”

“நீங்கள் ஏற்கனவே நான்கு தலைகளை வெட்டிவிட்டீர்கள் கமாண்டர்”

மறுமுனையில் அமைதி

பிறகு நிதானமான குரல் ”அவளை என்ன செய்தீர்கள்?”

“கொன்றுவிட்டோம். உடனடியாக”

கிளிக் என்று ரேடியோ அணைந்தது

நான்கிழவனைப் பார்த்தேன். அவன் முகத்தில்  எந்த அசைவும் இல்லை.

”தியாகு.”

“எஸ் சார்’

“டேக் கேர் ஆ·ப் ஹிம்.”

தியாகராஜன் இழுத்த போது அவன் உயிரின் இயல்பால் சற்று திமிறினான். மறுகணமே தளர்ந்த கால்களுடன் சென்றான். அப்பால் குண்டு வெடிக்கும் ஒலி கேட்டது.

அப்பால் காட்டில் அவ்வொலி கேட்டிருக்கும். சடசடவென கிரனைட்டுகள் கிளம்பி வந்துவிழுந்து வெடித்தன

”ராஜர். ·பைன் பாயின்ட். குளோஸிங் சார். ஒவர்” என்றான் சிராஜ்.

“ஷ¥ட்” என்றேன் சுருக்கமாக.

எங்கள் எம்கெ 19-3 40 எம் எம் கிரெனெட் லாஞ்சர்கள் திம்தித்திம் என்று அதிர ஆரம்பித்தன.  முதல் டவரிலிருந்த இயந்திரத்துப்பாக்கியின் சிதறும் ஒளியில் நான் சிராஜை பார்த்தேன்.  கையில் சிகரெட் இருந்தது.

வெளியே இருந்து குண்டுகள் சரம் சரமாக வந்து உள்ளே விழுந்து வெடித்தன. புகையும் ஒளியும் சூழ்ந்த சூழலில் நான் குனிந்து ஓடி சிக்னல் அறையை அடைந்தேன். மாணிக்கம் சண்முகம் இருவரும் சிக்னலில் இருந்தார்கள்.

மாணிக்கம் ”சார், இம்பால் சிக்னல் கிடைத்தது. அவர்கள் பேசுவது கேட்கவில்லை. செய்தியையும் அவளது புகைப்படத்தையும் அடையாளங்களையும் அனுப்பிவிட்டேன் ”என்றான்

நான் அதை கவனிக்கவில்லை ”இனி அதனால் அதிக பலன் இல்லை ”என்றேன் ” இங்கே இரண்டுபேர் போதும் மீதி சிக்னலர்ஸ் களத்துக்குப்போங்கள்”என்று ஆணையிட்டேன் ” சப்ராசிகளும் டபேதார்களும் குண்டுகள் தூக்கட்டும். யாருக்கும் விலக்கு இல்லை” சிக்னல்கள் அலைபாய்ந்தன.

வயர் லெஸ் ரேடியோவில் பொதுக்கட்டளையிட்டேன் . ”இடைவெளியே விடாது சுடுங்கள். கார்ப்பெட் த ·பீல்ட்”

மீண்டும் ஓடி மணல் மூட்டைகளுக்கு அடியில் பதுங்கி களத்தைப் பார்த்தேன். படுத்தபடி நிழல்கள் போல அவர்கள் தொடர்ந்து முன்னேறுவது தெரிந்தது. கடுமையான உயிர்ச்சேதம் இருக்கும். ஆனால் அவர்கள் வெறிகொண்டவர்கள். குண்டுகளின் ஒளியில் அவர்களை ஒருகண கனவுத்தோற்றமாக கண்டேன். கையில் ரை·பிள்களுடன் தவழ்ந்து வந்தனர். முதலைகள் போல. ஆலங்கட்டி மழை போல குண்டுகள் மணல் மூட்டைகளையும் கூடாரத்துணிகளையும் தாக்கின. காற்றில் சிய் சிய் சிய் என்று பறந்தன.  என்னருகே நின்ற ஜவான் சரிந்தான். டவரில் இருந்த கிரனைட் லாஞ்சர்  அமைதியானது.

” டவர் டூ டெட் . ரிப்ளேஸ் . ஓவர்” என்று ரேடியோவில் ஆணையிட்டேன்.

இன்னொருவன் டவரில் ஏறினான். அவனும் குண்டடிபட்டு விழுந்தான்.

திடீரென்று பின்பக்கமும் குண்டுகள் வெடித்தன .

தியாகராஜன் “காப்டன்! பின்பக்கமும் வருகிறார்கள்”

” கவர் பேக்ஸைட். கார்ப்பெட் இட்” என்று ஆணையிட்டேன். ” இது நம் கடைசிப்போர். கடைசி மூச்சு! ”

வெறிபிடித்தது போலச் சுட்டார்கள். வெடியோசை அந்த இடம் உருவானபிறகு எப்போதுமே அப்படி ஒலித்துக் கொண்டிருந்தது போலக் கேட்டது. புகை மூச்சில் நான் கமறினேன்.

கால்மணிநேரம் மிகக் கடுமையாக போராடினோம். ஆடர்லிக்கள் குண்டுகளுடன் ஓட ஷ¥ட்டர்கள் இடைவிடாது சுட குண்டுபட்டு விழுந்தவன் இடத்தில் அடுத்தவன் உடனே அமர்ந்துகொள்ள உச்ச கட்டப் போர் .ஒரு சிறு கம்பெனிக்கு சாத்தியமான அதிகபட்சப் போர்.

பின்பு அமைதி. குண்டுகள் வருவது நின்றது.

காற்றில் மூட்டம் கலைந்தது. நான் தலைதூக்கிப் பார்த்தேன். ஆங்காங்கே புகை எழுந்தது. ஐந்து கூடாரங்கள் எரிந்துகொண்டிருந்தன. அதன் ஒளியில் பிணங்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டேன்.

“காப்டன் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்”

“இல்லை. அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் மீண்டும் வருவார்கள். அவர்கள் முன்னணிப்படைக்கு கடுமையான சேதம் இருக்கலாம்” என்றேன்”இறந்தவர்களை அகற்று. புதிய குண்டுகளைச் சேர்த்துக்கொள். வேகம்”

மீண்டும் தாக்குதல். இம்முறை மிகத்தீவிரமாக . என்னைச்சுற்றி குண்டுகள் வெடித்தபடியே இருந்தன. எல்லா கூடாரங்களும் எரிந்தன. எங்கும் புகை. புகைக்குள் ரைபிள்களும் கிரனைட் லாஞ்சர்களும் சுடும் ஒளிப்பூ மின்னல்கள். சுடுபவனின் சட்டையும் விலாவும் தெரிய கிழிபடும் இருள் திரை. நான் மணல் மூட்டைச்சுவர் மீது தவழ்ந்து வெளியே பார்த்தேன். முதலைக்கூட்டம் மிக நெருங்கிவிட்டது .வரும்வழியெங்கும் சரிந்த மரத்தடிகள் போல பிணங்கள்.

நான் மைக்கில் ” ஸ்ரீ.. இது காப்டன்.. ஸ்ரீ ”என்றேன். பதில் இல்லை. புகை காற்றில் விலகியபோது ஒரு கணத்தில் என்னைச்சுற்றி பிணங்களாக கிடப்பதைக் கண்டேன்.

நான் சிக்னல் அறை நோக்கி ஓடினேன். மாணிக்கம் தரையில் கிடந்தான். தரையெல்லாம் கரிய பாலிதீன் விரித்தது போல உலர்ந்த ரத்தம்.  கூடாரம் கிழிபட்டு காற்று துளைகள் வழியாக உள்ளே சீறிக் கோண்டிருந்தது. சண்முகம் ரிசீவரில் இருந்தான். நான் மைக்கை எடுத்தேன். ”ஜெனரல் லௌட் ஸ்பீக்கர்! ”என்றேன். அதை பரிசோதித்துவிட்டு கூவினேன் ” அட்டென்ஷன்! திஸ் இஸ் காட் ·ப்ளை கமாண்டர் நெல்லையப்பன். .. அட்டென்ஷன்!  இது உத்தரவு. டவர் மீதிருப்பவர்களைத் தவிர பிறர் உடனடியாக தியாகராஜன் தலைமையில் ஒன்று சேருங்கள். முகாமை விட்டுவிட்டு ஒன்றாக தப்பி வெளியேறுங்கள். ” என்றேன்

தியாராஜன் கரியும் புகையுமாக உள்ளே ஓடி வந்தான். ”காப்டன்”’ என்று மூச்சிரைத்தான்

“அவர்கள் எண்ணிக்கையில் அதிகம். நாம் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது. அவர்களிடம் சரணடைவதில் அர்த்தமில்லை.சரணடைந்தவர்களைக் கொல்கிறார்கள். ” என்றேன் ”நீங்கள் நேராக படகுத்துறைக்குப் போங்கள். பிளாஸ்டிக் படகுகள் புதைத்துவைத்திருக்கும் இடம் உனக்குத்தெரியும்”

“காப்டன் நீங்கள்? நீங்கள் இங்கே…”

”அவர்கள் வரும்போது ஆயுதக்கிடங்கை எரிக்கவேண்டும். நான் இங்கே இருக்கிறேன் ”

“அதை நான் செய்கிறேன் காப்டன்”

“நான்தான் இதன் கமாண்டர்” என்றேன் நிதானமாக

தியாகராஜன் “ஆனால்…”என்றான்

“இது ஆணை”என்றேன் சுருக்கமாக.

“எஸ் சார்”

“தியாகு”

“எஸ் சார்”

“போவதற்குள் அவளை சுட்டுவிடு” நான் அவனைப் பார்க்கவில்லை

“எஸ் சார்” அவன் குரலில் ஓர் இறுக்கம்.

அவன் வெளியேறினான்.நான் நெற்றியை கையால் வருடினேன். என் உடல் அதிர்ந்தபடி இருந்தது.

சண்முகம் ”ஹலோ ஹலோ காட்ப்ளை காட் ·ப்ளை ஹியர்….ஓவர்” என்றான் . அது கரகரத்தது. அவன்” ஹலோ! ஹலோ” என்றபின் ‘ஷிட்”என்றான் ”போய்விட்டது”

நான் “சரி நீயும் தப்பிச் செல்” என்றேன்.ஏன் குரல் அடைத்திருந்தது.

“சர்” என்றான்

சட்டென்று ரிசிவர் உயிர்பெற்று கரகரவென்று ஏதோ சொன்னது.

“என்ன?”என்றேன்

“சார் அவள் கே என் யூ தலைவர் நேபா குமாரின் மகள். அவளை கொல்லாமல் எப்படியாவது ஹெட் குவார்ட்டர்ஸ¤க்கு கொண்டுசெல்லவேண்டுமாம்”

நான் ” மை காட்!” என்று வீரிட்டபடி வெளியே ஓடினேன். அவளது கூடாரம் தரையில் கிடந்து எரிந்து கொண்டிருந்தது. அதனருகே அவள் இல்லை. நான் ”தியாகு! ”என்று கூவினேன்.

சற்று தள்ளி அவள் தரையில் அமர்ந்திருந்தாள். அருகே துப்பாக்கியுடன் தியாகராஜன். அவன் திரும்பிப்பார்த்தான்.

“சுடாதே” நான் கூவினேன்.

அவன் ஆறுதல் கொள்வது தெரிந்தது.

”அவள் ஏ.எல்.எ·ப் தலைவரின் மகள். கொல்லாமல் கொண்டுசெல்ல உத்தரவு”

நான் வாய் மூடுவதற்குள் குண்டுகள் பெய்தன. தியாகராஜன் முழங்கால் ஊன்றி விழுந்தான். என் தோளில் ஒரு வலிமையான உதையை உணர்ந்தேன். புஜம் முற்றாக செயலற்றது.வலியே இல்லை. ஆனால் சூடான ரத்தம் ஊற்றுபோல கைகள் வழியாகக் கொட்டியது. நான் கீழே விழுந்தேன்.

மண்மூட்டைகளை தாண்டி அவர்கள் வேட்டைநாய்கள் போல பாய்ந்து உள்ளே வந்தனர். துப்பாக்கிகள் சீறும் ஒலியும் ஒளியும் எங்கும் நிறைந்தன. ஒரு கணம் நான் எல்லாம் முடிந்தது என்று செயலற்றிருந்தேன். பின்னர் ஆவேசத்துடன் எழுந்து அவளை பிடித்து இழுத்தேன். என் கைத்துப்பாக்கியை அவள் கழுத்தில் வைத்தேன். அவளை இழுத்தபடி சரிந்த கூடாங்களின் மறைவின் வழியாக ஓடினேன்.

அதை அந்த நேரத்து களேபரத்தின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அந்த இடத்தை புரிந்துகொண்டு ஆக்ரமிக்க சில நிமிடங்கள் எடுத்தன. மேலும் முதலில் வந்தவர்கள்  வெறும் போர்வீரர்கள். ஆணையிடுபவர் எவருமில்லை. அந்த குழப்பத்தில் புகையில் இருளில் நான் அவளுடன் வெளியே ஓடினேன். பதுங்கியும் விழுந்தும் ஓடி புதர்கள் நடுவே மறைந்துகொண்டு பார்த்தேன். அவர்கள் கிடப்பவர்களைச் சுட்டார்கள். பதுங்கியிருந்தவர்களையும் எழுப்பி சுட்டுத்தள்ளினார்கள். கூடாரங்களை தூக்கி தேடினார்கள். அவள் இல்லை என்பதை சில கணங்களில் கண்டுபிடிப்பார்கள்.

நான் என் கையிலிருந்த ரிமோட் கன்ட்ரோலை அழுத்தினேன். பேட்டரியின் எலக்ட்ரா¡னிக் சிக்னலர் ஆணையை வாங்கி மெல்லிய ஒளியுடன் ஒரு குண்டை வெடிக்கச்செய்ய தொடர்ந்து மண்ணுக்கடியில் தோண்டி அமைக்கப்பட்டிருந்த ஆயுதக்கிடங்கு பேரொலியுடன் வெடித்தது. அதன் மேலிருந்த இரும்புத் தகடுகளும் பலகைகளும் வானில் எழுந்து புகையுடன் சுழன்று மண்ணை நோக்கி இறங்கின.புகை எங்கும் சூழ்ந்தது. கலவர ஒலிகள். ஊடாக குனிந்து  அவளை இழுத்தபடி ஓடினேன்.

நான் அவளுடன் மலைச்சரிவில் ஏற ஆரம்பித்தேன். அவர்கள் மலைச்சரிவில் ஆறு நோக்கி நான் இறங்குவதைத்தான் எதிர்பார்ப்பார்கள். அந்தப்பகுதியில்தான் தேடுவார்கள். என் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. கை கனமாகத் தொங்கியது. மயக்கம் வந்து உடல் தள்ளாடியது. என் இடையில் பெரெட்டா இருந்தது . கையில் எம்4 கார்பைன் வைத்திருந்தேன்.

நான் அவளை இழுத்தபடி காட்டுக்குள் ஊடுருவிச்சென்றேன். அவள் சட்டென்று திமிறினாள்

“வா..”என்றேன்

“நோ…”என்று பேச வாயெடுத்தாள்.

நான் சட்டென்று அவளை அடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் மீண்டும் ஆவேசமாக அடித்து வீழ்த்தினேன். ”நாயே நாயே செத்துப்போ செத்துப்போ”என்று உறுமியபடி அடித்தேன்.

பின்பு ”ஒரு சொல் பேசினால் கொன்று விடுவேன்…வா” என்று மூச்சிரைத்தேன்.

அவள் வாயில் ரத்தத்துடன் எழுந்தாள். தூக்கி இழுத்தபடி காட்டுக்குள் சென்றேன்

மேலும்

முந்தைய கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை:கடிதங்கள்