ஆசிரியருக்கு வணக்கம் ,
சில நாட்கள் முன் லங்காதகனம் படித்தேன்.
ஆசான் அனுமனாக மாறிப் பறக்கும் அக்கணம் , படிக்கும்போது ஒரு புல்லரிப்பு..அந்த உணர்வை ,புல்லரிப்பை நான் அசாதரணமாக உணர்ந்தேன்.
என் மகன் பிறந்து ,அவனை நான் முதல் முதலில் பார்த்தபோது எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.அது போல.
என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் ,ஒரு முறை தன் வயது ,தகுதி ,இடம் என அனைத்தையும் மறந்து ,கல்லூரியின் சிறப்பை பத்தி ஒருவரிடம் காம்பஸ் இண்டர்வியுக்கு வரச் சொல்லிப் பேசியபோது நான் அவரிடம் ஏன் நீங்கள் இவ்வளவு இறங்கி செல்கிறீர்கள் எனக் கேட்டேன் .
” என் பணி இது தான் .அது என்னிடம் உள் புகுந்து விட்டது.என் சிறப்போ ,தகுதியோ எனக்கு நினைவில்லை .உண்மையில் இந்தப் பணி தான் என்னை இயக்குகிறது “என்றார்.
எனக்கு லங்கா தகனம் ஆசான் என் ஆசிரியர் தான் …
நன்றி
கார்த்தி
அன்புள்ள கார்த்தி
நன்றி
அந்தக்கதை உபாசனையைப்பற்றியது. கலையை தொழிலை எதையும் உபாசனையாக ஆக்குவதைப்பற்றியது. உபாசனைசெய்யப்படும் விஷயாமாக நாம் ஆகிவிடுகிறோம். அதன்பின் நாம் எதையும் செய்யவேண்டியதில்லை. அதுவே மானுட இருத்தலின் உச்சம்
ஆனால் அதற்கு தன்னை இழக்கவேண்டியிருக்கும். ஆமாம், உப்புப்பொம்மை கடலை அறிவதைப்போல
ஜெ