திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் இடையில் பத்து ஆண்டுகள் தமிழ் நூல்கள் படிக்காமல் இருந்து மீண்டும் ஆரம்பித்தேன். நண்பர்களிடம் கேட்டபோது யானை டாக்டர் படிக்கச் சொன்னார்கள். இணையத்தில் பதிவிறக்கிப் படித்தேன். என்ன ஒரு அனுபவம்! கதையில் தெறித்த உண்மை, இறுதியில் அது ஒரு நிஜ மனிதனின் கதை என்பதில் என்னைக் கலக்கி விட்டது. யானைகள் குறித்த எனது பார்வை மாறிப் போனது. அதன் பின் அறம் முழுப் புத்தகமும் வாங்கிப் படித்தேன். மூழ்கிப் போனேன். சர்வதேசக் குடிமகன், இலவசமாக உணவளிக்கும் ஓட்டல்காரர், வணங்கான் என்று விரிந்த மனிதர்கள் நான் காணாத உலகங்களைக் காட்டிப் போனார்கள்.
அனுபவங்களுக்கு நன்றி. உங்கள் எழுத்துப்பணி மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
– ஷான்
(கே. சண்முகம்)
www.kanavudesam.com
அன்புள்ள சண்முகம்
நன்றி. நான் அக்கதைகளை எழுதிய காலம் இப்போது நினைவில் மிகவும் பின்னால் சென்றுவிட்டது. அவை எனக்கு ஒருவகை நவீன புராணக்கதைகளாக இன்று நினைவில் நிற்கின்றன. உண்மையுடன் புனைவைக் கலந்து வாழ்ந்தவர்களை நிரந்தரமாக்கும் முயற்சி. வரலாற்றில் விழுமியங்களைக் கலக்கும் முயற்சி
ஜெ
ஜெ,
இன்றுதான் வெறும் முள் படிக்க நேர்ந்தது.
உள்ளூரில் இருப்பவர்கள் அறியாத தேவனின் பிறப்பை அறிந்து கொண்டு பல ஆயிரம் கல் தொலைவு கடந்து வந்து இவ்வளவு அருகில் நெருங்கி வந்த பின்னும் அவன் காலடிகளைத் தவறவிட வைத்த அந்த முள் எது?
மீண்டும் செழியன் திரும்பிப் போக முடியாமல் அங்கேயே உலர்ந்து அலைய நேர்ந்தது தற்செயல் என்று தோன்றவில்லை. அறிதலின் பாதையில் முன்னகர முடியவில்லை என்றாலும் ஒரு போதும் பின் செல்லவும் முடியாது. அதுதான் அவனைத் திரும்பும் வழியைத் தொலைத்து முப்பது வருடங்களாக அலைய வைத்துக் கொண்டே இருக்கின்றது போல, வெறும் முள்ளாகிப் போன வாழ்வு.
இவ்வளவு நாட்கள் காத்திருந்த பின் மீண்டும் கிடைக்கும் தரிசனமும் தவறவிடப்படுகின்றது. அந்தக் கால்கள் தயங்கி நிற்பவர்களுக்கும், வெறுமனே தெரிந்து வைத்துக் கொண்டவர்களுக்குமானது அல்ல. பற்றிக் கொள்ளத் தயாராக, துணிந்து நிற்பவர்களுக்கானது.
கலையும் ( தாமஸ் ) தத்துவமும் ( செழியன் ) சென்று அடைய முடியாத அதைத் தரிசிக்கும் கணம் எந்த யோசனையும் அற்று சட்டென்று ஆற்றில் பாய்வதைப் போலப் பாய்பவர்களுக்கு உரியது…
மூட்டையைத் தொலைக்காமல், ஆடைகள் கிழியாமல், ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் சென்று சேர முடியாத பாதங்கள் போல தேவனின் பாதங்கள்.
சங்கரர் கூப்பிட்டதும் ஆற்றில் காலை வைத்த பத்மபாதர் நினைவுக்கு வந்தார்.
ரத்தம் சிந்த நேர்ந்த பல நேரங்களில் கால்கள் மட்டுமே கண்களில் இருந்ததால் வலி தெரியாமல் நான் கடந்த பல முட்காடுகளை நினைவுபடுத்துகின்றது. இன்னும் வெகு தூரம் போக வேண்டும் ஜெ, வலிக்கும் கணங்களில் இந்தக் கதையை நினைத்துக் கொள்வேன்..
நன்றி ஜெ
ஏ.வி.மணிகண்டன்
அன்புள்ள மணிகண்டன்,
வெறும் முட்களாலானது நம் அகம். அவன் அதைக்கொண்டு ஒரு முள்முடியை சூடிக்கொண்டவன்
ஜெ