எழுத்து தொடாக் காவியம்

காவியம் என்ற வடிவம்தான் இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழின் தலைசிறந்த காப்பியம் கம்பராமாயணம். சிலம்புமுதல் சீறாப்புராணம் வரை வளமான காவியமரபு தமிழுக்குண்டு.

செவ்வியல் இலக்கியத்தின் அடித்தளமாக அமைவது நாட்டாரிலக்கியம் என்பார்கள். நாட்டாரிலக்கியத்தில் காவியங்கள் உண்டா? உண்டு. உலகம் முழுக்க நாட்டார்மரபின் பெருங்காவியங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலானவை பாணர்கள் போன்ற குலப்பாடகர்களால் வாய்மொழி மரபாகவே பாடிக் கற்பிக்கப்பட்டு வந்தவை.

மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் கூட வாய்மொழிமரபாக சூதர்களால் பாடப்பட்டுவந்த நாட்டார்காவியங்களின் செவ்வியலாக்கப்பட்ட வடிவங்கள்தான். நாட்டார்பாடல்களில் உள்ள முக்கியமான வடிவம் வீரகதைப்பாடல். இறந்த வீரனின் புகழைப்பாடுவது. அவனுடைய வம்சம், தனிப்பட்ட குணங்கள், அவனுடைய தியாகம் ஆகியவற்றை இப்பாடல்கள் பாடுகின்றன

சங்க இலக்கியத்தில் உள்ள பாடாண் என்ற திணை இந்த வீரகதைப்பாடல் மரபில் இருந்து உருவான செவ்வியல் வடிவம்தான் என்று கைலாசபதி, வானமாமலை போன்ற ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அந்தத் திணையில் இருந்தே தமிழின் காவிய மரபு உருவாகியது

அந்த நாட்டார் வீரகதைப்பாடல் அதிகமான காலப்பரப்புடன்,விரிவான வம்சகதைகளுடன் அச்சமூகத்தை முழுக்கத் தழுவியதாக நாட்டார்பாடகர்களால் உருவாக்கப்படுமென்றால் அது காவியத்தன்மை பெறுகிறது. அதையே நாட்டார்காவியங்கள் என்கிறார்கள்.

நாட்டார் காவியங்களையும் செவ்வியல் காவியங்களையும் ஒப்பிட்டால் நாட்டார் காவியங்களில் செவ்வியல் காவியங்களில் காணப்படும் தத்துவதரிசனம் இருப்பதில்லை என்பதே முக்கியமான வேறுபாடு என்று காணலாம். ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பது போன்ற ஒரு மையம் அவற்றில் இருப்பதில்லை. அந்த அடிப்படையில் கதையோட்டம் அமைக்கப்படாமையால் நாட்டார் காவியங்களின் கதாபாத்திர உருவாக்கமும் நிகழ்ச்சியோட்டமும் இலக்கற்ற வெறும் வாழ்க்கைச்சித்தரிப்புகளாகவே இருக்கும்.

தமிழ்நாட்டின் மையநிலம் வேகமாக செவ்வியல்மரபுக்குள் நுழைந்தது. ஆகவே நாட்டார்மரபு விளிம்புநிலை மக்களிடயே மட்டும் நீடித்தது. நாட்டார்மரபு விளிம்புநிலை மக்களிடையே நீடிக்கையில் அங்கே நாட்டார்காவியங்கள் உருவாகவோ நீடிக்கவோ முடியாது. ஏனென்றால் அந்த மக்களால் அந்தப்பாடகர் மரபைப் பேணி நிலைநிறுத்த முடியாது

கேரளம் மலைகள் நிறைந்த துண்டுபட்ட பகுதியாக இருந்தமையால் நெடுங்காலம் செவ்வியலாக்கத்தின் மைய ஓட்டத்திலிருந்து விலகிய பல பகுதிகளைக் கொண்டிருந்தது. அதேசமயம் நாட்டார்கலைகளைப் பேணி வளர்க்கும் நிதிப்புலமும் கொண்டிருந்தது. ஆகவே ஏராளமான நாட்டார் காவியங்கள் அங்கே வளர்ந்து இருபதாம்நூற்றாண்டை எட்டின. தெற்கன்பாட்டுகள் வடக்கன்பாட்டுகள் என இரு பெரும் பிரிவுகளிலாகக் கிட்டத்தட்ட நூறு நாட்டார்காவியங்கள் அங்கே உள்ளன.

அவற்றில் நீளமானதும் முக்கியமானதும் வடக்கன்காவியமான மதிலேரிக்கன்னி. தெற்கன்பாட்டுகளில் முக்கியமானது தோற்றம்பாட்டு என்ற வகையில் அமைந்த நல்லம்மைத்தோற்றம் பாட்டு. இது கண்ணகியின் கதை, ஆனால் சிலப்பதிகாரத்துக்கு முன்னர் வாய்மொழி மரபில் இருந்துவந்த அதே வடிவில் இன்றும் பாடப்படுகிறது. கேரளத்தின் இரு மாபெரும் கண்ணகி ஆலயங்களான கொடுங்கல்லூரிலும் ஆற்றிங்கல்லிலும் வருடம்தோறும் முழுமையாகவே பாடப்படுகிறது. பாடிமுடிக்க ஒன்பது இரவுகளாகும்

தெற்கன்பாட்டுகள் பல புராதன மலையாளத்தமிழில் அமைந்தவை. அவற்றில் இரவிக்குட்டிப்பிள்ளைப்போரும் தம்பிமார் கதையும் நீளமானவை, காவிய இலக்கணம் கொண்டவை. அவற்றை அச்சில்கொண்டுவர பெருமுயற்சி எடுத்தவர் குமரிமாவட்டத்து அறிஞரான ஆறுமுகப்பெருமாள் நாடார் .செவ்விலக்கியங்களுக்கு உ.வே.சாமிநாதய்யர் செய்ததை நாட்டார் இலக்கியங்களுக்குச் செய்தவர் ஆறுமுகப்பெருமாள் நாடார்.

ஆறுமுகப்பெருமாள் நாடார் எந்தவகை கவனிப்பையும் பெறவில்லை. நான் நடத்திய சொல்புதிது சிற்றிதழில் அ.கா.பெருமாள் அவர்களிடம் கோரி ஒரு கட்டுரை எழுதச்செய்து பிரசுரித்தேன். அதுவே அவரைப்பற்றிய முதல் கட்டுரை, ஒரே கட்டுரையும்கூட. திரிவிக்ரமன்தம்பி, அ.கா.பெருமாள் போன்றவர்கள் தெற்கன்பாட்டுகளைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் நாட்டார் காவியங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று வெங்கலராஜன் கதை. இது நாடார் சாதியின் நாட்டார் காவியம். இதை விரிவான குறிப்புகளுடன் தே.வே.ஜெகதீசன் பதிப்பித்திருக்கிறார் [பத்ரகாளியின் புத்திரர்கள். தமிழினி பதிப்பகம்]

ஆனால் அளவிலும் வீச்சிலும் தமிழின் முதன்மையான நாட்டார்காவியம் அண்ணன்மார்சுவாமி கதைதான். இது மிகப்பிரம்மாண்டமானது. கிட்டத்தட்ட கம்பராமாயணம் அளவுக்கு. ஆனால் காலப்போக்கில் சுருங்கி சிறியவடிவில் அச்சில் வந்தது. 1976 இல் பேராசிரியர் சக்திக்கனல் அதைப் பதிப்பித்தார்.

அண்ணன்மார்சுவாமி கதை அதன் முழுமையான வடிவில் நிகழ்ந்தபோதே ஒரு கனடியநாட்டு ஆய்வாளர் அதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். 19 நாட்கள் இரவுமுழுக்கச் சொல்லப்பட்ட கதை. அந்தக்கதையின் ஒலிவடிவை அவர் இணையத்தில் ஏற்றவிருக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அந்த கனடியப்பெண்மணி கொங்கு வட்டாரத்துக்கு வந்து காங்கேயம் அருகே ஓலைப்பாளையம் என்ற ஊரில் தங்கி அதைப்பதிவு செய்த வரலாற்றை அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்

கிட்டத்தட்ட ஒரு புதையுண்ட நகரம் மீட்டெடுக்கப்படுவது போன்ற நிகழ்வு இது. தமிழக நாட்டாரியல் ஆய்வாளர்களுக்கும் தமிழ்வரலாற்றாய்வாளர்களுக்கும் பெரிய ஒரு திறப்பாக இது அமையலாம்


டொரெண்டோ பெண்


அண்ணன்மார் கதை-பெருமாள் முருகன்

முந்தைய கட்டுரைகீதை இடைச்செருகலா? கடிதம்
அடுத்த கட்டுரைபடைப்புக்குள் ஆசிரியன்