அன்புள்ள ஜெயமோகன்,
பண்டைய தமிழ் நாட்டில் சோழ, பாண்டியர்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான செல்வ வளம் பொருந்தியதாக சேர நாடு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்களே. பண்டைக் காலம் தொட்டே உலகளாவிய வணிகம் இத்துறைமுகங்களின் வழியாக நடந்திருக்கிறது. அளவிட முடியாத பெரும் செல்வம் இத்துறைமுகங்கள் வழியாக சேர நாட்டினை வந்தடைந்திருக்கிறது.
தென்னிந்திய துறைமுகங்களில் சிறந்தது முசிறி (இன்றைய கரங்கனூர்). இத்துறைமுகக்தின் வழியே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஸ்லின் ஆடையும், அணிகலன்களும், மரகதம், முத்துடன், மருந்துப் பொருட்களும், நறுமணப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனுடன் சேர நாட்டில் விளையும் மிளகும் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது.
வரலாற்றாசிரியரான பிளினி (Pliny) காலத்தில் ஒரு ராத்தல் மிளகின் விலை 15 டெனாரி (Denari)யாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 15-ஆம் நூற்றாண்டு வரை மிளகு மேற்கத்திய நாடுகளின் உயர்ந்த வாழ்க்கைப் பொருள்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. மிளகு பெருவாரியாக சேர நாட்டிலிருந்து, அரேபியாவின் ஏடன் வழியாக ரோமுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. அந்த வகையில் பார்த்தால் மிளகு கேரளத்தின் உள் நாட்டில் இருக்கும் இன்றைய தலைசேரி போன்ற பகுதியிலிருந்துதான் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, கடலோரப்பகுதிகளைத் தவிர, கேரளத்தின் பிற பகுதிகளில் அரைப் பழங்குடி வாழ்க்கையே இருந்திருக்க வேண்டும் என்ற பி.கே. பாலகிருஷ்ணணின் கணிப்பு தவறான ஒன்றாகிறது.
சேர – ரோம வர்த்தகப் பாதுகாப்பின் பொருட்டு, இரண்டு ரோமப் படையணிகள் முசிறியில் நிறுத்தப்பட்டிருந்தன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக சேர நாடு இருந்திருக்கிறது. தங்கள் நாட்டின் செல்வ வளமும், தங்கமும் இந்தியாவிற்கு, குறிப்பாக சேர நாட்டிற்குச் சென்று சேர்வதாகப் புலம்பியிருக்கிறார் பிளினி.
Pliny says, Our ladies glory in hanging pearls suspended from their fingers, two or three of them dangling from their eras, delighted even with the rattling of the pearls as they knock against each other; and now at the present time the poor classes are even affecting them. They put them on their feet and that not only on the lases of their sandals but all over the shoes (Beginings of South Indian History).
Apart from the compliants of Petronious that fashionable Roman ladies exposed their charms much too immodest by clothing the “web of woven wind” as he called the muslins imported from India. Pliny says that India drained the Roman empire annually to the extent of 55,000,000 Sesterces sending in return goods which sold at hundred times value in India. He also says in another place, “This is the price we pay for our luxuries and our Women”.
பி.கெ. பாலகிருஷ்ணன் எந்த வெளி நாட்டுப் பயணியின் பயணக் குறிப்புகளைப் படித்தாரோ தெரியவில்லை.
இரண்டாவதாக, சேர அரசரைப் பற்றிய சித்திரம். அதிலும் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
கி.மு. 1225-இல் சேர நாட்டிற்கு வந்த சீனப் பயணியான சோ-யு-குவா (Chau-Ju-Kua) தான் கண்ட ஒரு சேர அரசனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்,
“அரசன் உடலைப் போர்த்தியிருக்கிறான். ஆனால் அவன் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை. தலையில் தலைப்பாகை தரித்து, இடையில் வெண்ணிற ஆடையை உடுத்தியிருக்கிறான். அவன் சில நேரங்களில் நீண்டு ஒருங்கிய கைகளையுடைய, வெண்ணிறமுடைய சட்டைகளை அணிவதுமுண்டு. அரசன் நகர்வலம் செல்கையில் யானையின் மீது அமர்ந்து செல்லும் வழக்கமுடையவன். அந்நேரங்களில் முத்துக்களாலும், இரத்தினங்களாலாலும் அலங்கரிக்கப்பட்ட பொன்முடியை அணிகிறான். அவனுடைய கைகளில் பொன் நாடா கட்டப்பட்டிருக்கிறது. காலில் பொன் சங்கிலி மின்னுகிறது.
அவனுடைய சின்னங்களில் சிவப்புத் தடியில் மயிலிறகு கட்டிய கொடி ஒன்று உள்ளது. அதனை இருபது பேர் சூழ நின்று காவல் புரிகின்றனர். அவனை திடகாத்திரமுள்ள ஐந்நூறு அன்னிய நாட்டுப் பெண்கள் காவல் புரிகின்றனர் (பண்டைய தமிழகத்தில் அரசர்களின் மெய்க்காவலர்கள் பெண்களாக இருப்பது மரபு). முன்னே செல்பவர்கள் நாட்டியமாடிக் கொண்டு வழிகாட்டி செல்கின்றனர். நாட்டியப் பெண்களுக்கு முன்னால் அரசனின் கருமத்தலைவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் துணியினால் செய்யப்பட்ட ஏணை போன்ற தூக்கில் இருத்தப்பட்டு பொன்னாலும், வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்ட கம்புகள் மூலம் சுமக்கப்படுகிறார்கள்”
இந்த சித்திரம், போர்ச்சுக்கல் வணிகரான Jan Huyghen van Linschoten அளிக்கும் சித்திரத்திலிருந்து முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. இது அனேகமாக வெள்ளைக்காரர்களுக்குக் கறுப்பர்களின் மீதிருக்கும் உயர்வு நவிற்சியின் காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். சோ-யு-குவாவின் காலத்திற்கும், லிங்கோஸ்டைன் காலத்திற்கும் இடைவெளி இருந்தாலும், அன்னியர் ஆட்சி வரும்வரை சேர நாடு வளமுடையதாகவே இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட சோழ, பாண்டிய போர்களினின்றும் சேரர்கள் விலகி இருந்தமை ஒரு முக்கிய காரணமாகக் கொள்ளலாம்.
எனவே, பி.கெ.பாலகிருஷ்ணனின் வாதங்கள் பொருளிழந்தது வியப்பளிக்கவில்லை.
நரேந்திரன்.
அன்புள்ள நரேந்திரன்,
பி.கெ.பாலகிருஷ்ணனின் நூலில் பன்னிரண்டாம்நூற்றாண்டு முதல் இங்கே வந்த பல பயணிகளின் குறிப்புகள் உள்ளன. அது மிக விரிவான ஆய்வுநூல். நீங்கள் குறிப்பிட்டது உட்பட எல்லாக் குறிப்புகளையும் அவர் பரிசீலனை செய்திருக்கிறார். நீங்கள் அதை நம்மூரில் சிலர் செய்வதுபோன்ற பொழுதுபோக்கு ஆய்வு என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அது கேரள வரலாற்றெழுத்தையே மாற்றியமைத்த நூல்.
பாலகிருஷ்ணனின் தரப்பு இது. அது அவ்வளவு எளியதாகத் தள்ளிவிடக்கூடியதும் அல்ல. கேரளம் இருபெரும் நிலப்பரப்புகளாக இருந்தது என்கிறார் அவர். கேரளக் கடலோரநிலம் கடல் வாணிபத்தால் ஓரளவு செல்வமீட்டியது. இது ஐந்து நகரங்களுடன் முடிந்துபோன விஷயம்.
கேரளத்தின் பெரும்பகுதி மலைக்காடுகளும் அரைச்சதுப்புநிலங்களும் மண்டிய நிலம். இங்கேதான் அதிகமான மக்கள் வாழ்ந்தனர். இப்பகுதி ஏராளமான ஆறுகளாலும் சிற்றோடைகளாலும் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிக்கப்பட்ட நிலங்கள் நடுவே எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. ஆற்றுவிலக்கு போன்ற ஆசாரங்கள் மூலம் மக்கள் ஆறுகளைக் கடப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே சிறிய தீவுக்கரைகளில் சிக்கி வாழ்ந்துவந்தார்கள் அவர்கள்.
கேரளத்துடன் வணிகம்செய்த ஐரோப்ப்பியர்களுக்கும் கேரளத்துக்கும் மொழித்தொடர்பே இருக்கவில்லை. கேரளத்தில் மிளகை வாங்கிய யவனர்கள் கேரளத்தில் விளையக்கூடிய சுக்கை அரேபியாவின் நறுமணவேர் என்று நம்பி அங்கே சென்று பற்பலமடங்கு அதிகவிலைகொடுத்து வாங்கிக்கொண்டு ஊருக்குத்திரும்பினர். இது அன்றைய செய்திப்பரிமாற்றம் எந்தநிலையில் இருந்தது என்பதைக் காட்டுகிறது. மலையாளமொழியிலோ கேரளப்பண்பாட்டிலோ யவனர்களின் பாதிப்பே கிடையாது
கேரளத்தின் உள்பகுதியில் விளைந்த மிளகு, இஞ்சி போன்ற நறுமணப்பொருட்கள் பதினேழாம் நூற்றாண்டு வரைக்கும்கூட விவசாயம்செய்யப்படவில்லை. காடுகளில் இயற்கையாக விளைந்தவை தேவைக்கேற்ப சேகரிக்கப்பட்டன. அவற்றை சேகரிக்கவும் ஆறுகளுக்குக் கொண்டுசெல்லவும் கேரளச்சமூகத்தில் எந்தச்சாதியும் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. பாண்டியநாட்டு வணிகர்கள் வந்து அவ்வேலையை அவர்களே செய்தனர். யவனர்கள் ஆறுகள் வழியாக உள்ளூர்களுக்கு வந்து அவற்றை வாங்கிச்சேகரித்து துறைமுகநகரங்களுக்குக் கொண்டு சென்றனர்.
விவசாயமும் வணிகமும் அன்று இருக்கவில்லை. சுங்கவரியும் இருக்கவில்லை. ஆகவே நிலப்பிரபுக்களுக்கும் மன்னர்களுக்கும் கிடைத்த வருமானம் என்பது இந்த வணிகத்தைச்செய்யும்பொருட்டு ஐரோப்பிய வணிகர்கள் அளித்த பரிசுகள்தான். அவை தங்கத்தில் இருந்தன.
இந்தத் தங்கம் அளவில் மிகமிகக் குறைவு. கடல்வாணிபத்தில் இடைத்தரகர்களாக இருந்த அராபியர்களுக்கே யவனர்களின் தங்கத்தில் மிகப்பெரும்பங்கு சென்று சேர்ந்தது. அது அரேபியாவையும் துருக்கியையும் கொழிக்கச்செய்தது. ப்ளினி புலம்புவது அந்தச்செல்வத்தைப்பற்றியே. ரோமப்பேரரசின் சரிவும் வீழ்ச்சியும் நூலில் கிப்பன் சுட்டிக்காட்டுவதுபோல மிளகுக்காக ரோம் செலவழித்த பணம் பெரும்பாலும் அரேபியாவுக்கே சென்றது.
மாறகக் கேரளமன்னர்களிட்ம் வந்த தங்கம் பயனற்று அவர்களிடம் தேங்கியது. தங்கத்தை என்னசெய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ஆபரணங்களாகச் செய்து தங்கள் உடலிலேயே போட்டுக்கொண்டார்கள். தங்கள் யானைகளுக்கூடப் போட்டார்கள். களஞ்சியங்களில் சேர்த்து வைத்தனர்.
அவர்களுக்குத் தங்கம் ஒரு நாணயமாக இருக்கவில்லை. அதை நாணயமாக ஆக்கக்கூடிய உள்நாட்டுப் பொருளியல்நடவடிக்கைகளோ வெளிநாட்டு வணிகமோ அன்றிருக்கவில்லை. கேரள உள்நிலப்பகுதிகலில் பதினாறாம்நூற்றாண்டிலும்கூட நாணயம் என்ற கருத்தே இருக்கவில்லை, பண்டமாற்று மட்டுமே நிகழ்ந்தது. மன்னர்கள் தங்களுக்குக்கிடைத்த தங்கத்தைக்கொண்டு கேரளநிலப்பகுதியை ஒருங்கிணைக்கவோ வரிவசூலைச் செப்பனிடவோ வலுவான ராணுவத்தை உருவாக்கவோ செய்யவில்லை. ஆகவே அவர்கள் கடைசிவரை ஐரோப்பிய,அரேபிய வணிகர்களை அஞ்சி அடிபணிந்தே நடந்தனர்.
இதையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் விரிவாக பாலகிருஷ்ணன் நிறுவுகிறார். நீங்கள் ஒற்றைவரியில் தாண்டிச்செல்லக்கூடிய தரப்பு அல்ல அது. அத்துடன் பாலகிருஷ்ணன் சொல்லும் இந்த விஷயத்தையே இந்தியச் சமூகம் பற்றி கார்ல் மார்க்ஸ் சொல்கிறார் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்.
ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொல்வது இதுதான்.நிதிச்சுழற்சியும் வணிகமும் இல்லாததனால் உபரி உருவாகாமல் தேவைக்கேற்ப மட்டுமே உற்பத்தி நிகழ்ந்து மொத்த ஆசிய சமூகமும் தேங்கிக்கிடந்தன என்கிறார் மார்க்ஸ். இந்தியா உள்ளிட்ட கீழைச்சமூகங்களின் கலை பண்பாட்டு வளர்ச்சி என்பது வணிகம்நிகழ்ந்த நகரங்களை மட்டுமே சார்ந்தது. அந்த நகரங்களுக்கும் அன்றைய மையப்பெருநிலத்துக்கும் ஒரு வகையான தொடர்பும் இல்லை. அவை வெவ்வேறு உலகங்கள் என்கிறார். மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலும் அதை ஏற்றுக்கொள்பவர்களே. பி.கெ.பாலகிருஷ்ணன் அந்த மரபில் வந்தவர்
இந்தத் தரப்பை எளிய மேற்கோள்கள் வழி எதிர்கொள்ளமுடியாது. மிகவிரிவான வரலாற்றுச்சித்தரிப்பு தேவை. அதாவது மார்க்ஸோ பாலகிருஷ்ணனோ வரலாறும் சமூகம் இயங்கும் விதம்பற்றிக் கொடுக்கும் சித்திரத்துக்கு நிகரான மாற்றுச்சித்திரம் ஒன்றை உருவாக்கி அதில் கேரள யதார்த்தத்தைப் பொருத்திக்காட்டவேண்டும். அது பெரும் சவால். பாலகிருஷ்ணனின் வினாக்கள் வழியாகவே அது சாத்தியமாகியது.
அந்த விளக்கம் இதுதான். கார்ல் மார்க்ஸ் முதல் பாலகிருஷ்ணன் வரையிலானவர்கள் அதிகாரப்பிரமிட் ஒன்றைக் கற்பனை செய்கிறார்கள். கீழே கிராமங்களும் உச்சியில் அரசனின் தலைநகரமும் உள்ள ஓர் நிலப்பிரபுத்துவ அரசமைப்பை. ஆகவேதான் கீழிருந்து நிதி மேலே வந்து குவியவேண்டும் என்றும் மேலிருந்து நிர்வாகம் கீழே சென்று சேரவேண்டும் என்றும் வாதிடுகிறார்கள்.
இது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தின் வழி. இந்திய- குறிப்பாக கேரள -யதார்த்தம் அவ்வாறிருகக்வேண்டுமென்பதில்லை. அது மேல்நோக்கிக் குவியாத உதிரிக்கிராமங்களின் பெருங்கூட்டமைப்பாக இருக்கக் கூடும். அங்கே கிராமத்திலிருந்து உபரி வெளியே செல்லாது. அரசாங்கமாகவோ மைய ராணுவமாகவோ ஆகாது. ஆனால் கிராமங்களில் செல்வம் இருக்கும். அதன் மூலம் அது பண்பாட்டுவளர்ச்சியை அடையும்.
கேரளகிராமங்கள் நாடுவாழிகள், மாடம்பிகள் என்னும் சின்னச்சின்ன ஆட்சியாளர்களால் குலமுறைப்படி ஆளப்பட்டன. நிதி சிறுசிறு அலகுகளில் சேமிக்கப்பட்டது. அவர்களே அங்கே ஆலயங்களைப் பேணிக் கலைகளையும் இலக்கியத்தையும் வளர்த்தனர். கிராமங்கள் தங்களை உடைத்துக்கொண்டு வணிகத்தில் ஈடுபடவேண்டிய தேவை இருக்கவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் இந்த கிராம அரசுகளை வன்முறைமூலம் இணைத்து ஒரே பொருளியல் மண்டலமாக ஆக்கினார்கள். அவர்கள் கடுமையான வரிவசூல் மூலம் கிராமங்களில் சேர்ந்திருந்த உபரியை முழுக்க உறிஞ்சிக்கொண்டார்கள். அதன்பின்னரே கேரளத்தில் வறுமை வந்தது. அப்போதும்கூட இந்தியாவின் பிற பகுதிகளில் உருவாகிய பெரும் பஞ்சங்கள் கேரளத்திற்குள் நுழையவே இல்லை. பஞ்சத்தால் கேரள மக்கள் இடம்பெயரவுமில்லை.பஞ்சம் பிழைக்கப் பிறபகுதினர் வரக்கூடிய இடமாகவே கேரளம் இருந்தது.
கேரளக்கிராமிய அரசுகள் உருவாக்கிய ஆலயங்களின் சிற்பவேலைகளும், ஏராளமான திருவிழாக்கொண்டாட்டங்களும், கிராமங்களில் அமைந்திருந்த குளங்கள், அழகிய வீடுகள் போன்றவையும், எழுத்தச்சன் என்ற சாதிவழியாக நிகழ்ந்த அன்றைய கல்வியும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆயுர்வேத மருத்துவப்பாரம்பரியமும் அன்றைய கேரள கிராமிய அரசுகளின் பொருளியல் வலிமைக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் சான்றுகூறுகின்றன
இந்தவளர்ச்சி, மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டதல்ல. கிராம அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வளர்வதற்கான சூழல் அன்றிருந்தது. இதுதான் இன்றைய விளக்கம். இங்கே வந்துசேர பாலகிருஷ்ணனின் வினாக்கள் உதவின
பொதுவாக வரலாற்றைத் தகவலாதாரங்களை திரட்டி முன்வைப்பது என்றே நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். தகவலாதாரங்கள் முழுமையான ஒரு கோட்பாட்டால் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அந்தக் கோட்பாட்டையே நாம் வேறு தகவலாதாரங்கள் வழியாக மறுக்கவேண்டும். அந்நிலையில்தான் வரலாறு வாழ்க்கைபற்றிய புதியவெளிச்சங்களை அளிக்கும்
ஜெ