மொழி 15,தமிழை வாழவைப்பவர்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். மொழியைப் பேண தலைமுறைகளைத் தாண்டி எடுத்துச் செல்லக் கடுமையான மொழி வெறி நிலைப்பாடு உடைய மனிதர் தேவை என பாலா சொல்லி இருந்தார். மொழியைத் தலைமுறைகளைத் தாண்டி எடுத்து செல்ல முயன்ற வள்ளுவன், கம்பன்,அவ்வை, ஆண்டாள், பாரதி, உ.வே.சா, தியாகராஜ செட்டியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில், சா.கந்தசாமி, ஜெயமோகன் முதல் தற்சமய தமிழ்க் கணிணி முன்னோடிகள் வரை யாரும் அக்தகைய நிலை மனிதர்கள் இல்லையே. மொழியைக் காதலிக்கத் தெரிந்த, அதன் ஊடுபாவுகளைப் பிரதியாக மாற்றும் தன்மை உடையவரால்தானே மொழி அதன் அடுத்த கட்டம் நகர்கின்றது.

தற்கால சூழ்நிலையில் முக்கால்வாசி நேரம் துருவ நிலையாகக் காட்டிக் கொள்ளும் மனிதர்கள் மொழியை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றித் தங்களை அதிகார நுனிக்குக் கொண்டு செல்ல முயல்வதில்தான் பெரும் ஆற்றலை செலவிடுகின்றார்கள்.

தாய்மொழி எனும் என் சிந்தனையின் மொழி பிறப்பினால் வருவதா? இல்லை நான் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கண்டு அதில் ஒன்றை ரசிப்பதில், அதில் சிந்திக்க ஆரம்பிப்பதில் வருகின்றதா?

என் கோழிக்கூடையான பிறந்த இடம் தாண்டி விட்டு வெளி வந்த உடன் வேறு வேறு வகை வாழும் சூழலையும் சிந்திக்கும் முறைகளையும் காண முடிகின்றது.

தெலுங்கு தாய் மொழியாக உடைய என் நண்பன் தமிழ் நாட்டில் பல நாள் இருப்பதால் தமிழில்தான் சிந்திப்பதாய் சொல்கிறான். தமிழ் தாய் மொழியாக உடைய என் மகள் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கின்றாள். ஒரளவு தமிழ் பேசும் அவள் யோசிப்பது ஆங்கிலம்தான்.

G.U.POPE தமிழரா, ஹிந்தியில் சிந்தித்து தமிழில் விடாமல் பேசி, மகளுக்கு ஆங்கிலமும், தமிழும் சொல்லி தரும் என் அலுவலகத் தோழி தமிழரா, தமிழ்ப் படம் பார்ப்பது தவிர வேறு எந்த வகையிலும் தமிழோடு உறவில்லாமல் மகன் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவதைப் பெருமையாக சொன்ன சென்னையில் சந்தித்த நண்பன் தமிழரா என தெரியவில்லை.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

மொழி,மதம் போன்றவை சென்றகாலத்தின் பண்பாட்டுக்குறிப்புகளின் பெருந்தொகைகள். அவற்றின் அழிவு கருவூலம் அழிவதுபோலத்தான்.

ஆனால் கருவூலத்தின் பூட்டைமட்டும் பரிசோதனைசெய்துகொண்டிருப்பவர்களால் அதைப் பேணமுடியாது. உள்ளே  மட்கி அழிந்து மண் எஞ்சலாம். உள்ளே இருப்பவற்றை நன்கறிந்து கணக்கிட்டுப் பராமரிப்பவர்களாலேயே அதைப்பேண முடியும்

நம்மிடையே இருசாரார் உள்ளனர். அதிதீவிர தமிழ் வெறியர்கள். தமிழ் வாழ்க என்று கழுத்துப் புடைக்கக் கத்துவார்களே ஒழிய தமிழில் வரும் எந்த நூலையும் வாசிக்கமாட்டார்கள். தமிழ்ப்பற்று என்பது அவர்களுக்கு வெறுப்புகளை உருவாக்கிக்கொள்ளும் ஒரு முகாந்தரம் மட்டுமே. தமிழ்ப்பகைவர்களால் தமிழ்சூழப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் தாங்கள் போர்புரிவதாகவும் எண்ணிக்கொள்வார்கள். தங்களுக்குப்பிடிக்காத அனைவரையும் தமிழ்ப்பகைவர்கள் என்று முத்திரைகுத்திக்கொள்வார்கள்.

சென்றகாலங்களில் இந்த அதிதீவிரத் தமிழ்ப்பற்றாளர்கள் எவரையெல்லாம் வசைபாடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். தமிழுக்கு உண்மையிலேயே பெரும்பணி ஆற்றிய, அதற்காக வாழ்க்கையை அர்ப்பணம் செய்த மேதைகள் அனைவருமே இவர்களின் வசைபாடலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாரதியார்,எஸ்.வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன்….

சரி இவர்கள் யாரைக்கொண்டாடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இன்னும் ஆச்சரியம். பெரும்பாலும் சாதாரணமான சினிமாக்காரர்களையும் வெற்று அரசியல்வாதிகளையும் மேலோட்டமான மேடைப்பேச்சாளர்களையும் மட்டும்தான். இன்றும் கூட அதுவே நிலை.

தமிழின் பேரில் செய்யப்படும் இந்தக் கீழ்த்தரமான கேளிக்கைகள்தான் தமிழ்ப்பற்றைக் கேவலப்படுத்துகின்றன என்பதே என் எண்ணம். இவ்வடிப்படையிலேயே நான் நம்முடைய தமிழ்ச்சங்கங்கள் மீதும் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்திருந்தேன். அவர்கள் செய்யவேண்டியது என்ன? அன்னிய இலக்கியங்களையும் சிந்தனைகளையும் தமிழில் கொண்டுவரலாம். இங்குள்ள பழந்தமிழ் நூல்களையும் ஆவணங்களையும் வெளிக்கொணர முயலலாம். முக்கியமான அறிஞர்களை கௌரவம் செய்யலாம், ஊக்குவிக்கலாம். இலக்கியவாதிகளை கௌரவிக்கலாம். முக்கியமான மாநாடுகளை நடத்தலாம்.

எவ்வளவோ செய்யலாம். ஆனால் தமிழின்பேரில் நாலாந்தர நடிகை வந்து குத்துப்பாட்டுபோட்டு ஆடினால், புலம்பெயர்ந்த அசடுகள் அங்கே வந்து குடும்பத்துடன் ஆட்டம்போட்டால் தமிழ் வளரும் என நினைக்கிறார்கள். அமெரிக்காவானாலும் மும்பையானாலும் இதுதான் நிலைமை

இவர்கள் உண்மையில் மிக எதிர்மறையான சக்தி. தமிழை அழிக்கும் விசைகளில் ஒன்று இந்த அதிதீவிரத் தமிழ்ப்பற்றாளர் கும்பல் என்பதே என் எண்ணம். இன்று கொஞ்சமேனும் சிந்திக்கக்கூடிய ஓர் இளைஞன் இந்த தீவிரத்தமிழ்ப்பற்றாளர்களைக் கண்டால் மனக்கசப்படைவான். தமிழ்ப்பற்றே மோசடியானது என எண்ணுவான். குறுகிய அரசியல்நோக்கு கொண்ட அல்லது அசட்டுத்தனமான ஒன்று என முடிவெடுப்பான்

தமிழ் வாழ்வதும் வாழப்போவதும் தமிழில் எழுதி தமிழில் வாசிப்பவர்களால்தான். இன்றுவரை அந்த எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை, போதுமான அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும்கூட

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெயஸ்ரீயின் வீடு