திரு ஜெ
நாம் அன்று பேசியதன் தொடர்ச்சி . இதை ஒரு வலைப்பதிவாகவே அனுப்புகின்றேன்.
சாங்கிய தரிசனம் வேதத்துக்கு அன்னியமானதா ?
வேங்கடசுப்ரமணியன்
அன்புள்ள வேங்கடசுப்ரமணியன் ,
சாங்கிய தரிசனத்தின் தோற்றம், பரிணாமம் பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள நாம் இன்றும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களையே நம்பவேண்டியிருக்கிறது. அவர்களில் சிலருக்கு ஐரோப்பியச்சார்பு நோக்கு இருக்கலாம். சிலர் நுட்பங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் நமக்கு வேறுவழி இல்லை.
ஏனென்றால் இந்தியாவில் சென்ற இருநூறு வருடங்களுக்கும் மேலாகத் தத்துவமரபுகள் குறுங்குழுக்களாகத் தேங்கி விட்டிருக்கின்றன. ஒரு மரபு இன்னொன்றுடன் உரையாடுவதற்கு சபைகளே இல்லை என்ற நிலை. விவாதங்கள் இல்லாமையால் காலப்போக்கில் ஒவ்வொரு தத்துவமரபும் தேங்கி நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியவையாக மாறிவிட்டன.
இந்நிலையில் ஒவ்வொரு தரப்பிடமும் இருக்கும் நூல்களும் சரி, அவற்றுக்கான விளக்கங்களும் சரி குறைவு பட்டவையாகவோ திரிபு பட்டவையாகவோ உள்ளன. இந்திய மரபுவழியாக இந்து ஞானத்தைக் கற்கும் ஒருவர் அவரது சார்பு சார்ந்த ஒரு சித்திரத்தை மட்டுமே அடைய முடியும் என்ற நிலை உள்ளது. ஐரோப்பிய இந்தியவியலாளர்களுக்கு அச்சிக்கல் இல்லை. அவர்கள் எல்லா இந்திய தத்துவ மரபுகளையும் ஒரேசமயம் கற்கவும், நூல்களையும் உரைகளையும் ஒப்பிடவும் முயன்றனர்.
கூடவே புறவயமான ஒரு தர்க்கமுறைமையை இந்திய தத்துவத்துக்கு உருவாக்க முடியுமா என்றும் முயற்சி எடுத்தனர். ஹென்ரியிச் ஸிம்மர், ரிச்சர் கார்பே ,ஜெக்கோபி ஆகியோரின் பங்களிப்பு இவ்வகையில் மிக முக்கியமானது. இந்த அறிஞர்களைப் பின்தொடர்ந்து இந்திய மெய்யியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்தவர்களாலேயே பக்கச் சார்பற்ற வகையில் இந்திய தத்துவ மரபைக் கற்க முடிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
நான் அவர்களையே பெரிதும் ஆதராமாகக் கொள்கிறேன். நான் பின்பற்றும் குருமரபும் இந்தியவியலைக் கூர்ந்து ஆராய்ந்து ஆதாரமாகக் கொள்ளக்கூடியதே.நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி இருவருமே நூலாய்வு, தத்துவ மரபுகளை மதிப்பிடுதல் இரண்டிலும் முதன்மையான இந்தியவியலாளர்களையும் ஐரோப்பிய புறவய ஆய்வுமுறைமையையும் பெரிதும் நம்பியவர்கள்.
ஆகவே நான் ரிச்சர்ட் கார்பேயிலிருந்து தொடங்குகிறேன். பண்டை இந்திய தத்துவ ஞானம் [ Ancient Indian Philosophy] நூலில் கார்பே சாங்கியத்தை வைதிக மையமரபுக்கு மாறான ஒரு தொன்மையான இந்திய சிந்தனை மரபாகவே காண்கிறார். பல பக்கங்களுக்கு ஆதாரங்களை விரித்து தன்னுடைய தரப்பை அவர் முன்வைக்கிறார். அதே தரப்பை நாம் ஸிம்மரின் இந்தியாவின் தத்துவ மரபுகள் நூலிலும் காணலாம் [Philosophies of India]
இவர்களின் முன்னோடி நூல்களை ஒட்டியே எஸ்.என்.தாஸ்குப்தா [Indian Philosophy] கெ,சி. பட்டாச்சாரியா [Studies in Vedantism] போன்றவர்களும் இடதுசாரிகளான எம்.ராய் [லோகாயதா] தேபிபிரசாத் சட்டோபாத்யாய[ இந்திய தத்துவத்தில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்] போன்றவர்களும் எழுதினார்கள்.
இந்நூல்களை ஒட்டி இவர்கள் முன்வைக்கும் ஏராளமான ஆதாரங்களையும் வாதகதிகளையும் நான் எடுத்துவைக்கமுடியும். இன்றையசூழலில் தத்துவத்தை ஒரு குழுநம்பிக்கையாக அல்லாமல் புறவயமாக அணுகும் ஒருவர் இந்த நூல்களை விட்டு விட்டு மேலே பேசமுடியாது. நான் சில அடிப்படைகளை மட்டும் சொல்கிறேன்.
நான் நூலில் சொன்னவற்றை நீங்கள் புரிந்துகொண்டமையில் சில சிறிய போதாமைகள் இருக்கின்றன. சாங்கிய தர்சனம் வேதமரபுடன் வாதாடி வளர்ந்தது என்று நான் சொல்வது அது வேதமரபு என்பதற்கான ஆதாரம் என்கிறீர்கள். தத்துவ விவாதங்கள் எப்போதும் முரண்படும் தரப்புகள் நடுவேதான் நிகழும். விவாதங்களின் வளர்ச்சிப்போக்கில் இருதரப்புமே மறுதரப்பின் சில அடிப்படைகளை உள்வாங்கிக் கொள்ளும்.
சாங்கிய தர்சனத்தில் வைதிகமரபின் கூறுகள் நுழைந்தன. கூடவே வைதிகமரபில் சாங்கிய தர்சனத்தின் அம்சங்கள் நுழைந்தன. சாங்கியம் முக்கியமாக உபநிடதங்களுடன் விவாதித்து வளர்ந்தது. ஆகவே சாந்தோக்கியம்,கடம் போன்ற பல உபநிடதங்களில் சற்றே மாறியவடிவில் சாங்கிய தர்சனத்தின் அம்சங்கள் உள்ளன. அதை கார்பே சுட்டிக்காட்டுகிறார். இதைவைத்து உபநிடதங்களில் உள்ள சிலவரிகளின் நீட்சியே சாங்கியம் என வாதிடுபவர்கள் சிலர் உள்ளனர்
ஒட்டுமொத்த இந்திய ஞானமரபை ஒரு பெரும் விவாதக்களனாகவே நாம் காணவேண்டும். வேதங்களும் அவைதிகமரபுகளும் எல்லாம் அவ்வகையில் ஒரே வெளியில் இயங்கியவையே. ஆகவே அடிப்படையான கருத்துருவகங்கள், கலைச்சொற்கள் ஆகியவை அவற்றுக்கெல்லாம் பொதுவானவையே. இதை நாம் சமண,பௌத்த மதங்களின் வளர்ச்சிக்கால கட்டத்திலும் காணலாம்.
இதைவைத்து இன்றும்கூட பல வைதிக சிந்தனையாளர்கள் எல்லாவற்றையும் வேதமரபில் சென்று கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சாங்கியத்தில் ஒரு கருத்து அல்லது கலைச்சொல் இருந்தால் அச்சொல் எங்கேனும் வேதத்தில் வருமென்றால் வேதத்தில் இருந்து அது முளைத்தது என வாதிடுகிறார்கள்.
இவ்வகையான சுயச்சார்புள்ள திரிபுகள் பலநூறாண்டுக்காலமாக இங்கே நிகழ்ந்து வருகின்றன. நுட்பமான சொல்லாராய்ச்சிகள், அதி நுட்பமான சந்தர்ப்பத் திரிபுகள் மூலம் இதைச்செய்துகொண்டே இருக்கிறார்கள். என்வரையில் ஒருபோதும் இந்த விவாதங்களுக்குள் செல்லக்கூடாதென்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.
நான் தத்துவத்தை முதலில் ஒரு பெரிய வரலாற்று வரைபடத்தில் பொருத்துகிறேன். அந்த வரலாற்றுப்பரப்பில் எல்லாச் சிந்தனைகளுக்கும் சம இடம் அளிக்கவேண்டும் என்ற கவனத்தை எடுத்துக்கொள்கிறேன். நான் வேதாந்த மரபில் வந்த குருவை ஏற்றுக்கொண்டவன், அத்வைதத்தில் நம்பிக்கை கொண்டவன் என்பதனால் எல்லாமே அதுதான் என்ற முடிவுக்குச் செல்லக்கூடாதென்பதே நான் எனக்காக விதித்துக் கொண்ட நெறி.
அந்த வரலாற்று வரைபடத்தில் வைத்து ஒரு தத்துவத்தின் தோற்றம், பரிணாமம் ஆகியவற்றை விளக்கிக் கொள்கிறேன். அது எவற்றுடன் உறவாடியது, எவற்றுடன் முரண்பட்டது, எவற்றைக் கொண்டது, எவற்றைக் கொடுத்தது என வகுத்துக் கொள்கிறேன். அவற்றுக்கு அறிஞர்களின் நூல்களையும் கூடுமானவரை மூலநூல்களையும் பயன்படுத்திக் கொள்கிறேன்
இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெறுமே சொல்லாராய்ச்சி மூலமோ, சந்தர்ப்பங்களை மாற்றிக்கொண்டு அளிக்கப்படும் அதீதமான விளக்கங்கள் மூலமோ மூலநூல்களை விருப்பப்படி புரிந்துகொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நாம் புரிந்துகொள்ளும் விதத்துக்கு வரலாறு சார்ந்த ஆதாரம் உண்டா என்பது நம்மை சமநிலையில் நிறுத்தும் அம்சமாகும்.
இந்திய ஞானமரபை வைதிகம், அவைதிகம் என இருபெரும்பிரிவாகப் பிரிப்பது இந்திய தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக உதவியானது. வைதிகமரபுகள் வேதங்களை மூலநூல்களாகக் கொண்டிருக்கும். அவற்றின் அடிப்படையான ஞானதரிசனம் வேதங்களில் தெளிவான தொடக்கப்புள்ளியைக் கொண்டிருக்கும். அவ்வகையில் பூர்வ மீமாம்சமும் உத்தரமீமாம்சம் என்னும் வேதாந்த மரபும்தான் முழுமையாகவே வேதச்சார்பு கொண்டவை.
சாங்கியம், யோகம், வைசேஷிகம்,நியாயம் என்னும் நான்கு தரிசனங்களுக்கும் வேதங்கள் மூலநூல்களாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. அவற்றின் மையத்தரிசனம் வேதங்களை ஆதாரமாகக் கொண்டதும் அல்ல. வேதங்களின் மையத்தரிசனத்துக்கு மாறானவற்றையே அவை சொல்கின்றன. பிறகால ஞானமரபுகளில் சமணமும் பௌத்தமும் அவைதிகமரபைச்சேர்ந்தவை.
சாங்கியம் அவைதிக மரபைச் சேர்ந்தது என்பதற்கான தொன்மையான மூன்று முக்கியமான ஆதாரங்கள் உள்ளன. அனேகமாக எல்லா இந்தியவியலாளர்களின் நூல்களிலும் இவை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
1. மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சம்ஹிதை,பிராமணம், ஆரண்யகம் என்னும் அனைத்து வேதங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்ட இரு தத்துவமரபுகளாக சாங்கியம்,யோகம் இரண்டும் சுட்டப்படுகின்றன. அனைத்துக்கும் மூலகாரணம் மூலப்பிரகிருதியே என்றும் வேறெந்த ஆற்றலும் பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கெடுக்கவில்லை என்றும் அதை அறிந்தவனுக்குத் துயரமில்லை என்றும் மகாபாரதம் சொல்கிறது.
2. பாதராயணர் சாங்கிய தரிசனத்துக்கும் உபநிடத ஆதாரங்கள் உண்டு என்று சொல்லப்படுவதைத் தன் வேதாந்த சூத்திரங்களில் கடுமையாகக் கண்டித்து வேதாந்தமன்றி எதையும் உபநிடதங்கள் முன்வைக்கவில்லை என்று வாதிடுகிறார்.
3. சரக சம்ஹிதையில் இறை மறுப்பு நோக்குள்ளதும் வேத விரோத நிலைப்பாடு கொண்டதுமான தரிசனமாகவே சாங்கியம் குறிப்பிடப்படுகிறது.
சாணக்யநீதி போன்ற பிற்கால நூல்களில் இவ்வாறு பல குறிப்புகள் உள்ளன என்கிறார் ரிச்சர்ட் கார்பே. அதனடிப்படையில் சாங்கியம் வேதமரபுக்கு மாறான ஒரு தரிசனம் என்று சொல்கிறார்
சாங்கியம் வைதிகமரபுகளுடன் விவாதித்தே வளர்ந்தது. அத்துடன் சாங்கியத்தை வேதச்சார்புள்ளதாக ஆக்கி உள்ளிழுக்க நெடுங்கால முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றும் அந்த முயற்சிகளை விலக்கித்தான் சாங்கியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வாதிடுகிறார் கார்பே. அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களை நான் இவ்வாறு தொகுப்பேன்
1. சாங்கிய தர்சனத்தைத் தொகுத்தால் வேதம் சார்ந்த தத்துவங்களின் எந்தத் துணையும் இல்லாமல் தனித்து நிற்கும் தன்மை கொண்ட முழுமையான தர்சனமும் தர்க்கமுறையும் அதற்கிருப்பதைக் காணமுடியும். அதனுடன் இணைக்கப்படும் எல்லா வேதச்சார்புள்ள தத்துவக்கூறுகளும் அதன் மையத்தரிசனத்தை நீர்த்துப்போகச் செய்வனவாகவே உள்ளன.
அதாவது சாங்கியம் என்றாலே அது மூலப்பிரகிருதிவாதம்தான். அதன் தனித்தன்மையும், சிறப்பும் மூலப்பிரகிருதி என்னும் அழிவற்ற பருப்பொருள் உயிருள்ள பிரபஞ்சமாக ஆகியமைக்கான அதன் விளக்கம்தான். அதில் எப்போது வைதிக மரபைச்சேர்ந்த புருஷதத்துவம் பிணைக்கப்படுகிறதோ அப்போதே மூலப்பிரகிருதி என்னும் கருதுகோள் மையமிழக்க ஆரம்பிக்கிறது. அதன்பின் சிருஷ்டிக்குரிய கச்சாப்பொருள் என்ற இடம் மட்டுமே அதற்குள்ளது.
2. சாங்கிய தரிசனத்தின் தொன்மையான மூலநூல்கள் கிடைப்பதில்லை. ஆரம்பகாலத்தில் கபிலரின் நூல் என்று சொல்லப்பட்ட சாங்கிய பிரவசன சூத்திரம் மிகப்பிற்கால நூல் என்று மொழியியல் ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. [அதைத்தான் நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள்] ஈஸ்வர கிருஷ்ண சூரியின் சாங்கிய காரிகைதான் கிடைப்பவற்றில் பழமையானது .அந்நூல்கூட சாங்கியதரிசனத்தை வேதமரபு நோக்கி இழுக்க ஆரம்பித்த பிறகு உருவானது. அத்துடன் அதன் பல வரிகள் மிகப்பிற்காலத்தைய இடைச்செருகல்கள் என மொழியாராய்ச்சிகள் காட்டுகின்றன.
3. சாங்கியத்தை நிராகரித்துப் பல்வேறு சிந்தனை மரபுகளைச் சேர்ந்த வைதிகர்கள் எழுதிய பல்வேறு நூல்பகுதிகள் சாங்கியம் வேதச்சார்பற்ற தத்துவமாகவே கருதப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. பொதுவாக இந்த அவைதிக சிந்தனை மரபின் மூலநூல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அவற்றை பரபக்கமாகக் கொண்டு வைதிக மரபினர் எழுதியிருக்கும் வரிகளைக்கொண்டே அவற்றை ஊகிக்க முடிகிறது. அவற்றில் பிற்கால நூல்களில்கூட சாங்கியம் வேத விரோதமானது என்ற மறுப்பு காணப்படுகிறது. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய அவ்வாறான நூற்றுக்கணக்கான மறுப்புகளைத் தொகுத்துள்ளார்
அதேபோல திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கிடைக்கும் பழமையான பௌத்த நூல்களில் சாங்கிய தர்சனம் வேதமறுப்புள்ள தரிசனமாக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் ஆய்வாளர் சுட்டியிருக்கிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக நாம் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முக்கியமாக உதவக்கூடியது இன்றும் நமக்குக் கிடைக்கும் சாங்கிய தத்துவத்தின் கட்டமைப்பேதான்.சாங்கிய தரிசனத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இரண்டு காலகட்டங்களாக, அல்லது இரு பகுதிகளாக அதை பிரித்துப் பார்த்து தான் புரிந்துகொள்ளமுடியும் என்று காணலாம். நிரீஸ்வர சாங்கியம், ஸேஸ்வர சாங்கியம்.
சாங்கிய தர்சனத்தின் அசல் கட்டுமானத்தில், அதாவது நிரீஸ்வர சாங்கியத்தில், இறைவனுக்கு இடம் இல்லை என்பது தத்துவநோக்கில் அணுகும் எவருக்கும் புரியக்கூடியதே. அதன் அடிப்படையாக இருபப்து ஆதி இயற்கை [மூலப்பிரகிருதி] மட்டுமே. அது பருப்பொருள். அந்தப் பருப்பொருளில் இயல்பான முக்குணங்களும் அவற்றின் சமநிலையை இழப்பதன் விளைவாக பிரபஞ்ச நிகழ்வு உருவாகிறது. அக்குணங்களின் முடிவில்லாத இணைவுகளின் வழியாகவே பிரபஞ்சம் நிகழ்கிறது. வெளியே இருந்து எந்த ஆற்றலும் தேவையில்லை. ஆகவே இந்த தரிசனம் வேதங்களை மூலநூல்களாகக் கொள்ளவோ, வேதத்தின் பிரம்மத்தைத் தன் முழுமுதல் மையமாகக் கருதவோ அவசியமும் இல்லை.
ஸேஸ்வர சாங்கியம் என்னும் இறையுள சாங்கியம் அந்த முக்குணங்களையும் உணரக்கூடிய புருஷன் என்ற கருதுகோளை உள்ளே கொண்டு வருகிறது. மூலப்பிரகிருதி போலவே அவனை பரமபுருஷன் என உருவகித்து அப்படியே பிரம்மத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. அதுவே பிற்கால சாங்கியம். பிற்கால சாங்கியநூல்கள் புருஷனை வேதங்கள் சொல்லும் புருஷனாக ஆக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. சாங்கிய மூலநூல்களை ஆராயும் கார்பே அந்நூல்களிலேயே இறையிலா சாங்கியத்தின் மூலக்கட்டமைப்பு அந்நூல்களில் இருப்பதை விரிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த விரிவான வரலாற்று அடிப்படையில்தான் நான் சாங்கிய தர்சனம் அடிப்படையில் அவைதிக மரபைச் சேர்ந்தது என்றும் பிற்காலத்தில் அது வைதிக மரபுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் சொல்கிறேன். இது என் முடிவு அல்ல. கார்பே முதல் அதற்கு மிக நீண்ட ஒரு ஆய்வு வரலாறு உண்டு
ஜெ