நண்பர் சிறில் அலெக்ஸ் பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகளை எழுதியிருக்கிறார்.
நண்பர் சிறில் அலெக்ஸ் பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகளை எழுதியிருக்கிறார். ஒருகாலத்தில் பாதிரியாருக்குப் பயிற்சி எடுத்துக் கொண்ட ஒருவரின் நேர்மையான அக்கறையான வரிகள் இவை. விவாதிக்க வேண்டியவை. பின்னூட்டத்தில் இம்மாதிரியான வரிகளால் என்ன பயன், பாதிரியார்கள் இவற்றை மதிக்கவா போகிறார்கள் என்ற தொனியில் எங்களூர் நண்பர் ஜேசு மார்ட்டின் எழுதியிருக்கிறார். ஆனால் இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் செல்வாக்கை உருவாக்கும்தோறும் அதற்கேற்ப மாறுதல்கள் உருவாகும் என்றுதான் நான் நினைக்கிறேன். அமைப்புகள் எல்லாமே கருத்துக்களின் வெளிக்கட்டுமானங்களே. கருத்துத்தள மாற்றம் அமைப்பிலும் மாற்றத்தை உருவாக்கும்.இதை ஒட்டி சில விஷயங்களை எண்ணிக் கொண்டேன். அது சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றிய விவாதத்தை ஒட்டியது. ‘அனல்’ அடங்கிய பின் எழுதலாமென்று எண்ணியிருந்தேன். தீட்சிதர்கள் உட்பட உள்ள அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்கள், பாதிரியார்கள், மௌல்விகள் என மதத்தின் நடைமுறைச் செயல்பாடுகளை நிகழ்த்தும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ‘பூசகர்கள்’ [clergy] என்ற பொதுப்பெயரால் குறிக்கலாம். பூசகர்களின் நடைமுறைகள் பொதுவாக மதத்தின் ஆன்மீக மையத்தை முக்கியமாக வலியுறுத்துபவர்களுக்கு கசப்பை அளிக்கின்றன. அவர்கள் மதத்தை ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகளாகவும், மதத்தை சீரழிக்கும் நோக்கூறுகளாகவும், முன்னேற்றத்துக்கு எதிரான தடைக்கற்களாகவும் பூசகர்களைக் காண்கிறார்கள்.
மதம் வேறு, ஆன்மீகம் வேறு என்பதே என் எண்ணமாகும். ஆன்மீகம் என்பது முழுமையான வாழ்க்கைக்கான ஒரு கனவை நோக்கிச் செயல்படுவது. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகவும் சாராம்சம் சார்ந்தும் அணுகுவது. ஓர் ஆன்மீக நோக்கு அன்றாட வாழ்க்கையில் செயல்படும்பொருட்டு நிறுவனமாக ஆக்கப்படுவதையே நாம் மதம் என்கிறோம். மதம் என்பது ‘ஆன்மீகம்+ நிறுவனம்’ எனலாம். ஆன்மீகம் நிறுவனம் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆன்மீகம் இயங்கிக் கொண்டே இருப்பது. நிறுவனம் நிலையானது. ஆன்மீகம் தேடலினால் ஆனது. மத நிறுவனம் விடைகளினால் ஆனது. பூசகர்கள் அந்நிறுவனத்தின் உறுப்புகள். அந்த ஆன்மீகத்தின் பிரதிநிதிகள் அல்ல. அந்நிறுவனம் அவர்கள் வழியாகவே நிலைத்திருக்கிறது, செயல்படுகிறது.
ஆன்மீக நோக்கில் என்னதான் சொன்னாலும் நடைமுறைவாழ்வில் எளிய மக்களின் அன்றாடவாழ்வில் மதத்தின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இந்த நிமிடம் வரை இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே பூசகர்கள் இல்லாத வாழ்க்கை இதுவரை சாத்தியமாக இல்லை. பூசகர்கள் எங்கும் எப்போதும் லௌகீகமானவர்களே. அவர்களை மதத்தின் நிலைச்சக்தி [Static force] என்று சொல்லலாம். அவர்களின் பங்களிப்பும் முக்கியமானதே.
இந்துமதத்தை எடுத்துக் கொண்டால் ஆன்மீகவாதிகளாலும் சீர்திருத்தவாதிகளாலும் பிராமணியம் மேல் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளும் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டுள்ளன, தொடுக்கப்படுகின்றன. உபநிடதங்களில் கடுமையான புரோகிதநிந்தையை நாம் காணலாம். சுவாமி விவேகானந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி , ஓஷோ வரை அது தொடர்கிறது. ஆனால் இந்துமதத்தின் நிலைச்சக்தியாக இரண்டாயிரம் வருடங்களாகச் செயல்பட்டுவரும் பிராமணர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானது என்றே நான் எண்ணுகிறேன். மிகமிக எதிர்மறையான சூழல்களில் அனைத்தையும் இழந்தும் சமரசமில்லாமல் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டவற்றை தக்கவைத்து பாதுகாத்து பேணி மறு தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முயன்றிருக்கிறார்கள். இந்துமதம் என்ற அமைப்பு – அதன் கலைகள், நூல்கள், மரபுகள்– இன்றும் நீடித்திருப்பதற்கு அவர்கள் முதன்மைக் காரணம் என்றே நான் எண்ணுகிறேன்.
மாற்று மதத்தவரால் மதுரை ராமேஸ்வரம் ஸ்ரீரங்கம் போன்ற பல ஆலயங்கள் இடிக்கப்பட்டு பலநூறு வருடம் பாழ்பட்டு கிடந்திருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் ஒரு சின்ன ஆலயத்தில் இருதலைமுறைக்காலம் ஒளிந்திருக்கிறாள். ஸ்ரீரங்கநாதர் இரு தேசங்களை சுற்றிவந்திருக்கிறார். பற்பல நூல்கள் பலநூறுவருடம் எவராலும் படிக்கப் படாமலிருந்திருக்கின்றன. ஆனால் எவையும் அழியவில்லை. சமீபத்திய உதாரணம், சோவியத் ருஷ்யா. கடுமையான அடக்குமுறையால் ருஷ்ய ஆர்தடாக்ஸ் சர்ச் வேரோடு கெல்லி எறியப்பட்டது– என்று தோன்றியது. ஆனால் கம்யூனிசம் வீழ்ந்தபோது அனைத்தும் அப்படியே மீண்டு வந்தன. எதுவுமே மறையவில்லை. பூசகர்களின் அந்த பிடிவாதமும் பற்றும் மிக முக்கியமானவை.
ஆகவே மதத்துக்கு ஏதேனும் பங்களிப்பு உண்டு என்று ஒருவர் சொல்வாரானால் அவர் பூசகர்களை முற்றாக நிராகரிகக் முடியாது. என் நோக்கில் மதம் ஒரு பண்பாட்டுக் களஞ்சியம். பாரம்பரியத்தின் நீட்சி முக்கியமாக மதம் மூலமே நிககிறது. அத்துடன் ஆன்மீகத்தின் மரபு– அதன் நூல்கள் படிமங்கள் மொழி போன்றவை — மதம் மூலமே நீடிக்கின்றன..
ஆனால் பூசகர்களால் எதையுமே தாங்களாக மாற்றிக் கொள்ள முடியாது. எது சொல்லபப்ட்டதோ அதையே செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. ஏன், கடமையே அதுதான். ஆகவே மதத்தின் இயங்குசக்தியாக [Dynamic force] இருக்க வேண்டியது அதில் உள்ள ஆன்மீகமையமே. அதுவே பழைமையை உதறி புதுமைக்காக முன்னகர வேண்டும். ஒவ்வொரு கணமும் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்விரு சக்திகளின் முரணியக்கம் [Dialectics] மூலம்தான் மதம் என்ற அமைப்பு செயல்பட முடியும். இதில் ஒன்று வலுக்குறைந்தாலும் அழிவே. சீர்திருத்த ஆன்மீக சக்தி வலிமையிழந்தால் மதம் நிறுவனமாகத் தேங்கி நாறும். பூசகர் தரப்பு வலிமையிழந்தால் மதம் தன் பாரம்பரியத்தை இழந்து நசியும்.
இந்து பூசக வர்க்கம் ஆலயப்பிரவேசனம் , தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்த முயற்சிகளில் எப்போதுமே எதிர்நிலைப்பாடு எடுத்து கடுமையாகப் போராடியிருக்கிறது. ஆலயப்பிரவேசப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் அன்றைய புரோகிதவர்க்கம் வெளியிட்ட பிரசுரங்களைப் படித்தால் இன்று வேடிக்கையாக இருக்கும். இந்து தர்மமே அழிந்துவிடும் என்று உண்மையான ஆவேசத்துடன் கண்ணீருடன் மன்றாடியிருக்கிறது,சாபமிட்டிருக்கிறது, கடைசி துளி உயிரைக் கோண்டு போராடியிருக்கிறது. அதை மீறி வென்று இன்றைய நிலையை உருவாக்கியவர்கள் அன்றைய ஆன்மீகவாதிகள், சீர்திருத்தவாதிகள். ஏன் தங்கள் சாதிக்குள்ளேயே விதவை மறுமணத்துக்கு எதிராக பூசகர்குலம் ஐம்பதுவருடம் போராடியிருக்கிறது. ஏன் குடுமி என்ற ஒரு சின்ன விஷயத்திலேயே அது மாற்றத்தை ஏற்க இன்னமும் முழுமையாக தயாராக இல்லை.
சிதம்பரம் தீட்சிதர்கள் சிதம்பரம் கோயிலில் தமிழில்பாட அனுமதிக்கவில்லை என்றால் அது அவர்களின் இந்த நிலைத்த இயல்பால்தான். மாறாமலிருக்கவே அவர்கள் முடிந்தவரை முயல்வார்கள். இன்னமும் குடுமியுடன் இருப்பவர்கள் அவர்கள். சிதம்பரம் கோயில் விழாக்களில் எப்போதுமே நால்வர் மொழிகள்தான் ஒலிக்கின்றன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி என்பது முழுக்கமுழுக்க தமிழ்த் திருமுறை நிகழ்ச்சியே. சிதம்பரத்தில் பக்தர்கள் தேவார திருவாசகத் தமிழ்ப் பாடல்களை சன்னிதி முன் நெருங்கி நின்று பாடுவதை நானே கேட்டிருக்கிறேன். ஆனால் அதை ஒரு சடங்காகச் செய்யபோனால் அது அவர்களுக்கு சினத்தை உருவாக்குகிறது. அந்த மாற்றம் பீதியூட்டுகிறது. ”அதெப்டி புதிசா ஒண்ணை செய்ய முடியும்?” மீண்டும் மீண்டும் தீட்சிதர் தரப்பில் சொல்லப்படுவது இதுவே.
ஆனால் இவர்கள்தான் திருமாவளவனுக்கு பட்டுப்பரிவட்ட மரியாதை செய்தார்கள் என்று கேள்விபப்ட்டேன். அவர்களின் தாத்தாக்கள் அதைச் செய்திருப்பார்களா என்று கேட்டால் விழிப்பார்கள். சன்னிதி முன் மின்விளக்கு போடவில்லையா என்று கேட்டால்கூட பதில்சொல்லமுடியாது இவர்களால். அந்த மாற்றம் அவர்கள் பிரக்ஞையில் எப்படி ஏற்பட்டது என்றால் ஐம்பதாண்டுக்கால சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம்தான். இன்னும் முப்பதாண்டுக்காலம் கழித்து தமிழில் பாடுவதற்கு எதிராக அவர்கள் இருந்ததே தீட்சிதர்களுக்கு நினைவிருக்காது.
சிதம்பரத்தில் தமிழில் பாடுவதற்கான இயக்கத்தை நாத்திகர்கள் நடத்தினார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. சன்னிதிக்குள் கோஷமிட்டபடி வந்தார்கள், எவர் நெற்றியிலும் திருநீறில்லை என்று புகைப்படங்களை காட்டினார்கள். உண்மையாக இருக்கலாம்.ஆனால் அது தவிர்க்க முடியாதது என்று படுகிறது. ஆத்திகர்கள் செய்திருக்கவேண்டிய வேலை அது. அவர்கள் செய்யாவிட்டால் சமூகத்தின் ஒட்டுமொத்த நீதியுணர்வு அதை நிகழ்த்தும். ஆலயப்பிரவேசன போராட்டம் நிகழாமல் இன்றும் தீட்சிதர்கள் தலித்துக்களை உள்ளே விடாமல் இருந்தால் என்ன நடக்கும்? ஆத்திகர்கள் அல்லாத சமூக உறுப்பினர்கள் அதை செய்திருப்பார்கள். அரசு சட்டம் இயற்றியிருக்கும். அதுதான் இப்போது நடக்கிறது.
ஆலயப்பிரவேச இயக்க காலத்தில் இருந்த இந்து சீர்திருத்த வேகம் இன்று இல்லை என்பதனாலேயே இன்று இப்பிரச்சினைகள் எழுகின்றன. இந்துமதத்தின் ஆன்மீக மையம், அதன் வெளிப்பாடான சீர்திருத்தமனநிலை தேங்கிவிட்டிருப்பதையே இது காட்டுகிறது. இது எல்லா தளத்திலும் எதிரொலிக்கிறது. மூடபக்தி, சோதிடம் போன்றவற்றுக்கு பெருகி வரும் ஆதரவு முதலியவற்றைக்கூட நான் இவ்விதமாகவே காண்கிறேன். மதம் இடைவிடாது சீர்திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டியது என்று சுருக்கமாக, சற்று வேடிக்கையுடன், சொல்லத் தோன்றுகிறது.
இந்த இடத்தில் என் சமீபத்திய சில அனுபவங்களையும் சொல்ல வேண்டும். காசி, பண்டரிபுரம்,உடுப்பி ஆலயங்களுக்கு சமீபத்தில் நண்பர்களுடன் செல்ல நேர்ந்தது. எல்லா ஆலயங்களும் சிதம்பரத்தைவிட நூறுமடங்கு தீவிரமாக பூசகர் பிடியில் உள்ளன. சாதி அங்கே பிரச்சினை இல்லை. பணம் இல்லாமல் உள்ளேயே போக முடியாது. காசி போன்ற பல இடங்களில் பூசாரிகள் நேரடியாகவே பெரும் குற்றவாளிக்குழுக்களையே வைத்து நடத்துவதாகச் சொல்கிறார்கள். இன்று இந்தியா எங்கும் தீவிரமான ஒரு மதச் சீர்திருத்த அலை எழுந்தாக வேண்டியிருக்கிறது. இல்லையேல் அது இந்துமதத்துக்கே அழிவாக முடியும்.
சிறில் எழுதியுள்ள பத்து கட்டளைகளை அப்படித்தான் காண்கிறேன். ஒட்டுமொத்தமாக சர்ச்சையும் பாதிரிமார்களையும் வசைபாடி நிராகரித்து நாலு வரி எழுதிச்செல்லுதல் எளிது. அதில் சரித்திரப்புரிதலும் இல்லை, விவேகமும் இல்லை. இத்தகைய அணுகுமுறைக்கு நீடித்த முக்கியத்துவம் உண்டு.
சிறில் கத்தோலிக்க மதம் முந்தைய கட்டுரைகள்
http://jeyamohan.in/?p=287
http://jeyamohan.in/?p=284
புனித தோமையர் முந்தைய கட்டுரை
http://jeyamohan.in/?p=208
http://jeyamohan.in/?p=209