கீதை இடைச்செருகலா? கடிதம்

அன்பு ஜெயமோகன்
கீதை இடைச் செருகலா ? என்ற விஷயம் உங்கள் தளத்தில் படித்தேன். நீங்களே கூறியது போல இதில் இரு தரப்புக்கள் உள்ளது.

எனக்கு சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட வியப்பு அளித்தது ஓஷோ வின் கீதை தரிசனம். இதில் ஓஷோ நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அலசுகிறார். கொதிக்கும் கொலைக் களத்தில் எழுநூறு பாடல்கள் சொல்லப்பட்டிருக்குமா ? படைகள்தான் பொறுக்குமா ? என்பது தான் அந்த விஷயம்.

ஓஷோவின் அலசல் இதோ (என்றோ படித்தது. சற்று சொந்த சரக்கும் இருக்கலாம் )

கீதையை சொன்னவனும் கேட்டவனும் சாமானியர்கள் அல்ல. அர்ஜுனனே சிறந்த தவ யோகி . இதற்கு பாரதத்தில் சான்றுகள் உண்டு. இப்படியிருக்க, இதை நேரடியாக வாய்மொழி உபதேசமாகக் கொள்ளுதலே இந்த “கீதை உண்மையாகவே குருக்ஷேத்திரத்தில் சொல்லப்பட்டதா ? ” என்ற குழப்பத்துக்குக் காரணம். ஏன் இது ஒரு மானசீக உபதேசமாக இருக்கக் கூடாது ? மனோ வேகம் என்பது அளவிட முடியாதது. ஒரு முழு வாழ்க்கையையே ஒருவன் ஒரு கனவாகக் கண்டு முடித்து விடுவான். ஆனால் ஒரு கனவின் அதிக பட்ச நேரம் பதினேழு நொடிகள் தான்.

இது ஒரு மானசீக உபதேசமே என்பது ஓஷோவின் முடிவு. போர்க்களத்தில்தான் கீதை சொல்லப்பட்டது என்பதில் ஓஷோ காட்டும் உறுதி என் போன்ற கிருஷ்ண பக்தர்களையே அதிர வைக்கிறது. எனக்குக் கூட சமயத்தில் பாரதம் உண்மையா என்றெல்லாம் சந்தேகம் வந்து விடும். ஓஷோ தன்னுடைய ” krishna- The man and his philosophy ” (இறக்கிக் கொள்ள இதோ சுட்டி ) என்ற மகத்தான நூலில் கிருஷ்ணன் பரமாத்மாவே தான் என்று ஒரு சின்ன சந்தேகம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். சஞ்சயன் கீதையைக் கேட்டது மிக சாதாரணமான சாத்தியம் என்றும் சொல்லி விட்டார்.

என்னுடைய சொந்தத் தேடலில் கிடைத்த விஷயங்கள் இதோ .

பீஷ்ம பர்வம் 43 , 45
ஷட்சதானி சவிம்சாணி ச்லோகானாம் ப்ராஹ் கேசவ:
அர்ஜுன சப்த பஞ்சாசத் சப்த சஷ்டிம் து சஞ்சய :
திருதராஷ்டிரா : ச்லோகமேகம் கீதாயாம் மனமுச்யதே ||(
கிருஷ்ணா 620 ஸ்லோகம்
அர்ஜுனன் 57 ஸ்லோகம் ,
சஞ்சய 67 ஸ்லோகம்
திருதராஷ்டிரா 1. ஸ்லோகம்
மொத்தம் 745 ஸ்லோகம்
(இதில் நாற்பத்தி ஐந்து இப்போது இல்லை )
இது பீஷ்ம பர்வத்தில் வருகிறது. இன்னொரு விஷயம் கீதை இறந்த காலத்திலேயே சஞ்சயனால் சொல்லப்படுகிறது. பத்து நாள் வரை சஞ்சயன் குருக்ஷேத்திரப் போர் முனையில் இருந்தார் (போரில் பங்கு கொள்ளவில்லை). பீஷ்மர் இறந்த பிறகே அவர் மன்னன் திருதராஷ்டிரனிடம் வருகிறார்.

இன்னொரு இடத்தில் கிருஷ்ணரே கீதையை கூறுமிடத்து நான யோகா நிலையில் இருந்தேன். என்னாலேயே அதை மீண்டுமுரைக்க இயலாது என்கிறார். (ஸ்லோக எண் கையில் இல்லை பிறகு தருகிறேன் )

இது போல கீதைக்கு பாரதத்திலே பல உள் குறிப்புக்கள் (references) உள்ளன.

விவேகானந்தர் , சங்கரர் உரைக்கு முன்னர் பாதராயனர் எழுதிய உரை ஒன்று இருந்ததாகவும், இராமானுஜர் அதைப் பற்றி எழுதி உள்ளதாகவும் , அவர் காலத்திலேயே அந்த ஓலைக் கட்டு செல்லரித்து விட்டிருந்ததாகவும் எழுதுகிறார். பாதராயனர் காலம் நிச்சயம் பொது சகாப்தத்துக்கு ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் ( மேற்கத்திய ஆசிரியர்களின் கூற்றுப் படியே ).

இன்னொரு விஷயம். திருப்பாவையில் கோதை கீதையைப் பற்றி உரைக்கிறாள். அவள் காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர். ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் எழுந்த ஒன்று உடனே தென்னகம் வந்து சேர முடியுமா ?

வேங்கடசுப்ரமணியன்

முந்தைய கட்டுரைவெறும் முள்-கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்து தொடாக் காவியம்