கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக
அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய
உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும்
ஒரு பாடலை எவ்வாறு புரிந்து கொள்வது என உங்கள் பேச்சு, என்னை கட்டிப்
போட்டு விட்டது. பாடலின் உண்மைப் பொருளை உணராமல், செய்யுளை ஒரு சடங்கு
போல நடத்திப்போகும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் இந்தப் பேச்சைக் கேட்க
வேண்டும். மலர்களைப் பார்க்காமலே பொருள் கூறும் மூடப்பழக்கம்( சொல்லலாம்
தானே…) மாற்றப்படவேண்டும். தங்களது பேச்சைப் பொறுமையோடு கேட்டால்
மாற்றம் வரலாம்.(நம்புவோம்)

இலக்கியம் என்பது தமிழ் ஆசிரியர்களோடு மட்டுமே தொடர்பு
கொண்டது என்ற மாய எண்ணம ஆசிரியர் சமூகத்தில் பரவிக் காணப் படுகிறது.
பெரும்பான்மை தமிழ் ஆசிரியர்களோ ,கல்லூரியில் படித்த பாடங்களைத்
தவிர்த்து வேறு எதையும் படித்து விடக்கூடாது என்பதில் உறுதியோடு
இருப்பதாகத் தெரிகிறது.(பாவம் அவர்கள்).

நானும் ஒரு ஆசிரியர்தான். நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும்
ஒரு கணித ஆசிரியர். தங்களது ஏழாம் உலகம் நாவலை மாணவர்களிடம் சொன்னபோது
அவர்களுக்கு ஏற்பட்ட மன உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து விட எனக்குத்
திறம் போதாது. விஷ்ணுபுரம் நாவலைக் கதையாக சொன்னபோது அவர்களிடம் தோன்றிய
உள்ள உவகையை, அளவில்லா ஆர்வத்தை மகிழ்வோடு கண்டுகொண்டேன்.வாழ்த்துக்கள்
உங்களுக்கே.

சே. சுப்ரமணியன்,
வளநாடு.

அன்புள்ள சுப்ரமணியன் அவர்களுக்கு

ஓர் ஆசிரியராக நீங்கள் மாணவர்களிடம் கொண்டிருக்கிற உறவு மகிழ்ச்சி அளிக்கிறது. பாடநூலுக்கு வெளியே வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பேசும் ஆசிரியர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். உங்கள் பணி பாராட்டுக்குரியது

வணக்கம்

ஜெ

ஆசிரியருக்கு,

நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு எளிதில் கைவரப் பெறும் காலத்திலும் , தொலைபேசி மூலமாக உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்புள்ள காலத்திலும் கடிதத்தின் இருப்பு, தேவை மற்றும் அதன் அந்தஸ்து ஆகியவற்றை நிலை நிறுத்துகிறது நமது சீனுவின் கடிதங்கள் .

இத்தனைக்கும் உங்களுடன் தொடர்ச்சியாகப் பேசுகிறார்,குறுகிய கால இடைவெளியில் அடிக்கடி சந்திக்கிறார், நேரிலும் தொலைபேசியிலும் பேசியது போக ஏராளமான பலவற்றை எழுதியிருக்கிறார். கடிதத்தின் தேதிகளைப் பார்த்தால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்கிறது, இவருக்கு ஏராளமாக சொல்வதற்கு இருக்கிறது, நாட்கள் கூடக் கூடக் கையிருப்பும் கூடுகிறது , இவைகள் தேர்வு செய்யப் பட்டதல்ல என்பதையும், குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக எழுதிய எல்லா கடிதங்களின் தொகை என்பதையும் அறிகிறேன்.அதனாலேயே இவைகளின் மதிப்பும், சீனுவின் தரமும் என்ன என்பது விளங்குகிறது. இது அச்சாகும் என்ற நோக்கில் செயற்கையாக (ஒரு நகல் இருப்பு வைத்து ) எழுதப்பட்டதல்ல என்பததையும் நேரில் சீனுவைத் தெரியும் என்பதால் நான் அறிவேன். புத்தகமாக வரப் போகிறது என அவருக்கு நமது அரங்கா தெரிவித்தவுடன் அவரடைந்த உவகையே அதற்கு சாட்சி.

ரசிக்காத,வாசிக்காத, சமூக அரசியல் ஆர்வம் சற்றும் அற்ற அல்லது மிதமான ரசனையும் ஆர்வமும் உடைய சராசரி நண்பர்களை தினசரி சந்திப்பதை நான் வேண்டுமென்றே தவிர்க்கிறேன். அவர்களிடம் ஒவ்வொரு நாளும் பேச ஏதும் இல்லை, இனி தின சரி மாலை நண்பர்களை சந்திக்கும் வாழ்க்கைக்கு நான் திரும்பவே முடியாது, மறுநாளே நேற்றைய மாவே அரைக்கப்படும்,.ஒருவகையில் ஒரு தீவிர வாசகன் தனித்துவிடப் படுகிறான், தனி உலகுக்கு விடை பெறுகிறான் அல்லது தள்ளப்படுகிறான். தீவிரமற்ற நபர்களின் நிறைந்த அருகாமை வெறும் பாலையின் மணல் துகள்கள்.

ஆனால் இக்கடிதங்கள் நமக்கு உணர்த்துவது , ஒரு தீவிர வாசகனின் அவன் படைத்து வாழும் தனி உலகம், இங்கு கண்ணுக்குத் தெரியாத நுண்மைகள் மிக முக்கியமானது,கணங்கள் சுவாரசியமானது, காட்சிகள் பொருளுடையது வண்ணமயமானது, இவன் உலகில் இசை உண்டு, ஓவியமுண்டு,நடனமுண்டு , வாசிப்புண்டு, பயணமுண்டு கனத்த உரையாடல் மட்டுமே உள்ள தொடர்புண்டு.

ரெஜி குரங்கு, அஞ்சலை சிறுமி, என எத்தனை உக்கிரமான வாழ்வனுபவங்கள், , Totsi போல தேடித் தேடி பார்த்த திரைப்படங்கள் எத்தனை,சலீம் அலி , காடு, குறுந்தொகை , சுஜாதா , ஒரு புளிய மரத்தின் கதை என எத்தனை ஒப்பு நோக்கும் நுண் வாசிப்புகள் , என ஒரு வகையில் இவன் மட்டுமே மகிழ்வுடனும் அர்த்தமுடனும் வாழ்கிறான், பிறர் இருக்கிறார்கள் ஏதோ கரை தெரியாத வெறுமைக் கடலில்.

இவ்வகை வாசகர்களாலேயே கலையில் , உரையாடலில்,சிந்தனையில் நீங்கள் அடைந்த இடம் தகுதிப் படுகிறது. ஆடி பிரதிபலிக்கும் விளக்கொளி.

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைசுயசிந்தனையின் வழி
அடுத்த கட்டுரைஇணைவைத்தல்- கடிதங்கள்