நீளமான கட்டுரைகள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நீளமான மற்றும் தத்துவக் கட்டுரைகளை வாசகர்கள் படிக்கிறார்களா என்ற உங்கள் ஐயம் என்னை மிகவும் வியப்பூட்டியது.

5 மாதம் முன்பு வரை தங்களின் ஒரு இணைய எழுத்தைக் கூட நான் படிக்காமல் விட்டதில்லை.

எழுத்தில் தத்துவத்தை விவாதிப்பது என்பது awkard-ஆன ஒரு விஷயமாகவே உள்ளது. பொருளாதாரம், சமூகம் போன்ற இதர விஷயங்கள் போலத் தத்துவத்தைக் குறித்து எளிதில் எதிர்வினை ஆற்ற முடிவதில்லை.

மேலும் சிக்கலான் எழுத்து என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் அல்லவா? உதாரணமாக, உங்களின் எந்த எழுத்தும் எனக்கு சிக்கலாகத் தோன்றியதில்லை. என் அலைவரிசை முழுமையாக ஒத்துப் போகும் ஓரிரு எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவர். விஷ்ணுபுரத்தை ஒரே மூச்சில் படித்தேன்; அதன் தத்துவ விவாதங்களை மிகுந்த சுவாரசியத்துடன் கடந்து சென்றேன். ஆனால் ராமகிருஷ்ணனின் கட்டுரைகளை ஆவலுடன் படிக்கும் எனக்கு உறுபசி நாவலை என்னால் 4 பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ஜே ஜே – சில குறிப்புகளைக் கடகடவென்று படிக்க முடிந்த எனக்கு இன்னும் செம்மீன் நாவலைப் புரட்ட முடிவதில்லை.

ஆகவே… மேலும் பல “சிக்கலான” பக்கங்களை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கும்

-ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்

நன்றி. அது ஒரு சாதாரணமான ஐயம்தான். பொதுவாக கஷ்டமான ஒரு விஷயத்துக்கு எதிர்வினை வருவதில்லை, அல்லது எதிற்மறையான எதிர்வினை வரும். அப்போது நாம் என்ன இருட்டில் புன்னகை செய்கிரோமா என்ற ஐயம் எழும்

ஜெ

 

”அப்படி பல கட்டுரைகள் கொஞ்சம்கூட கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கின்றன. எஸ்.பொ, சேரன் குறித்த கட்டுரைகள். வேதாந்த மரபும் இலக்கியப்போக்குகளும் போன்ற கட்டுரைகள்.”

ஜெ,
  சமீபத்தில் நீங்கள் இதை சொல்லியிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கட்டுரைகளையும் நான் வாசித்திருக்கிறேன். EMS, சேரன்  குறித்த கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. EMS குறித்த கட்டுரையை மட்டும் இரண்டு முறை வாசித்தேன்.

என்னைப் போலவே இன்னும் சிலர் நிச்சயம் வாசித்திருப்பர். இது குறித்த கடிதங்கள் உங்களுக்கு வருவதில்லை என்பது சரிதான். மற்றபடி, அந்த கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்கள் உங்களுக்கு உண்டு.


Hari

 

அன்புள்ள hari

நன்றி.

ஆமாம், கட்டுரைகளுக்கு எதிர்வினை என்பது பெரும்பாலும் அதனுடன் முரண்பட்டு ஏதேனும் சொல்லவிருக்கும்போதே வருகிறது. அதுவே இயல்பும் கூட
ஜெ

 

அன்புள்ள ஜெ.மோ,

தயவு செய்து அத்தகைய காத்திரமான,  நீளக் கட்டுரைகளை நிறுத்தி விடாதீர்கள்.

இ.எம்.எஸ், வேதாந்தம், தத்துவம் பற்றிய அந்த அனைத்து நீளக் கட்டுரைகளையும்  நான் படித்தேன்..  அவற்றுடன்  ‘எதிர்வினை’ செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால்  கடிதம் எழுதவில்லை அவ்வளவே. பெருமளவு என் எண்ணப் போக்குடன் அவை இயைந்தே இருந்தன..  இனிமேல்  ’நேர்வினை’   என்றால் கூட ஒருவரி  கடிதம் எழுதி விட வேண்டும்  போலிருக்கிறது :))

// கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்…. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே //

அருமை.. .  தாராசுரம் கோயில்  மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில்  சட்டென்று கூரையில் பார்த்தால்  அற்புதமான வேலைப்பாடு  தெரிகிறது.  (கோயில் வருபவர்களில் 90% இந்த மண்டபத்திற்கு உள்ளே கூட வருவதில்லை). ஆயினும் அந்த சிற்பியின் சிருஷ்டி நூற்றாண்டுகளாக அங்கே இருக்கிறது.  என்றோ ஒரு கலைமனம் அதைக் கண்டுகொள்ளக் கூடும், களிப்பெய்தக் கூடும்.   அதன்  வாசல்கள் எப்போதும், காலம் கடந்தும் கூட ரசிகனை எதிர்நோக்கி  நிற்கின்றன.  செவ்வியல் கலைகளின்  இயல்பே   அது தான் என்று    நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

அது  உங்கள் எல்லாவிதமான எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

‘முகம்தெரியாத யாருக்காகவோ’ என்பதுதான் பொதுவாக எழுத்தாளர்களின் கோணமாக இருக்கும். அது ஒருவகையான இலக்கை அளிக்கிரது. அவ்வப்போது முகங்கள் தெரியவருவதை அதிருஷ்டம் என்றே சொல்லவேண்டும். அது இணையம் அளிக்கும் பெரிய வரம் என்றே நினைக்கிரேன்
ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ.
 
உங்கள் இணையப் பக்கங்களில் வெளியாகும் கட்டுரைகள் நீளமானவை என்பதால் யாரும் படிப்பதில்லை என்று கூறுகிறீர்கள். ஏனென்றால் கடிதம் வருவதில்லை. இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே. அதாவது, படிப்பவர்கள் சரிவர எதிர்வினையாற்றுவது இல்லை. நான் பெரும்பாலான கட்டுரைகளை வாசிக்கிறேன். ஆனால் எழுதத் தோன்றவில்லை. அல்லது அதற்கான கருத்துகளை சுருக்கமாக ஒருங்கமைக்க முடிவதில்லை. சுமார் 10 பக்கம் கொண்ட கட்டுரையை வாசித்து விட்டு வெறும் குட் என்றோ அல்லது 2 வரியிலோ அக்கட்டுரையின் புரிதலை வெளிப்படுத்த எல்லா வாசகனாலும் முடியுமா?

குறைந்தபட்சம் அதில் ஏற்படும் ஐயம், அது குறித்த மேலதிக உரையாடல் என்றால் அதற்கு  ஒரு அரை பக்க அளவு தேவைப்படும் இல்லையா? அதுமட்டும் அல்ல.  எழுதி அனுப்பிவிட்டால் வாசகர் கடிதம் பகுதிக்கு அனுப்பிவிட்டு வருமா? வராதா? என்று எதிர்பார்ப்பதைப் போல அடுத்த நாள் இணையத்தை ஆவலோடு தேடச் சொல்கிறது. வந்தால் சரி. வராவிட்டால்? படித்தாரா? இல்லையா? என்று அடுத்த கேள்வி. இப்படியே தொடரும்.

//இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே//

 இணையத்தில் எழுதுவதாக இருந்தால் பின்னூட்டத்தை எதிர்பார்க்காமல் எழுதுங்கள் என்று  நீங்களே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள். கடிதத்தை எதிர்பார்த்தால் பிறகு அவர்களுக்காகவே (எளிதாக) எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். அதனால் கனமான விஷயமாகவே எழுதுங்கள்.

ரகுநாதன்
கோவை

அன்புள்ள ரகுநாதன்

எல்லா கட்டுரைகளையும் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த இணைய தளத்தில் 3000 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை முழுக்க வாசிப்பதென்பது எளிய விஷயம் அல்ல. அவற்றை வாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் இல்லை. இணையம் நீளமான கட்டுரைகளுக்கான ஒரு பிரசுர வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் அச்சிதழ்களில் அவ்வாய்ப்பு இல்லை. அதேசமயம் நீளமான கட்டுரைகளை கணித்திரையில் வாசிப்பது சோர்வளிப்பது. ஆகவேதான் எனக்கு அந்த ஐயம் ஏற்பட்டது

ஜெ

முந்தைய கட்டுரைகாலச்சுவடு நூல்வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 8