அன்புள்ள ஜெ. சார்
நலமென நம்புகிறேன். நேற்று உங்களுடைய வீடியோ பதிவுகள் பல பார்த்தேன், அதில் ஒன்றில் நீங்கள் படிக்கும் விதம் பற்றி சொன்னது மிகவும் அருமையாக இருந்தது (சீர் பிரித்துப் படித்தல்). இதைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தவர் எங்களுடைய மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் தான். சிறிது நேரம் அவர் ஞாபகங்கள், எங்கள் தமிழ் வகுப்புகளின் ஞாபகங்கள் என்னைச் சுற்றி வந்தன. அதில் குறிப்பாக “பூவிடைப்படினும் ” எனும் குறுந்தொகைப் பாடலை மூணாறு தம்பதிகளைச் சொல்லி சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது. “இலக்கியங்கள் நம் வாழ்க்கையோடு பிணைந்தவை , அவைகளைத் தனிப் பாடமாகப் படிக்கக் கூடாது” என்பதை நேற்றுதான் தெரிந்து கொண்டேன் . என்னைப்போல் ஆரம்பகால வாசகர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று என நினைக்கிறேன். மேலும் சில வழிகளைச் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
காளிதாஸ்
அன்புள்ள காளிதாஸ்
வாசிப்பில் சரியான வழி, தவறான வழி என ஏதும் இல்லை. பயனுள்ள வழி மட்டுமே உண்டு. பொதுவாக நம் கல்விமுறையில் இலக்கியங்களைத் தொல்பொருட்களாகப் பயிலச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்தக்கால வாழ்க்கையைக் காட்டும் படைப்பு என்கிறார்கள். நான் நல்ல இலக்கியம் எப்போதும் நம் வாழ்க்கையைக் காட்டும் என்கிறேன், அவ்வளவுதான்
ஜெ
அன்புள்ள ஜெ
நலமா?
உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசிப்பவன் நான். எனக்கு இது ஒரு கல்லூரிவகுப்பைப்போல, வாசிப்பைக் கற்றுத்தரும் கல்லூரி வகுப்பு. எனக்குக் கல்லூரி எதையுமே கற்றுத்தரவில்லை. எனக்கு அங்கே கிடைத்தது கொஞ்சம் வார்த்தைகள் மட்டும்தான்
இங்கே நான் சிந்திக்கும்முறையைக் கற்றுக்கொள்கிறேன்
நன்றி
கணேஷ் எம்
அன்புள்ள கணேஷ்
நான் இங்கே வாசிப்பைப் பகிர்ந்துகொள்கிரேன். விவாதிக்கிறேன். அதுதான் கல்விக்கான சரியான வழி.
ஜெ