சிந்தனையின் தேங்குசுழிகள்

மரியாதைக்குரிய இலக்கியவாதி ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் இணைய தளத்தைக் கடந்த ஒன்றரை வருடங்களாக வாசித்து வருகிறேன். நூலகம் வழியாக உங்களது படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ரப்பர், கன்யாகுமரி மற்றும் ஓரிரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஏழாம் உலகம் படித்தால் மனதைப் போட்டுப் பாடுபடுத்தும் என்பதால் அதைத் தொடவில்லை. உங்களை முதலில் அறிந்தது நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விளக்கத்தைப் படித்தபோதுதான். அந்தப் படம் வெளிவந்த பலமாதங்களுக்குப் பிறகு அது என்ன மாதிரி படம் என்று தெரியாமலேயே, பாலா படம் என்பதற்காக அதை ஒரு நாள் கணினியில் பார்த்தேன். பிறகு அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள்வதற்காக அது சம்பந்தமாக இணையத்தில் தேடியபோது நான் படித்த பல விமர்சனங்களுள் உங்களுடையதும் இருந்தது. எதற்கு குரு அவனைத் தந்தையுடன் அனுப்புகிறார், தாய்ப் பாசத்தை எவ்வாறு கடக்கிறான். அந்தக் குருட்டுப் பெண்ணிற்கு ஏன் அப்படி ஒரு முடிவை அளிக்கிறான் பின் எதற்கு மறுபடியும் காசி திரும்புகிறான் என்று நீங்கள் அளித்த விளக்கத்தைப் படித்த போது இந்த படத்தில் இத்தகைய நுட்பங்கள் இருந்ததா? நாம் எவ்வாறு கவனிக்காமல் விட்டோம்? இந்த விமர்சகர் எப்படி இதனைக் கண்டுபிடித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது அப்போது.

நான் தமிழ் வணிக எழுத்துக்களையே படித்து வளர்ந்தவன். பிறகு 20 வயதில் ஆங்கில வணிக எழுத்தின் பக்கம் திரும்பிவிட்டேன். கொலை, கொள்ளை, யுத்தங்கள், உடல் இன்பம், பாசம், வெறுப்பு, துரோகம், பேராசை, தனி மனித சாதனை, ஏமாற்று, இதை ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனி மனிதனாக, குழுவாக, இயக்கமாக, நிறுவனமாக எப்படி செய்தார்கள். இதுதான் நான் படித்தது. ஆங்கில வணிக எழுத்தில் தமிழை விட நம்பத்தன்மை இருந்தது, பிரம்மாண்டம், நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், சுருங்கச்சொன்னால் உலகத்தை ஆங்கில வணிக எழுத்தின் மூலமாகவே புரிந்து கொண்டென்

நீங்கள் யார் உங்கள் ஆளுமை என்ன என்று தெரியாமலேயே உங்கள் இணைய தளத்திற்கு ஓரிரு முறை வந்து சென்றிருக்கிறேன். நான் கடவுள் விமர்சனம் அவ்வாறு படித்தது. தற்செயலாக ஒருமுறை வந்த போது அறிவுத்திறன் என்றால் என்ன என்று நீங்கள் எழுதியதைப் படித்தேன். அது ஒரு அறிவியல் சிறுகதையில் ஒரு ஆன்மீக குருவை பேட்டி காண வந்திருக்கும் ஒரு நிருபரைப் பார்த்து ஒரு விஞ்ஞானி-மருத்துவர் கேட்டதற்கு பதிலாக அமைந்திருக்கும். அதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது நீங்கள் வேறு தளத்தில் உள்ளவர். இத்தனை கூர்மையாக ரத்தினச்சுருக்கமான ஒரு விளக்கத்தை நான் அதுவரை படித்த எந்த நூலிலும் கண்டுகொள்ளவில்லை.

முதல் காரியமாக உங்களது “அனைத்துப் பதிவுகளையும்” திறந்து முதலிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது உங்கள் பன்முக ஆளுமையும், எழுத்தின் வீரியமும், ஏழாம் உலகமும், உங்களது கதை வசனத்தில் வந்த பாலாவின் படமும், நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விமரிசனமும் ஏன் அத்தனை செறிவாக இருந்தது என்றும், உங்களது சர்சைக்குள்ளான சிவாஜி-எம்ஜிஆர் பகடியும் இன்னும் பலவும். நான் 97இன் இறுதியில் தமிழ்நாட்டிற்கு வெளியே வந்து விட்டேன். தமிழ்ப் பத்திரிகைகள் இணையத்தில் படிப்பேன். சந்தா கட்டித்தான் படிக்கமுடியும் என்றான பொழுது அதை ஒரு கசப்பு மருந்தாக எடுத்துக் கொண்டு அவற்றையெல்லாம் படிப்பதையே நிறுத்திவிட்டேன்

கதைப் புத்தகம் படிப்பது மெதுவாகக் குறைந்து கடந்த ஒரு வருடமாக சுத்தமாக நின்று விட்டது. உங்களுடைய படைப்புகளை நூலகத்தில் படித்ததோடு சரி. வேறு எதையும் படிப்பதற்கு ஆர்வமில்லை. பாட்டும் (இசையும்) அதே போல் கேட்பது குறைந்து பின் நின்று விட்டது. ஆங்கில சினிமா மட்டும் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிப் பார்க்கிறேன். தமிழ் சினிமா வார இறுதியில் தொலைக்காட்சியில் வருவதைப் பதிவு செய்து பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையும் இனிமையாக, சீரான வேகத்துடன், சலிப்பில்லாமல் கழிகிறது

என்னுடைய 41 வருட வாழ்க்கையில் நான் புரிந்து கொண்டதின் சாரம் இதுதான். பிரபஞ்சமானது இரண்டாகப் பிரிந்திருக்கிறது. ஒன்று, என்னுடைய உடம்பின் தோலால் எல்லை வகுக்கப்பட்ட இந்தப்பக்கத்தில் நான். இரண்டாவது தோலின் அந்தப்பக்கத்தில் உள்ள மற்ற அனைத்தும். கோட்டிற்கு இந்தப்பக்கத்தில் இருக்கும் பிரபஞ்சத்திற்குப் பிரக்ஞை இருக்கிறது. அது அனைத்தையும் உணர்கிறது அதுவே நான். கோட்டின் அந்தப்பகத்தில் உள்ள பிரபஞ்சத்திற்கு செயல் முறை இருக்கிறது. அந்த செயல் விதியின் படியே அந்தப்பிரபஞ்சம் நிகழ்கிறது. அதை நான் அறிகிறேன், அறிய முற்படுகிறேன். எனது விருப்பமும் அதற்காக நான் பிரபஞ்சத்துடன் ஆற்றும் வினையே என் வாழ்க்கை. அந்த செயல்களில் தோன்றும் விளைவுகள் வாயிலாக அந்தப்பக்கம் உள்ள பிரபஞ்சத்தின் செயல்முறையையும், உணர்ச்சிகள் வாயிலாக இந்தப்பக்கம் உள்ள என்னையும் நான் இன்னும் ஆழமாக அறிந்து கொள்கிறேன். என்னுடைய அறிதல்களுக்குத் தர்க்கரீதியாக என்னால் விளக்கம் அளிக்க முடிந்தால் நான் வாழும் இந்த உலகத்தை என்னால்  வரையறை செய்து கொள்ள முடியும் (எல்லாம் உங்கள் அறிவுத்திறன் என்றால் என்ன என்பதைப் படித்ததன் விளைவுதான்)

மேலும் பிரபஞ்சத்தில் நானும் உள்ளடக்கம் என்பதால் நானும் அந்தப் பிரபஞ்ச விதிப்படியே நிகழ்கிறேன்

எவற்றையெல்லாம் நான் வரையறை செய்து கொண்டு விட்டேனோ (முடிவெடுத்தல்) அது சம்பந்தமான அறிதல்களுக்காக நானாக மேலும் மேலும் தேடிச்சென்று அலைய வேண்டிய தேவையில்லை. அத்தகைய சந்தர்ப்ப, சூழ்நிலைகள் என் வாழ்க்கையில் எதிர்ப்படும்போது நான் ஏற்கனவே முடிவெடுத்ததன் அடிப்படையில் என்னால் எதிர்கொள்ள முடியும். அவ்வாறு எதிர் கொண்டு நான் அடையும் அந்த அனுபவம் நான் ஏற்கனவே ஊகித்திருந்ததற்கு மாறாக அமையும்போது மட்டுமே என்னுடைய அது சம்பந்தமான வரையறையை நான் மறுபரீசீலனை செய்ய வேண்டியிருக்கும்

சமீபத்தில் (கடந்த ஒரு மாதத்தில்) நான் எடுத்த அத்தகைய ஒரு முடிவு கார்ப்பரேட் சாமியார்கள் அத்தனை பேரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று. அவர்களுக்கும் “30 நாட்களில் ஆண்மைக்குறைவுக்கு நிவர்த்தி. பத்தியம் கிடையாது. பக்க விளைவுகள் ஏதுமில்லை” என்பது போன்று வரும் விளம்பரங்களுக்கும் அதிக வேறுபாடு ஒன்றுமில்லை. இந்த சாமியார்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் அளவோ கோவிந்தா நாமம் பைனான்ஸ் பேர்வழிகள் அளவோ மோசமானவர்கள் அல்ல. “சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் லக்ஸ்” என்ற அளவுக்கு ஏமாற்றுபவர்கள். இது ’’சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்” என்பது போல் எடுத்த முடிவல்ல. நான் எந்த சாமியாரையும் நேரில் இதுவரை பார்த்தது கிடையாது. இது பற்றிய எல்லா விவரங்களும் இணையத்தின் மூலம் அறிந்தவையே

இவர்கள் ஏமாற்றுவது 2 வழிகளில்தான். இவர்களுடைய சக்தியை மிகைப்படுத்திக் கூறுவது (நான் கையாலே தொட்டாலே உனக்கு ஞானம் வந்துரும்) மற்றும் இவர்களின் பயிற்சி முறைகளின் பலனை மிகைப்படுத்துவது (இந்தப்பயிற்சியை முடிச்சா வாழ்க்கையில் எங்கேயோ போய்விடலம்!)

ரஞ்சிதா-நித்யா நிகழ்வின் போது ஆன்மீகத்தைப் பற்றி அருமையாக விளக்கியிருந்தீர்கள். “குரு அடைந்த ஞானமானது பிரபஞ்சப்பன்மையை ஒருசேரப்பார்க்கும் ஒருவகை மன ஆழம். அதை எப்படி அவர் ஒரு பொருளில் சக்தியாக ஏற்றி உங்களுக்கு அளிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?”. “மேலும் குண்டலினி மற்றும் அது பயணம் செய்யும் பாதையில் உள்ள சக்கரங்கள் இவைகள் எல்லாம் ஒரு குறியீடு மட்டுமே. பருப்பொருளாக அப்படி ஒன்றும் கிடையாது”

பகவத்கீதையின் உரையில் ஆன்மாவை ஒரு கருத்துருவாக மட்டுமே, அலையலையாக வரும் பிரபஞ்ச நிகழ்ச்சிகளை முழுமையாக விளக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டில் வரும் ஒரு கருத்து நிலையாக மட்டுமே கருதுகிறேன் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்துக்குள் வராதவரை அதைப்பற்றிய முடிவை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்

மேலும் செந்திலுக்கு (நியூராலஜியில் மனம், தன்னிலை முதலியவற்றிற்கு விளக்கம் கொடுக்கமுடியும் அதுவே உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கும் என்ற வாதத்தை முன் வைத்தவர்) அளித்த பதிலில் மனம், தன்னிலை என்பதை மூளையின் நரம்புத்தொடர்பிலுள்ள மின்னோட்டத்தை வைத்து மட்டும் விளக்கி விட முடியாது. அது அவ்வளவு எளிய விஷயமில்லை அதை நரம்பியல் நிபுணர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். பார்க்கும் வேட்கையே விழியானது என்பது போன்று எழுதியிருந்தீர்கள்

தொலைக்காட்சிக்கு நீங்கள் அளித்த ஒரு பேட்டியில் ஜோதிடம், மாந்திரீகம் போன்ற அமானுஷ்ய விஷயங்கள் ஒரு வித நுண்ணுணர்வால் செய்யப்படுவது, அது பற்றிய நேரடி அனுபவங்கள் எனக்குண்டு என்று நீங்கள் சொன்னதாக உங்கள் இணையதளத்தில் அது சம்பந்தமான அதாவது அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்ற ஒரு கேள்வியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்

உங்களுடைய சிறுகதைத்தொகுப்பில் இந்த மனம், தன்னிலை தொடர்பாக 3 கதைகள் படித்திருக்கிறேன்

1. விபத்தில் காலை இழந்த ஒருவருக்கு மாயக்கால் வெளிப்பாடு (Phantom Leg Syndrome) ஏற்படுகிறது. பின் சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்களில் இறக்கும் நிலைக்குப் போகும் போது கேட்கிறார் “காலை இழந்த பிறகும் மூளையிலுள்ள மின் தொடர்பின் மூலம் கால் இருப்பது போன்று உணர்கிறேன். அப்படியானால் என் மூளையின் மின் தொடர்பைப் பாதுகாக்க முடிந்தால் விஞ்ஞானம் நன்கு வளர்ச்சி பெற்ற பின்னொரு காலத்தில் வேறு ஒரு உடலை செய்து கொள்ளமுடியுமல்லவா?” மேலும் “அறுவை சிகிச்சையில் இழந்த காலை எரியூட்டும்போது அதை நான் பார்க்கிறேன். அதேபோல் இந்த உடலை எரிக்கும் போது நான் வேறெங்காதிருந்து இதையும் அதேபோல் உணர்வேனா?”

2. மடாதிபதி பதவிக்குப் பயிற்சி பெற்ற ஒருவருக்குப் பதவி ஏற்கும் காலத்தில் தன்னுடைய மடத்தின் கொள்கைகளின் மீதே சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் மடத்தின் தற்போதைய குரு சந்தேகம் என்பது உன்னை இந்தப்பிரபஞ்சத்தின் முன் நிறுத்துவதற்காக நீ ஏற்படுத்திக்கொண்டது. பிரபஞ்சமும் காலமும் உன் முன்னால் எல்லையற்று விரிந்து கிடக்கிறது அதன் முன்னால் ஒரு தூசியிலும் தூசியாய் உன்னை நீ உணர்கிறாய். உனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கே நீ அனைத்தையும் சந்தேகப்படுகிறாய். மேலும் இது மிருக இச்சைப்படி வாழ்வதற்கான ஒரு சப்பைக்கட்டு (நொண்டிச்சாக்கு) மட்டுமே. குறைந்தபட்சம் மிருக இச்சைப்படி வாழ ஆசைப்படுகிறேன் என்பதையாவது தீர்மானமாக சொல்லி விட்டுப் போ என்கிறார்

3. ஒரு வயோதிகர் பிரபஞ்சத்தைப் பற்றிய தன்னுடைய சித்தாந்தம் (ஒவ்வொரு முறையும் நவீன அறிவியல் சித்தாந்தம் அதற்கு மாற்று கூறும்பொழுது அதனையும் கற்று அதிலும் தன்னுடைய சித்தாந்தத்தையே “சாஸ்வத சுழற்சி தத்துவம்” நிலை நாட்ட முற்படுகிறார்) தகர்க்கப்பட்டு இந்த வாழ்க்கை பயனில்லாமல் கழித்து விட்டேனா? தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டேனா? என்று மருத்துவமனையில் கேட்டு உயிர் துறக்கிறார்

மனம், தன்னிலை, ஆன்மா, ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் இவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி இன்று கார்ப்பரேட் சாமியார்கள் பிரியாணிப் பிழைப்பு நடத்துகிறார்கள். இதில் ஆன்மீகத்தைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதிவிட்டீர்கள். தெளிவான, எளிமையான, கச்சிதமான நடை அதேசமயம் சுவாரசியமான முறையில் விஷயங்களைத் தொகுத்து அளிக்கும் திறன் (காந்தி வேக்ஸின் ஒரு சமீபத்திய உதாரணம்). நீங்கள் எழுத்தைத் தவமாக செய்து வருபவர் மட்டுமல்ல அதில் நேர்மையைக் கடைப்பிடிக்கும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். ஆகையால் நீங்கள் மனம், தன்னிலை மற்றும் அமானுஷ்யம் பற்றி விரிவாக, அது சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டுரை எழுத வேண்டுமென உண்மையைத் தேடிக் கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கத்துடன்

நாதன்.

கார்ல் ஸேஹனின் The Demon-Haunted World: Science as a Candle in the Dark நூலில் அவர்கள் நாட்டு அமானுஷ்ய விஷயங்களை (நம்மவருக்கு சித்தரின் ரசவாதம், கூடுவிட்டுக்கூடு பாய்தல் போல அவர்களுக்கு வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டுக்கள், சூனியக்காரிகள்) எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் சொந்த அனுபத்தில் எதிர்கொண்டிருப்பதாக அதில் சொல்லவில்லை

அன்புள்ள நாதன் அவர்களுக்கு,

நீண்ட கடிதம். என் பதிலை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்

1. பொதுவாகத் தத்துவசிந்தனை என்பது செயலூக்கம் கொண்டவராக, மகிழ்வானவராக ஆக்கும்பொருட்டு நிகழ்கையில் மட்டுமே அதற்கு மதிப்பு என்பது என் எண்ணம். சோம்பலுக்கான ஒரு காரணமாக தத்துவசிந்தனை இருக்குமென்றால் அது தத்துவமல்ல. எதையும் வாசிக்காமல், இசை கேட்காமல் ஆங்கிலப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு இருக்கத்தான் உங்கள் தத்துவசிந்தனை உதவுகிறதென்றால் அதன்பயன் என்ன? அப்படிஎந்த தத்துவசிந்தனையும் இல்லாமல் நம்மிடம் ஏராளமானவர்கள் அப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறார்கள்?

2. உண்மையான தத்துவம் வினாக்களாலானது. திறக்கும்தோறும் புதுக்கதவுகளைத் திறப்பது. ஆகவே அது துடிப்பான சிந்தனைச்செயல்பாடாக மாறக்கூடியது. நீங்கள் பிரபஞ்சத்தைப்பற்றிச் சொல்லும் ஒற்றைவரிச் சிந்தனையே அல்ல. அந்தச்சிந்தனையை நீங்கள் உண்மையாக நம்பினீர்கள் என்றால் அதனடிப்படையில் வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் புரிந்துகொள்ள விளக்கிக்கொள்ள முயல்வீர்கள். அது உங்களை ஆங்கிலப்படம் பார்த்து அமையும்படி செய்யாது.

3. பொதுவாக ஏதாவது ஒரு சில வரிகளை எப்படியாவது உருவாக்கிக்கொள்வதும் அதைக் கடைசி உண்மை என நம்பி மேற்கொண்டு எந்த சிந்தனையும் செய்யாமலிருப்பதும் நம்மிடம் அதிகமாகக் காணப்படுகிறது. ஓஷோ அல்லது ஜெ.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து நம்மவர்கள் அதிகமும் பெற்றுக்கொள்வது இதையே. தத்துவசிந்தனை என்பது நம்மை முழுமைப்படுத்தவேண்டும். நம் ஆன்மீகச்சிடுக்குகள் அறிவார்ந்த போதாமைகள் உணர்வுக்கொந்தளிப்புகளில் இருந்து அது நம்மை வெளிக்கொண்டுவரவேண்டும். அப்படி நிகழவேண்டுமென்றால் அச்சிந்தனை மொத்தவாழ்க்கையையும் தழுவக்கூடிய முழுமை கொண்டிருக்கவேண்டும். நாம் நம் வாழ்க்கையைக்கொண்டு சிந்தித்து அச்சிந்தனையை அவ்வாறு முழுமைப் படுத்தவேண்டும்

4. அருவமான [abstract]  வரிகளைத் தத்துவசிந்தனை என்று மயங்குவது பெரிய பிழை. எதையும் அப்படி அருவமாக ஆக்கி சுருக்கமான சொற்களில் சொல்லிவிடலாம். விரித்தால் நடைமுறைவாழ்க்கையின் எல்லாத் தளங்களுக்கும் வந்துசேரக்கூடிய ஒன்றுதான் அருவமான வடிவில் தத்துவசிந்தனையாக இருக்கமுடியும்

5. நான் சோதிடம் போன்றவற்றை நம்பக்கூடியவன் அல்ல. அவற்றை அறிவியல் என்றோ கலை என்றோ நினைக்கவில்லை. அதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். எந்தவகையான அமானுஷ்ய விஷயங்களையும் நான் என்னுடைய புறவயமான அனுபவ அறிவைக்கொண்டே அணுகுவேன். தர்க்கபூர்வமாக விளக்கிக்கொள்ளவே முயல்வேன். ஆகவே எப்போதும் அமானுடவிஷயங்களை நான் ஆதரித்ததில்லை

6. சோதிடம்போன்றவை சகஜமான மானுட உள்ளுணர்வின் மூலம் சொல்லப்படுபவை என்பதே என் புரிதல். அந்த உள்ளுணர்வைக் குவிக்கவும் பயன்படுத்தவும் சில புறவயமான கருவிகளையும் குறியீடுகளையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். அதையே நான் குறிப்பிட்டேன்

7. இந்த விஷயத்தை நீங்கள் உங்க்ளுக்குத்தேவையானபடி புரிந்துகொண்டிருப்பதிலிருந்தே சிந்தனையில் நீங்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகள் தெரியவருகின்றன. உங்கள் செயலின்மையை நியாயப்படுத்தும் வாதங்களில் இருந்து விடுபட்டு அறிவை செயலூக்கம் கொண்டதாக ஆக்குவதும் நீங்கள் வைத்திருக்கும் ‘டெம்ப்ளேட்’களில் பிறசிந்தனைகளைக் கொண்டுசென்று சேர்க்காமல் புதிய சிந்தனைகளை நோக்கி உங்களை உடைத்துத் திறந்துகொள்வதும்தான் உங்களுக்கு இன்று தேவை என நினைக்கிறேன்

இக்கடிதம் உங்களைச் சீண்டுமென அறிவேன். ஆனாலும் வேறுவழியில்லை

ஜெ

முந்தைய கட்டுரைபிம்பங்கள்-கடிதம்
அடுத்த கட்டுரைவாசிப்பின் வாசலில்