கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்

 

வணக்கம் குரு.,
கதை சொன்ன கிளி.! இன்று இல்லாமல் சற்று ஏமாற்றம் தான்.ஒவ்வொரு நாளும் கதையின் இறுதி வரியில் “மேலும்” கண்டவுடன் ஒரு சிறு மகிழ்ச்சியோடு ஒவ்வொரு வரியாக வாசிக்க துவங்குவேன். எனது ஆவல் என்னவென்றால்? அனந்தனின் 47வது வயது வரை நினைவில் உள்ளதை பகிர்ந்து! எழுதுவீர்கள் என்றால்,  அதுகிட்டதட்ட உங்களின் சுயசரிதை.அப்பாவின் பாத்திரத்தில் சற்று புனைவு இருக்க வேண்டும் என மனம் பதைக்கிறது! ஏனென்றால் அவ்வளவு கொடூரத்துடன் ஏற்கமுடியவில்லை (உண்மையாக இருப்பினும்).
        கிராமத்தில் வசிக்கும் எல்லா சிறுவர்களுக்கும் பால்யம் ஒன்றுபோல என்று நினைக்கதோன்றுகிறது!அனந்தனின் பால்யத்தில் ஆண் நண்பர்கள் இல்லை என்பது தான்! அதிகாலையில் நெல் அவிக்கும் பழக்கம் பெரும்பான்மையான வீடுகளில் நடைபெறும்,அந்த நெல் ஆவியில் இனிப்பு மணம் இருப்பதென்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். மாடு குளிப்பாட்ட போவது, ஊற்று தண்ணீர் எடுக்க செல்வது, மரத்தின் அடியில் ஒன்றுக்கு அடிப்பது கூட கிராமத்து சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அனுபவம் தான், ஆனால் அவைகளை மறந்து பல ஆண்டுகள் கழித்து இக்கதையின் மூலம் மலரச்செய்துவிட்டீர்கள்!!
”பசு கறவ ஒண்டோடா ராஜா?”
ம்
”எந்து வரும்?”
“நாநாழி”  இதை கேட்காத அத்தைமார்கள்,மாமிமார்கள் எங்காவது உண்டா? நாழி என்பது படி தானே? எங்களூர் பக்கம் படிக்கணக்கில் தான் பாலின் அளவை குறிப்பார்கள்..
        ஒரு நாளின் பிற்பகல் வரை சொன்ன கதையே மனதை சிதறடிக்கிறது மேலும் முழுமை பெறும்போது என்ன மனநிலை என்று ஊகிக்க முடியவில்லை.
        இதை இயல்புவாதம் என்று வகை பிரித்துள்ளீர்கள்,இது பற்றியெல்லாம் இப்போது தான் அறிகிறேன் ஆனால் உலகு தழுவுவது என்று குறிப்பிடுவது பொருத்தமானது தான்.
        உங்கள் கட்டுரைகளை, அனுபவங்களை (இணையத்தில், குறிப்பாக நகைச்சுவை பகுதிகளும்) தொடர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு மற்றும் உணவு வகைகள் பெரும்பான்மை தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. நான் கூட வாக்கியத்தை முடிக்கும் போது “கேட்டியளா” என்று சில சமயம் பேசிவிடுவது உண்டு.”நாளைக்கு போனு பேசுகேன்” என்று இப்போது அடிக்கடி வந்துவிடுகிறது.உங்கள் நாவல், கதை, கட்டுரைகளிலேயே பொழுதுகள் கழிவதால் கிடைத்த மாற்று மொழித்திறன்.!! என்று பெருமைபடுகிறேன்..இல்லை ஸ்பிலிட் பர்ஸ்னாலிடியா?!!..
பணிவன்புடன் மகிழவன்

 

அன்புள்ள மகிழவன்

நலம்தானே? குழந்தைகளின் மனம் புலன்களினால் ஆனது. சின்ன வயதில் அஜிதன் ”சூட்கேஸ் மணம் அடிக்குதே யார் வந்திருக்கா?” என்று கேட்பான். அந்த அளவ்வுக்கு நுட்பம். அப்படி நுட்பமான முறையில் உள்வாங்கப்படும் ஒரு உலகை இக்கதையில் காட்ட முயன்றேன். அது என் இளமைப்பருவம்தான்

ஜெயமோகன்

உயர்திரு ஜெ சார்

வணாக்கம், ராமாயண கிளி கதை ,சிறுகதையா? அல்லது சற்றே பெரிய கதையா? அல்லது குறுநாவலா? இதில் எதில் இந்த கதை அடங்குகிறது?இனி கதையின் தலைப்பிற்கு கீழ் சிறுகதை என்று எழுதிவிட்டால நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

உங்களின் விளக்கத்தை படிக்கும் முன் எதற்கு இத்தனை வர்ணனைகள் (சூழலைப்பற்றி ராமயனக்கத்தையில்) என்று நினைத்தேன்.ஆனால் இயல்புவாதம் அப்படித்தான் இருக்கும் என்று விளக்கியுள்ளதால் என் சந்தேகமும் கதையைப்பற்றிய எனது எண்ணமும் மாறிவிட்டது இயல்புவாதத்தை பற்றி நீங்கள் விளக்கியிராவிட்டால் கதையைப்பற்றிய எனது எண்ணம் தவறானதாக இருந்திருக்கும்.அதாவது கதை சரியில்லை என்று. ஆனால் இயல்புவாதத்தை பற்றி தெரிந்துஒண்டதனால் இப்பொழுத்து எனது கருத்து கதை அட்டகாசம்

மிக்க அன்புடன்
பெருமாள்
கரூர்

 

அன்புள்ள பெருமாள்

எந்த ஒரு எழுத்தையும் அதன் நோக்கம் தெரிந்து வாசிப்பதே சிறந்தது. இல்லையேல் தப்பான இடத்தில் திறக்க முயல்வதுபோல ஆகிவிடும்.

ராமாயணக்கிளி ஒரு குறுநாவல். ஆறு பகுதிகள் கொண்டது

அதை வாசிக்காதவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காகவே நடுவே ஒரு பயணப்பதிவ்cஉ

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

வழக்கம்போல் காலை பணிக்கு வந்ததும் சம்பிரதாயமாக பணி சம்பந்தப்பட்ட அஞசல்களை பார்த்துவிட்டு, நம் வலைத்தளம் புகுந்தேன். கிளி சொன்ன கதை – 1 ஐ கண்டதும் கத்தாத குறைதான். ரொம்ப உற்சாகமாகவும் சந்தோசமாகவும் ஆனது. அனல் காற்றுக்குப் பின் நீங்கள் பதிக்கும் கதை. கட்டுரையை விட ஒரு படி நான் அதிகம் விரும்புவது உங்கள் கதை. அப்படியே அமிழ்ந்து போனேன். கண்முன் கதை ஆடிச்சாரலுடனும், அப்பாவின் “அடி” இடியுடனும் கதை விரிந்து போய்கொண்டிருக்கிறது. எனக்கும், அனந்தனுக்கும் அதிக வித்தியாசமில்லை. எங்கப்பாவிற்க்கும், அம்மாவிற்க்கும், தங்கப்பனுக்கும், விசாலம்மைக்கும் கொஞ்சமே, கொஞ்சம் தான் வேறுபாடு. ஏதோ என் இளமைகாலத்தை இன்னொருமுறை வாழ்வதை போல இக்கதையில் உலவிக்கொண்டிருக்கிறேன் “தொடரும்” இல் தடங்களானாலும் கூட…
தங்கப்பன் உண்ணும் விதமும், அதை விசாலம் கவனித்து பரிமாறும் முறைகளையும் நான் என் வீட்டில் இன்றுவரை பார்த்துவந்தாலும் அதை உங்களின் வழி படிக்கும் போது பிரமித்துபோனேன். வார்த்தைகளில் கொண்டுவருவது என்பது, பிள்ளையை பெற்றெடுப்பது போல்தான் போலும். அதனாலேயெ அது அவ்வளவு வியப்பையும், அழகையும், சந்தோசத்தையும் தருகிறது.
அன்புள்ள தனசேகர்

நான் கிளி சொன்ன கதையை அதிகம்பேர் வாசிக்க மாட்டர்கள் என்றே எண்ணினேன். இத்தனைபேர் கூர்ந்து வாசிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிகம் பேர் வாசிக்க மாட்டார்கள் என்பதனால்தான் நடுவே வேறு விஷயங்களை போட்டேன்.

சிறுவர்களின் கண்கள் எதை கவனிக்கும் என என் நினைவுகள் வழியாக, என் பையனைப்பற்றிய அவதானிப்புகள் வழியாக ஊகித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு கணமும் கண்களால் உலகை விழுங்கியபடியே இருக்கிறார்கள்.

இதில் உள்ள அப்பா என் அப்பா அல்ல. அவருக்கு இந்த வகையான குரூரம் இல்லை. அவர் பாட்டுக்கு அவரது உலகில் வெற்றிலைச் சுவையுய்டன் இருந்துகொண்டிருப்பார்

ஜெ

அன்புடன்
தனசேகரன்

 

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 5
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 6