சாதியாதல்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களே,|

வணக்கம். நெடுநாட்கள் உங்களின் தளத்தில் வாசகனாக இருக்கிறேன். நீங்கள் வாசகர்களுடன் கொண்டுள்ள தொடர்பினை நினைத்து வியந்துள்ளேன். மற்ற எழுத்தாளர்கள் உங்களைப் போல இல்லை.நீங்கள் வாசகர்களுடன் நெருக்கமாக உள்ளீர்கள், நல்ல நண்பனாக அவர்களின் ஐயத்தினைக் களைகின்றீரகள், வழிகாட்டுகின்றீர்கள். அது போல எனக்கும் என் குலத்திற்கும் உங்கள் வழிகாட்டல் இப்போது தேவைப்படுகிறது. ||

செய்தி 1 –

சற்று நாட்களுக்கு முன் முகநூல் சோழிய வெள்ளாளர் குழுமம் என்பதில் பிரபல எழுத்தாளர் நாஞ்சிலின் மகள் 600க்கு 596 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் துன்பப்பட்டார் என்று படித்தேன். வெறும் நான்கு மதிப்பெண்களே குறைவாக எடுத்த அந்தப் பெண் மருத்துவப்படிப்பிற்காக எத்தனை துயர்களைத் தாண்டிப் படித்து எழுதி இத்தனை அரிய மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். அந்தப் பெண் பிள்ளைமார் என்றும், அதனால் அந்தப் பெண்ணுக்கு சலுகை கூடக் கிடைக்காமல் போனது எனவும் படித்தேன். மிகவும் வேதனையாக இருந்தது. இப்படி

செய்தி 2 –

பிள்ளைமார் என்றதுமே பெரிதும் நினைவுக்கு வருபவர் வ.உ.சிதம்பரனார். அவரைப் பற்றி அதிக மக்களுக்குக் கப்பலோட்டியது மட்டுமே நினைவில் இருக்கிறது. மற்ற பெருமைகளையெல்லாம் இங்கு மறைத்து சமூகத்திற்கான குறியீடாக மாற்றிவி்ட்டார்கள். நாடே கொண்டாட வேண்டிய அவரைப் பிள்ளைமார் சமூகம் மட்டுமே கொண்டாடும் அவல நிலை பற்றி வேறொரு இடத்தில் படித்தேன்,.

வன்னியர், தேவர் முதலானோரில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். நானும் வரலாற்றைத் தேடிப்பார்த்தேன் எந்தப் பிள்ளைமாரும் அரசனாக இருந்ததாகத் தெரியவில்லை. மருதநாயகம் பிள்ளை என்பவர் கூட முகமதியராக மாறிவிட்டார். (வேறு மன்னர்கள் பி்ள்ளைமார்களில் இருந்தால் கொஞ்சம் குறிப்பிடுங்கள் தெரிந்துகொள்கிறேன்) இப்படி வரலாறு காலம் தொட்டோ யாரையும் அடிமை செய்யாமல் வாழும் இனம் பிள்ளைமார் இனம் மட்டுமே. அப்படியிருக்கும் போது இப்போதெல்லாம் வ.உ.சியை பிள்ளைமார்கள் வணக்குவது கூடாது என்று என்று கோசம் போடுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கவேண்டிய பிள்ளைமார்கள் எப்போதுமே இதைப் பற்றிய சிந்தனையின்றி, தங்களுடைய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். அதற்கு வரலாற்றில் பிள்ளைமார்கள் பெருமையாக வாழ்ந்துள்ளார்கள், அவர்கள் ஒடுக்கப்படவில்லை என்று நண்பர் ஒருவர் கூறினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மட்டுமே வீரமும், ஒற்றுமையும் இருக்கும் என்பது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பிள்ளைமார்களையும் பெரும் சாதி வெறியர்களாக இன்று காட்டும் போக்கினை அரசு கடைப்பிடிக்கிறது. வ.உ.சியின் சிலை ஓரிடத்தில் அசிங்கப்பட்ட போது கூட உண்ணாவிதம் இருந்துதான் எதிர்ப்பு பிள்ளைமார்களால் தெரிவிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் ஆயுதம் ஏந்துவதைப் பிள்ளைமார்கள் விரும்புவதில்லை. ஆனால் ஏன் பிள்ளைமார்களின் மீது மட்டும் காழ்ப்புணர்வோடு செயல்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.

உ.வே.சாமிநாத ஐயரை அறிந்தவர்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையைத் தெரியாது. பென்னி க்விக் பற்றித் தெரிந்தவர்களுக்கு முல்லைப்பெரியாறு அணையைத் திட்டமிட்டு வகுத்த முத்துஇருளப்ப பிள்ளையைத் தெரியாது. கட்டபொம்மனைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக் கூட தாணுப்பிள்ளையைத் தெரியாது. இப்படி பிள்ளைமார் வரலாறு மட்டும் எங்கும் புதையுண்டு காணப்படுகிறது. இவர்களைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றால் சாதி வெறியன் என்ற பட்டம் எனக்குக் கிடைக்கிறது. என் இனத்தின் பெருமையை நான் உலகிற்கு தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். என்னால் தோல்வியை மட்டுமே காணமுடிகிறது. இரட்டை மலை சீனிவாசனுக்கும், பசும்பொன்தேவருக்கும் கொடுக்கப்படும் மரியாதை , பிள்ளைமார் இனத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தல் என் தவறா?.

மரியாதையுடன்,
மருத பிள்ளை

அன்புள்ள பிள்ளைவாள்,

நீங்கள் ஒரு பிள்ளைவாளாக உணர்வதிலும் அதை சொல்வதிலும் பிள்ளைநலத்துக்காகப் பாடுபடுவதிலும் பெரிய பிழை என ஏதும் இல்லை. அதைத்தான் இங்கே பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள்.

ஆனால் பிரச்சினை அது அல்ல. நீங்கள் யார் என்ற கேள்வி கேட்கப்படும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் பதில் என்னவாக இருக்கிறது என்பதுதான். அதாவது நீங்கள் உங்கள் சுயத்தை எப்படி வரையறை செய்கிறீர்கள் என்பதுதான்

நீங்கள் பிறந்த சாதியை வைத்து மட்டுமே உங்கள் சுயத்தை நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய கல்வி, தொழில், தனித்திறமைகள் எதுவும் அங்கே முன்னால் வரவில்லை. அதாவது உங்கள் சுயம் நீங்கள் உருவாக்கிக் கொண்டது அல்ல, உங்களுக்கு அளிக்கப்பட்ட்து மட்டுமே, இல்லையா?

இவ்வாறு நீங்கள் ஒரு அடையாளத்துடன் உங்களை முன்வைக்கும்போது உங்களைப் பிறர் எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு மனிதனை அவனுடைய சொந்த ஆளுமையை வைத்து மதிப்பிடும்போதுதான் அவனுக்குரிய உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது. அது உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்ப்டக்கூடாது, அவ்வளவுதான்

இப்படிச் சொல்கிறேன், ஒரு விவாதத்தில் உண்மை ஒரு பக்கம் இருக்கிறது, பிள்ளைவாள்களின் நலம் இன்னொரு பக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எந்தத் தரப்பை எடுப்பீர்கள்? நியாயம் ஒருபக்கம் இருக்கிறது பிள்ளைவாள்களின் தரப்பு மறுபக்கம் இருக்கிறது என்றால் எதை ஆதரிப்பீர்கள்?

உண்மையையும் நியாயத்தையும் ஆதரித்தால்தான் நீங்கள் தனிப்பட்ட ஆளுமை உடைய மனிதர். அங்கே மனிதர் என்ற அடையாளம் மேலே வருகிறது.
பிள்ளைவாள்களை ஆதரித்தால் மனிதர் என்ற அடையாளம் மட்டும் மேலே வருகிறது. உங்களிடம் உண்மையும் நியாயமும் இருக்குமெனப் பிறர் நம்ப மாட்டார்ர்கள்.

நீங்கள் பிள்ளைவாள் நலன்களை மட்டுமே நாடுவீர்கள் அதை உண்மை என்றும் நியாயம் என்றும் உலகம் நம்பவேண்டுமென்று நினைத்தீர்கள் என்றால் கொஞ்சம் பேராசை அல்லவா அது?

ஆகவே சாதி சார்ந்த , மதம் சார்ந்த, இனம் சார்ந்த அடையாளங்களை சிந்தனையாளர்கள் ஏன் துறக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? உண்மை, அறம், நியாயம் என்னும் விழுமியங்களைச்சார்ந்து தன்னை முன்வைக்க விரும்பும் எவரும் அந்த அடையாளங்களை நிராகரிப்பார்கள். ஏனென்றால் உண்மை அறம் நியாயம் போன்றவை அவர்களை மனிதர்கள் என்ற நிலை நோக்கி விரிவாக்கம் செய்கின்றன. சாதி, மதம், இனம் போன்ற அடையாளங்கள் குறுக்குகின்றன.

கடைசியாக ஒன்று, இந்தக்குறுக்கல்போக்கு தொடங்கிவிட்டால் ஒரு இடத்தில் நிற்காது. சென்றுகொண்டே இருக்கும். மனிதர்களை சாதி, மதம், இனம் சார்ந்தெல்லாம் பிரிக்க ஆரம்பிப்பவர்கள் மேலும் மேலும் பிரிவினைகளை அதற்குள் செய்துகொண்டே செல்வதைக் காணலாம். ஏனென்றால் ஒரு அளவுகோலின் அடிப்படையில்தானே இந்தப் பிரிவினை செய்யப்படுகிறது. அந்த அளவுகோலை மேன்மேலும் கறாராக அவர்கள் பயன்படுத்துவார்கள். அதனடிப்படையில் ‘தூய’ அடையாளம் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பார்கள்.

நான் இதை மீளமீள கவனித்திருக்கிறேன். ஒருவர் தன்னைப் பிள்ளைவாள் என்றால் அடுத்துக் கொஞ்சம் பழகியதும் ‘நாங்கள்லாம் திண்ணவேலி சைவம்லா…அவாள்லாம் கார்காத்தார்…கார்காத்தார்னா நல்ல வேளாளன் கெடையாது’ என்று சொல்வார்கள். சரி இன்னும் கொஞ்சம் நெருங்கினால் ’தம்பி, நல்லாக் கேட்டுக்கிடுங்க. சுத்தமான திண்ணவேலி சைவம்னா தென்காசி ஜில்லாவுக்குள்ள உள்ள நூத்தெட்டு குடும்பம்தான்…மத்த்தெல்லாம் சும்மா சோழராஜா காலத்திலே வந்து சேந்துக்கிட்டவந்தாம்லா?’ என்பார்கள்

கட்டக்கடைசியில் சொந்த வீட்டுத் திண்ணையில் அதிதூய பிள்ளைவாளைக் கண்டடைவார்கள். வெளியே மொத்த உலகமும் எதிரியாக்க் கிடக்கும்

விரிவதற்கும் சுருங்குவதற்கும் எல்லையே இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைஅரவிந்தர்- இந்தியஞானம்
அடுத்த கட்டுரைபெயர்ந்தோர்