நாம் சுதந்திரமானவர்களா?

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி.

சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் இப்போது கேட்கலாமென நினைக்கிறேன். பணி நிமித்தமாக குறுகிய காலத்திற்கு இப்போது நான் ஜெர்மனியில் கடந்த எட்டு மாதங்களாக இருக்கிறேன். முன்னதாக ஏற்கனவே ஓராண்டுகாலம் இந்நாட்டில் ஓர் கிராமத்தில் இருந்திருக்கிறேன். இப்போது ஓர் நகரத்தில். இக்காலங்களில் நான் தொடர்ச்சியாகக் கண்டு வரும் ஓர் விஷயம் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

அது இங்கே மக்களிடம் காணப்படும் ஓர் விடுதலையுணர்வு. எல்லா நேரங்களிலும் பெரும்பான்மையான மக்களிடமும் இது வேறுபாடின்றிக் காணப்படுகிறது. பொதுவெளியில் மக்கள் தங்களை மிக இலகுவாக உணர்கிறார்கள். இவர்களுக்கு யாரிடமும் பணிந்து போக அவசியமில்லாததாகவே நான் உணர்கிறேன். பணியிடங்களில் உயர் அதிகாரிகளிடமும் வெளியே அரசாங்க அதிகாரிகளிடமும் (உதாரணம்: போலீசார்) மிக இயல்பாக நடந்துகொள்கிறார்கள்.

அதேபோல், புதியவர்களை சந்திக்கும் போதும் அவர்கள் தங்கள் இயல்பு மாறாமல் நடந்து கொள்ளும் விதமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வாழ்க்கையை நிறைவுடன் கழிப்பவர்களால் மட்டுமே இப்படி இருக்க முடியுமென நினைக்கிறேன்.

மாறாக நம்மிடம் எப்போதும் ஓர் பதற்றமும், இறுக்க மனநிலையும் இருக்கிறது. நம் இயல்பு நிலையை எங்கோ தொலைத்து விட்டிருக்கிறோம். அலுவலக உயர் அதிகாரிகளிடமும் , அரசாங்க அதிகாரிகளிடமும் அப்படி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகச் சூழல் அதற்கான இடத்தை அடையவில்லை, அதற்குப் பல்வேறு காரணங்கள். ஆனால் என்னைத் தொந்தரவு செய்வது எந்த ஆதாயமும் இல்லாத ஒரு பொதுவெளியில் புதியவர்களை சந்திக்கும் போது நாம் நடந்துகொள்ளும் முறை. சக பஸ் பயணியிடமும் பக்கத்து வீட்டினரிடமும் நாம் கொள்ளும் ஓர் எதிர் மனநிலை ஓர் நம்பிக்கையின்மை. யோசித்துப் பார்த்தால் இது மற்றவர்களிடமல்ல நம்மிடத்தில் நாம் கொள்ளும் வெறுப்பும் நம்பிக்கையின்மையுமாகவே எனக்குப் படுகிறது.

இதைப் பற்றி என் நண்பரிடம் விவாதிக்கையில் அவர் நம் பொருளாதார சமநிலையே இதற்குக் காரணம் என்றார். எப்போதும் நாம் நம்மை விட வசதியானவர்கள் மேல் கொள்ளும் பொறாமையின் விளைவே இத்தகைய எதிர் மனநிலையாக வெளிப்படுகிறது என்றார். என்னால் இக்கருத்துடன் முழுமையாக ஒத்துப் போக முடியவில்லை. இப்பொறாமை மனிதனின் ஓர் ஆதார இயல்பு. உலகின் எவ்விடத்திலும் வேறுபாடின்றி இது இருக்கும். இங்கே ஜெர்மனியிலும் கூட. அது முதன்மைக் காரணியாக எனக்குத் தோன்றவில்லை. மேலும் நான் இங்கே பேசும் மக்கள் என்பது பொருளாதார தன்னிறைவு அடைந்த மக்களைப் பற்றி.

என் பார்வையில் இம்மன நிலை நாம் நம் வாழ்க்கையில் உணரும் வெறுமையின் வெளிப்பாடகவே படுகிறது. நம் மனதிற்கு நிறைவைத் தரும் செயல்களை செய்யாததால் உண்டாகும் வெறுமை. காரணம் எது நிறைவைத் தரும் என்பதே நமக்குத் தெரியாமல் இருப்பது. 20 வயது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகிப்போன நம் வாழ்கைமுறை. அதற்குப்பின் நம் சிந்தனை முறையும் அதுவரை உருவாகிவந்த ஓர் சுழற்சியில் சிக்கிக்கொண்டு அதைத் தாண்டி மேலே வராமல் போகிறது.

ஆம், உண்மையில் நாம் மற்றவர்களின் மேல் அல்ல, நம்மிடம் தான் வெறுப்பும் நம்பிக்கையின்மையும் கொள்கிறோம். இவ்வுலகில் நம்முடைய இடம் என்ன என்பதற்கான தெளிவு வந்துவிட்டால் இதிலிருந்து மீண்டு விடலாம். அதை நான் இங்கே காண்கிறேன். இங்கே அனைவரும் தங்களுக்கான நிறைவு எதிலிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். சிலருக்கு இசை, சிலருக்கு பயணம், சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு உடற்பயிற்சி எனத் தங்கள் நிறைவைக் காணுகிறார்கள்.

இதற்குத் தீர்வாக நான் நினைப்பது, நம் கல்வி முறையில் மாற்றங்கள். வாழ்கையின் எல்லா சாத்தியங்களையும் சிறு வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் கல்விமுறை. அந்த சாத்தியங்கள் தெரிந்து விட்டால் போதும், தங்கள் உள்ளுணர்வு காட்டும் வழியில் புதிய பயணம் தொடங்கிவிடும்.

இதுபற்றி தங்கள் கருத்து என்ன என்பதை அறிய விருப்பம். தங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன்,
பாலாஜி
கோவை

***

அன்புள்ள பாலாஜி

மிகத்தாமதமாக இக்கடிதம். பதில் எழுத எண்ணி வைத்த கடிதம் எங்கோ மாட்டிக்கொண்டு விட்ட்து

முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் அவதானித்திருக்கிறீர்கள். இதை நானும் கவனித்திருக்கிறேன். இன்னும் ஒரு மேலதிக அவதானிப்பும் என்னிடமுள்ளது

ஐரோப்பாவில் மனிதர்கள் புறவயமான ஒரு விடுதலையை உணர்பவர்களாகத் தெரிகிறார்கள். சமூகத்தளத்தில் பொருளியல்தளத்தில் உள்ள விடுதலை இது. இதே போன்ற விடுதலையுணர்வை நான் ஆப்ரிக்க மக்களிடமும் கண்டேன். ஐரோப்பியர் விடுதலையை முதலாளித்துவத்தின் பொருளியல் நிறைவு மற்றும் நீண்டகால கருத்தியல் செயல்பாடு வழியாக ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்கர்கள் பழங்குடி மரபின் நீட்சியாக இன்றில் மட்டுமே திகழும் மனநிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலோ கீழைநாடுகளிலோ அந்த விடுதலையுணர்ச்சியைக் கண்டதில்லை. இங்குள்ள மக்கள் கழுத்துக்கயிறு அவிழ்க்கப்பட்ட பின்னரும் கட்டு இருப்பதான பாவனையில் செல்லும் கால்நடைகள் போல இருக்கிறார்கள். குறிப்பாக சீன இனத்தவர்கள் எப்போதுமே அமைப்பின் அடிமைகள். அவர்களிடம் தனிமனித விடுதலை என்னும் கருத்தாக்கமே இல்லை.

அதேசமயம் அரேபிய நாடுகளில் இந்த விடுதலையுணர்ச்சிக்கு நேர் மாறான ஒன்றை எங்கும் கண்டேன். ஒவ்வொருவரும் கனத்த இரும்புச்சங்கிலிகளால் கட்டுண்டவர்களைப்போலத் தெரிந்தார்கள். பொருளியல்நிறைவு அவர்களை செயலற்றவர்களாக, மிதப்பானவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது. மேட்டிமைத்தனமும் தாழ்வுணர்ச்சியும் விசித்திரமாகக் கலந்த மக்கள்.

நான் இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். கீழைநாடுகளில் நாம் நீண்டகால வரலாறுள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலப்பிரபுத்துவம்தான் இங்குள்ள பண்பாடு கலை சிந்தனை அனைத்தையும் உருவாக்கியது. நம்மைப் பழங்குடி வாழ்க்கைமுறையில் இருந்து மீட்டு அடுத்தக்கட்ட சமூகப் பண்பாட்டு நிலையை நோக்கிக் கொண்டு வந்தது

ஆனால் அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு அடுக்கதிகாரத்தால் ஆனது. மனிதர்களை ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி அதிகாரத்தை மேலிருந்து கீழாக இறக்கிக்கொண்டுவந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒவ்வொரு தனிமனிதரையும் கட்டுப்படுத்துவது அது. அந்தக்கட்டுப்பாடுதான் அதன் வல்லமையை உருவாக்கியது

நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் ஆசாரங்கள், நம்பிக்கைகள்,சமூகச்சட்டங்கள் சார்ந்த நூற்றுக்கணக்கான கட்டுப்பாடுகள் உள்ளன. யோசித்துப்பாருங்கள் நாம் குழந்தைகளாக இருக்கையிலேயே அப்பாவிடமிருந்து அந்த மேலதிகாரத்தை அறிய ஆரம்பிக்கிறோம். அதன்பின் ஆசாரங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. நாம் எப்படிச் சாப்பிடவேண்டும் எப்படிப் பேசவேண்டும் எப்படி அமரவேண்டும் எல்லாமே சொல்லிக் கொடுக்கப்படுகிறன.

அதன்பின் நம் வாழ்க்கையின் எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உணர்கிறோம். நாம் எதைப் படிக்க வேண்டும், எந்தப்பெண்ணை மணக்க வேண்டும், யாருடன் நட்புக்கொள்ள வேண்டும், எந்த இடத்தில் வீடுகட்டவேண்டும் என எல்லாமே நமக்குச் சொல்லப்படுகின்றன. நாம் அவற்றில் ஒருசிலவற்றை மீறவேண்டுமென்றாலும் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது

யோசித்துப்பார்த்தால் வேடிக்கைதான். ஒருவர் தனக்குப்பிடித்த இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருக்கும் சமூகம் என ஒன்று வேறெங்கும் இருக்குமா என்ன?
இப்படி இருக்கையில் நாம் எப்படி சுதந்திரமானவர்களாக இருக்கமுடியும்?

நாம் இன்று நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்பை நோக்கி வந்து விட்டோம். நம்முடைய பொருளியல் இன்று முதலாளித்துவக்கட்டமைப்பு கொண்டதுதான். ஆனால் நம்முடைய பண்பாடும் மனநிலைகளும் இன்னமும் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்திலேயே நீடிக்கின்றன.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஐரோப்பாவிலும் இந்தியாவிலுமாக அலுவலக வேலைசெய்தவர்- ஒரே நிறுவனத்தில் ஒரே வேலையைச் செய்தவராக்கூட இருக்கலாம்- அங்கும் இங்கும் அலுவலகச்சூழலில் இருக்கும் பிரம்மாண்டமான வேறுபாட்டை உணரமுடியும்.

அங்கே இருப்பது துல்லியமான முதலாளித்துவ உறவு. அதில் தனிப்பட்டமுறையில் ஏதுமில்லை. நான் என் உழைப்பை உனக்கு விற்கிறேன், நீ அதைப்பெற்று எனக்கு ஊதியம் அளிக்கிறாய். இந்த அலுவலகத்தில் நீ அந்த நிர்வாகி என்றால் நான் ஊழியன். இருவேறு பணிகள் மட்டும்தான் அவை. மற்றபடி நீ ஒரு தனிமனிதன் நானும் ஒரு தனிமனிதன். நானும் நீயும் சமம்தான் – இதுதான் முதலாளித்துவ உறவு

இங்கே எந்த அலுவலகத்திலும் அதைக்காணமுடியாது. இங்கே நமக்கு மேலே இருக்கும் ஒரு நிர்வாகி நாம் அவரை விடத் தாழ்ந்தவர் என்று நினைத்துக்கொள்வார். அதைவிட முக்கியம் அவரது மனைவி நம்மை அவரைவிடக் கீழே இருப்பவராக நினைத்து அப்படித்தான் நடத்துவார். ’மரியாதையை’ எங்கும் எதிர்பார்ப்பார். அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தனித்தனியான உண்ணுமிடங்களும் கழிப்பிடங்களும் இங்குள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும் உண்டு. உண்மையில் இது ஒரு நவீனச்சாதியமைப்பு மட்டுமே.

இதை எழுதியிருக்கிறேன். ஒருமுறை ஒர் அதிகாரியின் மனைவி திரையரங்கில் ஒரு கீழ்ஊழியரின்  மனைவியிடம் ஒரு வேலை ஏவினார். அந்தப்பெண் அதைச்செய்ய மறுத்தார் . அதிகாரியின் மனைவி அதைத் தன் கணவரிடம் புகார்செய்ய அந்த ஊழியர் கூப்பிட்டுக் கண்டிக்கப்பட்டார். அந்தப் பிரச்சினை தொழிற்சங்கம் வழியாக விவாதத்துக்கு வந்தபோது அந்த ஊழியரின் மனைவியின் ’திமிர்’ பற்றி ஊழியர்களே குறைப்பட்டுப் பேசினார்கள். அந்த அதிகாரியின் மனைவிக்கு தான் தவறு செய்ததாகவே தோன்றவில்லை. தான் அவமதிக்கப்பட்டதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். “கீழே உள்ள ஒருத்தர் கிட்ட ஒரு வேலை சொன்னது தப்பா?” என்று கண்ணீர் சிந்தினார்.

இந்த மேலே மேலே செல்லும் பிரமிடு அமைப்பு அப்படியே நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்குரியது. அதையே நாம் நம் அரசு நிர்வாகம், தொழில், கல்விக்கூடங்கள் அனைத்திலும் புதியமுறையில் அமைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நாம் எப்போதும் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் மேலே ஒருவர் இருக்கிறார். கீழே ஒருவர் இருக்கிறார். நாம் கட்டுப்படுகிறோம், கட்டுப்படுத்துகிறோம்.

ஆகவேதான் இங்கே நாம் ஒவ்வொருவரும் மரியாதைக்காக அலைகிறோம். நம்முடைய மரியாதை சற்றும் குறையக்கூடாதென எண்ணுகிறோம் . இங்கே மனிதர்கள் பேசுவதை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் தனக்களிக்கப்பட்ட மரியாதை அல்லது அளிக்கப்படாத மரியாதை பற்றியே பேசுவார்கள். ”இப்பல்லாம் மரியாதையே இல்ல சார்” என்று புலம்புகிறார்கள். “மரியாதை தெரியாதவன்” என பிறரை வசைபாடுகிறார்கள். இது தனிமனிதனின் தன்னகங்காரம் சம்பந்தமானது அல்ல. சமூக அதிகார அடுக்கில் தன்னுடைய இடம் தனக்கு கீழே உள்ளவர்களால் அளிக்கப்படுகிறதா என்ற கவலை மட்டுமே. இவர்கள் மேலே உள்ளவர்களுக்கு முழுமையாக பணிவதற்கும் தயாராகவே இருப்பார்கள்.

முதலாளித்துவம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. காரணம் அது அவனை ஒரு பெரிய அமைப்பின் பிரிக்க முடியாத சிறிய உறுப்பாக நினைக்கவில்லை. உற்பத்தியை நிகழ்த்தும் ஒரு சிறிய தனி அலகாக மட்டுமே நினைக்கிறது. தன் திறனை அவன் அச்சமூகத்திற்கு விற்று அதற்கான ஊதியத்தைப்பெற்றுக்கொள்கிறான். அந்த வகையான முழுமையான சுதந்திரமே முதலாளித்துவத்தின் இலட்சியநிலை எனலாம். ஐரோப்பா அந்த இலட்சியநிலையை நோக்கி வெகுவாக முன்னால் சென்ற ஒரு சமூகம். அங்கே ஒவ்வொரு தனிமனிதனும் சமூக தளத்திலும் பொருளியல் தளத்திலும் சுதந்திரமாக உணர்கிறான்.

இந்தியாவில் ஒருவர் அந்த சுதந்திரத்தை விரும்பினால் எடுத்துக்கொள்ள முடியும். நான் சுதந்திரமானவன், சுதந்திரமாக இருப்பேன், அதை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று நினைத்துக்கொண்டால் அவரை இங்கே வலுக்கட்டாயமாகக் கட்டிப்போடும் சக்தி ஏதுமில்லை. எவ்வளவோ மனிதர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். சீனாவில் அந்த சுதந்திரம் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது. அது சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ இல்லை. முதலாளித்துவ நாடான தென்கொரியாவில் கூட மக்கள் வாழ்வது அடிமைமனநிலையில் என அறிந்திருக்கிறேன்.

ஆனால் பண்பாட்டுரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் இந்நூற்றாண்டின் முதலாளித்துவ அமைப்பு வழங்கும் சுதந்திரத்தை அடையவில்லை. ஏனென்றால் அந்த சுதந்திரத்தை நாம் முக்கியமானதாக நினைக்கவில்லை. அதை அடைய முயலவில்லை. நம்மை எவரேனும் ஆளவேண்டும் நாம் பிறரை ஆளவேண்டும் என்றே எண்ணுகிறோம். பணிகிறோம், பணிவை எதிர்பார்க்கிறோம். ஆகவே நமக்கு இன்னும்கூட ஜனநாயகம் என்பது பிடிகிடைக்கவில்லை. ஜனநாயகம் என்பது சுதந்திர தனிமனிதர்களின் அரசியல் அமைப்பு

ஒர் அரசியல்கட்சிக்குள் அதன் தலைவர் சர்வாதிகாரி மாதிரி இருந்தால்தான் அது நல்ல கட்சி என நினைக்கிறோம். ‘லே, தலைவன்னு ஒருத்தன் இருந்தா அவன் சொல்லணும் மத்தவன் கேக்கணும். அல்லாம எல்லாவனும் சொல்லுவான்ன்னா அது என்னலே கட்சி?’ என்று படித்தவர்கள்கூடப் பேசுவதைக் கேட்கலாம். ‘குடும்பம்னா அப்பன் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்கணும்’ என்ற பொன்மொழியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். சுதந்திரம் என்ற சொல்லை விடக் கட்டுப்பாடு என்ற சொல்லே நமக்கு இனியதாக இருக்கிறது

இந்த மனநிலையால்தான் நாம் அடிமையாக இருக்கிறோம். தளைகள் நம் மனதில் உள்ளன. .

ஆப்ரிக்க நாடுகளில் நிலப்பிரபுத்துவமே உருவாகவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான பழங்குடிகளின் கூட்டு மட்டுமே. பழங்குடிச் சமூகத்தில் எல்லா உறுப்பினர்களும் சமம்தான். அங்கே மேலே மேலே அடுக்கிச்செல்லும் அதிகாரக் கட்டுமானம் கிடையாது. ஆகவே தான் அங்குள்ளவர்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இது அங்குள்ள எளிய மக்களிடம் பேசியபோது உருவான  மேலோட்டமான சித்திரம். அங்குள்ள பல நாடுகள் இன்று இந்தியா போலத்தான் உள்ளன.

அரேபியநாடுகளில் பழைய நிலப்பிரபுத்துவ முறை அப்படியே உள்ளது. அதன் நகல் அல்ல, அதன் உண்மையுருவமே உள்ளது. ஆகவே கைவிலங்குகள் தூலமாகவே உள்ளன. ஓவ்வொருவரும் திட்டவட்டமாக வகுக்கப்பட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டு மட்டுமே வாழமுடியும். இல்லையேல் முதுகில் சாட்டை விழும்

இந்தியாவில் நாம் நிலப்பிரபுத்துவம் உருவாக்கியளித்த பண்பாட்டு ச்செல்வத்தை தக்க வைத்துக்கொண்டு நவீன முதலாளித்துவப் பண்பாடு நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போதுதான் உண்மையான சுதந்திரத் தனிமனிதனை இங்கே பார்க்கமுடியும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகமும் இங்கே உருவாகும்

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் May 30, 2013 at 00:00


அகம் மறைத்தல்


அகம் மறைத்தல் கடிதம்


அகம் மறைத்தல்

முந்தைய கட்டுரைஇந்திய முகங்கள்
அடுத்த கட்டுரைஇருத்தலியல் நாவல்கள், கடிதங்கள்