சரியான வாழ்க்கையா?

life

 

அன்புள்ள ஜெயமோகன்,

வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. உங்கள் கட்டுரை ஒன்றில் “என் வீடு, நான் இங்கு இருக்கிறேன்” என்று நீங்கள் சொல்லும் போது; அந்த அனுபவம் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைக்குமா என்ற ஏக்கம் வருகிறது.

நம்மகென ஒரு ஊர்; அதில் நமக்கென ஒரு வீடு; குடும்பத்தை நடத்த ஒரு சம்பாத்தியம் இது போதும் என்று பல முறை தோன்றுகிறது. இருத்தாலும் என் தற்போதைய சம்பளத்தை வைத்து வாங்கிய கடன்கள் என்னை இந்த சூழலை விட்டு விடுவிக்க மறுக்கிறது. அடுத்த மாதம் சென்னை யில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும்; அங்கு எவ்வளவு வருடம் தெரியவில்லை; அங்கிருத்து அடுத்த பயணம் எங்கே என்று தெரிய வில்லை.

இந்தச் சூழலில் வளரும் குழந்தைகளின் நட்பு வட்டம் எப்படி இருக்கும். அவர்களுக்கு “என் இடம்” என்ற பிடிப்பு வருமா? இன்று கூட எவ்வளவு சுற்றினாலும் வாழ்வில் கடைசி வருடங்கள் என் சொந்த ஊரில்தான் கழிக்க வேண்டும் என்று நினைக்கும் என் எண்ணம் என் குழந்தைக்கு வருமா? இது நல்லதா இல்லை தேவை இல்லாத உணர்ச்சியா என்று தெரியவில்லை. இருந்தாலும் என் சொந்த மண் நினைவுக்கு வரும் எல்லா நேரத்திலும் நான் உன்னை நோக்கிதான் வருகிறேன் என்ற நினைப்பு எனக்கு ஒரு நிம்மதி தருகிறது. உங்கள் கருத்து என்ன?

சுற்றி வளைத்து ஏதோ கேட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். சுருக்கமாக “தனக்கு என்று ஊர்; அங்கயே தன் வாழ் நாள் முழவதும் கழிக்கும் ஒருவன். செல்லும் இடம் எல்லாம் அவன் ஊர், படிப்பு ஒரு இடம், பணி வெவ்வேறு இடம் என்று தன் வாழ் நாள் முழவதும் கழிக்கும் இன்னொருவன். இவர்கள் இழப்பது என்ன? அடைவது என்ன?” பல சமயங்களில் நாம் ஏன் “வரம்பெற்றாள்” பாட்டி போல வரம் பெறவில்லை என்று தோன்றுகிறது.

நன்றி.

ஜெகதீசன்.

அன்புள்ள ஜெகதீசன்

நான் சங்கசித்திரங்கள் நூலில் ஓர் அனுபவத்தை எழுதியிருப்பேன். இரு சகோதரர்களில் ஒருவர் உலகைச்சுற்றிவந்தவர். ஒருவர் ஊரிலேயே இருந்துவிட்டார். இருவரின் வாழ்க்கையும் ஒன்றே என்று அது முடியும். சங்கப்படலில் ஓர் உவமை வரும். அம்பும் அதன் நிழலும் ஒரேசமயம்தான் சென்று இலக்கைத் தைக்கின்றன.

வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம். வணிக நோக்குடன் இந்தியாவையே சுற்றிவரக்கூடியவர்கள் உண்டு. அவர்கள் இந்தியாவையே அறிந்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் வெளியே விரிந்த உலகம் இருந்தாலும் உள்ளே அது செல்லவில்லை. ஆனால் ஒரே ஊரிலேயே வாழக்கூடியவரின் அகம் திறந்திருந்தால் மண்ணையும் மனிதர்களையும் அறிந்து விரிந்துகொண்டே இருக்கலாம்

நாம் வாழ்வது சரியான வாழ்க்கையா என்று நாமே மதிப்பிடுவது மிக எளிது ஒருவருடத்தை நினைவில் ஓட்டி அந்த நாட்களில் எத்தனை நாட்களை நமக்கு நிறைவளிக்கும்படி செலவிட்டிருக்கிறோம் என்று பார்ப்பதுதான். எது நமக்கு உண்மையான நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது, அதை நோக்கி நாம் சென்றிருக்கிறோமா என்று அவதானித்தால் போதும். அந்த ஒருவருடத்தின் விரிவே மொத்த வாழ்க்கையும்

நான் என் வாழ்க்கையில் எழுத்து,வாசிப்பு,பயணம்,நட்புகள்,குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் உரியநாட்களை செலவிட்டிருக்கிறேன் என திரும்பிப்பார்க்கையில் காண்கிறேன். அவற்றைத் தவிர்த்து என்னுடைய அகங்காரத்தை நிறைவுசெய்யும் அபத்தமான வெற்றிகளை நோக்கி நான் ஓடியதில்லை.

திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால் அந்த வாழ்க்கை முழுமையானதுதான்

ஜெ

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Apr 23, 2013 

முந்தைய கட்டுரைநம்பிக்கையின் ஒளி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2