அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது.
ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது
இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா?
செந்தில் வி
அன்புள்ள செந்தில்
தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு வருடம் முன்னரே செயிண்ட் சேவியர் காலத்திலேயே மதமாற்றம் ஆரம்பித்திருந்தாலும் பின்னர் ஜோ டா க்ரூஸ் என்ற வணிகரின் தூண்டுதலில் மீனவர்கள் கூட்டமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மீது அன்றிருந்த இஸ்லாமிய வரிவசூலாளர்கள் [ரெண்டர்கள்] தொடுத்த கடுமையான சுரண்டலும் அடக்குமுறையும்.
ஜோ டா குரூஸ் [இவர் போர்ச்சுக்கீசியர்களுடன் தொடர்புகொண்டு மதம் மாறிய மலையாளி மேனன்] மீனவர்களை அவர்களின் பதினேழு பட்டக்காரர்கள் தலைமையில் கோவாவுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள போர்ச்சுக்கல் கப்பித்தானுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள்மதம் மாறியதும் அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த போர்ச்சுக்கல்படை, கடலோர முஸ்லீம் படைகளைத் துரத்தி அவர்களுக்குப் பாதுகாப்பளித்தது. [இந்த வரலாறு அசோகவனம் நாவலில் விரிவாகவே வருகிறது]
இதன் விளைவாக மீனவர்களின் ஆன்மீகம் முழுமையாகவே மாற்றமடைந்தது. அவர்களின் பழைமையான குலமரபுகள் ஆசாரங்கள் தெய்வங்கள் எல்லாமே இருண்டகாலகட்டத்தைச்சேர்ந்தவை என்று சொல்லப்பட்டு மறக்கப்பட்டன. ஆகவேதான் நமக்கு தென்பகுதி மீனவர்களைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.
இதில் வருத்தமான விஷயமென்னவென்றால் தென்பகுதி மீனவர்கள், அதாவது கொற்கைக்குத் தெற்கே உள்ளவர்கள்தான் பழைமையான வரலாறு கொண்டவர்கள். அவர்கள்தான் பாண்டியப்பேரரசின் அடித்தளம். அவர்களின் வரலாறு இனிமேல் எழுதப்படமுடியுமா என்பதே சந்தேகம்தான்
பொதுவாக மீனவர்கள் அம்மன்களை வழிபடுபவர்களாகவே இருக்கிறார்கள். தென்பகுதியில் கடலோரமாக நாலைந்து கிலோமீட்டருக்கு ஒரு புள்ளியில் முக்கியமான அம்மன் கோயில்கள் இன்றும் உள்ளன என்பதே ஆதாரம். அவர்கள் வழிபட்ட ஏதோ ஒரு அம்மன்தான் குமரி அம்மன். அதைப்பற்றிய இன்றுள்ள கதை பதினேழாம்நூற்றாண்டுவாக்கில் உருவாக்கப்பட்டதுதான். முந்தைய கதை மீனவர்களின் ஆழ்னைவில் இருக்கலாம். அதேபோல திருச்செந்தூர் அல்லது அலைவாய் மீனவர்களுக்கு முன்னுரிமை உள்ள ஆலயமாக இருந்திருக்கிறது.
இதைப்பற்றி எவரேனும் ஆழமாக ஆராய்ச்சிசெய்தால்தான் உண்டு. இப்போதைக்கு இதைப்பற்றிய ஒரு விவாதம் உள்ள நூல் என்றால் ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு, துறைமுகம் என்ற இருநாவல்கள்தான்
ஜெ
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
வணக்கம்.அண்மையில் வாசித்த இரண்டு விடயங்கள் நீண்டகாலமாக அடிமனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்றை மேற்கிளப்பி விட்டது.
ஒன்று.ஆனந்த விகடனிற்கு(8.8.12 ) வழங்கிய பேட்டியில் எழுத்தாளர் அசோகமித்திரனின் பதில்.
“திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால்,அதற்கு பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?”
“நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன்.அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது,ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன்.கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி,அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம்.அதுவும் இல்லாமல் போனால்…எனக்குச் சொல்லத் தெரியவில்லை!”
இரண்டு.நக்கீரனில்(2012 ஆக.22-24) வெளிவந்த செய்திக்கட்டுரை.
அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பத்மஸ்ரீ என்ற பன்னிரெண்டு வயதுச் சிறுமி கீழே விழுந்து மண்டை பிளந்து மூளைச்சாவு நிலைக்குச் சென்றுவிடுகிறாள்.அந்த சிறுமி இறந்து விட்டதாக உள்ளூர் மருத்துவமனைகள் கைவிட்டுவிட்டன.இந்தச் சூழலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனையில் பத்மஸ்ரீயை சேர்த்தனர்.அங்கு மருத்துவர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினரின் அர்ப்பணிப்பான கடின முயற்சியால் நான்கு மாத கோமா நிலையில் இருந்த சிறுமி அதில் இருந்து மீண்டு பாடசாலைக்கு செல்லத்தொடங்கி விட்டாள்.
“விளையாடிக்கிட்டிருந்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கு அங்கிள்.நான் எப்படி விழுந்தேன்கிறதே எனக்கு தெரியலை.நாலு மாசமா ஆஸ்பிட்டல்லே இருந்திருக்கேன்.நாலு மாசமும் எனக்கு பேச்சே வரலைன்னு அம்மா சொன்னப்போ…பேசாம எப்படி கெடந்திருப்போம்னு யோசிச்சிப் பார்த்தால் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது அங்கிள்.ஸ்கூலுக்கு போனா…நிறையப் பாடம் நடத்தி முடிச்சிருக்காங்க.எல்லாப் பாடத்தையும் இப்பதான் காப்பி பண்ணிக்கிட்டிருக்கேன்” என்கிறாள் பத்மஸ்ரீ.
சாவைப் பற்றிச் சிந்திக்கும் போது அது மனிதனின் இறுதியான முடிவு,அதற்கு பின் எதுவும் இல்லை என்பதே உண்மை என்று மனதில் தோன்றும்.அந்த எண்ணம் ஆரம்பத்தில் அளித்த அதிர்ச்சியை நான் தொடர்ந்து அது குறித்து சிந்திப்பதனூடாகக் கடந்துவர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.
ஒரு முறை,பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர், மதக்குறுங்குழு ஒன்றின் பிரச்சாரகர்களிடம் தற்செயலாக மாட்டிக்கொண்டேன்.அவர்கள் ‘விரைவில் உலகம் அழியப்போகின்றது.தேவனுடைய இரட்சிப்பின் பாதைக்கு வந்துவிடு.இல்லாவிடின் மீளாநரகம் காத்திருக்கின்றது’ என்று குழையடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களைப் பேசவிட்டால் நம்மைப் பைத்தியமாக்கிவிடுவார்கள் என்பதால்,நான் கூறும் விடயத்தை நன்றாக யோசித்த பின்பு நீங்கள் எனக்கு போதனை செய்யலாம்.உடனடியாக பதிலெதுவும் கூற முயலவேண்டாம் என்றொரு தடுப்பைப் போட்டபின்னர்,மனிதனின் சாவு அவனை இல்லாமலாக்கி விடுகின்றது.அவனே இல்லாமல் போகும் போது அவனைப் பொறுத்தவரை இந்த உலகமும் அழிந்து விடுகின்றது.எனவே உலக அழிவென்பது இனித்தான் வரப்போகும் ஒன்றல்ல.ஒவ்வொரு மனிதனும் இறக்கும் போது அவனுடன் அவனது உலகமும் இல்லாது போய்விடுகின்றது என்றேன்.அவர்களின் முகம் போன போக்கை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.
இது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சொல்லப்பட்டாலும் என்னிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம்தான்.மனிதனை அதிரவைக்கும் இதனை ஆற்றுப்படுத்துவதற்கும் அவனை அமைதிப்படுத்துவதற்கும் ‘உடலினில் இருந்து தனியாக வேறுபட்டதான உயிர் அல்லது ஆத்மா,..சொர்க்கம் நரகம், மறுபிறப்பு போன்ற எத்தனையோ கற்பிதங்களை அவன் உருவாக்கிக்கொண்டாலும் அவனது ஆழ்மனது உண்மையை அறிந்திருப்பதாகவே தோன்றுவதுண்டு.
இந்த உலகத்தில் எதோ ஒருவகையில் தன்னைத் தக்கவைத்திருப்பதற்கு படைப்பூக்கம், சாதனைகளுக்கான ஆர்வம்,தனது பிள்ளைகள்..சந்ததிகள் மீதான அக்கறை,பாசம் போன்றன அவனிடம் இயல்பாகவே பின்னிப்பிணைந்துள்ளன.அதனால்தான் அவற்றால் அவன் மனதிற்குப் பெரும் திருப்தி கிடைக்கின்றது என்று நினைப்பதுண்டு.
ஒரு முறை நடிகர் கமல்ஹாசனிடம் மறுபிறப்பை பற்றிக் கேட்கப்பட்டபோது,எனது மறுபிறப்பென்பது எனது பிள்ளைகள்தான்.அவர்கள் என்னைப் புதிதாக மறுவார்ப்புச் செய்யப்பட்டவர்கள்.இதனைவிட வேறு மறுபிறப்புக் கிடையாது என்பதாகப் பதிலளித்திருந்தார்.பல சந்தர்ப்பங்களில் இப்பதிலை நான் பொருத்திப் பார்த்திருக்கிறேன்.
இடையறாது ஓடிச்செல்லும் மரபணு ஆற்றில் தோன்றும் ஒரு குமிழியாகவே ‘நான் என்று சிந்திக்கக் கூடிய’ தனிமனிதன் இருக்கிறான் என்பதாக மனதிற்குப் படுகின்றது.
சாவின் பின்னரான எதுமற்ற நிலை என்ற தவிர்க்க முடியாத முட்டுச்சந்து மனிதனின் மேல் மனதிற்கு ஒரு பேரதிர்ச்சியை அளித்தாலும்,அம்முடிவு அவன் வாழும் வாழ்வை ஒரு முழுமையான நோக்கில் பார்க்க வழிசமைக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
நீங்கள் எழுதிய’ சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பீர்கள்.’சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.’
மனித வாழ்வென்னும் சிறுகதையின் முடிவைப் பற்றிச் சிந்திக்கும் போதும் இது பொருந்துவதாகத் தோன்றுகின்றது.
என்னதான் யோசித்தாலும் மரணத்தின் பின் ஏதுமற்றநிலை..சூனியம்..என்பதனை ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கின்றது.நீங்கள் சொல்லுங்கள் மரணத்தின் பின்னரான மனிதனது நிலையை எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?அதனை மனிதவாழ்வோடு எவ்வாறு அர்த்தப்படுத்துகிறீர்கள்?
ந.சிவேந்திரன்
அன்புள்ள சிவேந்திரன்
புத்தரின் தங்க மௌனத்தில் ஒன்று மரணம் பற்றிய வினா.
அதை ஓர் அந்தரங்கமான தேடலாக மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். அது உருவாக்கும் தத்துவ நெருக்கடியில் வாழ்க்கையை விசாரணைசெய்ய முடியும். ஒருபோதும் புறவயமான ஒரு பதிலாகத் தொகுத்துக்கொள்ளமுடியாது
ஒரு மனிதனை ஒரு தனித்த இருப்பாகக் கொள்ளும்போதே நாம் நினைக்கும் மரணம் என்ற கருத்து உருவாகிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்க்குலம் ஒற்றைப்பெரும் செயல்பாடாக நிகழ்கிறது என்று கொண்டால் ஒரு மனிதனின் மரணமும் ஒரு செல் அழிவதும் ஒன்றுதான். அது முடிவு அல்ல. முடிவற்ற ஒரு செயலின் ஒரு தருணம் மட்டுமே
ஜெ
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் இணைய தளத்தில் வரும் எல்லாப் பதிவுகளும் உங்களது என்று நினைத்திருந்தேன்…அரங்கா அவர்களின் மின்னஞ்சல் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், மற்றவர்களின் பதிவுகளும் இடம்பெறுகின்றன , என்று…
முடிந்தால், பதிவின் அருகே எழுதியவரின் புகைப்படமும், அவரைப்பற்றிய சிறிய குறிப்பும் பதியவும் ..அது என்னைப்போன்றவர்களுக்குக் கண்டிப்பாய் உதவும்..
நிசார்கதத்தா மகராஜ்-இன் ‘I am That’ படித்தீர்களா..? இன்னும் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாய்ப் படிக்கவும்..அச்சடிக்கப்பட்ட எதையும் படிக்கவேண்டும் என்று இருந்தவனை நான்கு வருடங்கள் தினசரியைக்கூடப் படிக்க விடாமல் செய்த புத்தகம் அது..
படித்ததற்கு நன்றி,
கோபி கண்ணதாசன்
அன்புள்ள கோபி
இணையதளத்தில் மிக அபூர்வமாகவே பிறர் கட்டுரைகளை வெளியிடுகிறேன். தேவையாக இருக்கையில்.
நீங்கள் சொல்வதுபோல அதை முறையாகச்செய்யலாமென நினைக்கிறேன். கொஞ்சநாள் பிறர் கட்டுரை, கதைகளை வெளியிட்டுப்பார்த்தாலென்ன என்ற எண்ணம் ஏற்படுகிறது
நிசர்கதத்த மகராஜின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவரையும் ஆத்மானந்தகுருவையும் ஒப்பிட்டுக்கூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்
ஜெ