அன்புள்ள ஜெயமோகன்,
அய்யப்பண்ணனும் ஆச்சியும் படித்தவுடன் தங்களின் இணைவைத்தல் (நிகழ்தல் புத்தகத்தில் உள்ளது என்று
நினைக்கிறேன்) நினைவிற்கு வந்தது.இணைவைத்தல் ஆணின் பெருங்காதலைப் பேசியது.அதை நான் பத்து
முறைக்கு மேல் படித்திருப்பேன்.அதில் நீங்கள் உங்கள் பெருங்காதலை விவரிக்கும் பத்தி வரும்.உங்கள்
குழந்தைகளைவிட உங்கள் மனைவி பல படி மேலென்ற ஒரு வரி வரும்.அய்யப்பண்ணனும் ஆச்சியும்
ஆக்கத்தின் கடைசிப் பத்தியில் நான் அதை முழுமையாகக் கண்டுகொண்டேன்.
அய்யப்பண்ணனுக்கு ஆச்சியின் மேலிருந்தது நீங்கள் இணைவைத்தலில் சொல்லும் பெருங்காதலல்வா.ஒரு
பார்வையில் ஜெயமோகன்தான் அய்யப்பண்ணன் என்று நினைத்துக் கொண்டேன்.
அன்புடன்
கோ.ஜெயன்
அன்புள்ள ஜெயன்
ஆம் உண்மைதான். அய்யப்பண்ணனுடையது பெருங்காதல்தான். இப்போது நினைக்கும்போது அவருக்கு அவரது நிலமும் ஆச்சியும்தான் வாழ்க்கையாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் அறிய ஆவல். தங்களின் காந்திய சொற்பொழிவு அவ்வளவு பிரமாதம். முழுக்க முழுக்க மனமும் உடலும் விசித்திரமாய் ஒன்றாய் அமர்ந்து கேட்ட, துளி அறிவிஜீவித்தனம் இன்றி உள்ளுணர்வின் ஆழமான சரளம் வாய்ந்த ஆளுமையின் குரலாய் அமைந்த உரை. மாலை நடக்கவிருக்கும் விழாவிற்குக் காலை முதலே வந்து காத்து இருந்த அந்த பெரியவரை வணக்கத்துடன் நினைத்து கொள்கிறேன்.
வரும் வழியில் மத்தகம் நாவலில் வரும் ஒரு நிகழ்வை அசை போட்டபடியே வந்தேன். இளைய தம்புரானிடம் வெகுமதி பெறும்போது பரமன் நினைப்பதாக வரும் வரிகள் – எல்லாமே கனவா இருக்கு , ஒரு யானையோட வாலப் பிடிச்சிகிட்டு எதுவரை வந்து இருக்கோம் , எனக்கும் அது மாதிரிதான் என்ன செய்தேன், வெறுமனே ஒரு தன்னியல்பு வாசிப்பு, ஆனால் அது என்னை என் விருப்பமான ஆளுமையை சந்திக்க வைக்க செய்கிறது, கை குலுக்க முடிகிறது, விரும்பிப் பேச வேண்டும் என்பதற்காகக் கேள்வி கேட்கிறேன், விடை பெறும்போது கட்டி அணைக்க முடிகிறது.
அட ! எனக்கும் கனவாத்தான் இருக்கும்.
தினேஷ் நல்லசிவம்
அன்புள்ள தினேஷ்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் கடிதம் எங்கோ நழுவிவிட்டிருந்தமையால் இப்போதுதான் பதில் அளிக்கமுடிகிறது
புதுக்கோட்டை காந்தி உரை எங்கோ வெகுதொலைவில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. ஆனால் இப்படி உரைகள் கட்டுரைகள் வழியாகச் சென்றகாலத்தை நினைவுகூர நேர்வது நல்ல விஷயம்தான்
ஜெ
ஆசிரியருக்கு,
வணக்கம். நீங்கள் ஐரோப்பிய நிரூபணவாத அறிவியலை நோக்கிய எச்சரிக்கை குறித்த அணுகுமுறை உடையவர் என்பது தெரியும். ஐரோப்பிய நிரூபணவாத அறிவியல் கொண்டுள்ள நுகர்வின் மீதான கட்டுமான அமைப்பு இந்த அணுகுமுறைக்குக் காரணம் என்று உங்கள் கட்டுரைகளின் வழி அறிந்து இருக்கின்றேன். நுகர்வு குறித்த விழிப்புணர்வே நுகர்வின் மாற்று , நுகர்வு எதிர்ப்பு அல்ல என்று நான் கருதுகின்றேன். நுகர்வு மறுக்கப் பட்டால் நெருப்பே உண்டாகி இருக்காது என்றும் எனக்குப் படுகின்றது.
அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் துறை சார் கல்விப் பிரிப்பின் மீதான அவ நம்பிக்கை தெரிவித்து இருந்தீர்கள். அது ஏன்? தங்களது அணையா விளக்கு உரை வாசித்தேன். நல்ல உரை. இந்த உரை வெறும் கேட்டுத் தாண்டிச் செல்லும் உரையாய் இல்லாமல் விவாதிக்கப் படுவதாக வளர வேண்டும் , அந்த வழி விவாதம் இன்னமும் அடையாளப்படாத சில கதவுகளைத் திறக்கக்கூடும்.
நில உடமையிலிருந்து மக்கள் ஆட்சிக்குத் தேர்தல் மூலம் நகர்ந்து வந்தோம். ஆனால் உணர்வு ரீதியாக நம் வாழ்வு பெரும்பாலும் நில உடமை சாயல் கொண்டுதான் உள்ளது. அடிப்படை சிக்கல் அங்குதான் உள்ளது என்று நான் நினைக்கின்றேன். குமாஸ்தா கல்வி முறை நில உடமை வாழ்வு முறை சிக்கல்களை விடுவிக்க உண்டாக்கப்பட்டது கிடையாது. அது நிர்வாக ,வரி வசூல் முறை நோக்கி உண்டாக்கப்பட்டது. அந்த அளவில் அது சிறப்பாக நிற்கின்றது. அது மேம்பட வேண்டுமானால் குமாஸ்தா பயிற்சியில் குடிமை சமூக உணர்வினை உள்ளடக்கமாகக்கொண்டு வருவதே முதல் படி என்று நினைக்கின்றேன்.
நமது மரபு , அதன் கல்வி முறை வடிவம் வாயிலாகப் பூரணம் இருந்தாலும், அது கட்டுமான வடிவில் அமைப்பு கொள்ளவில்லை. அதுவும் அதிகம் மனப்பாட வடிவில்தான் இருந்தது. அதனால்தான் அத்வைதம் பேசிக் கொண்டே தீண்டாமை பேணவும் முடிந்தது. நமது மரபான கல்விப் படிவம் புறக் கூறுகளான பொருளாதார, குடிமை வடிவங்களைத் தொடாமல் நிலஉடமையின் செல்லப் பிள்ளையாகதான் இருந்தது. குமாஸ்தா கல்வி முறையே ஒரு பொருளாதார மாற்றத்தினை உண்டு செய்து இந்த இடத்தில் நிறுத்தி உள்ளது,அதற்கான நன்றியை சொல்லி அடுத்த கட்டத்தினை நோக்கி நகருவது கூட்டு சமூக பொறுப்பே. மொத்தப் பழியையும் குமாஸ்தா அமைப்பின் மேல் போடுவது சரியல்ல என்று நினைக்கின்றேன்.
-நிர்மல்
அன்புள்ள நிர்மல்
இன்றும் நாம் பிளாஸ்டிக் நாற்காலிகளை மூங்கில்நாற்காலிகளின் அழகியலுடன் மட்டுமே அமைத்துக்கொள்கிறோம். தோலின் அதே தோற்றத்திலேயே செயற்கையிழை இருக்கைகளை அமைக்கிறோம்
சமூகமாறுதல் அன்றாட வாழ்க்கையில் வரத் தாமதமாகும். அழகியலில் வர மிக மிகத் தாமதமாகும். இன்றும் நம்முடைய பரதநாட்டிய அரங்கில் அரசர்களும் தாசிகளும்தானே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
ஜெ