விஷ்ணுபுரம்-கடிதம்

விஷ்ணுபுரம் நாவல் என்பதைக் காட்டிலும் ,அது ஒரு அனுபவப் பயணம். தொடர்ந்து கேள்விகள் வந்தவண்ணம் உள்ளன.மனிதனின் இருத்தல் மேல் அது எப்பொழுதும் சுமையை ஏற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது. காதலும், காமமும் எழுப்பும் கேள்விகள்.
பிங்கலனும், சோமனும் இவைகளில் சென்று மீண்டு வருவது , ஞானம் என்பது ஒன்றை விலகி செல்வதில் இல்லை, அதைக் கடந்து செல்வதில்தான் என்பது இவைகளின் அடித்தளம்.

வீரன் துடித்து சாகும் பொழுது ஏற்படும் ஓர் மனவருத்தம், பெருந்தச்சன் தண்டனை பெறும்பொழுது ஏற்படவில்லை, இந்த நாவல் மானிடம்எவ்வாறு இயற்கையின் முன்பாக சரணடைகிறதோ அதே போல விலங்குகள் மனிதனால் வதை படுவதையும் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை.கரிய ,கூரிய மூக்கும், நீண்ட உடலும் ஒரு நாய் என்பதைக் கடந்து ஒரு படிமமாக மாறி இறப்பைக் கண்டுசெல்லும் போக்குமனிதனின் சாதனையும்,புகழும் ,செல்வமும் ,என்னிடம் ஒன்றுமில்லை ,”உன்னுடைய காரியம் முடிந்துவிட்டது ,இனி ஒன்றுமில்லை “என்றும் ” அந்த உயிர் போய்விட்டதா என்பதை நாய் (பைரவன் —காவல் தெய்வம் ) வந்து வந்து பார்த்து உறுதிசெய்வது,வீரனுக்கு தண்டனை வழங்கிய சமுதாயத் திற்கு வீரன் சமுதாயத்துக்கு  வழங்கும் பரிசு.

சாருகேசி பிங்கலனிடம் “என்னிடம் படுத்து விட்டு, எழும்பொழுது என்னைப் பார்க்க உன் கண்கள் மாறுகின்றன, ஏன் என்றால் நான் அப்பொழுது உனக்கு அருவருப்பானவள் ” என்ற கேள்வி விரும்பிய ஒன்றை மனிதன் அடைந்த பின் அதன் மேல் எழும் சலிப்பும் ,அந்த அடைதல் கூட முழுமையானதல்ல ,மாயை என்பதைக் கண்டு ,கடந்து செல்வதும் ஞானம் என்பதே, சாருகேசி பிங்கலனைப் புரிந்துகொண்ட ஆளுமைகளில் ஒருவள் ….அவளே பிங்கலன் தன்னைக் கடந்து செலவேண்டும் என்று விரும்பும் ஆளுமையும் கூட..

சில சமயங்களில் ஏன் இத்தனை பக்கம் இந்த நாவல் நீள்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை . இரண்டாவது பக்கத்தில் வரும் தர்க்கங்கள் இது ஒரு நாவல் என்பதில் இருந்து மறைந்து ஒரு கேள்வி -பதில் கொண்ட உரை நடை பகுதியே அதிகம் .

ஆற்றிலே தெரியும் முகம் ஒன்றுபோல் தெரிந்தாலும், அது அணுக்களின் மாற்றத்தால் ஒவொரு நொடியும் மாறும்என்பது மனிதனின் நிலையில்லா தன்மையைக் காட்டும் பகுதி. தொடர்ந்து கேட்கப்படும் கேள்வியும், கதாபாத்திரங்களின் மன அலைக்கழிப்பும்தான் விஷ்ணுபுரம் ஒரு நாவல் என்பதற்கு ஆதாரம். இதில் பெரும் கதை சொல்லலும், பெரும் திருப்பங்களும் இருக்கவில்லை,ஆனால் மழை பொழியும் இரவில் திடீரெனத் தோன்றி மறையும் மின்னல் போலப் பல அதிர்வுகள் நாவல் முழுவதும் பரவியுள்ளது.

முரளி

அன்புள்ள முரளி

விஷ்ணுபுரம் ஒரு நாவலை அடையவேண்டுமென்ற நோக்குடன் எழுதப்பட்டதல்ல, ஓர் உண்மையைத் தொடவேண்டுமென்ற முனைப்புடன் எழுதப்பட்டது. அதிலுள்ள எல்லா வரிகளும் அந்த இலக்கை நோக்கியே செல்கின்றன. ஆகவே அதை ஒரு நல்ல வாசகன் ஒரு கதை என்று மட்டும் எடுத்துக்கொண்டு வாசிக்க முடியாது.

அதில் வரும் தத்துவ விவாதப்பகுதிகளைப்பற்றி அதன் முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறேன். அவை வெறும் தத்துவப்பேச்சுகள் அல்ல. தத்துவ உரையாடல் அவ்வண்ணம் அமைய முடியாது. அது கறாரான தர்க்கம் மூலமே அமையமுடியும்.விஷ்ணுபுரம் அவற்றைப் படிமங்கள், உருவகங்கள் மூலமே அமைக்கிறது. அது ஒருவகை இலக்கியக்கூறுமுறைதான். அங்கே கவித்துவமே அடையப்படுகிறது, தத்துவமல்ல.

ஜெ

விஷ்ணுபுரம் இணையதளம் http://vishnupuram.com/

முந்தைய கட்டுரைவாசிப்புக்கு உதவி
அடுத்த கட்டுரைசிவகாமியின் நாவல் பற்றி…