ஆசிரியருக்கு ,
தொடர்ந்து சிந்திக்கும் நபர்களுடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன் என்ற முறையில் என்னால் ஒரு அவதானிப்பை சொல்ல முடியும் . நமது விவாதச் சூழல் மிக பலவீனமாக இருக்கிறது. ஒரு கருத்தைச் சொல்லும் போதோ அல்லது மறுக்கும் போதோ நாம் எப்படித் “தென்படுகிறோம்” என்ற அக்கறை மற்றும் அச்சத்துடனேயே உள்ளனர் .
இங்கு பொதுவாக பிரதானமாக மூன்று வகையில் விவாதங்கள் நடக்கிறது :
1. அன்றாட தேசிய/ மாநில நடப்புகள் [சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, கூடங்குளம், இணைய கருத்து சுதந்திரம் போன்றவை] .
2. அரசியல் சமூகப் பிரச்சனைகள் [அரசியல் மதக் கலப்பு , இடது சாரிகள், Rss நிலைப்பாடு , தேவர் ஜெயந்தி படுகொலை, தருமபுரி கலவரம் , இட ஒதுக்கீடு போன்றவை ]
3. அரிதாக சித்தாந்த, தத்துவப் பிரச்சனைகள் [சூழல் மனிதனை உருவாக்குகிறதா, நீதி இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறதா . கொள்கை -நிறுவன உறவு போன்றவை]
இதில் எவ்வகையில் யாருடன் விவாதித்தாலும் முதல் கட்டத்திலேயே சில தடை அரண்களை சந்திக்க வேண்டும், அதற்கு மேல் நகரவும் முடியாது.
உதாரணமாக:
1. அவ்வாறு பொதுமைப் படுத்தக் கூடாது.
2. அவ்வாறு ஒப்பிட முடியாது.
3. அவ்வாறு பிரித்து அறிய முடியாது அல்லது வேறுபடுத்த முடியாது.
4. அவ்வாறு வகைப் படுத்த முடியாது.
5. அவ்வாறு அறுதியிட்டுக் கூறி விட முடியாது போன்றவை .
மேலும் விவாதத்தின் போது கருத்துச் சொல்லும் நபர் தனக்கு சில விதமான பிம்பம் வேண்டுமென விரும்புகிறார் அவைகளில் மதச் சார்பின்மை , முற்போக்கு, மற்றும் நடுநிலைமை ஆகியன முக்கியமானவைகள். மேற்சொன முதல் இரண்டு வகைப் பேசுபொருட்களில் மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கு கட்டாயம் , கடைசி தத்துவ சித்தாந்த விவாதத்தில் நடுநிலைமையும் , அனைத்துத் தரப்பையும் பரிசீலிக்கும் தன்மையும் கட்டாயம்.
“இவர் சொல்வது சரி அதற்காக அவர் சொல்வதை முற்றிலும் புறக்கணிக்க முடியாது , அதற்காக இவர் சொல்வதை முற்றிலும் ஏற்க முடியாது, அவர் சொல்வதிலும் நியாயங்கள் உள்ளது , இவர் குற்றச் சாட்டை நாம் ஒதுக்கிவிட முடியாது ” போன்ற நியாயவாதிகளின் வாதங்களைக் கேட்டிருப்பீர்கள் .
நாம் எதையும் நிலைக்க விடாமல் , சட்டகப் படுத்தாமல் , எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் விலகியும் கடந்தும் விவாதித்தல் என்ற முறையைக் கையாள்வது எளிது, யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் விவாதிக்கலாம் . ஆனால் கொடுப்பதும் பெறுவதும் இருக்காது.
உங்கள் நோக்கில் தமிழக அறிவுலகின் விவாத ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது, காரணம் என்ன ? தீர்வு என்ன ?
கிருஷ்ணன் .
அன்புள்ள கிருஷ்ணன்
நான் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு இலக்கியவிவாதக்கூட்டங்களில் இருபதாண்டுக்காலமாகப் பங்கெடுத்துவந்த அனுபவம் கொண்டவன். தொழிற்சங்க விவாதங்களில் அதற்கும் அதிகமான காலமாகப் பங்கெடுத்து வருகிறேன். நமக்கு விவாதிக்கும் பயிற்சி இல்லை என்பதை எப்போதுமே கவனித்துவருகிறேன். பெரும்பாலான விவாதங்கள் கட்டற்றமுறையில் நாலா பக்கமும் பரவிச்செல்வதையே காணமுடிகிறது. பலசமயம் அது மனவருத்தங்களில் சென்று முடியும். விவாதம் முடிந்தபின் அதன் விளைவாக எவரிடமும் எதைப்பற்றியும் எளிய தெளிவுகூட எஞ்சியிருக்காது
இங்கே ஒரு சாதாரண சொற்பொழிவுக்குப்பின் கேள்விபதில் நிகழ்ச்சியை வைத்தால்கூட அந்தச்சொற்பொழிவு உருவாக்கிய எல்லா சாதகமான மனப்பதிவுகளும் அழிந்துவிடுவதைக் காணலாம். பேசப்பட்ட விஷயத்துக்குச் சம்பந்தமே இல்லாத கேள்விகளே பெரும்பாலும் எழும். கேள்விகள் சாதாரணமாக மிகமிக சம்பிரதாயமானவையாக, எங்கும் எவரும் கேட்கக்கூடியவையாக இருக்கும். உதாரணமாக ‘உங்கள் படைப்புகளில் நீங்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்பதுபோல.
அபூர்வமாக வேறுவகையான வினாக்கள் வரும். அவை மூர்க்கமாக சீண்டக்கூடியவை. ஒருமுறை வளைகுடா நாட்டில் ஒருவர் காடு நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனத்தை நான் சொல்லும் கொள்கைப்பிரகடனமாக எடுத்துக்கொண்டு கேள்விகேட்டுத் தன்னம்பிக்கையுடன் புன்னகை செய்தார். அடுத்தக்கட்டத்திற்குச் சென்று அவதூறுகளையும் வசைகளையும் சொல்லக்கூடிய வினாக்களும் இருக்கும். அரங்கில் தன்னையும் எழுத்தாளன் அல்லது அறிவுஜீவி என நினைக்கும் ஒருவர் இருந்தார் என்றால் அந்த வசைகளின் அளவு அதிகமாக இருக்கும்.
ஏன் நம்மால் விவாதிக்கமுடியவில்லை? முதன்மையான காரணம் நமக்கு அது எங்கும் கற்றுத்தரப்படுவதேயில்லை என்பதுதான். நமுடைய பள்ளிகளில், கல்லூரிகளில் எங்கும் நாம் விவாதிப்பதே இல்லை. கற்பித்தல்களையும் பேருரைகளையும் கேட்டுத் திரும்புவது மட்டுமே நமது கல்வியாக உள்ளது. கல்விக்கூடத்திற்கு வெளியே அறிவார்ந்த பயிற்சியைத் தரக்கூடிய எந்த அமைப்பும் இங்கே இல்லை. அரசியல்,ஆன்மீகம் என எந்தத் தளத்திலும் அறிவுப்பயிற்சிக்கு வழியில்லை.
அத்துடன் இந்த அரைகுறைக்கல்வியைக் கற்றதும் நாம் கற்றவர்கள் என்ற அபத்தமான தன்னகங்காரத்தை வேறு அடைந்துவிடுகிறோம். ஆகவே எங்கும் எப்போதும் அந்த அகங்காரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அந்த அகங்காரம் ஒரு பெரிய தகுதி என நினைக்கிறோம். அகங்காரத்தை சுயகௌரவம் என்று விளக்கிக்கொள்கிறோம். ஆகவே எதையுமே கவனிக்காதவர்களாக எல்லாவற்றையும் அந்த அகங்காரத்தைக்கொண்டு தடுத்துநிறுத்திவிடுபவர்களாக மாறிவிடுகிறோம். சுந்தர ராமசாமியின் முன்னும் ஜெயகாந்தனின் முன்னும் அமர்ந்து அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்களை, அவர்கள் முக்கியமாகச் சொல்லக்கூடியவற்றைக்கூட அபத்தமாக உடனே மறுத்துப்பேசக்கூடியவர்களைக் கண்டிருக்கிறேன்.
பெரும்பாலான விவாதங்களில் நம்மிடம் இருக்கும் சில மனப்போக்குகளை இவ்வாறு தொகுத்துச்சொல்கிறேன்
1. நமக்கு ஒவ்வாத கருத்துக்களைச் சொல்பவர்கள், நம்மை மறுத்துப்பேசுபவர்கள் மீது கசப்பை உருவாக்கிக் கொள்ளுதல்.
எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அதற்கு மறுப்பும் மாற்றும் கண்டிப்பாக இருக்கும். அதன் இருப்பை அங்கீகரிக்கமுடியாதவர் கொண்டிருப்பது கருத்து அல்ல வெறும் நம்பிக்கை மட்டுமே. நம்முடையது தர்க்கபூர்வமான கருத்தாக இருந்தால் நாம் அதன் மாற்றுத்தரப்பையும் ஒரு கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்வோம். ஒருபோதும் அந்த மாற்றுக்கருத்து நம் உணர்ச்சிகளைத் தூண்டாது.
இவ்வாறு கசப்புகளை உருவாக்கிக்கொள்வதன் வழியாக மாற்றுக்கருத்தைச் சொல்பவரின் எல்லாக் கருத்தையும் மூர்க்கமாக மறுக்க ஆரம்பிக்கிறார்கள். மாற்றுத்தரப்பினரைத் தனிப்பட்டமுறையில் தாக்குகிறார்கள். அவமதிக்க முயல்கிறார்கள். இன்று இங்கு ஓர் இணையத்திலோ நேரிலோ ஒரு விவாதமே நிகழமுடியாமலிருப்பதை எங்கும் காணலாம். காரணம் இரண்டாவது வரியிலிருந்து வசை ஆரம்பமாகிவிடுவதுதான்
மாற்றுத்தரப்பு மீதான காழ்ப்பை மறைத்துக்கொள்வதற்குக் கூட சிந்திப்பவர்கள் என்று தங்களைப்பற்றி நம்பிக்கொண்டிருப்பவர்கள் முயல்வதில்லை என்பதைக் காணலாம். அந்தக்காழ்ப்பு அவர்களை ஒருங்கிணைவில்லாத கருத்து கொண்டவர்களாக, அடிப்படை நியாய உணர்ச்சிகூட அற்றவர்களாக, சில்லறைப்புத்தி கொண்டவர்களாகக் காட்டுவதைப்பற்றிக்கூட அவர்கள் கவலைகொள்வதில்லை
ஒருவர் ஒரு விவாதத்தில் தன் தரப்புக்குப்பதிலாகத் தன்னுடைய அகங்காரத்தை முன்வைப்பதனாலேயே இப்படி நிகழ்கிறது.
2. விவாதங்களில் விவாதப்பொருளில் இருந்தும் தர்க்கமுறைமையில் இருந்தும் விலகிச்செல்லுதல்
ஒருவிவாதத்தில் ஒரு கருத்தும் அதை நிரூபிக்கும் முறைமையும் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது. நான் இப்படிச் சொல்கிறேன், இன்னின்ன காரணங்களால் என்று அவர் சொல்கிறார். அதை மறுக்கையில் அந்தக்கருத்தை அது நிரூபிக்கப்பட்ட முறைமையை அடிப்படையாகக் கொண்டு செய்வதே முறையாகும். இந்த முறைமை மிக விரிவாகக் கல்வித்தளங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் அதை கருத்தில்கொள்வதே இல்லை.
இந்தியாவின் வறுமைக்குக் காரணம் மக்கள்தொகைப்பெருக்கம் என ஒருவர் சொல்கிறார். மக்கள்தொகை அதிகமான இடங்களில் வறுமை மிகுந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவர ஆய்வையும் முன்வைக்கிறார். அதை மறுக்கும் ஒருவர் அந்தப்புள்ளிவிவர ஆய்வைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மக்கள்தொகை மிகுந்த இடங்களில் வறுமை இருப்பதற்கு வேறு காரணங்களை அவர் சொல்லலாம். மக்கள்தொகை நேரடியாக வறுமையுடன் சம்பந்தப்படவில்லை என்று வாதிடலாம். அதுதான் மறுத்துவாதிடுதல்.
அதன்பின் வறுமைக்கு வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல் இல்லாமையே காரணம் என அவர் வாதிடலாம். அதற்கு இந்தியாவின் வறுமைமிக்க இடங்களில் கல்வியறிவு இல்லாமலிருப்பதைப்பற்றிய சான்றுகளை அவர் முன்வைக்கலாம். அது இன்னொரு கருத்து. இப்படித்தான் விவாதங்கள் முன்னால்செல்லும்
ஆனால் இங்கே எந்த விவாதத்திலும் அந்த விவாத மையம் பொருட்படுத்தப்படுவதில்லை. முதல் மறுப்பிலேயே சம்பந்தமில்லாத இன்னொன்றுக்கு பதில் சொல்வார்கள். முற்றிலும் வேறெங்கோ உள்ள ஒரு கருத்தைக்கொண்டு வந்து நிறுத்துவார்கள். நாலைந்து வாதங்களுக்குள் மொத்தவிவாதமே எங்கேயோ சென்று விட்டிருக்கும்
3. விவாதங்களில் கலைச்சொற்களையோ தர்க்கமுறைமையையோ மறுத்தல்
அதிபுத்திசாலித்தனமாக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு இதை இங்கே பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் இன்றைய பொருளியல் நவகாலனிய அரசியல் சார்ந்தது என்று வாதிடுகிறார் என்றால் நவகாலனியம் என்ற சொல்லால் அவர் சுட்டுவது பொதுவாக சூழலில் சுட்டிக்காட்டப்படுவதைத்தான் என்றால் அச்சொல்ல்லின் அர்த்தமென்ன என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. நவகாலனிய அரசியல்தான் இன்றைய பொருளியலைத் தீர்மானிக்கிறதா இல்லையா என்பதுதான் விவாதமையம்.
சொற்களை மறுப்பது விவாதமே அல்ல. அப்படிப்பார்த்தால் எந்தச்சொல்லையும் மறுத்துவிடமுடியும். பொருளியல் என்று ஒன்று கிடையாது என்றோ பொருளியல் என்றால் அரசியலைத்தான் குறிக்கும் என்றோ வாதிடலாம். அதெல்லாமே அபத்தமான வாதங்கள். ஒருவர் ஒரு சொல்லைப் பொதுவாகச் சூழலில் புழங்கும் பொருளில்தான் பயன்படுத்துகிறேன் என்றால் அதன்பின் சொல்பற்றிய விவாதமே நிகழமுடியாது. அவர் அதற்கென சிறப்பான ஒரு தனி வரையறையை அளிக்கிறார் என்றால் அதை அவர் விளக்கும்படி கோரலாம்.
இதுவே தர்க்கமுறைமைக்கும் பொருந்தும். பொதுவாக எல்லா விவாதங்களும் நம் சூழலில் ஏற்றுக்கொள்ளப்ப்ட்ட விவாதமுறைமைகளின்படிதான் நிகழ்கின்றன. பழைய உதாரணம் சொல்லப்போனால் மலைமேல் புகை தெரிகிறது, அங்கே தீ இருக்கலாம் என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டால் மலைமேல் தீ இல்லாவிட்டாலும் புகை இருக்கலாமே என வாதிடுவதே முறை. மலைமேல் புகை தெரிந்தால் தீ இல்லை என்றுதான் நான் பொருள்கொள்வேன் என ஒருவர் சொன்னால் அவரிடம் விவாதிக்கவே முடியாது
இதன் அடுத்தபடி தான் நீங்கள் சொல்வது. ஒருவருக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லி எல்லா விவாதங்களில் இருந்தும் விலகுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ஆனால் மானுட ஞானம் முழுக்க விவாதங்கள் வழியாக உருவாகி வந்தது என்ற அறிதல் அவருக்கிருக்கவேண்டும். கிரேக்க மரபோ உபநிடதமரபோ விவாதங்கள் மூலமே செயல்படுகின்றன
இந்த விவாதங்களுக்கு கிரேக்கத்திலும் இந்தியாவிலும் தனியான தர்க்கவியல்களையே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு நியாயவியல் என்ற தர்க்கமுறை உள்ளது. அது விவாதப்பொருளை வரையறுப்பது, விவாதமுறைமையைப் பொதுமையாக்குவது, பொய்ப்பிப்பது, இறுதிமுடிவை உருவாக்கிக்கொள்வது என அனைத்துக்கும் வழிகாட்டுகிறது
இந்த மரபுகளைப்பற்றிய அடிபப்டை அறிவுகூட இல்லாத நிலையில்தான் ‘அப்டீன்னென்ல்லாம் சொல்லிட முடியாது’ போன்ற அபத்தமான கூற்றுகள் உருவாகின்றன. ஒரு விவாதக்களத்தில் முடிவாக உருவாகிவரக்கூடிய ஒரு கருத்து அந்த விவாதக்களத்திற்குள் மட்டுமே ஆதிகாரிகத்தன்மை கொண்டதாகும். அது முழுமுற்றான உண்மை அல்ல. அந்த விவாதக்களத்துக்குள் வந்து அதைச் சந்திக்கக்கூடிய ஒருவர் அதை ஏற்கவேண்டும். மறுப்பதாக இருந்தால் அதற்கான வாதங்களைச் சொல்லவேண்டும். சும்மா வந்து ‘இப்டில்லாம் விவாதிச்சு சொல்லிட முடியாது’ என்று சொல்ல அவருக்கு உரிமை இல்லை.
மனித சிந்தனையின் ஆதாரச்செயல்பாடாக உள்ள விவாதத்தின் அடிப்படைகள் தொகுத்துப்பொருள்கொள்ளுதல், பகுத்துப்பொருள்கொள்ளுதல், சாராம்சப்படுத்துதல், ஒப்புநோக்குதல், உவமித்தல் ஆகியவையாகும் என நியாயவியல் சொல்கிறது. இவற்றைச் செய்யாமல் சிந்திக்கமுடியாது. இவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்பவர் சிந்திக்கவேண்டியதில்லை என்றுதான் சொல்கிறார்.
காரணம் இதுதான் மனிதமூளை செயல்படும் விதம். விவாதங்களில் நம்பிக்கை இல்லை என்பவர்கூடத் தனக்குள் ஒவ்வொன்றையும் விவாதித்துதான் முடிவுகளுக்கு வருகிறார். இரு ஓட்டல்களை ஒப்பிட்டு ஒன்றை முடிவுசெய்கிறார். அந்த ஓட்டலின் தின்பண்டங்களைப் பகுத்து ஒட்டுமொத்தமாக அங்கே தோசை நல்லது என்று முடிவுசெய்கிறார். அந்தஓட்டல் நாட்டுப்பலகாரங்களை நன்றாகச்செய்யக்கூடியது என்று ஒரு புரிதலை அடைகிறார்.
விவாதங்களை சரியாகச்செய்ய ஆரம்பித்தால் சரியாகச் சிந்திக்கிறோம் என்று பொருள். நாம் ஏன் சரியாக விவாதிக்கவில்லை என்றால் நாம் சரியாகச் சிந்திக்கவில்லை என்பதுதான். நாம் சரியாக விவாதிக்காததனால் சரியாக சிந்திக்கவில்லை.
கடைசியாக ஒன்றுண்டு. விவாதங்களில் ஈடுபடுவதற்கான அறிவார்ந்த திராணி இல்லாமை. அதை தானே உள்ளூர உணர்ந்திருக்கும் ஒருவர் செய்யும் பல்வேறு பாவனைகள் உண்டு. அவற்றையே நாம் இன்றைய இணைய விவாதங்களில் அதிகமாகக் காண்கிறோம்.
முதன்மையான பாவனை, கோபக்காரனாகக் காட்டிக்கொள்வது. எதுமுற்போக்கோ எது அரசியல்ரீதியாக பெரும்பான்மையின் கருத்தோ அதை ஏற்றுக்கொண்டு அதிதீவிரமாகக் கோபம் கொள்வது. விவாதங்களில் புகுந்து திட்டி வசைமாரி பொழிவது. புரட்சியாளன் பிம்பம் கிடைக்கும். எதைப்பற்றியும் பொருட்படுத்தும் ஒரு வரியைச்சொல்லிவிடமுடியாது என்ற விஷயம் மறையும்
இரண்டாவது பாவனை நக்கல். எதைப்பற்றியும் சில்லறைத்தனமாக சில நக்கல்கருத்துக்களை உதிர்த்துவிட்டு முன்னால் செல்லுதல். நீங்கள் என்னதான் செய்திருக்கிறீர்கள் என்ற ஒரு வினா வராதவரை பாதுகாப்பாக வண்டி ஓடும்
இத்தனைக்கும் அப்பால் ஒரு விவாதம் தமிழில் நிகழ்கிறது என்றால் அது ஆசீர்வதிக்கப்பட்ட இடம்