குடும்பவரலாறு

Beni-israel-india-2

 

குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது.

நமக்குப் பொதுவாக பதிவுசெய்யப்பட்ட வரலாறு இல்லை. அந்த மனநிலையும் இல்லை. நாம் செவிவழி வரலாற்றையே வைத்திருக்கிறோம். தேசத்திற்கும் குடும்பத்திற்கும். செவிவழி வரலாற்றின் சிக்கல் என்னவென்றால் ஒரு தலைமுறை அதில் ஆர்வமிழந்துவிட்டால் அது அறுபட்டு பிறகு மீட்க முடியாதபடி ஆகிவிடும் என்பதே

உண்மையில் நமக்கு ஆர்வமிருந்தால் நம்முடைய குடும்பத்தின் வரலாற்றை ஓரளவேனும் எழுதிவிடமுடியும். பலரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதப்போனால் தெரியும் எவ்வளவு தகவல்கள் கிடைக்கின்றன என்று. ஆர்வமோ தொடர்முயற்சியோ இல்லாத நிலையில் கேட்கும்போதுதான் வரலாறே இல்லையே என்று தோன்றுகிறது

ஒரு குடும்பத்தின் வரலாறு ஒருவேளை பெரியதாக ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு பகுதியாக அதை நாம் பொருத்திப்பார்க்கமுடிந்தால் அது மிகப்பெரிதாக வளர்வதைக் காணலாம். ஒட்டுமொத்த வரலாற்றை இத்தகைய துளிகள் வழியாக பிரம்மாண்டமாக ஆக்கிக்கொள்ளமுடியும்

உதாரணமாகத் தமிழ்க் குடும்ப வரலாற்றில் மிகப்பெரும்பாலானவற்றில் குறைந்தது இரண்டு இடப்பெயர்வைப்பற்றிய குறிப்புகள் இருக்கும். ’ந்ம்ம பூர்வீகம் குளித்தலைப்பக்கம். அங்கே இருந்து நாம தஞ்சாவூருக்கு வந்தோம். உங்க கொள்ளுத்தாத்தா காலத்திலே திருச்சியிலே குடியேறிட்டோம்’ என்று சுருக்கமாகச் சொல்வார்கள்

அந்த குடிபெயர்வுகள் நிகழ்ந்த வருடங்களைப் பிற குடும்பங்களில் குடிபெயர்வு நிகழ்ந்த வரலாற்றுடன் ஒப்பிட்டால் ஒன்று தெரியும். முதல் குடிபெயர்வு 1770களில் அல்லது 1889 களில் இரு தாதுவருட பஞ்சங்களை ஒட்டி நிகழ்ந்திருக்கும். இரண்டாவது பெயர்வு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போரை ஒட்டி உருவான புதுவகை வேலைவாய்ப்புகளின் விளைவாக நிகழ்ந்திருக்கும்.

இத்தகைய சிறு தகவல்கள் வழியாகவே நாம் பொதுமக்கள் வரலாற்றை எழுதமுடியும். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் வரலாற்றெழுத்தில் இரண்டு வகையான வரலாறுகளைக் காணலாம். அரசியல் வரலாறு, மக்கள் வரலாறு. மன்னர்களும் போர்களும் அடங்கியது அரசியல் வரலாறு. பண்பாடும் சமூகமும் வளர்ந்து வந்ததை விவரிப்பது மக்கள் வரலாறு

நம்முடைய அரசியல் வரலாறே இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை. ஆகவே மக்கள் வரலாறு ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. நம் சமூகத்தின் சாதியமைப்பு, கிராமிய அமைப்புகள், விவசாயமுறையின் பரிணாமம், சமூக இடப்பெயர்வுகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சித்தரிக்கும் மக்கள் வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும்.

அத்தகைய மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான முதல் தேவை குடும்பவரலாறுகள். அவையே அதற்கான மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான கச்சாப்பொருட்கள். எவ்வளவு குறைவாக இருந்தாலும் நாம் நம் குடும்ப வரலாற்றைப் பதிவுசெய்யலாம். இன்று இணையம் இருப்பதனால் வெளியிடும் பிரச்சினையே இல்லை. ஒட்டுமொத்தமாகத் தொகுக்கப்படும்போது ஒவ்வொரு சிறு தகவலுக்கும் பெரும் முக்கியத்துவம் வந்து சேரும்

மக்கள் வரலாற்றில் இருந்தே மேலான புனைவிலக்கியம் உருவாக முடியும். இன்றைய மக்கள் வரலாறு ஓரளவேனும் இலக்கியத்திலேயே உள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் இல்லையேல் இங்கே மீனவர்கள் வாழ்ந்திருந்தமைக்கு வரலாற்றாதாரமே இல்லையே. அவரது நாவல்கள் ஒருவகைக் குடும்ப வரலாறுகள் அல்லவா?

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 17, 2013

முந்தைய கட்டுரைகோத்திரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57