அன்புள்ள ஜெ.,
உயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது?
“ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, நான் உணர்ந்தது ஒன்றுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தால், என் மனம் ஓஷோவின் நூல்களை அதிகம் நாடுகிறதோ, அவையெல்லாம் உயர் இலக்கியமாக உணர்ந்தேன்.
இதையே சுருக்கி இப்படிச் சொல்லலாமா? – ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே- அது சமூகமாயினும், இலக்கியமாயினும் அல்லது இசையாயினும்…
இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமா என்று தெரியவில்லை.. ஆனால், என்னளவில் இது சரியெனப்படுகிறது. தங்கள் கருத்தை அறிய ஆவல்.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்,
இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.
இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். அவனை மீட்க முடியலாம், ஆனால் அதற்கான பெரும் உழைப்பு பெரும்பாலும் வீணாகவே வாய்ப்பு.அந்த வயது வரை தற்செயலாகக்கூட சிந்தனை சார்ந்த, அழகியல்சார்ந்த எதையுமே கவனிக்காத ஒருவன் அதற்குமேல் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ வாய்ப்பேயில்லை.
மனிதஇனத்தின் சிந்தனை எழுத்தில் பதிவுசெய்யப்பட ஆரம்பித்துப் பத்தாயிரமாண்டுகளாகியிருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மோதி விவாதித்து, ஒன்று கலந்து வளர்ந்து நம்மை அடைந்துள்ளன. நாம் இந்த பிரம்மாண்டமான பிரவாகத்தின் சிறு துளி. நம் வழியாக இந்தப் பேரொழுக்கு அடுத்த காலகட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த ஒழுக்கில் இன்று வரை திரட்டப்பட்ட அறிதல்களினூடாகவே எது உயர்ந்தசிந்தனை என்றும் எது நல்ல இலக்கியம் என்றும் தீர்மானிக்கக்கூடிய அளவுகோல்கள் உருவாகியிருக்கின்றன. அந்த அளவுகோல்கள் பண்பாடுதோறும் வேறுபாடுகள் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நுண்ணிய வேறுபாடுகளை மீறி ஒட்டுமொத்தமாக அடிப்படையான மானுடப் பொதுத்தன்மையும் கொண்டிருக்கின்றன. அந்தப்பொதுத்தன்மைதான் மனிதகுலம் ஒன்று என்பதற்கான ஆதாரம். மனிதப்பண்பாடு என்பதன் சாராம்சம்.
இந்த சாராம்சத்தை விதிகளாக கொள்கைகளாக புறவயமாகத் தொகுத்து வைக்கமுடியாது. ஏனென்றால் அவை கையில் உள்ள இலக்கியத்தையும் கலைகளையும் சிந்தனைகளையும் கொண்டு உருவாக்கப்படுபவை. புதியதாக உருவாகி வருவனவற்றை அவை கட்டுப்படுத்தாது.
ஆனால் மனிதகுலத்தின் கூட்டுப்பிரக்ஞையில் அவர்கள் அறியாமலேயே அந்த அளவுகோல்கள் உள்ளன.ஒரு சிந்தனையை ,கலையை ,இலக்கியத்தை எதிர்கொள்ளும்போது ஒரு பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்கள் அந்த அளவுகோல்களைக்கொண்டுதான் முடிவுகளை எடுக்கின்றன.
நான் எப்போதுமே சொல்வது இதுதான். மனிதகுலம்,தான் இதுவரை அடைந்த வெற்றிகளையே செவ்வியல் என்று சொல்லித் தொகுத்துக்கொண்டுள்ளது. அந்தச்செவ்வியல்தான் அதற்குப்பின்னால் வருவனவற்றின் தரம் என்ன என்பதைத் தீர்மானிக்கிறது. சங்க இலக்கியம்தான் அதன்பின் வந்த இலக்கியங்களில் எது முக்கியமானது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்களை உருவாக்கி அளிக்கிறது. சங்க இலக்கியம் சிலப்பதிகாரத்தை முதன்மையானதாக ஆக்குகிறது. சங்கப் பாடல்களும் சிலம்பும் சேர்ந்து ஆழ்வார்பாடல்களை முதன்மையாக்குகின்றன.
இது ஒரு தொடர்ச் செயல்பாடு. நம் வரை இது வந்து சேர்ந்திருக்கிறது. நாளை நம்மைத்தாண்டிச்செல்லும். நாம் இன்று எழுதுவதில் எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்று தீர்மானிப்பது சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப்பித்தன் வரை வந்து சேர்ந்திருக்கும் செவ்விலக்கியத் தொடர்ச்சிதான். கிரேக்கநாடகங்கள் முதல் தல்ஸ்தோய் வரை வந்து சேர்ந்திருக்கும் உலகச்செவ்விலக்கியத் தொடர்ச்சிதான்.
அதுதான் ராஜேஷ்குமார் எழுதுவது வெற்று வணிக எழுத்து, அசோகமித்திரன் எழுதுவது இலக்கியம் என ஐயம்திரிபறப் புரியவைக்கும் அளவுகோல். அந்தப் பெருமரபின் ஏதேனும் ஒரு பகுதியுடன் எளிய அறிமுகம் ஒருவனுக்கிருந்தால் அவனுக்கு இக்கேள்வியே எழாது. தொடர்பற்ற மூடனைச் சொல்லிப்புரியவைக்கவும் முடியாது
அந்த மூடர்களை விவாதங்களில் வாயடைக்கச்செய்ய இப்படிச் சொல்லலாம். இன்று ஒரு நிறுவனம் ஒரு செல்பேசியை அறிமுகம் செய்கிறது. அது தரமானது அல்லது தரமில்லை என்று சொல்லமுடியுமா முடியாதா? முடியும். ஏனென்றால் சாம்சங் அல்லது ஆப்பிள் நேற்றுவரை கொண்டுவந்த செல்பேசியை விட ஒரு படி மேலானதாக அது இருந்தால்தான் அது நல்லது. அதாவது நேற்றுவரை வந்து சேர்ந்திருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும் அந்த செல்பேசி. செல்பேசித்தொழில்நுட்பம் என்ற பேரொழுக்கு அந்த செல்வழியாக முன்னகர்ந்திருகக்வேண்டும்.
மாறாகத் தொண்ணூறுகளில் வந்த செல்பேசியை அந்த நிறுவனம் கொண்டுவந்துவிட்டு ‘தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இல்லை. இது எங்களுடைய தயாரிப்பு,எங்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது’ என்று வாதிட்டால் அதைவிட முட்டாள்தனம் உண்டா? இன்றுவரை வந்துள்ள தொழில்நுட்பம் வரப்போவதற்கான அளவுகோல்களை உருவாக்குகிறது. இன்றுவரை வந்துள்ள சிந்தனையும் கலையும் இலக்கியமும் வரப்போவதை மதிப்பிடும் அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவ்வளவுதான்
ஜெ