அன்புள்ள ஜெ,
கல்பற்றாவுடன் உரையாடியபோது இப்படிக் கேட்டேன். ஈழத்துக் கவிதைகளிலும், பெண்ணியக் கவிதைகளிலும் என் உணர்வுகளுக்கு அப்பட்டமான “வலி” தெரிகிறது. அவற்றில் கவிதையின் மொழி பயின்று வருகிறதே ஒழிய எழுந்து நிற்பது வலியும் பிணியும் மட்டுமே. அதுவும் அப்பட்டமாக. ஒரு நல்ல கலைப்படைப்பு சமன் அமைந்ததாக இருக்க வேண்டும். கவிதைக்கு அந்த விதி இல்லையா? தேவதேவனின் கவிதைகளிலும், உங்களுடைய கவிதைகளிலும் அப்படி அப்பட்டமாக எதுவும் தென்படவில்லை. இது விதிவிலக்கு மட்டுமேவா? ஒரு நல்ல கவிதை வலியையும் உன்னதமயமாக்கியே (sublimate) முன்வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
இதற்கு கல்பற்றா மிக விரிவாக பதிலளித்தார். திருப்தியே. ஆனாலும் உங்கள் பார்வை இதில் என்னவாக இருக்கும் என்று அறிய முற்படுகிறேன்.
ராம்
அன்புள்ள ராம்,
இருவேறு கலைச்சொற்கள் இந்த விவாதங்களில் கையாளப்படுகின்றன. ஒன்று sublimation அதாவது உன்னதமாக்கல். இன்னொன்று catharsis உணர்வுச்சுத்திகரணம்.
இரண்டும் ஓர் எல்லையில் ஒரு நிகழ்வையே குறிக்கின்றன என்று வாதிடலாமென்றாலும் நடைமுறையில் அவற்றுக்கிடையே நுட்பமான வேறுபாடுகள் பல உள்ளன. உங்கள் வினா இந்த வேறுபாட்டையே குறிக்கிறது.
கவிதைகளில் [கலைகளில் பொதுவாக] நிகழும் உன்னதமாக்கல் என்பது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் ஒரு முழுமையை நோக்கிக் கொண்டுசெல்வதன் மூலம் அடையப்படுவதாகும். அரவிந்தரைத் துணைக்கழைத்தால் truth என்பது The truth ஆக மாற்றப்படுவதே உன்னதமாக்கல். அதுவே இலக்கியத்தின் இலக்கும் சாரமும் ஆகும்
ஒரு மரணத்தின் உணர்ச்சிக்கொந்தளிப்பை மரணம் என்னும் மானுடநிகழ்வை நோக்கிக் கொண்டு செல்ல நம்மால் முடிந்தால், அழிவு என்னும் பிரபஞ்சநிகழ்வாகக் காட்டமுடிந்தால் அதை நாம் உன்னதமாக்கியிருக்கிறோம் என்று பொருள்.
மேலான கவிதை உன்னதமாக்கலைச் செய்கிறது. உன்னதமாக்கல் என்றால் சிறப்பானதாக, நல்லதாக, அழகாக, நேர்நிலையானதாக ஆக்குதல் என்றெல்லாம் பொருள் இல்லை. முழுமையானதாக ஆக்குதல் என்றே பொருள். எதிர்மறைத்தரிசனமும் உன்னதமாக்கலே.
உன்னதமாக்கல் மூலம் படைப்பு அடையும் உண்மை என்பது அப்படைப்புக்குள் மறுக்கப்படாத முதன்மை கொண்டது. அது தன்னை நிரூபிக்க எதையும் செய்வதில்லை. அப்படைப்பின் படைப்பூக்கம்தான் அதை நிரூபிக்கிறது.
உன்னதமாக்கல் என்பது முழுமையனுபவம் என்பதனால் அது நன்கு சமநிலைகொண்டதாகவே இருக்கும். தர்க்கத்தையும் வடிவஉணர்வையும் உணர்வெழுச்சியையும் அது மிகச்சரியாக சமன்செய்திருக்கும். ஆகவே ஒற்றைப்படையான வேகம் அதில் இருக்காது.
உன்னதமாக்கல் செவ்வியல்கலையின் இயல்பு என்று சொல்லலாம். எல்லாக் கலைகளிலும் ஏதோ ஒரு வகையில் செவ்வியல்நோக்கிச் செல்லும் ஒரு முயற்சி உள்ளது.
உணர்வுச்சுத்திகரணம் என்பது இதற்கு நேர் எதிரான ஒரு நிகழ்வு. அது ஒரு புள்ளியில் உணர்ச்சிகள் அனைத்தையும் கொந்தளித்தெழச்செய்கிறது. உச்சகட்டங்களை நிகழ்த்துகிறது. அக்கலையின் சுவைஞன் தன் ஆளுமையை இழந்து அக்கலையுடன் கலந்து அந்த உச்சநிலையில் தன் ஆளுமையின் உச்சநிலையாக அவ்வனுபவத்தை உணர்கிறான்
ஒருமனிதன் தன் அன்றாடவாழ்க்கையில், தன் சொந்த அனுபவங்கள் மூலம் செல்லக்கூடிய உணர்வெழுச்சிக்கணங்கள் மிகமிகச் சிலவே. கலை அதன் வீச்சுமூலம் அவனை அந்த உணர்வெழுச்சித்தருணங்களுக்கு சாதாரணமாகக் கொண்டுசெல்கிறது.
அன்றாடவாழ்க்கையில் அத்தகைய உக்கிரமான உணர்வுத்தருணங்களில் மனிதன் தன்னைப் புத்தம்புதியவனாகக் கண்டுகொள்வான். தன் பிழைகளையும் தன் வல்லமைகளையும் அறிந்துகொள்வான். அதன்பின் மீண்டும் பிறந்துவருவான். எல்லா மனிதர்களுக்கும் அத்தகைய சில கணங்களேனும் இருக்கும்
கலை தன் உணர்வுச்சுத்திகரணத்தன்மை மூலம் அத்தகைய மறுபிறப்புத்தருணத்தைக் சுவைஞனுக்கு அளிக்கிறது. அவனை மீண்டும் பிறக்கச்செய்கிறது. அவன் தன்னையும் தன் சூழலையும் இன்னும் நுட்பமாக அறியச்செய்கிறது
ஆம், இதுவும் ஒரு உன்னதமாக்கலே. ஆனால் உன்னதமாக்கல் அக்கலையில் இல்லை. அக்கலை மூலம் கிடைக்கும் அனுபவத்தில் உள்ளது என்பதே வேறுபாடு
உணர்வுச்சுத்திகரணத்தை நிகழ்த்தும் கலை உச்சகட்ட உணர்ச்சிகளை உருவாகவேண்டும். சுவைஞனை அவனுடைய எல்லாத் தர்க்கங்களிலிருந்தும் விடுவித்துத் தன்னுள் இழுத்துக்கொள்ளவேண்டும். அவனை அடித்துச்சுழற்றிக் கொண்டுசென்று மலையுச்சிகளில் நிறுத்தவேண்டும்
அந்தக்கலை சமநிலையுடையதாக இருக்காது. கொந்தளிப்புள்ளதாக கட்டற்றதாகவே இருக்கும். ஆகவே அது பெரும்பாலும் கற்பனாவாதப்பண்புடையது.
இவ்விரு வகைக் கலைகளில் எது மேலானது? இரண்டுமே முக்கியமானவை, இரண்டும் ஒன்றை ஒன்று பூர்த்திசெய்துகொள்பவை என்றே சொல்லமுடியும். இருவகைக் கலைகளும் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன.
ஷேக்ஸ்பியர் செவ்வியல்கலைக்கு உதாரணம். உன்னதமாக்கலின் கலை அவருடயது. ஆனால் ஷெல்லியும் பைரனும் உணர்வுச்சுத்திகரணத்தின் கலைஞர்கள். ஒருவரை வைத்துக்கொண்டு இன்னொருவரைத் தூக்கிவீசிவிட முடியுமா என்ன?
கல்பற்றா நாராயணனும் தேவதேவனும் நவீனக்கவிஞர்கள். புதுக்கவிதை என்பது எஸ்ராபவுண்டும் எலியட்டும் உருவாக்கிய அழகியலை ஏற்றுக்கொண்டு வளர்ந்தது. அதற்கு முந்தைய கற்பனாவாத அலைக்கு நேர் எதிராக அந்த முன்னோடிகள் அதை உருவகித்தனர். ஆகவே செவ்வியலின் இலக்கணத்தை அதற்களித்தனர். அமைதி சமநிலை உன்னதமாக்கல் ஆகியவை அதன் விதிகளாக அமைந்தன.
ஆனால் பிரமிளின் பல கவிதைகள் முந்தைய கற்பனாவாதக் கவிதைகளின் கொந்தளிப்புடன்தானே உள்ளன? சு.வில்வரத்தினத்தின் நல்ல கவிதைகளும் அப்படிப்பட்டவை அல்லவா?
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 6, 2013