வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்.,

வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! எது ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறதோ – எது உலகுக்கெல்லாம் பால் நினைந்தூட்டுகிறதோ – எது அவளுக்கும் அகிலத்துக்கும் வரமாக இருக்கிறதோ அதுவே அவளுக்கு சாபமும் ஆகிற தருணத்தை உங்கள் கதை மிகச் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது.

சென்ற அஞ்சலில் நான் குறிப்பிட்டது போலப் பெண் நிலைக்குள் கூடு பாய்ந்து அவள் படும் வலியையும் வேதனையையும் உள்வாங்கி எழுதிய அற்புதமான படைப்பாக வெண்கடலின் அலைகளைக் கிளர்த்தியிருக்கிறீர்கள். இறந்து போன குழந்தை இருக்கட்டும்… உயிரோடு இருக்கும் குழந்தையும் கூடப் பாலருந்த வாய் வைக்கத் தெரியாமல் மலைத்துப் பழகும் நாட்களில்- மறுத்து ஒதுக்கும் தருணங்களில் அந்தப் பெண் படும் தவிப்புக்கு எதைத்தான் உவமை சொல்ல முடியும் ? ..எப்போதோ அனுபவித்தும்/பிறர் அனுபவிக்கக் கண்டும் மறந்து போன அந்தப் பழைய அனுபவங்களுக்குள் மீண்டும் ஒரு முறை நுழைந்து செல்ல வைத்தபடி மயிர்க்கூச்சலிடும் சிலிர்ப்பை உண்டாக்கி விட்டது கதைக்குள்ளான பயணம்.

பெண்பாலை அருந்தாததவர் எவருமில்லை….!

ஆனால் அது சார்ந்த அவள் வேதனையை,வலியை உணர முடிவதும்-

அவ்வாறு உணரத் தவறுவதாலேயே சமூகம் தடம் பிறழ்ந்து போகிறதென்பதைப் போகிற போக்கில்

//‘பெண்ணடியாளுக்க வலியக் கண்டா ஆணாப்பிறந்ததே பாவம்ணு தோணிப்போயிரும்’ என்றான் குமரேசன்‘ஆணுக்கு அந்தமாதிரி வலி இல்லியா?’ என்றேன்.

‘இல்லியே… இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக்கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே’ //

என்று இவ்வாறு கோடி காட்டுவதும் பெண் மீது மிகுந்த மரியாதையும் சினேகமும் உள்ள உன்னதமான ஒரு ஆத்மாவுக்கு மட்டுமே சாத்தியம். மிகச்சரியான இடத்தில் வந்து விழுந்திருக்கும் மிகச்சரியான அந்த உரையாடல் துணுக்கை அங்கே இணைப்பதென்பது,மானுட இனம் முழுவதன் மீதும் அலகிலாக் கருணை கொண்ட ஒப்பற்ற ஒரு படைப்பாளிக்கு மட்டுமே தன்னிச்சையாக வாய்க்கும் ஒரு வரம்…! அவனால் மட்டுமே இயலக்கூடியது அது…! நன்றி ஜெ எம்!

கதையின் முடிவில் தன் பாலருந்தித் தன் துயர் தீர்த்த அட்டைகளைக் கோழிக்கு இரையாக்குவதை ஒப்புக்கொள்ள முடியாமல் அருளைப்பாலாய்ச் சுரக்கும் அந்தப்பெண் நெகிழச்செய்து விட்டாள்.கதைக்கு அருமையான முத்தாய்ப்பு அது.

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள ஜெ

வெண்கடல் சிறப்பான கதை. ஒரு நல்ல கதையை எப்படி சுருக்கி எவரிடம் சொன்னாலும் அது உணர்ச்சிகரமாகச் சென்றுசேரக்கூடியதாக இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட கதை இது. வகுப்பிலும் வீட்டிலும் இந்தக்கதையைச் சொன்னபோது கேட்டவர்கள் எல்லாரும் ஆகா என்றார்கள். அதுவே ஒரு நல்ல கதைக்கு இலக்கணம்

நன்றி

சிவம்

முந்தைய கட்டுரைமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்
அடுத்த கட்டுரைகொற்றவை-கடிதம்