கிளி சொன்ன கதை : 6

அனந்தனுக்கு திடீரென்று பசித்தது. மடைப்பள்ளி திண்ணையில் அச்சுதன் நாயரும் கருணாகரனும் சம்பாப் பச்சரிசியை பெரிய செம்பு நிலவாயில் போட்டு நீர் விட்டு கழுவி சல்லரியால் அள்ளி அள்ளி பனங்கடவத்தில் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு வரிசையாக சோறு மீன்குழம்பு என்று நினைவுகள் எழுந்தன. போத்தி மடைப்பள்ளிக்குள் பெரிய கோட்டையடுப்பில் சில்லாட்டையைக் கொளுத்தி ஊதி தீமூட்டினார். புகை அடங்கி கொழுந்து எழுந்ததும் புளியம்மாறுகலை அடுக்கிவிட்டு பித்தளை வார்ப்புருளியை இரு கையாலும் அசக்கி நகர்த்தி அடுப்பருகே கொண்டுவந்து ஒருபக்கத்தை உந்தி மறுபக்கத்தை மேலே தூக்கி காதுகளைப் பிடித்து லேசாகச் சுழற்றி சட்டென்று தூக்கி அடுப்பின்மீது வைத்தார். அனந்தன் படுத்து குளிக்கலாம், அவ்வளவுபெரிய உருளி.அனந்தன் ஒரு காதில் ஏறி நின்றாலும் அசையாது, அவ்வளவு எடை. அனந்தன் போத்தியின் திரண்ட உடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் குனிந்தபோது கோவணம் ஈரமாக இருக்கிறதா என்று பார்த்தான், ஈரமாகத்தான் இருந்தது. நன்றாகத்தான் குளித்திருக்கிறார், அம்மச்சி சொன்னது பொய் என்று நினைத்துக் கொண்டான்.

மேலும் மேலும் பெண்களும் குழந்தைகளும் வந்தபடியே இருந்தார்கள். பத்மத்தைக் காணவில்லை. வேறு பையன்களைப் பார்த்ததும் அனந்தன் நன்றாகச் சுவரோரமாக நகர்ந்து இலைகளுக்குள் நின்றுகொண்டான். ராமச்சந்திரன் கோடு போட்ட கால்சட்டை அனிந்து எண்ணைவழிய தலைசீவி வந்திருந்தான். காதில் துளசி வைத்திருந்தான். அவன்தான் நேற்று அனந்தன் கண்ணில் மண்ணைப்போட்டவன். அவன் அம்மா காவுப்பறம்பு கார்த்திகேயினி மாமி அதற்காக அவனை ஒன்றுமே சொல்லவில்லை. அவனுடன் கெ.சுதர்சனன் நாயரும் எப்போதும் இருப்பான். அவன் அனந்தன்னின் ஸ்கூல்தான். போகும்வழியில் அண்ணா இல்லாமல் அனந்தன் போனால் அவன் அனந்தனின் காலைத்தடுக்கிவிடுவான். கெட்ட பையன்கள்.

அனந்தன் கால்சட்டையை ஒருகையால் பிடித்தபடி மறுகையால் கிளச் மாற்றி காரை ஸ்டார்ட் செய்து ஸ்டீரிங்கை ஒடித்தபடி ர்ர்ர்ர் என்று கிளம்பி கோயில்பறம்பு வழியாக ஓடினான். சாரலும் கார்றும் சேர்ந்து மரங்களை உய்ய் உய்ய் என்று ஊதிக் கொண்டிருந்தன. நல்ல குளிர். இருட்டவில்லை என்றாலும் வீட்டில்  முன்திண்ணையில் அலங்கார உத்தரத்திலிருந்து தொங்கிய பித்தளை தூக்குவிளக்கில் சுடர் இதழ்போல நின்றது. கருப்பன் நந்தி போல வாசலில் உட்கார்ந்து உள்ளே பார்த்துக்கொண்டிருந்தது.

அனந்தன் உள்ளே ஏறிச்சென்றான். அப்பா தரையில் உட்கார்ந்து மண்ணெண்ணை மணத்துடன் , மூக்கில் கரியுடன் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை துணியால் துடைத்துக் கொண்டிருந்தார். அரிக்கேன் விளக்கு பல பகுதிகளாக அங்கெல்லாம் சிதறிக்கிடந்தது. குடித்த டீ கோப்பையும் மண்ணெண்ணை குப்பியும் அருகே இருந்தன. அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தார். கண்ணாடி ஈக் ஈக் என்று ஒலி எழுப்புவதுவரைக்கும் துடைத்து முடித்ததும் எடுத்து அதன் வழியாக தூக்கு விளக்கைப் பார்த்துவிட்டு ”எடீ”என்றார். அம்மா வந்து ஜன்னலில் எட்டிப்பார்த்து ” விளிச்சியளா?”என்றாள்.

”இதுக்க ·பர்னஸ் எங்க?”. அம்மா வந்து தரையில் தேடி கதவருகே கிடந்த வலைபோன்ற மூடியை எடுத்து அருகே வைத்தாள். அப்பா அதை வாயால் ஊதிவிட்டு அதன் திரியை கையால் கிள்ளினார். அம்மா பொறுமையில்லாமல் சற்று நேரம் நின்றுவிட்டு உள்ளே போனாள்.

அப்பா ”எடீ”என்றார். அம்மா அவசரமாக கையைத் துடைத்தபடி வந்ததும் ” ஒரு பிளேடு எடு ”என்றார். அம்மா அருகே அப்பாவின் பெட்டியை திறந்து வினோலியா சோப்பு டப்பாவில் அப்பா போட்டுவைத்திருந்த ஷேவ் செய்த பிளேடை எடுத்து அருகே வைத்தாள். அப்பா அதை எடுத்து மிகக் கவனமாக சப்பையான திரியை வெட்டினார். திரி நூல்நூலாக பிரிந்து நின்றது.

அப்பா நிமிர்ந்து பார்த்து அம்மா அடுக்களைக்கு போவதைக் கண்டு ” கத்திரியை எடு. எங்க பாஞ்சு ஓடுதே?”என்றார். அம்மா அதே டப்பாவிலிருந்து கத்திரியை எடுத்து கொடுத்தாள். அப்பா உதடுகளைக் கடித்துக் கொண்டு கைநடுங்க அதைவைத்து திரியை வெட்டினார். திரி அறுபடவில்லை.

”என்ன கத்திரி எடுக்கே? துணி வெட்டுத வலிய கத்திரி எங்க?”என்றார் அப்பா. அம்மா பதற்றத்துடன் ஒருமுறை அடுக்களையை எட்டிப் பார்த்தபின் ”இங்க குடுங்க”என்று கை நீட்டி அரிக்கேன் விளக்கை வாங்கி அமர்ந்தாள். மீன் தோல் உரிப்பதர்காக வளர்த்த கட்டைவிரல் நகத்தால் அதை திரியை கிள்ளி எறிந்துவிட்டு மிகவேகமாக ·பர்னஸை மாட்டி கண்ணாடியை  செருகிவிட்டு தாங்கு கம்பியை தூக்கி தீப்பெட்டியை உரசி திரியை பற்றவைத்து கண்ணாடியை இறக்கி தூக்கி கம்பியில் மாட்டிவிட்டு கையை முண்டில் துடைத்தபடி அவசரமாக நடந்து உள்ளே போனாள். னாள். அரிகேன் ஆட்டம் நின்றதும் நிழல்கள் மச்சில் ஆடுவதும் நின்று தீ சிவந்து எரிந்து அடங்கி மஞ்சள் நிற இதழ் போல ஆகியது.

அப்பா முழங்கையால் மூக்கை துடைத்து கரியைப் பார்த்து துண்டால் முகத்தை அழுத்தி துடைத்தபின் அவனைப் பார்த்தார். ”எங்கடா போனே?” என்றார். அனந்தன் பின்னடைந்து சுவரை முதுகால் ஒட்டினான்.

அப்பா கீழே கிடந்த தென்னை ஓலைக்குச்சிகள் பஞ்சு தாள்கள் எல்லாவற்றையும் பார்த்தார். ”டேய்…” என்று அவனை அழைத்தார் ”எல்லாத்தையும் எடுத்து கொண்டுபோயி போடு ”என்றார். அனந்தன் தலையசைத்தான். ” மாமரத்துக்கு அடியில போடு கேட்டியா? வழியில போட்டு வைக்காதே”

அனந்தன் அவற்றைப் பொறுக்கி தாளில் சுருட்டி கொண்டுசென்று போட்டான். அப்பா தொட்டியில் கையை கழுவிக்கொண்டு தொழுத்துக்குப் போனார். அங்கெ ஒரு மண்சட்டியில் தொண்டும் சகிரியும் தீ போட்டு சிவப்பு பொறிகள் தெறிக்க கனன்று சிவந்துகொண்டிருந்தது. அதில் சாம்பிராணித்தூள் போட்டு கொசுவுக்காக புகை போட்டிருந்தார் அப்பா. தொழுத்தில் அவரைப் பார்த்ததும் சிவப்பி உடலை வளைத்து அவரை பார்த்து அமறியது. அப்பா ஸ்டூல் போட்டு அமர்ந்து பசுக்களின் உடலில் டார்ச் அடித்து தேடினார். ஒளிபடும் இடங்களில் தோல் துடிக்க பசுக்கள் ஒளிரும் கண்களுடன் மெல்ல கூளம் மென்றபடி நின்றன.. உண்ணிகளைப் பொறுக்கி தீயில் போட்டபடி அப்பா அங்கிருந்தார். அவர் அருகே கருப்பன் அமர்ந்திருந்தது.

அனந்தன் வடக்குப்புறம் போனான். அங்கே மண்ணெண்ணை விட்ட பித்தளை சீனவிளக்கு எரிய  முழங்காலுக்குமேல் முண்டை ஏற்றிவிட்டு கல்மீது குந்தி அமர்ந்து அம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். சீனவிளக்கின் கண்ணாடி அரிக்கேன் விளக்கு போல குடம்போல இல்லாமல் குழாய் போல நீளமாக இருந்தது. அதைச்சுற்றி சிறிய பூச்சிகள் ஒளியுடன் சிதறி சிதறி சுழன்று பறந்தன. அனந்தன் அதன் கண்ணாடி மீது கைவைத்ததும் சுடர் பதரி சிவந்து எம்பியது. ”டேய் கைய எடு…ஆயிரம் மட்டம் சொல்லியிருக்கேன் வெளக்கில கைய வைக்காதேண்ணுட்டு…”

அம்மாவின் எதிரே மீன் கழுவும்போதுமட்டும் வரும் நரைச்சிப்பூனை வந்து அமர்ந்து சிவந்த  நாக்கால் வாயை நக்கியபடி ஓயாமல் மியாங் மியாங் என்று சொல்லிக் கொண்டிருந்தது.அம்மாவின் பிருஷ்டம் பெரிதாக இருப்பதகவும் முழங்கால் சதை தடிமனாக இருப்பதாகவும் அனந்தன் நினைத்தான். அம்மா அனந்தன் அருகே போய் குந்தி உட்கார்ந்து ”அம்மா இண்ணைக்கு என்னமீன்?”என்றான்

”கொழுவாத் துண்டு”என்றாள் அம்மா தோலை நகத்தால் பிய்த்து உரித்தபடி . தோல்படலம் உரிந்த கற்றாழைச்சதை போலிருந்தது. மீனின் தலை தேக்கிலையில் துறித்த கண்களும் திறந்த வாயுமாக கோபத்துடன் இருந்தது. ” நீ எதுக்கு இங்க இருக்கே? கோயிலில போயி வெளையாடு”

”ராமசந்திரன் இருக்கான். அவன் என்னை அடிப்பான்” என்றான் அனந்தன். ”அதெல்லாம் அடிக்கமாட்டான். நீ சூனி மாதிரி ஒதுங்கி நிண்ணாத்தான டிப்பாங்க. நீயும் சேந்து ஓடி விளையாடினா அடிக்க மாட்டாங்க” அனந்தன் ”நான் உன் கூடத்தான் கோயிலுக்கு போவேன்”என்றான். அம்மா மீனின் இரு விலாச்செதில்களையும் அரிந்துவிட்டு குடலை எடுத்தாள். நரைச்சி அதை எடுத்து விழுங்கி விட்டு அதிருப்தியுடன் மீண்டும் மியாங் என்றது.

”கொழுவாத்துண்டை வறுத்தரச்சா அம்மா வைகக்ணும்?” என்றான் அனந்தன்

”நீ உன் சோலியப்பாருடா. ஆம்பிளைக்கு என்னத்துக்கு மீன் வைக்குத பக்குவம்?” என்று அம்மா சொல்லி துண்டுகளை மண்சட்டியில் போட்டு சுழற்றி அடித்தட்டில் உரசி நீர்விட்டுகழுவினாள். ” பெண்ணடிகளுக்கு இருக்கே , வைப்பு கழுவல் வைப்பு கழுவல்ணுட்டு….சூரியன் உதிக்கதும் மறையதும் மாதிரி…. செத்து தெக்கோட்டு எடுத்தாலும் பாவிகள் நாலு கலமும் சட்டியும் கொண்டுவந்து சேத்து குழியில வைப்பாக. மேல போயி  அங்க உள்ள தேவன்மாருக்கும் கெந்தர்வன்மாருக்கும் அரிவச்சு வெளம்புண்ணு…. சீ போ அந்தால…”

”நான் பெரிசானா மீன்கறி வைப்பேன்” என்றான் அனந்தன். அம்மா சற்று தனிந்து சிரித்தபடி , ”அப்பம் உனக்க பெண்டாட்டி என்ன செய்வா? அவதான் ஆப்பீஸ் போயி வேலை செய்யணுமோ? ” அம்மா கழுவிய நீரை கொட்டாங்கச்சியில்விட நரச்சி அதை நாய்குடிப்பதுபோல குடித்தது.

அனந்தன் ”ஆமா. ஆப்பீஸ¤க்கு போற மாமியைத்தான் நான் கல்யானம் செய்வேன். குடை பேக் எல்லாம் வேணும். ” என்றான். ”அய்யோ என் செல்ல சக்கரையே. எவ வந்து வாய்க்கப்போறாளோ”என்றபடி அம்மா எழுந்தாள்.

அனந்தன் அம்மா மீனுக்கு தேங்காய் துருவி வைத்திருப்பதைப் பார்த்தான். பச்சைமிளகாய் இருந்தது. அப்படியானால் பச்சைக்குழம்புதான். வாளை, சூரை, திரச்சி , வங்கடை போன்ற துண்டுமீன்களுக்கும் கணவாய்க்கும்தான் தேங்காயை கறுக்க வறுத்து அரைக்கவேண்டும். திரைச்சிக்கும் கணவாய்க்கும் கொத்தமல்லியை வறுத்து அரைத்து வைப்பாள். கொழுவாய்க்கு வறுத்து அரைக்க வேண்டம் என்று அனந்தன் சொல்லிக்கொண்டான். ஆனால் ஏன்?

”ஏன் வறுத்து அரைக்கல்ல?”என்று அனந்தன் கேட்டான். ”சும்மா போவியா போட்டு நொய் நொய்னுட்டு”என்று சொன்னபடி அம்மா கூட்டுவைத்த பித்தளைத் தட்டை எடுத்துக் கொண்டுவந்து அம்மியில் வைத்து தேங்காயை குழவியை தூக்கி சதைத்து அரைக்க ஆரம்பித்தாள். பச்சைமிளகாய் சதையும் வாசனை வந்தது. அனந்தன்னை திரும்பி பார்த்து அவன் வருத்தமாக நிற்பதைக் கவனித்ததும் ” ஒண்ணுமில்ல மக்கா நெய் குறைவான மீனுண்ணாக்க சும்மா குழம்பு வைச்சா ஊறமணமும் ருசியுமாட்டு சள்ளுண்ணு இருக்கும்ல, அதாக்கும் வறுத்து அரைக்கிறது. நெய் இருந்தா நல்ல மணம்தானே? சாளையும் நெய்மீனுமெல்லாம் எம்பிடு மணமாட்டு இருக்கு”

அனந்தன் வாயைத்திறந்தான். எந்தெந்த மீனையெல்லாம் வறுத்து அரைக்கவேண்டும் என்று அவன் மனம் கணக்கு போட்டது. ”அம்மா, முரலு? முரலுக்கு வறுத்து அரைக்கணுமா?’ அம்மா ”ஆமா”என்றாள். முரல் சோறுபோல இருக்கும்.ஆனால் கருவாடு என்றால் முரல்தான் ருசி. வாளைக்கருவாடும் ருசிதான். அப்படியானால் நெய் இல்லாத மீன்தான் கருவாடுக்கு நல்லது. அனந்தனுக்கு அவன் இதையெல்லாம் கண்டுபிடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

”திரைச்சிக்கும் கணவாய்க்கும் ஓமம் போட்டு வைக்கணும். வாயு உள்ள மீனாக்கும்.” அம்மா சாந்தை வழித்தபடி சொன்னாள். அனந்தன் ”வாயு உள்ள மீனானா கொளகொளன்னு இருக்குமா?” என்றான். அந்த இரண்டு மீனும் அப்படித்தான் இருக்கும். அம்மா யோசித்தபின் ”அப்டி சொல்ல முடியாது’என்று இழுத்தபடி குழவியை நிற்கவைத்து சுழற்றி வழித்தாள். அம்பிகா அக்காவின் சின்னக்குழந்தை சம்புவிற்கு அவள் பயறுமஞ்சள்மாவு குழைத்து பூசி குளிப்பாட்டுவது போலிருந்தது. சம்பு கால்களை வளைத்து ‘ங்க் ங்க்’என்று குதிப்பான்.

அம்மா ம்மியைக் கழுவி அந்த நீரையும் பாத்திரத்தில் கூட்டுடன் சேர்த்துக் கோண்டாள். தீயடுப்பில் மீன்சட்டியை ஏற்றி குழம்பை போட்டாள். மூடி வைத்த மீன்துண்டுகள் அருகே நரைச்சி குந்தி இருந்து வாய் திறந்து கண்சுருக்கி மியாங் என்றது. அம்மா ”சீ போடி ”என்று அதை துரத்தினாள். அது தாவியபோது நிழல் சுவரில் புலி போல பாய்ந்ததை அனந்தன் வியப்புடன் பார்த்தான்.

அம்மா பெருமூச்சுடன் மீன் குழம்பை கிண்டியபடி ”அனந்தா மக்கா நீ அம்மை நட்டாலம்போனா இங்க நேராட்டு இருப்பியாடா?”என்றாள். அனந்தன் ஒரு தட்டை எடுத்து உருட்டி விட்டபடி ” நானும் வருவேன்”என்றான்.

”அம்மை பிள்ளை பெறப்போறன்லா மக்கா. அதுக்கு அம்மை அம்மைக்க வீட்டுக்கு போணும்லா?” . அனந்தன் தட்டை எட்டிப்பிடித்து மீண்டும் உருட்டி விட்டான்.”நானும் வருவேன்”

”உனக்கு இங்க ஸ்கூலு இருக்குல்லா?” அம்மா சொன்னாள். அனந்தன் தட்டை நிற்கவைக்க முயற்சி செய்தபடி, ”நான் ஸ்கூலுக்கு போகல்ல. மகாராஜபிள்ளை சார் என்னை அடிக்காரு. நான் வலிய ஆளாயி மீசை வச்சுகிட்டுபட்டாளத்துக்குப் போறன்”என்றான்.

”அம்மா இல்லேண்ணா தங்கம்மை இருப்பா. அடுக்களை சோலிக்கு பங்கஜாட்சிமாமி வருவா. எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்கிடுவாங்க….என்ன மக்கா?” குரல் மாறுபடுவது கண்டு அனந்தன் ஏறிட்டுப்பார்த்தான். அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மோவாயில் உருண்டு நின்றது. அவன் எழுந்து அம்மா அருகே போய் ” நான் வருவேன்” புருவத்தைச் சுருக்கியபடிச் சொன்னான்.

அம்மா விசும்பும் ஒலி கேட்டது. அழுகையில் மார்பு விம்முவதை அனந்தன் கண்டான். நேரியது நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உடனே அழுகை மேலும் மேலும் என வந்து அதாலேயே மூக்கையும் கண்களையும் சேர்த்து அழுத்திக் கொண்டு பச்சை தென்னைமட்டையை பிளப்பதுபோன்ற ஒலியுடன் அழுதாள்.  அனந்தன் ஓடிப்போய் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டான். அம்மா அவன் தலைமயிரை தடவினாள்.

அனந்தன் ”நானும் வருவேன்…நானும் வருவேன்” என்று அவள் முண்டை பிடித்து இழுத்து இழுத்து அழுதான். அம்மா ”ஸ்ஸ்ஸ் சும்மா இரு. கேட்டா அது மதி இண்ணைக்கு கதகளி ஆட்டத்துக்கு. ”என்றாள். அனந்தன் குரலைத் தாழ்த்தி தலையை வீம்பாக ஆட்டி ” நானும் வருவேன்”என்றான்.

அம்மா”அப்பா சொல்லியாச்சு மக்கா. அம்மை போயிட்டு பிள்ளை பெத்துட்டு,  பிள்ளைக்கு செவப்பு மாறின பிறகுதான் வருவேன். நீ இங்கதான் இருக்கணும். நல்லா சாப்பிடணும். நல்லா படிக்கணும். நல்லா விளையாடணும். மொரண்டுபிடிக்கப்பிடாது கேட்டியா?”

அனந்தன் அம்மாவை நம்ப முடியாமல் ஏறிட்டுப் பார்த்தான். அம்மா ” அம்மா சீக்கிரம் வந்திருவேன் என்ன? நல்ல மொழுமொழுண்ணுட்டு பிள்ளைய கொண்டுவருவேன். என் மக்களுக்கு என்ன பிள்ளை வேணும் ? தங்கச்சியா தம்பியா?”

”எனக்கு ஒண்ணுமே வேண்டாம்” என்று அனந்தன் கண்ணீருடன் சொன்னான். ”நான் வருவேன்” அம்மா ”அப்பா சொல்லியாச்சு மக்கா.. மொரண்டு பண்ணினா அப்பா அடிப்பாவ.” என்றாள்

‘நான் அப்பாவை கொன்னுட்டு வருவேன்”என்று அனந்தன் கோபமாகச் சொன்னான். கையை ஆட்டியபடி  ”அப்பா ஒறங்கும்போது கத்தி எடுத்து வெட்டுவேன்”

அம்மா அவன் மண்டையில் அடித்து ”சீ சும்மாரு சவமே…என்ன பேச்சு பேசுகே சந்தியையும் அதுவுமாட்டு”என்றாள்.

அனந்தன் அழுதபடி பின்னால் விலகி சுவரில் சாய்ந்து நின்று ஆங்காரமாக ”நான் இமயமலைக்கு ஓடிபோயிருவேன். அம்மாவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இமய மலைக்கு போறேன்…” என்றான்.

அம்மா அவனைப் பிடிக்கவந்தபோது அவன் அவள் கைகளைத் தட்டிவிட்டான். அம்மா அவனை வலிமையாகப்பிடித்து தன் வயிற்றோடு சேர்த்து ”செரி செரி… நீயும் வா…போருமா….”என்றாள்.

அனந்தன் அண்ணாந்து ” உள்ளதா?”என்றான். ”உள்ளதுதான் போருமா..?”என்றாள் அம்மா.

அம்மாவின் வயிற்றோடு சேர்ந்து நின்றபடி அனந்தன் அண்ணாந்து பார்த்தான். அம்மா அழுதுகொண்டிருந்தாள். கண்ணீர் அவன் தலைமீது சொட்டியது. அவன் துடைத்தபடி ”நாம ரெண்டுபேருமாட்டு இமையமலைக்கு போலாமா அம்மா? ”என்றான். அம்மா கண்களை துடைத்தபடி சிரித்தாள். உயரத்தில் குனிந்த முகத்தில் வீங்கிய கண்களுடன் வரிசையான பற்களும் சிவந்த தடித்த உதடுகளுமாக அம்மா சிரித்தபோது அடுப்பின் சிவந்த ஒளி அவள் முகத்தில் பட்டு அனந்தனுக்கு தீபாராதனை காட்டும்போது ஆற்றுமுக்கு பகவதியின் செம்பு முகம் போலிருந்தது .அவன் அம்மாவை இறுகப் பற்றிக் கொண்டான்.

அம்மா பெருமூச்சுடன் ”செரி நீ போய் அப்பா என்ன செய்யுகாருண்ணு பாத்துட்டுவா..”என்றாள். அனந்தன் ஓடிப்போய் தொழுத்தைப் பார்த்தான். நன்றாக இருட்டிவிட்டிருந்தது. தொழுத்தின் கூரைமேல்விளிம்பு வானத்தின் பின்னணியில் தெரிந்தது. உள்ளே புகைச்சட்டியில் சிவப்பாக தீ அருகே அதன் ஒளியில் அப்பாவின் தோளும் முடி சிலும்பிய பசுவின் பின்பக்கமும். டார்ச் ஒளிவட்டம் வட்டமான பெரிய சிறகுள்ள சிவந்த  பட்டாம்பூச்சிபோல பறந்து பறந்து அமர அப்பா உண்ணி பொறுக்கினார்.

அனந்தன் திரும்பிவந்து ” உண்ணி பெறக்குகாரு”என்றான். அம்மா ”இனி எப்பம் இவரு குளிச்சு சோறு உண்டு…… ஊரும்நாடும் ஒண்ணாச் சேந்து வருது கோயிலுக்கு. நமக்கொரு கொடுப்பினை இல்லை”என்றாள்.”மக்கா வெளிய சூட்டடுப்பில வெந்நி இருக்கு. சூடாச்சாண்ணு பாருடா”. அனந்தன் ஓடிப்போய் செம்புப்பானையில் இருந்த நீரை தொட்டுப்பார்த்தான். அடுப்பில் கனல் இல்லை, ஆனால் அடுப்புக்கல் சூடாக ஆவிவிட்டது அனந்தன் கால்களில் பட்டது. வெந்நீர் சூடாகத்தான் இருந்தது.

அடுக்களைக்கு வந்து ”சூடாச்சு அம்மா”என்றான். ”செரி நான் குளிக்குதேன். நீ போயி தீவாராதனை கும்பிடு. வந்ததும் நாம உண்டுட்டு கோயிலுக்கு கதை கேக்க போலாம். ”என்றாள் அம்மா.

அனந்தன் ”எனக்கு இப்பமே பசிக்குதே”என்றான். மீன்குழம்பு மணம் அவன் பசியை கிளறியது.குதிகால் தூக்கி எம்பி சட்டியைப்பார்த்தான். மூழ்கியவர் விடும் மூச்சுபோல குழம்பில் குமிழிகள் வந்தன. மீந்துண்டுகள் ஆழத்திலிருந்து குமிழிகள் வழியாக கிளம்பி மேலே வந்து அமிழ்ந்தன.

”அப்பம் கொஞ்சம் மீன்கறி வச்சு சோறு போடுகேன். குளிச்சிட்டுதான் கோயிலுக்கு போணும்…” அனந்தன் சரி என்று தலையாட்டினான். ”வெந்நியிலே குளி ”என்று அம்மாவே சொன்னாள்.

அம்மா எனாமல் தட்டில் சோறு போட்டு கொதித்து இறக்காத மீன்குழம்பையே தவியால் அள்ளி ஊற்றி அவனுக்குக் கொடுத்தாள். அனந்தன் அதைவாங்கி மீன்துண்டு எத்தனை என்று பார்த்தான். ஒன்றுதான். அம்மா எப்போதும் முதலில் ஒன்றுதான் வைப்பாள். எத்தனை வைத்தாலும் அவன் ”இன்னொண்ணு”என்று கேட்காமலிருக்க மாட்டான். அண்ணாவும் அவனும் சேர்ந்து சாப்பிடுவதானால் அவனுக்கு அண்ணாவின் துண்டுகளும் கிடைக்கும்.

அனந்தன் ”ஒரு துண்டு மட்டுமா?”என்றான். அம்மா ”இந்தாடா ”என்று தவியால் இன்னொரு துண்டு எடுத்து போட்டாள்.

அனந்தன் மீனை அவசரமாகத் தின்றான். கொழுவாய் நல்ல மணமாக இருந்தது. கொஞ்சம் சோறு சாப்பிடுவிட்டு ”இன்னொண்ணு”என்றான்.அம்மா ”இல்லடா. எட்டணாக்கு மீன் வாங்கினா எம்பிடு மட்டும் திம்பே….”என்றபடி ஒரு சிறிய துண்டை எடுத்து போட்டாள். அனந்தன் மீண்டும் ”இன்னொண்ணு”என்றான்.

”அம்பிடுதான். சோறை வாரி உண்ணு. சும்மா மீனையே தின்னுட்டிருந்தா…”என்றாள் அம்மா. அனந்தன்”அண்ணவுக்குள்ளது…”என்றாள். ”அவனுக்கு வேண்டாமா?சும்மா அவனை ஒண்ணும் தின்னவிடாம….. பேசாம தின்னுட்டு போ” அனந்தன் ”ஒண்ணே ஒண்ணு ”என்றான். அம்மா ஒரு துண்டு மீனை தட்டில் போட்டுவிட்டு சோற்றைப் பிசைந்து அவளே ஊட்டிவிட ஆரம்பித்தாள். அம்மா ஊட்டிவிட்டால் அனந்தன் மெல்லவே நேரமிருக்காது. கோழி தவிடு தின்பதுபோல விழுங்க வேண்டும். கடைசியாக வழித்து அவன் வாயில் தடவிவிட்டு அம்மா தட்டை கொண்டுபோய் வடக்குப்புறத்தில் போட்டாள். ”செரி குளி. இப்பம் தீபாராதனை நடக்கும்”

அனந்தன் கால்சட்டையைக் கழட்டிவிட்டு துவர்த்தை அரைஞாணில் கோமணமாக உடுத்துக் கொண்டு வடக்குபக்கம் நெல்லறைக்கு அருகே அரை இருட்டில் நின்று செம்புப்பானையிலிருந்த நீரை செம்புக்கோப்பையால் கோரி விட்டு அனந்தன் குளித்தான். குளிரில் வெந்நீர் பட்டதும் அவனுக்கு புல்லரித்தது. சாரலாக மழைபெய்யும்போது வெந்நீரில் குளிக்க அவனுக்குப் பிடிக்கும். அப்பாதான் ஆண்கள் வெந்நீரில் குளிப்பது கேவலம் என்று திட்டுவார். அனந்தனுக்கு பலசமயம் அவன் ஆண்பிள்ளையாக பிறந்ததை நினைத்தால் வெறுப்பாக இருக்கும். முடிகூட நீளமாக வளர்க்க முடியாது. கேசவன் வந்து மெஷின் வைத்து பாதிமுடியை இழுத்து இழுத்து பிடுங்கியபடி சிட்டுக்குருவிபோல கிரிச் கிரிச் என்று  ஒலியெழுப்பியபடி பொடிகிராப் அடித்து விடுகிறார்.

குளித்து தலைதுவட்டி வேறு கால்சட்டைபோட்டதும் அனந்தனுக்கு மிகவும் குளிர்ந்தது. மூக்குநுனியும் காதுமடல்களும் சில்லென்று இருந்தன. கோயிலில் மணி ஒலிக்க ஆரம்பித்தது. கணபதி சன்னிதியில் தீபாராதனை நடக்கிறது. தீபாராதனைக்கு போகாதவர்கள் பாயசம் வாங்கமட்டும் போனால் கேவலம்.

அனந்தன் அம்மாவிடம் ”நான் கோயிலுக்குப் போறேன்”என்று கூவியபடி கிளச்சை விடுவித்து வண்டியை எடுத்து ஸ்டீரிங்கை வேகமாக ஒடித்து பாய்ந்து உரக்க ஆரன் ஒலிக்க கோயில் பறம்பில் இறங்கி ஓடினான். கோயிலுக்குள் நிறைய இடங்களில் தூண்களில் வாழைப்பூமடல் போல நீட்டியிருந்த கல்விளக்குகளில் சுடர் நெளிந்தாடியது. ஆள்கூட்டமும் அவர்கள் நிழல்களும் கோயிலெங்கும் நிறைந்து.

முகப்பில் கல்தூணில் மாட்டியிருந்த குடைமணியின் கயிற்றை சாமி இழுக்க அது டாங் டாங் என்று சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. கோயில் கருவறைக்கு முன் கட்டப்பட்டிருந்த கிண்ணமணிகளை பெண்கள் சிலர் கயிறை இழுத்து அடித்தனர். அவை ணிங் ணிங் என்று கலைந்த பறவைக்குரல்போல ஒலித்தன. ஈசானகணபதி கோயிலில் இருந்து போத்தி குனிந்து வெளிவந்து புகை எழுப்பிய சூடத்தட்டை கொண்டுவந்து வேலப்பன் கையில்கொடுத்துவிட்டு பெரிய ஸ்ரீகோயிலுக்குள் போனார். எல்லாரும் முண்டியடித்து தூபத்தை தொட்டு கும்பிட்டனர்.

ஸ்ரீகோயில் உள்வாசலை போத்தி சாத்தினார். பெண்கள் ஒருபக்கமும் ஆண்கள் எதிர் பக்கமுமாக வரிசையாக நின்றனர். பல எண்ணைகள் கலந்து மடித்த வீச்சமும் திருநீறும் சூடமும் சாம்பிராணியும் பூக்களும் சேர்த்த மணமும் வீசின. அனந்தன் இரு மாமிகளின் கால்களுக்கு இடையிலூடாக உள்ளே நுழைந்து நின்றுகொண்டான். தீபாராதனைக்காகக் காத்திருப்பது அனந்தன்னுக்குப் பிடிக்கும். கனகம் மாமியின் முண்டில் தாழ்ம்பூக்குலையும் பாச்சாஉண்டையும் சேர்ந்து மணத்தன. மாமி கும்பிட்ட கையை தாழ்த்தி அனந்தன் தலையை வருடினாள்.

தடாலென்று உள்நடை திறந்தது. லிங்கம் முற்றாக பூவால் மறைந்திருக்க வெள்ளி நீற்றுப்பட்டம் மட்டும் விள்க்கொளியில் பளபளத்தது. இருபக்கமும் பஞ்சமுக தூக்குவிளக்குகளும் குத்துவிளக்குகளும் ஒளிவிட அவ்வொளியை பின்பக்கம் கண்ணாடி பிரபாவலயம் பிரதிபலிக்க ஸ்ரீகோயில் ஒளிமயமாகத் தெரிந்தது. போத்தி கைமணியை ஆட்டியபடி ஒளிரும் மலர்க்கொத்து போலிருந்த பத்மதீபத்தட்டை சுழற்றி தீபாராதனை காட்டினார். எல்லா மணிகளும் சேர்ந்து ஒலிக்க சேகரன் மாமா வழக்கம்போல ”சம்போ மகாதேவா சம்போ! அப்பா மாகதேவா நீதான் ரெட்சிக்கணும்!”என்று உரக்க கூவினார். அனந்தன் அண்ணாந்து அவரைப்பார்க்க அவர் அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே பார்த்தார்.

மலரும் நீரும் விளக்கும் தூபமும் காட்டி தீபாராதனை முடிந்ததும் போத்தி தூபத்தட்டுடன் வெளியே வந்து அதை வேலப்பன் கையில் கொடுத்தார். வேலப்பன் அக்குளில் ஷேவ் செய்திருப்பதை அனந்தன் கவனித்தான். வேலப்பன் தினமும் கோயிலுக்கு வருவதனால் தினமும் கையிடுக்கில் ஷேவ் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டான். கிருஷ்ணவேனி இமைகளை தாழ்த்தி கண்களை பாதிமூடி மிகுந்த வெட்கத்துடனும் அரைச் சிரிப்புடனும் இருப்பதை அனந்தன் கவனித்தான். மற்ற ஆண்களின் கண்களை அவன் ஒவ்வொன்றாகப் பார்த்தான். ராமன் அண்ணனும் பார்க்கவன் ஆசாரியும் பாலையனும் பத்ரனும் எல்லாம் அவளைத்தான் பார்த்தனர். மீண்டும் கிருஷ்ணவேணியைப் பார்த்தபின் அவர்களை ஒவொருத்தராகப் பார்த்தான். உடனே அவனுக்கு அது பாலையன்தான் என்று புரிந்தது. பிறர் கிருஷ்ணவேணியை அடிக்கடி கூர்ந்து பார்த்தனர். பாலையன் மட்டும் கிருஷ்ணவேணியை பார்க்கவில்லை, அவளைப்பார்க்காமலிருக்கும் பொருட்டு அவன் வேறு எல்லா பக்கமும் பார்த்தான். உரக்க பேசி ”ஒதுங்குங்க…வழி விடுங்க… போத்தி போகணும்லா” என்றெல்லாம் கூவி கையாட்டி எல்லாம் செய்தபோதும் சிலசமயம் ஓரக்கண் திரும்பி இமைக்கும்நேரம் கிருஷ்ணவேணியைப் பார்த்துச் சென்றது.

போத்தி மலர்த்தட்டை எடுத்துவந்து ஸ்ரீகோயில் நடைமீது நின்றார். ”செறப்புக்க ஆளு ஆராக்கும்…அவ்வோ வரட்டும்” என்றார். பாச்சுபிள்ளை ”செறப்பு நம்ம திருவோந்தரம் ஸ்ரீகண்டன் வக்கீல் ஏமானுக்காக்கும். பார்ட்டி இல்ல. அவ்வோ காரியஸ்தன் வந்திட்டுண்டு…”என்றார். கரடி எஸ்டேட் மேனேஜர் சம்புநாயர் வாயில் நீட்டிய பல்லும் ஒன்றரைக்கண்ணுமாக முண்டியடித்து வந்து அக்குளில் துண்டை இடுக்கியபடி நின்று கைநீட்டினார். போத்தி அதில் நுனிவாழை இலையில் வைக்கப்பட்ட திருநீறு சந்தனம் அரளிமலர் ஆகியவற்றைக் கொடுத்தார்.

பாச்சுபிள்ளை ”அங்கத்தைக்கு தெட்சிணை வைக்கணும்” என்றதும் சம்புநாயர் பதறி நாலுபக்கமும் பார்க்க அவர் மனைவி மறுபக்கமிருந்து எட்டி கைநீட்டி ”இந்தா பிடியுங்க…நிண்ணு முழிக்காம..”என்று ஒரு ரூபாயை கொடுத்தாள். அவர் பல்லைக்காட்டி சிரித்தபடி வாங்கி தட்டில் போட்டார். ” டேய் சம்பு உனக்கு பட்சிபலன் இல்லேண்ணாலும் அச்சிபலன் உண்டுடே ”என்றார் போத்தி . நாராயணி மாமி கைகளால் வாய் மூடி சிரித்து வெட்க சம்புநாயர் மிண்டும் இளித்தார்.

போத்தி மற்றவர்களுக்கு பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார். பெண்களுக்கு மட்டும் இலைக்கீற்றில் சந்தனமும் நீறும் பூவும். ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் கையில். முன்பெல்லாம் தறவாட்டு பெண்களுக்கு பிரசாதம் கொடுத்தபின் தான் மற்றவர்களுக்கு கொடுப்பது என்ற வழக்கம் இருந்ததாக காளியம்மச்சி அடிகக்டிச் சொல்வாள். எல்லா பெண்களுக்கும் கொடுக்க ஆரம்பித்த பின் அம்மச்சி பிரசாதம் வாங்க முன்னால் வருவதில்லை. போத்தியே கூப்பிட்டு ”காளி இந்தா பிரசாதம் வாங்கிக்கோ”என்று சொல்லவேண்டும்.

போத்து மடைப்பள்ளிக்குப்போனபின் கூட்டம் கலைந்து ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருந்தது. குழந்தைகள் ஆட்களின் இடையே ஓடி ஓடி விளையாடின. பெரியவர்கள் ”டே டே பாத்து….. விலுந்து வைக்கப்பிடாது…சொன்னா சொன்ன சொல்லு கேக்குதுகளா…” என்று கூவினர். சிலரை குழந்தைகள் இடித்தபோது ” பாத்து ஓடுங்கலே ..எளவு திருவிளால பெத்த குட்டி கணக்காட்டுல்ல இருக்கு ஓரோண்ணும்…” என்று வைதனர்.

வேலப்பன் ராமாயணம் படிபப்தற்கான ஏற்பாடுகளைச் செய்தார். திண்னையின் ஒருபக்கம் அனுமார்சிலைக்கு கீழே குத்துவிளக்கு ஏற்றி பூஜைப்பொருட்களை வைத்து விரிப்பலகை வைத்து அதில் ராமாயணத்தை விரித்து வைத்தார். உட்கார்ந்து படிக்க மணைப்பலகை போட்டு அதன்மீது நீலக்கம்பளத்தை விரித்தார். மறுபக்கம் உட்கார்ந்து கேட்பதற்காக புல்பாய்கள் விரிக்கபப்ட்டன. ஒன்றிரண்டு பாட்டிகள் அதில் கால்நீட்டி அமர்ந்துகொண்டனர். வெற்றிலை துப்ப எழுந்துபோகும் வசதிகொண்ட இடங்கள் சாய்வதற்கு வசதிகொண்ட இடங்களுக்கான போட்டி.

அனந்தன் மடைப்பள்ளிப்பக்கமாகப் போனான். போத்தி பெரிய வாழையிலையில் தேங்காய்துருவியை வைத்து அதன் கட்டைமீது தோல்சீவிய இஞ்சிகளை வைத்து நறிநறுவென்று வெட்டினார். கூட்டுப்பாயாசம் என்று அனந்தன் நினைத்தான். கதவோரமாக நின்று கொண்டு உள்ளே வேடிக்கைபார்த்தான். அடுப்பில் உருளியில் வற்றி குழம்பாகி மேலே ஆடைபடிந்த பாயாசத்தில் குமிழிகள் உடைந்து தெறித்தன. நறுக்கிய இஞ்சி ஏலக்காய் இரண்டையும் இலையுடன் எடுத்துக்கொண்டு போத்தி பாயாசத்தின் அருகே போனார். அடுப்பருகே வாழையிலையில் விளாம்பழம் நறுக்கிய துண்டுகள் குவியலாக இருந்தன.

தொட்டுவிளையாடும் பையன்கள் இருவர் ஓடிய வேகத்தில் அனந்தனை இடித்துவிட்டுச்சென்றார்கள். சுதனும் மணிகண்டனும். அனந்தன் அவர்களை பயத்துடன் பார்த்து மேலும் நிழலில் ஒதுங்கிக் கொண்டான்.போத்தி பாயாசத்தில் இஞ்சி ஏலக்காய் விளம்பழத்துண்டுகள் எல்லாவற்றையும் போட்டு பித்தளைச் சட்டுவத்தால் நன்றாக கிண்டி புரட்டினார். கூட்டுப்பாயாசத்தின் மணம் வந்துவிட்டது, குழந்தை பிறப்பதுபோல. அனந்தன் மகிழ்ச்சியாக உணர்ந்தான். அம்மாவிடம் சொல்லவேண்டும் போலிருந்தது. தேங்காய்பூ ஒரு பெரிய கடவம் நிறைய இருந்தது. அதை அப்படியே தூக்கி பாயசத்தில் போட்டு இன்னொருமூறை கிண்டியதும் போத்தி எரிந்த கட்டைகளை பின்னால் இழுத்து குத்தி அணைத்தார்.

ஏழு கொட்டாங்கச்சிகளில் பாயசத்தை அள்ளி வைத்து அவற்றை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு போத்தி வெளியே வந்தார். அனந்தன் அவர் பின்னால் போனான். கோயிலுக்கு வெளியே ஆற்றில் இறங்கும் வழியில் நாகங்களும் பூதத்தானும் காளயட்சியும் அமர்ந்த சிறிய இருப்புகள் உண்டு. மழையில் அரித்து கருகி யானைத்தோல்போல மாறிவிட்ட கருங்கல் சதுரமேடை மீது சிறியசிலைகள் மட்டும் சருகும் பூக்களும் உதிர்ந்து சூழ்ந்திருக்க காற்று ஒலிக்கும் சோலைகீழ் தனியாக நிற்கும். அருகேதான் பெரிய விளாமாரம். ஆறு இறங்கிய சரிவில் நீலச்செண்பகம். அதன் கீழே செண்பக யட்சி ஒரு கரிய நீளக்கல்லாக சப்பைக்கல் மீது பிரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தாள்.

முன்னால் பித்தளை கோல்விளக்கு ஏந்தியபடி பாச்சுபிள்ளை குனிந்து நடந்தார். போத்தி ஒருகையில் நைவேத்ய தட்டும் மறுகையில் பூஜைத்தட்டுமாக சென்றார். அவருக்குபின்னால் ஏழெட்டுபேர்தான் கும்பிட வந்தார்கள். குழந்தைகள் இல்லை. பாட்டிகள் நான்குபேர். மூன்றாம் வகுப்பு படிக்கும் வனஜாட்சி அனந்தனைப்பார்த்து புன்னகைசெய்தாள். அவளுக்கு முன்பக்கம் இரண்டுபல் இல்லை.அனந்தன் ஐயத்துடன் அவளைப்பார்த்துவிட்டு கருணாகரன் பின்னால் மறைந்துகொண்டான்

போத்தி மாலையிலேயே வந்து நாகங்களுக்கும் யட்சிக்கும் பூதத்துக்கும் குப்பை அள்ளி அபிஷேகம்செய்து தலைமீது ஒரு செம்பருத்திவீதம் வைத்துவிட்டு போவார். ஒவ்வொரு சாமிமுன்னாலும் ஒரு கொட்டாங்கச்சி பாயசத்தையை வைத்தார். செண்பக யட்சிக்குள்ளது தனியாக இருந்தது. கைவிரல்களால் சைகை செய்து நைவேத்யம் படைத்தபின் கைகளை தட்டி மெல்ல ”ஓம் க்ரீம் ஹம் ·பட் ·பட்” என்று மந்திரம் சொன்னார். கைமணி ஒலிக்க மலர் போட்டு தீபம் காட்டினார். பாட்டிகள் ” அம்மே பரதேவதே”என்று பெருமூச்சுவிட்டபடி கும்பிட்டார்கள்.

கீழே இறங்கி ஒற்றையடிப்பாதை வழியாகச்சென்று செண்பகயட்சிக்கும் படைத்தபின் போத்தி திரும்பினார். மடைப்பள்ளிக்குப்போய் சிறிய உருளியில் கூட்டுப்பாயசத்தை செம்பு அகப்பையால் அள்ளி போட்டு கைமியில் வாழை இலைவைத்து அதன் மீது அதை ஏற்றியபடி ஸ்ரீகோயிலுக்குள் சென்றார்.

மகாதேவருக்கு நைவேத்யம் படைக்கும்போது நிறைய சைகைகளும் மந்திரங்களும் உண்டு. கொஞ்சம் நேரம் ஆகும். ஹம் ·பட் இரண்டும் பெண்தெய்வங்களுக்கு மட்டும் உரியவை என்பதை அனந்தன் கவனித்திருந்தான். ஸ்ரீகோயில்முன் கூட்டம் கூடி நின்றார்கள். மணிகள் சீராக ஒலித்தன. மகாதேவரின் மாலையிலிருந்து எடுத்த அரளி தெச்சிமலர்களையும் வில்வ இலைகளையும் பாயசம்மீது போட்டபின்  போத்தி உருளியை தூக்கிக்கொண்டு மீண்டும் மடைபப்ள்ளிக்குப் போனார். அந்த பாயசத்தை அப்படியே பெரிய உருளியிலிருந்த பாயசத்துடன் சேர்த்து கலக்கியபின் இரு செம்புப்பாத்திரங்களிலாக அள்ளி வெளியே கொண்டுவைத்தார். ”வேலப்பா வெளம்புடே”என்றார்.

வேலப்பன் செம்புருளியை புஜங்களும் மார்புச்சதைகளும் இறுக அப்படியே தூக்கி தோளில் வைத்து கொண்டுவந்து தெக்குபலிமண்டபம் மீது வைத்தான். பாச்சுபிள்ளை சீராக கீறிய வாழையிலை சீந்துகளைக் கொண்டுவந்து வைத்தார். பிள்ளைகள் முண்டியடித்தபடி கைநீட்டினர். ”எல்லாரும் வரியாட்டு நில்லுங்க எல்லாருக்கும் உண்டு…. சண்ட போடப்பிடாது… லேய் முண்டாதலே…அதாருக்க வித்தாக்கும்? லே மொட்ட ”என்றெல்லாம் பாச்சுபிள்ளை நடுங்கும் குரலில் கூவினார். யாரோ அவரது மேல்துண்டை வேண்டுமென்றே இழுக்க ” லே லே நீக்கம்பில போறவிள்ளா…. என்னம்பா எளெவெடுத்து அலையுதுக….டே உனக்க அப்பன்லாம் ஏது நேரத்திலடே கோமணத்த அவுத்தான்…?”

அனந்தன் தூண் ஓரமாக நின்று வரிசையாக ஆட்கள் பாயசம் வாங்குவதை கவனித்தான். பிறுத்தா அம்மச்சி கைநீட்டி அங்குமிங்கும் அவசரமாக போகும் பையன்களிடமும் பெண்களிடமும் ” ஒரு எல எனக்கும் வாங்கு மக்கா…நல்லாருப்பே…எடீ ரெமணீ… மக்களே …” என்று பரிதவித்தாள். பாட்டிகள் மாமிகள் எல்லாருமே பாயசமே குறியாக இருப்பதை அனந்தன் கவனித்தான். ஆனால் அது வெளியே தெரியாமலிருக்க கவனமாக இருந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுபோலவும் வேறு திசையில் கவனம் இருப்பதுபோலவும் காட்டிக்கொண்டார்கள்.ஆனால் பேச்சுகள் எதுவுமே இயல்பாக இருக்கவில்லை. பையன்கள் பாயசத்தை வாங்கிக் கொண்டுவந்து அம்மாக்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சென்று அடுத்த பங்கை வாங்கினர். பலருக்கு அதுதான் இரவுக்கு சாப்பாடு என்று அம்மா ஒருமுறை சொன்னால். சிலர் நாள்முழுக்க கிழங்குகளும் இலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு அரிசி உண்பது அப்போதுதான்.

முதல் உருளி காலியானதும் ஒரு பதற்றம் ஏற்பட்டது. வேலப்பன் காலி உருளியுடன் சென்றபோது கிருஷ்ணபிள்ளை மாமா பாலையனிடம் ”எம்பிடு  நாழி அரிடே ?”என்றார். ” பதினைஞ்சுகிலோ…”என்றான் அவன். ”பந்திருநாழிக்கு வரும்லா?  அது போரும். சாஸ்திரமும் பாக்கணுமே” என்றார் மாமா

அடுத்த உருளியிலிருந்து ஆண்கள் வாங்கினார்கள். பல இடங்களிலாக அமர்ந்தும் நின்றும்  ஆட்கள் இலையிலிருந்து பாயசத்தை சுடச்சுட வழித்து சாப்பிட்டார்கள்.”எலைகளயும் தோலையும் கடவத்தில இடணும்….டே கொச்சுபிள்ள டே எலைய கடவத்தில போடுடே. இங்க ஒரு கெளவன் கெடந்து கீறுதானேண்ணு நெனைக்குதாவளா பாரு..”

பாட்டிகள் பழத்தை கூடவே சேர்த்து பிசைந்து சாப்பிட்டார்கள். மூன்றாவது உருளியின் இறுதியில் கிட்டத்தட்ட எல்லாருமே வாங்கிவிட்டார்கள். வேலப்பன் ”இன்னி ஆராவது உண்டுமா?” என்றான். அனந்தனிடம் திரும்பி ” கொச்சு வாங்கல்ல இல்லா? வரணும்”என்றான். எல்லாரும் அனந்தன்னைப் பார்த்தனர். அவன் கனத்த கால்களுடன் யாரையும் பார்க்காமல்போய் கைநீட்டினான். பாயசம் சூடு சற்று ஆறியிருந்தது. பழத்தை பாயசம் மேலேயே வைத்தது அனந்தன்னுக்குப் பிடிக்கவில்லை.

”தெக்கால போறவனுக, தின்னுட்டு எலைய அப்பிடியே போடுகானுவ. கூக்கி விளிச்சு விளிச்சு எனக்கு கொட்டை வயத்தில கேறினது மிச்சம்” அனந்தன் பாயசத்துடன் கால்கள் பின்ன ஓடி வீட்டுக்குப் போனான்.

அப்பா முந்திண்னையில் ஈஸிசேரில் அமர்ந்து விசிறியால் வீசியபடி வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தாள். உள்ளே அம்மா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அனந்தன் அருகே சென்றபிறகுதான் அம்மா அழுவதைக் கவனித்தான். கண்ணீர் வழிய தலைகுனிந்து மென்றாள்.

அனந்தன் ”அம்மா பாயசம்…”என்று மெல்ல சொன்னான். அம்மா சட்டென்று அவனைப்பார்த்து நேரியது முனையால் மூக்கையும் கண்களையும் துடைத்தபின் புன்னகை புரிந்தாள். ” இருந்து தின்னு”. அனந்தன் ” பாதிதான் குடுப்பேன்” என்றான். அம்மா ”நீயே எல்லாத்தயும் தின்னு மக்கா”என்றாள்

அனந்தன்னுக்கு ஏமாற்றமாக இருந்தது. ”கூட்டுபாயசம். விளாம்பழம் இட்டது, தெரியுமா?” அம்மா அவன் முகத்தைப் பார்த்ததும் ”செரி அம்மாவுக்கு ஒருவாய் குடு என்ன?”என்றாள். அனந்தன் கையால் வாரி அம்மாவுக்கு ஊட்டினான். ”நல்லாருக்கு”என்றாள் அம்மா. அனந்தன் மீண்டும் வாரி ஊட்டினான்”போரும் மக்கா. நீ சாப்பிடு. ”

அனந்தன் சாப்பிட்டபடி ”தேங்கா போட்டிருக்கு பாத்தியா?”என்றான் இஞ்சி அவனுக்கு பிடிக்கவில்லை. இன்னொருவாய் அள்ளி அம்மாவுக்கு ஊட்டினான்.

”நீ புதைப்பு எடுத்துக்க. அம்மா இப்ப வாரேன். கத கேக்க போலாம்” என்றாள் அம்மா தட்டை எடுத்தபடி. ” நீ மீன் தின்னியா?”என்றான் அனந்தன்.”இல்லமக்கா” அம்மா சிரித்தாள். ”அம்மா விரதம்லா?”

வெளியே சாமியின் குரல் கேட்டது. அனந்தன் ஓடிப்போய் பார்த்தான். சாமி ஒரு இளம்கமுகுப்பாளையில் பாயசமும் பழங்களும் வைத்து கொண்டு வந்திருந்தான். ”போத்தி குடுத்தாரு”என்றன். போத்தி அவர் எங்கு யாருக்காக வழிபாடு கழித்தாலும் அப்பாவுக்கும் ஒரு பங்கு கொண்டுவந்து கொடுப்பார்.வெகு தூரத்திலானாலும் சுமந்து கொண்டுவருவார். அப்பாவும் அவரும் ஒன்றாகப் படித்து ஒன்றாக வளர்ந்தார்கள். அப்பா போத்தியிடம் மட்டும்தான் சிரித்து சாதாரணமாகப் பேசுவார்.

அனந்தன் பாயசத்தை இலையுடன் வாங்கிக் கொண்டுவந்து அப்பாமுன் ஸ்டூலில் வைத்தான். அப்பா எழுந்துபோய் வாய் கொப்பளித்தார். அம்மா உள்ளே பெட்டியை திறந்து புதிய முண்டும் நேரியதும் அணிவது சுவரில் நிழலாகத் தெரிந்தது. உடுப்புபெட்டி திறந்த மணம் எழுந்தது. ம்மாவின் பெட்டிக்குள் பழைய அத்தர் புட்டி ஒன்று கிடக்கும். சிறிய சிவப்புநிறப்பெட்டி. ஒரு தீக்கங்கு போல. அதன் மணம் ரோஜாப்பூவின் மனம். கசங்கிய ரோஜாப்பூவின்.

அப்பா ”டேய்”என்றார். அனந்தன் ஓடிப்போய் எட்டிப்பார்த்தான். ”ஒரு தட்டும் கரண்டியும் கொண்டுவாடா” அவன் ஓடிப்போய் கொண்டுவந்தான். அப்பா பாயசத்தை பாதியாகப் பகுத்து தட்டில் வைத்தபின் மிச்சத்தை நீட்டி  ”இந்தா சாப்பிடு” என்றார். அனந்தன் தயங்கினான். ”சாப்பிடுடா”என்றார் அப்பா. அப்பா எப்போதுமே போத்தி கொண்டுவரும் பாயசத்தில் பாதியை அவனுக்குத்தான் கொடுப்பார். அனந்தன் அவர் முன் தரையில் அமர்ந்து தலையை நிமிர்த்தாமல் வேகமாகச் சாப்பிட்டான். அப்பா ”ஒண்ணும் தின்னாதே…. தேவாங்குமாதிரி இரு… ”என்றபடி அப்பா கரண்டியால் கொஞ்சமாக அள்ளி மெல்ல சுவைத்து சாப்பிட்டார்.

அனந்தன் எழுந்து அவன் சாப்பிட்ட இலையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். மூச்சு திணறியது. அம்மா ” மக்கா கீழப் பாருடா… ஏந்திகிட்டு இருக்கா?” அனந்தன் கீழே அமர்ந்து அம்மாவை சுற்றிவந்தான். முண்டின் கசவு நுனி அவள் குதிகால் அளவுக்கு சரியாக இருந்தது. ”இல்லம்மா”

”வா போலாம் ”என்றபடி அம்மா முன் வாசலுக்கு சென்றாள். அப்பாவைக் கடக்கும்போது அனந்தன் மார்பு அடித்தது. அம்மா மெல்லியகுரலில் ”கதை கேட்டுட்டு வாறேன்”என்றாள்.அப்பா ஒன்றும் சொல்லவில்லை. படி இறங்கி கோயில்பறம்புக்குள் நுழைந்ததும் அனந்தன் உற்சாகமாக அம்மாவைக் கட்டிக் கொண்டான். அவனுக்கு அம்மா வீட்டுக்கு வெளியே வருவது மிகவும் பிடிக்கும்.எல்லாரையும் விட அம்மாதான் அழகாக இருப்பாள். ”விடுடா, கால் தெற்றுது”என்று அம்மா சிணுங்கினாள்.

”ஆ விசாலம் வந்தாச்சே”என்று கல்யாணிமாமி அம்மாவைப் பார்த்ததும் சொன்னாள். ”ஜாம்யத்தில் எறங்கினியா ஜெயிலுசாடி வந்தியா?”என்றாள் தேவகி மாமி. எல்லாரும் சிரித்தார்கள். அம்மா நேராகப்போய் கணபதியை கும்பிட்டு முன்னாலிருந்த பீடத்தில் இருந்து துளசி எடுத்து கூந்தலில் செருகிக் கொண்டாள். மகாதேவரை வெகுநேரம் கண் மூடி வணங்கினாள். அம்மா முகத்தில் கன்னத்தில் ஒரு முகப்பரு சிவப்பாக இருந்தது. கொசு கடித்த சிவந்த தடிப்புகள். கண்களுக்குள் கருவி ஓடும் அசைவு இமைக்குமேல் தெரிந்தது. அழுந்திய உதடுகள் மெல்ல அசைந்தன, ஏதோ உள்ளுக்குள் பேசுகிறாள்.

கொஞ்சநேரத்தில் அனந்தன்னுக்கு சலித்தது. அவன் கும்பிட்டபடியே திரும்பிப் பார்த்து நின்றான். பண்டிதர் வந்து அமர்ந்து  கண்னடியை போட்டுக்கொண்டு ராமாயணத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். போத்தி வந்து ” ஸ்ரீகோயிலுக்குள் நுழைந்தபடி ”போரும் விசாலாட்சியம்மே…வேற ஆளுகளுக்கும் குறெ வரங்கள் மிச்சம் வைக்கணும்…”என்றார். அம்மா புன்னகை புரிந்தாள்.

போத்தி உள்ளிருந்து வில்வமும் சந்தனமும் நீறும் கொண்டுவந்து பெரிய தும்பிலையில் வைத்து கொடுத்தார். அம்மா வில்வத்தை எடுத்து தலையில் வைத்தாள். கல்யாணி மாமி ”வலிய ஆளுகளுக்கு தும்பிலையில பிரசாதம்… ம்ம் நடக்கட்டு நடக்கட்டு ”என்று சிரித்தாள்.

போத்தி ”கல்யாணிக்குட்டி அம்மே, மானம் இடிஞ்சாலும் பூமி மலந்தாலும் நமக்கு எண்ணைக்கும் தங்கப்பன்தான் பூமியில வலிய ஆளு. அதுக்க கத அப்பிடியாக்கும். இந்தா இவள பெண்ணுகாண நானும் தங்கப்பனும் சேந்தாக்கும் போனது. அப்பம் இப்டி இல்ல, ஒடிச்சா ஒடியுத மாதிரி ஒரு ரூபம். தங்கப்பன் கேட்டன் ஏம்வே இப்பிடி சுக்காட்டு இருக்காளேண்ணு. நான் தான் சொன்னது, டேய் உனக்க பனங்கா முகத்துக்கு இப்டி ஒரு ஐஸரியமுள்ள பெண்ணு இனி கிட்டாது, விடாதேண்ணு….”

1
2
முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 1