வெறும் முள்-கடிதம்

ஆசிரியருக்கு ,

‘வெறும்முள்’ .

நீச்சல் விளையாட்டில் Spring board diving என்ற ஒரு பிரிவு உண்டு , பலகை நம்மை மேலே உந்தித் தள்ளும் போது , நம்மால் மேலும் பல கரணங்களைப் போட முடியும் , இது floor diving இல் சாத்தியம் இல்லை.

“வெறும் முள்” கதையில் வரும் அந்தப் பாலையும் வறட்சியும் நிலமும், காற்றும் புழுதியும் ஊற்றும் எனக்கொரு அற்புதமான காட்சி அனுபவத்தை அளித்தது , நான் நேரில் கண்ட வறள் மற்றும் பாலையை விடவும் , திரையில் பார்த்த பாலையை விடவும் வெறும் முள் பாலை இன்னமும் வசீகரமானது , அதில் ஒரு அரணை போல நெளிந்த உணர்வு. பாலையைப் போதுமான அளவுக்கு மட்டும் சொற்களில் செய்ததால் எனக்குக் கிடைத்தது . வெறுமனே பாலை என்றால் அது floor diving , இக்கதையில் வரும் போதுமான அளவுக்கு மட்டும் ஆனால் கவித்துவமுடன் விவரிக்கப்பட்ட பாலை Spring board diving. வாசகன் எழுவதற்குப் போதுமான அளவுக்கு மட்டுமே உள்ள உந்துதல் அதில் இருந்தது . கொஞ்சம் கூடியிருந்தாலும் அது Parachute diving ஆகியிருக்கும்.

“திசைகள் திறந்து, வான்வெளித்து ,வெயில் குடித்துக்கிடக்கும் பாலையை நிதானமாக அமர்ந்து பார்த்தபடி இருக்கலாம். ஒன்றுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணம், ஒவ்வொரு நாடோடியையும் மனநிறைவிலாழ்த்தும் இனிய சிந்தனை, என் மனதில் நிறையும். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அகம். வெளியே அப்போது ஒரு கின்னார் இசைத்தது என்றால் அக்கணம் வாழ்க்கை முழுமையாகிவிட்டதென்று பொருள்”

“வெப்பத்தில் உலர்ந்து பறந்த எண்ணங்கள் ஈரமாகிப் படிய ஆரம்பிக்கின்றன. அதன்பின் நம்மால் வேலைசெய்ய முடியும். சிந்திக்க முடியும்”

இந்தப் பாலைப் பின்னணி கதையின் மீதும் படர்கிறது , பரவுகிறது. அல்லது நமது ஆழ் மனதிற்கு இயல்பாக ஒரு பூடக மொழியைக் காட்டுகிறது .

அம்மையப்பத்தில் ஆசாரி ஒரு கலைப் படைப்பை நிகழ்த்திய பிறகு மாயமாக இலைகளுக்குள் மறைவான் , அது கரைந்து போவது. அது ஒரு உயர்ந்த கலைஞனுக்கே சாத்தியம் . இங்கு இறுதியில் ஐசக்கின் முட்களைத் தாண்டிய ஓட்டம் , ஒரு தோன்றல், அது ஒரு சுத்த வீரனுக்கே சாத்தியம்.

பாவத்தின் சம்பளம் மரணம் ,வீரத்தின் வெகுமதி ஞானம்.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஇலக்கிய அரட்டை
அடுத்த கட்டுரைகீதை இடைச்செருகலா? கடிதம்